Tag Archive | பழிவாங்குதல்

இதழ் 647 பழிவாங்குதல் என்றால்?

1 சாமுவேல் 25:33 … என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசிர்வதிக்கப்படுவாயாக!

ஆலோசனையைக் கொடுப்பதும், ஆலோசனையை ஏற்றுக்கொள்வதும் ஒரு நல்ல உறவுக்கு தேவையான அஸ்திபாரம் என்று அபிகாயில், தாவீதின் வாழ்க்கையிலிருந்து பார்த்தோம்.

இன்றைய வசனத்தில் தாவீது அபிகாயிலிடம், ‘ என்னுடைய வாழ்வில் யார் எதற்கு பொறுப்பு என்று சற்று ஞாபகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி அபிகாயில்’ என்று கூறுவது போல்  உள்ளது!

கண்ணுக்கு கண் என்ற வேத வசனத்தை இறுகப்பிடித்துக் கொண்டு யாராவது நமக்கு ஒரு அடி கொடுத்தால் மறு அடியை வச்சு வாங்கி விடுவதுதான் நமக்குப் பழக்கம்.

நல்லவேளை, பழிவாங்கும் வெறியோடு வந்த தாவீதிடமும், அவனுடைய 400 ஊழியரிடமும், பழிவாங்குவது கர்த்தருடைய வேலை, உன்னுடையது அல்ல என்று அபிகாயில் என்றப் பெண் ஞாபகப்படுத்தியதால் அவன் தப்பித்தான்! இல்லையானால் கர்த்தர் செய்ய வேண்டிய வேலையை அவன் செய்ய சென்றிருப்பான்.

பழிவாங்குதல் என்னுடையது என்று ஏன் கர்த்தர் சொன்னார் என்று என்றாவது என்னைப்போல நீங்களும் யோசித்ததுண்டா?

இதற்காக எபிரேய, கிரேக்க மொழிகளில் இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்று படித்தேன்.  நான் அதற்கு தண்டனை என்ற அர்த்தத்தைத்தான் எதிர்பார்த்தேன்.

ஆனால் தாவீது உபயோகப்படுத்தின இந்த எபிரேய மொழியில் ஆச்சரியப்படும்படியாய் பழிவாங்குதல் என்பதற்கு, அவர் இந்தப் பிரச்சனையை சந்திப்பார் அல்லது அவர் இதை மேற்பார்வையிடுவார்  என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது என் மனதில் ஒரு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. என் கர்த்தர் என்னைத் துன்பப்படுத்தும் எல்லா பிரச்சனைகளையும் அவரே சந்திப்பார்! அல்லேலூயா!

அதனால்தான் தாவீது தான் பழிவாங்காதபடி தடை செய்த அபிகாயிலுக்கு நன்றி சொல்கிறான்.

மனிதராகிய நாம் தேவனாகிய கர்த்தரைப்போல் எல்லாவற்றையும் காணமுடியாது,  எல்லாவற்றையும் அறியவும் முடியாது!  நம்முடைய குறுகிய பார்வையால், அநியாயத்தைத் தட்டிக்கேட்கிறேன் என்று நாம் பழிவாங்க முயன்றால் அது நம்மையே திருப்பியடித்து விடும். அதனால்தான் நம்மை நேசிக்கும் தேவன் இந்தப் பிரச்சனையை அவரே மேற்பார்வையிட்டு, அவரே இதை சந்திப்பதாக நமக்கு வாக்குக் கொடுக்கிறார்.நம்மை எதிர்க்கும் அல்லது நமக்கு எதிராக செயல்படுபவர்களைக்கூட அவர் சந்தித்து அவர்களையும் தம்முடைய மந்தைக்குள் கொண்டுவர அவரால் கூடும்!

பழிவாங்குதல் கர்த்தருடையது என்று அறிவாயா? யாரையாவது சொல்லாலோ, செயலாலோ பழிவாங்கக் காத்துக்கொண்டிருக்கிறாயா? இது நீ செய்ய வேண்டியது இல்லை!  விசுவாசத்தோடு கர்த்தரிடம் ஒப்புவித்துவிடு! அவர் உன் காரியத்தை தானே மேற்பார்வையிட்டு சந்திப்பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ரா

 

 

 

 

Advertisements

இதழ்: 628 தாவீது அறிந்த முதியோர் மொழி!

1 சாமுவேல்  24: 12,13 கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர்தாமே என் காரியத்தில் உமக்கு நீதியை சரிகட்டுவாராக. உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை. முதியோர் மொழிப்படியே ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும். ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை.

தாவீது சவுலினால் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல என்று நாம் பார்த்து வருகிறோம். ஆனால் சவுலின்மேல் கைபோட தாவீதுக்குத் தருணம் கிடைத்தபோது உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை என்று அவன் கூறுவதை இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் பார்க்கிறோம்.

அதுமட்டுமல்ல அவன் சவுலிடம் கர்த்தர்தாமே நீதியை சரிகட்டுவார் என்றும் கூறினான். தாவீதின் இந்த வார்த்தை நீங்களும் நானும் நம்மை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று. நம்மை சுற்றி நடக்கும் காரியங்களைப் பார்த்து, நம்மை சுற்றியுள்ளவர்களைப் பார்த்து நாம் எத்தனைமுறை நியாயம் தீர்க்கிறோம். நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து ஒருத்தரைப் ப்ற்றி  நியாயம் தீர்ப்பது எவ்வளவு குற்றம்!

இதை நன்கு அறிந்த தாவீது, அனைத்தையும் அறிந்த தேவனே நம்முடைய காரியத்தில் நியாயம் தீர்ப்பார் என்று சவுலிடம் கூறினான்.

தாவீது மற்றுமொரு காரியத்தையும் கூறுவதைப் பார்க்கிறோம். ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும் அல்லது கெட்டவர்களிடத்தில் தான் கெட்ட செயல் பிறக்கும், அல்லது பழிவாங்குதல் பழிவாங்குகிறவர்களிடம் தான் பிறக்கும் என்று முதியோர் மொழி ஒன்றைக் கூறுகிறதைப் பார்க்கிறோம்.

இதைத்தான் கர்த்தராகிய இயேசு மத்:7:20 ல் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் என்றார்.

நமக்கு தீங்கு இழைப்பவர்களுக்கு நாம் தீங்கு இழைப்பது இந்த உலகத்தில் நடக்கும் செயல்தானே. ஒருவேளை இன்று சவுல் நம்மைத் துரத்துவானானால், நமக்கு தீமை செய்வானானால்  நாம் அவனைப்பிடித்து அவனுக்கு சரிக்கு சரியாக தீமை செய்வோம்அல்லவா!  நமக்கு நியாயம் வேண்டமா! பழிவாங்கினால்தானே  நமக்கு நிம்மதி கிடைக்கும்.

ஆனால் பழிவாங்குதலை நம்முடைய கையில் நாம் எடுத்துக்கொள்வோமானால், நாம் நம்மை மேலுக்கு மேல் புண்படுத்திக்கொண்டு தான் இருப்போம். நாம் மற்றவர்கள் மேல் எய்யும் அம்பு நம்மையும் காயப்படுத்தும்.

பழிவாங்குதல் கர்த்தருடையது! அதைப்புரிந்து கொள்ளாத  முட்டாள்தான் பழிவாங்கத்துடிப்பான்!

உனக்கோ அல்லது உன்னைச் சார்ந்தவர்களுக்கோ யாராவது பெரிய தீங்கு செய்திருக்கிறார்களா? அவர்களைப் பழிவாங்கும் எண்ணம் உனக்கு உண்டா? அப்படிப்பட்ட  ஒரு சிறிய  எண்ணம் கூட உன் ஆத்துமாவை அழித்துவிடும்! ஜாக்கிரதை!

தாவீதைப்பார்! தன் உயிரக்குடிக்க அலைந்தவனைப் பார்த்து உன்னைப் பழிவாங்கமாட்டேன் என்கிறான். இதைத்தான் கர்த்தர் உன்னிடமும் விரும்புகிறார். அவர் உனக்காக யுத்தம் செய்து உனக்கு நீதியை சரிக்கட்டுவார்! அவரிடம் ஒப்புவித்துவிட்டு நிம்மதியாக இரு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்