Tag Archive | புத்திசாலி

இதழ்: 788 இனி உன்னைத் தொட முடியாது!

2 சாமுவேல் 14: 9,10  பின்னும் அந்த தெக்கோவாவூர் திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப்பழி என்மேலும், என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள். அதற்கு ராஜா உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா. அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான்.

கடந்த சில நாட்களாக நாம் தெக்கோவாவூரின் புத்தியுள்ள ஸ்திரீயைப் பற்றி படித்து வருகிறோம். அவள் எல்லாவற்றையும் பகுத்தறியத் தக்க ஞானம் கொண்டவள் என்றும்,  அவள் குரலாலும், நேரிடையான வார்த்தைகளாலும் ராஜாவிடம் பேசினாள் என்றும், அவள் தன்னுடைய இரக்கத்தால் ராஜாவின் இரக்க குணத்தை தட்டி எழுப்பினாள் என்றும் பார்த்தோம். அதனால் தான் தெக்கோவாவூரார் அவளை புத்திசாலி என்று அழைத்தனர் போலும்!

இன்றைய வேதாகமப்பகுதி அந்த புத்திசாலியான பெண்ணைப்பற்றி இன்னும் நமக்கு வெளிச்சம் காட்டுகிறது. அவள் பொறுப்பாய் நடந்து கொள்ளும் விதத்தைப் பாருங்கள்!

அவள் விதவையின் கோலம் பூண்டு தன்னுடைய இரண்டு குமாரரில் ஒருவன் மற்றொருவனைக் கொலை செய்து விட்டதாகக் கூறினாள். சகோதரனைக் கொலை செய்வது மிகவும் வெட்கத்துக்குரிய காரியம்தான்! காயீன் ஏபேலைக் கொன்றது நமக்கு மறக்கவில்லையல்லவா! அப்சலோம் தன் சகோதரனாகிய அம்னோனை கொலை செய்து விட்டான்.

இன்றைய நாளின் கதையில் அந்த ஸ்திரீ அந்தக் குற்றத்துக்குரிய பழியை அவள் ஏற்றுக் கொள்வதைப் பார்க்கிறோம். அவள் தாவீதிடம் இந்தப் பழியை நானே சுமக்கிறேன் என்று கூறுகிறாள். இன்று நாமே செய்த குற்றத்தையும் தூக்கி அடுத்தவர் தலையில் போடும் நம்மில் அநேகர் வாழும் இந்த உலகில் இந்தப் பெண்  மிகவும்பொறுப்பாக  குற்றச்சாட்டை தானே ஏற்றுக்கொள்கிறாள் என்று பார்க்கிறோம்.

அவள் பொறுப்புடன் குற்றத்தை ஏற்றுக் கொண்டபோது ராஜா அவளைப்பார்த்து,

 உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில்  கொண்டுவா. அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான். 

இந்த வேதப்பகுதியை நான் ஆழமாகப் படிக்கும்போது ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டேன்! எதனால் என்று யோசிக்கிறீர்களா? ஏனெனில் இங்கு தேவனாகிய கர்த்தர் மனிதராகிய நம்மை இரட்சிக்க வகுத்த திட்டத்தைத்தான் நான் இங்கு பார்த்தேன். தாவீது ராஜா அந்தப் பெண்ணிடம்  உன்னை யாராவது தொட நினைத்தால் அவன் முதலில் என்னைத் தொடட்டும் என்கிறான்.

நாம் நம்முடைய தவறுகளை, குற்றங்களை, பாவத்தை ஏற்று இயேசு ராஜாவிடம் வரும்போது அவர் நம்மிடம் ‘ இனி உன்மேல் பழிபோடுகிற யாரும், உன்மேல் குற்றம் சுமத்துகிற யாரும், நீ சாகவே சாவாய் என்று உன்னிடம் குற்ற உணர்வை கொடுக்கிற யாரும் என்னை மீறி உன்னைத் தொட முடியாது! என்கிறார். இனி நாம் கர்த்தரிடம் ஒப்புக்க்கொடுத்த பாவத்தை சாத்தான் மறுபடியும் மறுபடியும் சுட்டிக்காட்டி நம்மை குற்ற உணர்வினால் சாகும்படி செய்ய முடியவே முடியாது! நம்மைத் தொடுபவன் நம்முடைய கர்த்தருடைய கண்ணின் மணியைத் தொடுகிறான் என்பதை ஒரு போதும் மறந்து போகாதே!

இந்த மாபெரும் காரியத்தை நமக்காக செய்யும் இயேசு ராஜாவை நாம் இன்று  நன்றியோடு துதிக்கலாமா!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

இதழ்: 613 புத்தியாய் செயல்படு!

1 சாமுவேல் 18:5  தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும்போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷர்மேல் அதிகாரியாக்கினான். அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.

தாவீது கோலியாத்தை வென்றபின், சவுல் ராஜா, புத்திசாலியான தாவீதை தன் வசமாக்கி, அவனை போர்ச்சேவகர்களுக்கு  அதிகாரியாக்கினான் என்று இன்றைய வசனம் கூறூகிறது. தாவீதின் இந்த புதிய பதவி சவுலுக்கு உதவியாக இருந்தது மட்டுமல்ல, இஸ்ரவேலர் யாவரையும் அது பிரியப்படுத்தியது.

இந்த அழகிய வாலிபன் புத்தியாய்க் காரியத்தை நடப்பித்தான்!

புத்திசாலி என்ற வார்த்தை எனக்கு கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் ஒன்று.  நீ ரொம்ப புத்திசாலி என்று நினைப்போ என்றும், உன் புத்திசாலித்தனத்தை என்னிடம் காட்டாதே என்றும் சிலர் இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவதைக் கேட்டிருக்கிறேன்.

தாவீது தான் செய்த எல்லா காரியத்திலும் புத்தியாய் நடந்து கொண்டான் என்பது நம்முடைய உள்ளங்களில் அச்சடிக்க வேண்டிய ஒரு காரியம். ஏனெனில் அவன் அப்படி  நடந்து கொண்டதால் தான் கர்த்தர் அவனைத் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று கூறுகிறார். இஸ்ரவேல் மக்களும் அவனை நேசித்தனர்.

தாவீது எப்படிப்பட்ட புத்திசாலித்தனத்தை தன் செயல்களில் வெளிப்படுத்தினான் என்று நாம் நினைக்கலாம்!

ஒரு வாலிபனைப் பொறுத்தவரை புத்திசாலித்தனம் என்பது தன்னுடைய எதிர்காலத்துக்காக தன்னை ஆயத்தப்படுவதுதான்.  ஒரு நடுத்ததர வயது மனிதனைப் பொறுத்தவரை புத்திசாலித்தனம் என்பது தன் நிகழ்காலத்தைப்பற்றி சிந்திப்பதுதான். ஆனால் தாவீது தன்னுடைய கடந்த கால அனுபவங்களை மறந்து போகாமல், அவற்றின் அடிப்படையில் தன்னுடைய நிகழ்கால செயல்களை வெற்றிகரமாக செய்து, தனக்கான ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொண்டான்.

தாவீதின் வாழ்க்கையில் அவன் நடந்து கொண்டவிதத்திலும், அவனுடைய எல்லா செயல்களிலும் தேவன் அருளிய ஞானம் வெளிப்பட்டது! அதை சவுல் கண்டான்! இஸ்ரவேல் மக்கள் கண்டனர்!

இன்று உன் வாழ்க்கை எப்படி? கிறிஸ்துவுக்குள்ளான அனுபவங்கள் உன்னை புத்திசாலியாக்கியிருக்கின்றனவா? உன்னுடைய எல்லா செயல்களிலும் நீ கர்த்தருடைய பிள்ளை என்று தெரிகிறதா?  உன்னை சுற்றிலும் உள்ளவர்கள் உன்னை நீ ரொம்ப புத்திசாலி என ஏளனப்படுத்தின்றனரா? அல்லது நீ நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து உன்னிடம் கர்த்தருடைய ஞானம் உள்ளதென்று புரிந்துகொள்கின்றனறரா?

புத்திசாலியாய் நடந்துகொள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்