Tag Archive | பரிசுத்தம்

இதழ்: 820 நீர் என்னோடிருந்தால்…..

ஆதி:41: 39 பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி; தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் வேறோருவனும் இல்லை

Wishing all my family who visit this garden from various countries a VERY BLESSED CHRISTMAS! May the joy of Christmas fill your hearts!

யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி சில நாட்கள்  நாம் தியானித்துக் கொண்டு இருக்கிறோம். அவனுடைய வாழ்க்கையைப்பற்றி வாசிக்கும் போது, இன்னும் ஒரு பாடத்தை கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஆதி 29:3 ல், வேதம் கூறுகிறது, யோசேப்பு தன் சகோதர்களால் விற்கப் பட்ட பின், எகிப்தை வந்து அடைகிறான். ஒரு பணக்கார வாலிபனாய் வாழ்ந்தவன், இப்பொழுது போத்திபாரின் வீட்டில், ஒரு அடிமையாக வேலை செய்கிறான். இந்த அதிகாரத்தில், இரண்டே வசனங்கள் வந்தவுடன், கர்த்தர் அவனோடிருந்தார் என்று போத்திபார் அறிந்ததாக வாசிக்கிறோம். யோசேப்பு அங்கிருந்தவர்களை விட அதிகம் படித்ததினாலோ அல்லது அழகுள்ளவன், பணக்காரன் என்பதாலோ அல்ல, அவனுடன் கர்த்தர் இருக்கிறார் என்பதே அவன் எஜமானாகிய போத்திபாரின் கண்களில் பட்டது.

அவன் காரியசித்தியுள்ளவனாய் எல்லா காரியங்களையும் சிறப்பாக செய்தது, கர்த்தர் அவன் செய்கிற யாவையும் வைக்கப் பண்ணுகிறார் என்று போத்திபாரின் வீட்டில் பறைசாற்றியது. நாம் செய்த வேலையை யாராவது பாராட்டினால் உடனே நாம், நம்முடைய கல்லூரி படிப்பிற்கோ அல்லது நம்முடைய கடின உழைப்பிற்க்கோ மகிமையை கொடுப்போம்!

ஆனால் இங்கு யோசேப்பு அமைதியாக, அடக்கமாக தேவன் தன்னோடிருப்பதை பறை சாற்றினான். எப்படி ஐய்யா இப்படி அருமையாய் செய்தாய்? என்று கேட்டால், பதில் கர்த்தர் என்னோடிருப்பதால் என்று வரும்!

அங்குமட்டுமல்ல, யோசேப்பு, சிறையில் தள்ளப்பட்டபோது, அங்கும் சிறைச்சாலையின் தலைவன் எல்லாவற்றையும் யோசேப்பிடம் ஒப்புக்கொடுத்ததின் காரணம் கர்த்தர் அவனோடிருந்ததுதான்!

பின்னர் சிறையில், பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கியபோதும் கர்த்தர் அவனோடிருந்தார்.

ஆதி: 41: 25 ல் பார்வோன் முன்பாக அழைக்கப்பட்டு, அவனுடைய நித்திரையை கெடுத்த சொப்பனத்தின் அர்த்தத்தை தெளிவாக விளக்கியபோது, யோசேப்பு  பார்வோனை நோக்கி, “தேவன் தாம் செய்யப் போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்” என்றான்.

பார்வோன் தன் சொப்பனத்தின் விளக்கத்தை கேட்டபோது, ‘உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் ஒருவனும் இல்லை என்று கூறி, யோசேப்பை பார்வோனுக்கு அடுத்தபடியாக எகிப்தை ஆளும் அதிகாரியாக்கினான்.

ஒரு உலகப்பிரகரமான ராஜா, கர்த்தரை அறியாத ஒரு மனிதன், அப்படி எதை யோசேப்பின் வாழ்வில் கண்டான்? அவனுடைய கல்லூரிப் படிப்பையா, அவன் வாங்கியிருந்த பட்டங்களையா? அழகையா? திறமையையா? குடும்ப பின்னணியையா? சிறிது நேரம் அவனுடன் இருந்த எல்லாரும் உணர்ந்த ஒரு காரியம் கர்த்தர் அவனோடிருந்தார் என்ற உண்மையே!

என்னைத் தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்!     படிப்பும், பட்டங்களும், திறமையை வளர்ப்பதும் நிச்சயமாக நமக்கு தேவையே! ஆனால் ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! பெரிய பட்டப் படிப்பு இருக்கலாம், உலகம் போற்றும் அழகு இருக்கலாம், விதவிதமான துணிமணிகள் உடுத்தலாம், ஆனால் கர்த்தர் உன்னோடு இல்லாவிடில் நீ உலகத்தை ஆதாயப்படுத்தினாலும்  உன் ஆத்துமாவை இழந்து போவாய்!

 சங்கீ:111: 10 கூறுகிறது, கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று.

தன்னுடைய பதினேழு வயதில் தன் குடும்பத்தை பிரிந்து த தேசத்துக்கு அடிமையாக வந்த யோசேப்பு தன் கண்களை ஏறேடுத்துப் பார்த்து கர்த்தரை நோக்கி அவர் தன்னோடு இருக்கும்படி அழைத்தான்! கர்த்தர் அவனோடு இருந்தார். அவன் தனிமையை அனுபவிக்கவில்லை. அவனை சுற்றி இருந்தவர்கள் சில நொடிகளில் அவனோடு கர்த்தர் இருந்ததை உணர முடிந்தது!

என்ன அற்புதமான சாட்சி? உன்னையும், என்னையும் அறிந்த நம் நண்பர்கள், நம்  குடும்பத்தினர் , நம்முடன் கர்த்தர் இருப்பதை உணர்கிறார்களோ?

 பரிசுத்த தேவன் நாம் அவரைப் பற்றி பேசுவதை விட பரிசுத்தமாய் நாம் வாழ்வதையே விரும்புகிறார்.

ஜெபம்: நல்ல ஆண்டவரே! நீர் என்னுடன் இருப்பதை இந்த உலகம் அறியும்படி நான் வாழ எனக்கு உதவி தாரும்.  ஆமென்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ or ‘ follow என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

 

இதழ்: 800 பனியை விட வெண்மை!

சங்:51:7  நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது  நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்பதின் 8 வது பாகம் இன்று.

தாவீது இந்த அன்புக் கடிதத்தின் முதல் சில வசனங்களில், தான் வழிதவறிப் போன இந்த நிலையில் கர்த்தருடைய கிருபை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று கெஞ்சுகிறான். தேவனுடைய மிகுந்த இரக்கங்களால் தன்னை ரட்சிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். தன்னுடைய பாவத்திலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, தன்னைக் குற்றப்படுத்தும் உணர்ச்சிகளிலிருந்து வெற்றி கிடைக்கும்படியாக அவன் தேவனாகிய கர்த்தரிடம் அடைக்கலம் புகுந்தான் என்று பார்க்கிறோம்.

இன்றைய வேதாகமப்பகுதியில் அவன் நடைமுறையில் பார்க்கும் காரியங்களைக் குறிப்பிட்டு ஜெபிக்கிறான். முதலில் அவன் ஈசோப்பினால் சுத்திகரியும் என்று சொல்வதைக் கவனியுங்கள்!  யாத்திராகமம் 12:22 ன் படி இந்தச் செடியின் கொழுந்துகளைத்தான் இரத்தத்தில் தோய்த்து,  இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட ஆயத்தப்பட்ட போது தங்கள் வாசல் நிலைகளில் கட்டினர். பின்னர் லேவி:14:4, எண்:19:18 இவைகளில் ஈசோப்பு என்ற செடி சுத்திகரிப்புக்கு உபயோகப்படுத்தப் பட்டது.

இன்று ஆட்டுக்குட்டியின் இரத்தம் அல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்  இரத்தமே நம்மை சுத்திகரிக்க வல்லது. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.

ஆதலால் தாவீது, நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன், என்றது மட்டுமன்றி,

என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் என்கிறான்.

முதன்முறையாக நான் உறைந்த பனியைப் பார்த்தது நேபால் தேசத்தில் தான். பனி படர்ந்த மலைகளில் பளிச்சென்று கண்களைப் பறிக்கும் கண்ணாடி போல பிரகாசித்த பனியை எதற்கும் ஒப்பிட முடியாது.

தாவீது அப்படிப்பட்ட ஒப்பில்லா பரிசுத்தத்தை தேவன் தனக்குக் கொடுக்கும்வரை தன்னைக் கழுவி சுத்திகரிக்கும்படி வேண்டுகிறான். பரிசுத்தத்தை இன்று நமக்கு அருளுபவர் பரிசுத்த ஆவியானவர் ஒருவரே! நமக்குள் வாசம் செய்யும் அவர் நம்மை பரிசுத்த வாழ்க்கைக்குள் அனுதினமும் நடத்துவார்.

தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்பதில் சந்தேகமேயில்லை! ஏனெனில் இந்த வழிதப்பிப் போன குமாரனாகிய தாவீது, தன்னை ஈசோப்பினால் கழுவி, தான் உறைந்த பனியிலும் வெண்மையாகும்படி தன்னை சுத்திகரிக்கும்படி ஜெபித்தபோது எந்தத் தகப்பனால் அவனை நேசிக்காமல் இருக்க முடியும்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்த ஆவியானவரால் ஒவ்வொருநாளும் சுத்திகரிக்கப்பட்ட பரிசுத்த வாழ்வு வேண்டுமா? தாவீதைப் போல, என்னை சுத்திகரியும் அப்பொழுது சுத்தமாவேன் என்று ஜெபியுங்கள்! கர்த்தர் உங்களையும் தாவீதை நேசித்தது போலவே நேசிப்பார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 797 தேவனுக்கு விரோதமானது?

சங்: 51:4  தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்.  .

தாவீதை கர்த்தர் ஏன் நேசித்தார்?  ஐந்தாவது நாளாக இந்தத் தலைப்பைத் தொடருகிறோம்.

நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம்.  இங்கு அவன் தான் கர்த்தர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ்செய்வதாக சொல்கிறான்! இதை வாசிக்கும்போது , என்ன இவன் பத்சேபாளுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லையா? இறந்து போனதே அந்தக் குழந்தை எப்படி? கொலை செய்யப்பட்டானே அந்த உரியாவுக்கு விரோதமாக ஒன்றுமே செய்யவில்லையா? அவனுடைய குடும்பத்தார் எப்படி? அவர்களுக்கு விரோதமாக அவன் ஒன்றும் செய்ய வில்லையா? என்று நினைக்கத்தான் தோன்றியது.

தாவீது தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்தேன் என்று சொல்லும்போது அவன் பத்சேபாளுக்கும் உரியாவுக்கும் விரோதமாக நான் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லவில்லை! அவன் அவர்களுக்கு கொடுத்த வலியை நன்கு அறிவான்!

2 சாமுவேல் 12:13 ல் தீர்க்கதரிசியாகிய நாத்தான் அவனுடைய பாவத்தை தெளிவாக கூறியபோது, அவன் நாத்தானிடத்தில் நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்றான் என்று பார்க்கிறோம்.  தாவீது அப்படி சொன்னதின் அர்த்தம் என்னவெனில், நான் தேவனை விட்டு அவருடைய சமுகத்தை விட்டு விலகி தூரமாய் சென்று விட்டேன், என்னுடைய சுயமான வழியில் நடந்து விட்டேன் என்றுதான்.

பாவம் என்பது நாம் தேவனாகிய கர்த்தரை விட்டு பிரிந்து, தூரமாய்  வாழ்வதுதான். தாவீது இதை நன்கு உணர்ந்தான். கர்த்தரோடு தான் கொண்டிருந்த உறவைப் புதுப்பிக்கும் வரை தன்னால் கண்ணாடி போல நொறுக்கப்பட்ட எந்த உறவையும் புதுப்பிக்க முடியாது என்றும் உணர்ந்தான். தாவீது கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்ததை உணர்ந்தவுடன் தன்னுடைய மற்ற உறவுகளையும் குணமாக்க கர்த்தருடைய உதவியைத் தேடினான்.

அதுமட்டுமல்ல! தாவீது  நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும் நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன் என்கிறான்.

வேதத்தில் சில பகுதிகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ளாமலே வேகமாக கடந்து விடுவொம். இந்தப் பகுதியும் அப்படிப்பட்டது தான். இன்று நான் இதை எழுதும் போது பலமுறை படித்தும் அர்த்தம் விளங்கவே இல்லை. கடைசியாகத்தான் தலைக்குள் பல்ப் எரிந்த மாதிரி அர்த்தம் புலப்பட்டது.

தாவீது தன்னுடைய தகப்பனாகிய  கர்த்தரை நோக்கி , என்னுடைய வழக்கு நிச்சயமாக உம் முன்னால் வரும்! நான் உமக்கு விரோதமாக பாவம் செய்து விட்டேன், அதனால் என்னை மன்னித்து, கழுவி, சுத்திகரியும்! ஏனெனில் நீர் என்னை உம்முடைய இருதயத்திற்கேற்றவன் என்று சொல்லி, என்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கினீர்.  என்னுடைய வழித்தவறிப்போன நடத்தையால் உம்முடைய நாமத்துக்கு கேடு பண்ணி விட்டேன். நான் உமக்கு விரோதமாக, ஆம் தேவரீர் உமக்கே விரோதமாக இப்படி செய்து விட்டேன். நான் உம்முடைய பிள்ளை!  என் மூலமாக உம்முடைய நாமம் மகிமைப்பட வேண்டும், உம்முடைய பரிசுத்தம் விளங்க வேண்டும்! என்று கெஞ்சுகிறான்.

மறுபடியும் சொல்கிறேன்! இதனால் தான் தேவனாகிய கர்த்தர் தாவீதை மிகவும் நேசித்தார்!

வழிதப்பிப்போன இந்தக் குமாரனிடம் தன்னுடைய தகப்பன் பெயரைக் கெடுத்து விட்டோமே, அவருடைய மகிமையை பங்கப்படுத்திவிட்டோமே என்ற குமுறல் காணப்பட்டது.

இன்று நம்முடைய வாழ்க்கையில் உள்ள எந்தப் பாவமானாலும் சரி, சிறியதோ, பெரியதோ, அது தேவனுடைய மகிமையை அழித்துவிடும்! அவருடைய நாமத்தை தூஷிக்கும் விதமாக எதையும் செய்யாதே!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

மலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி?

உபா:28:9 நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும்போது கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே உன்னைத் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.

 நான் வாலிப நாட்களில் தேவனை அதிகமாய் அறிகிற ஆவலில் அநேக சபைகளுக்கு சென்றிருக்கிறேன். வெண்மை வஸ்திரம் தரித்து ஆலயத்துக்கு வருபவர்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணியதுண்டு! பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசினால் நாம் பாவிகளாகி விடுவோம் என்று எண்ணிய பரிசுத்தவான்களையும் பார்த்திருக்கிறேன். நீண்ட ஜெபம் செய்தவர்களும், நீண்ட அங்கி தரித்தவர்களும் கூட என்னுடைய பரிசுத்தவான்கள் என்ற பட்டியலில் இருந்தனர். இந்த வெளிப்படை அடையாளங்கள் எல்லாம் ஒருவரை பரிசுத்தராக்க முடியாது என்ற பேருண்மையை, நான் பரிசுத்தவான்கள் என்று எண்ணிய சிலருடைய பரிசுத்தமில்லாத செயல்களைப் பார்த்தபின்னர் தெரிந்து கொண்டேன்.

பரிசுத்தம் என்ற வார்த்தைக்கு என்னால் அர்த்தத்தை புரிந்துகொள்ளவே முடியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பரிசுத்தம் என்றால் என்ன?

நமக்கு பதில் நாம் படித்துக்கொண்டிருக்கிற உபாகமம் புத்தகத்திலிருந்து கிடைக்கிறது. கர்த்தர் மோசேயின் மூலமாக தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த ஆசீர்வாதங்களைப் பற்றி நாம் படிக்கும்போது, இன்றைய வேத வசனத்தில், கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும்போது, உன்னைத் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார் என்று வாசிக்கிறோம். நாம் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து, பரிசுத்தராய் வாழ வேண்டும் என்பது அவருடைய ஆவல்.

இன்றைய வேதாகம பகுதியில் உள்ள முக்கியமான வார்த்தைகளை அதன் எபிரேய மொழியாக்கத்தில் பார்ப்போம். முதலில் நிலைப்படுத்துவார் என்ற வார்த்தையை கவனியுங்கள். நிலைப்படுதல் என்பது நிலைத்திருத்தல் என்று அர்த்தமாம். கர்த்தராகிய இயேசு சொன்னார்,” என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்என்று (யோவா:15:4) அப்படியானால் கர்த்தருக்கு பரிசுத்தமானவர்கள் என்பவர்கள் கர்த்தரில் நிலைத்திருப்பவர்கள் என்று அர்த்தம்! ”உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் (சங்கீ: 91:1) பரிசுத்தவான்கள் என்பவர்கள் கர்த்தரில் நிலைத்திருப்பவர்கள், ஒரே வீட்டில் குடியிருப்பவர்களைப் போல கர்த்தருடைய நிழலிலே தங்குபவர்கள்.

இரண்டாவதாக கைகொண்டு என்ற வார்த்தையைப் பாருங்கள். ஆங்கிலத்தில் keep  என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. எபிரேய மொழியில் பின்பற்றுதல், பாதுகாத்தல், கவனித்தல் போன்ற பல அர்த்தங்கள் உள்ள வார்த்தை அதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கர்த்தருடைய வார்த்தைகளை கூர்ந்து கவனித்து பின்பற்றி நடக்கும்போது, அவை நம்மை பாதுகாக்கும். எப்படிபட்ட பாதுகாப்பு தெரியுமா? நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் விழுந்துவிட்ட ஒருவனை மூழ்கிவிடாமல் பாதுகாப்பது போலத்தான்!

மூன்றாவதாக  நடக்கும்போது என்ற வார்த்தையை கவனியுங்கள்! இதற்கு எபிரேய மொழியில் வளருதல் என்ற அர்த்தம் உள்ள வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படியானால் இன்று வாசித்த வசனம் நமக்கு என்ன கற்பிக்கிறது? கர்த்தருக்கு பரிசுத்த ஜனங்கள் என்பவர்கள் கர்த்தருடைய வசனங்களால் தம்மை பாதுகாத்துக் கொள்ளுபவர்கள், கர்த்தருடைய வார்த்தைகள் மூலம் அவருடைய வழிகளில் வளருபவர்கள். அவர்கள் கர்த்தரில் நிலைத்திருப்பவர்கள், கர்த்தரும் தம்முடைய பரிசுத்த ஜனங்களிடம் வந்து வாசம் செய்வார் என்பதே!

 

தேவனுடைய பிள்ளைகளே! வெண்மையான் வஸ்திரமோ, யாரிடமும் பேசி சிரிக்காத நீண்ட முகமோ, நாம் செல்லும் ஆலயமோ, அல்லது ஆலயத்தில் நாம் செய்யும் சேவையோ நம்மை பரிசுத்தவான்களாக்கிவிடாது.

ஒரு வண்டு மலரைத் தொட்டுவிட்டு சென்றால் அதனால் தேன் எடுக்க முடியுமா? அந்த மலரின் மேல் அதிக நேரம் தங்கியிருந்தால் தானே அதிலிருந்து தேனை உறிய முடியும். அப்படித்தான் நம் வாழ்க்கையும். எவ்வளவு நேரம் நாம் கர்த்தருடைய வார்த்தைகளில் தரித்திருக்கிறோமோ அவ்வளவு தூரம் அது நம்மை பரிசுத்தப்படுத்தும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!