Tag Archive | மிரியாம்

இதழ்: 834 துதியும் ஸ்தோத்திரமும் மருந்தாகுமா?

எண்ணா:12: 13, 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி; தேவனே அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான். அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலகப்பட்டிருந்தாள். மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்.

 தேவனுடைய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அநேக மிஷனரிகளைப் பற்றி படிக்கும்போது நாம் இவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று எண்ணுவதுண்டு!

அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறுபவர் டாக்டர் பால் பிராண்ட் என்ற மருத்துவரும் அவர் மனைவி மார்கரெட் அம்மையாரும்.  அவர் நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு மிஷனரி பெற்றோருக்கு பிறந்தவர். தன் தகப்பனைப் போல லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு  1946 ல் இந்தியாவுக்கு சேவை செய்ய திரும்பி வந்தனர்.

நம் ஊரில் குஷ்டரோகிகள் பிச்சை எடுப்பதைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் சரீரம் உருவிழந்து போயிருக்கும். இப்படிப்பட்ட சில குஷ்டரோகிகள் பிச்சையெடுத்துக் கொண்டு வருவதை டாக்டர் பால் பிராண்ட் அவர்கள், பார்த்தார். அவர் அப்பொழுது  வேலூரில் வாழ்ந்து வந்தார். அங்கு  அந்த கொடிய நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். அதுவரை குஷடரோகிகளின் கைகளும் கால்களும் ஏன் இவ்வாறு உருமாறி அரிக்கப்பட்டு போகிறது என்று உலகத்திற்கு தெரியாது, இந்த நோய் வந்தால் இப்படி ஆகிவிடும் என்று தான் தெரியும்  டாக்டர் பிராண்ட்டுடைய ஆராய்ச்சிக்கு பின், குஷ்டரோகம் முதலாவது ஒரு மனிதனின் நரம்புகளை பாதிக்கிறது, பின்னர் அதை சார்ந்த தசைகளையும் பாதிக்கிறது, ஆனால் முதலில் அது நரம்பை பாதிப்பதால் அதை சுற்றிய தசை அழுகும்போது மனிதன் வலியை உணர்வதில்லை என்ற பேருண்மையை உலகுத்துக்கு அளித்தார்.

இந்த மருத்துவ ஆராய்ச்சியை ஏன் நான் இன்று எழுதுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். நாம் நேற்று வேதத்தில் முதலாவது தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்ட மிரியாம், தேவனுக்கு துதி ஆராதனை நடத்திய பெண்மணி, மோசேக்கு எதிராக முறுமுறுத்ததால் குஷ்டரோகியானாள் என்று படித்தோம்.

குஷ்டரோகம் ஒருவனின் சரீரத்தின் நரம்பை பாதிப்பதுபோல், முறுமுறுப்பு நம்முடைய ஆத்துமாவின் நரம்பை பாதிக்கிறது! குஷ்டரோகம் சரீரத்தில் உணர்வு இல்லாமல் செய்வதால் தசை அழுகுவது கூட தெரியாது. முறுமுறுப்பு ஆத்துமத்தில் உணர்வு இல்லாமல் செய்வதால், நாம் தேவனை துதிப்பதில் பெறும் வல்லமையை இழந்து போகிறோம்!

முதலில் மிரியாம் குஷ்டரோகியானாள் என்று வாசித்ததும், கர்த்தர் இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கக் கூடாது என்று எண்ணினேன். ஆனால் குஷ்டரோகம் சரீரத்திற்கு என்ன கேடு விளைவித்ததோ அதையே முறுமுறுப்பும், கசப்பு எண்ணங்களும் நம் ஆத்துமாவிற்கு செய்யும் என்று உணர்ந்த போது, கர்த்தர் நமக்கு போதிப்பதற்காகத்தான் இதை அனுமதித்தார் என்பதை உணர்ந்தேன்!

நாம் எத்தனை முறை, கர்த்தருடைய ஊழியக்காரர்களைப் பற்றி குறை கூறுகிறோம், முறுமுறுகிறோம் என்று யோசித்து பாருங்கள்!

1 பேதுரு: 2: 17 கூறுகிறது எல்லாரையும் கனம் பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்பு கூறுங்கள்; தேவனுக்கு பயந்திருங்கள்; ராஜாவை கனம்பண்ணுங்கள் என்று.

 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தர் மிரியாமை கைவிடவில்லை! ஒரே வாரத்தில் அவள் சுத்தமானாள்! இஸ்ரவேல் மக்கள் அவள் சுகமாகும்வரை காத்திருந்து பிரயாணத்தை தொடர்ந்தனர்! மிரியாம் மறுபடியும் இஸ்ரவேலின் முதல் தீர்க்கதரிசி என்ற உன்னத பதவியைத் தொடர்ந்தாள்! மிரியாமின் கடந்த காலத்தின் கசப்பான எண்ணங்கள், வெறுப்பான பேச்சு, முறுமுறுப்பு இவை யாவும் கர்த்தர் அவளை எதிர்காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாக உபயோகப்படுத்த தடையாக இருக்கவில்லை.

நாம்கூட எத்தனை முறை கசப்பான எண்ணங்கள், வெறுப்பான பேச்சு, முறுமுறுப்பு இவைகளுக்கு நம் வாழ்க்கையில் இடம் கொடுத்து, ஆசிர்வாதத்தை இழந்து போகிறோம். இவ்வாறான தேவையில்லாத எண்ணமும், பேச்சும், நம்முடைய ஆத்துமாவையும், இருதயத்தையும் , நமக்கு தெரியாமலே குஷ்டரோகம் போல அரித்து விடுகிறது. இதற்கு சரியான மருந்து துதியும் ஸ்தோத்திரங்களும்தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஜெபம்: ஆண்டவரே மற்றவர்களை பற்றி குற்றமாய் பேசும் பழக்கத்தை என்னைவிட்டு எடுத்துப் போடும். முறுமுறுப்பு உமக்கு பிடிக்காத குணம் என்பதை எனக்கு உணர்த்தும். ஆமென்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

இதழ்: 833 உன் வாயில் துதி புறப்படும்போதே தேவனுடைய வல்லமை புறப்படும்!

யாத்தி:15: 20, 21 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும், தன் கையில் தம்புருவை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புரோடும், நடனத்தோடும் அவளுக்கு பின்னே புறப்பட்டுப்போனார்கள். 

மிரியாம் அவர்களுக்கு  பிரதிவசனமாக; கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.

 இன்று காலையில் எப்பொழுதும் எழும்புகிற நேரத்தைவிட சிறிது அதிக நேரம் படுத்திருக்க என் சரீரம் ஆசைப்பட்டது. ஆனால் என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பறவைகளின் சத்தம் என்னை நிச்சயமாக தூங்க விடவில்லை. எழும்பி சிறிது நேரம் அவைகளை கூர்ந்து கவனித்தேன்.

மழை மேகம் மூடிக்கொண்டிருந்தது. ‘சில்’ என்று வந்த காற்று தென்னை  ஓலைகளை ஊடுருவி சென்றது.  தென்னை மரத்தில் இருந்த காக்கைகளும், கிளிகளும் உற்சாகமாய் குரல் கொடுக்க, சிறிய குருவிகள் உற்சாகமாய் குரல்களை உயர்த்தின! அவைகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த எனக்கு வெட்கம் உண்டாயிற்று! இந்தப் பறவைகள் காலையில் தங்கள்  குரலை உயர்த்தி, தன் சிறு உடம்பையும், சின்னம்சிறு கால்களையும் ஆட்டி,  இறக்கைகளை அடித்து, உற்சாகமாய் தேவனை துதிக்கும்போது நான் ஏன் அப்படி செய்யக்கூடாது என்று சிந்தித்தேன்!

தேவன் எனக்கு கொடுத்திருக்கிற ஜீவன், சுகம், பெலன் இவற்றை எண்ணும்மோது, என் உடலின் ஒவ்வொரு நரம்பும்  தேவனை துதிக்கும் துதியால் அல்லவா நிரம்ப வேண்டும்! நாம் கடந்த சில நாட்களாக படித்துக் கொண்டிருக்கிற மிரியாமின் வாழ்க்கை துதித்தலுக்கு உதாரணமான வாழ்க்கை!

கடந்த வாரம் நாம் மிரியாமின் இரண்டு அருமையான குணநலன்களைப் பற்றிப் பார்த்தோம். அவள் ஞானமுள்ள பெண், திட நம்பிக்கையுள்ள பெண் என்று பார்த்தோம். சிறுவயதிலேய தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசமும், அவர் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் என்ற நம்பிக்கையும் அவளுக்குள் இருந்ததால், மிகுந்த ஆபத்தான வேளையில் தேவன் அருளிய ஞானத்தினாலும், தைரியத்தாலும், ராஜ குமாரத்தியின் முன் நின்று, அவளை ஒரு சிறு பெண் தானே என்று ராஜ குமாரத்தி நினைத்து விடாதபடி பேசி தன் தம்பியின் உயிரைக் காத்தாள்.

நாம் எப்பொழுதும், கர்த்தர் மோசேயை உபயோகப்படுத்தி இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டார் என்று தான் நினைக்கிறோம். ஆனால் மோசேயை உருவாக்குவதற்கு , தங்கள் உயிரைப் பணயம் வைத்து எபிரேய ஆண் பிள்ளைகளை சிசுகொலை செய்யாமல் காத்த சிப்போராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளையும், எபிரேயக் குழந்தை என்று தெரிந்தும் இரக்கம் காட்டிய அந்நிய நாட்டு ராஜகுமாரத்தியையும், ஞானத்தோடும் விவேகத்தோடும் நடந்து தம்பியின் உயிரைக் காத்த மோசேயின் தமக்கை மிரியாமையும் கர்த்தர் கருவிகளாக உபயோகப்படுத்தினார்.

அதுமட்டுமல்ல, மோசே பார்வோனின் அரண்மனையில் 40 வருடங்கள் வளர்ந்து, எல்லா கலைகளையும் கற்றறிந்து, இஸ்ரவேலின் தலைவனாக உருவாகிக் கொண்டிருந்த  வேளையில், கர்த்தர் ஆரோனையும், மிரியாமையும் இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தலைவர்களாக உபயோகப் படுத்தி வந்தார். அவர்கள் இஸ்ரவேல் மக்களை உற்சாகப்படுத்தி, கர்த்தர் அவர்களை நிச்சயமாக இரட்சிப்பார் என்ற நம்பிக்கையூட்டினார்கள்.

மோசே பார்வோனின் அரண்மனையில் வாழ்ந்த  40 வருடங்கள் மட்டுமல்ல, அவன் மீதியான் வனாந்தரத்தில் வாழ்ந்த  40 வருடங்களும் சேர்த்து 80 வருடங்கள் வரை , கர்த்தர் ஆரோனை மீதியான் வனாந்தரத்தில் மோசேயை சந்திக்க சொன்ன நாள் வரைக்கும் அவர்கள் நம்பிக்கை இழக்காமல், இஸ்ரவேலின் தலைவர்களாய் வாழ்ந்தனர்.

தேவனாகிய கர்த்தர் மோசேயின் மூலமாய் இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, செங்கடலை இரண்டாய் பிளந்து, இஸ்ரவேலை வழிநடத்தி, எகிப்தியரை வீழ்த்திய போது, வேதத்தில், மிரியாம் தம்புருவை தன கையில் ஏந்தி, சகல ஸ்திரிகளையும் தம்புருவோடும், நடனத்தோடும் துதி பாடல் ஆராதனையில் நடத்தினாள் என்று பார்க்கிறோம்.

அதுமட்டுமல்ல     யாத்தி:  15: 20 நாம் இன்று வாசிக்கிற வேத பகுதி,  மிரியாமை தீர்க்கதரிசி என்று கூறுகிறது. வேதத்தில் முதல் முதலாக தீர்க்கதரிசி  என்று மிரியாமுக்கு தான் பட்டம் கொடுக்கப்பட்டது. ஆபிரகாமுக்கு அல்ல, யோசேப்புக்கு அல்ல, மோசேக்கு  கூட அல்ல, ஆனால் தேவ செய்தியை மக்களுக்கு அறிவித்த ஒரு பெண்ணாகிய மிரியாமே முதன் முதலில் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்டாள். அடிமைத்தனத்திலிருந்த இந்த இஸ்ரவேல் ஜனத்துக்கு மோசே தலைவனாக செயல் பட்டான், ஆரோன் அவர்களின் ஆசாரியனாகவும், மிரியாம் தீர்க்கதரிசியாகவும் செயல் பட்டனர். சிறு வயதிலேயே பார்வோன் குமாரத்தியுடன் தெளிவாக செய்தியை அறிவித்தவள், நிச்சயமாக தேவ செய்தியை தெளிவாக மக்களுக்கு அறிவிக்கும் வரம் பெற்றிருந்திருப்பாள்.

செங்கடல் கரையில் இந்தப் பெண்கள் தேவனை துதித்து ஆடி , பாடி, மெய் சிலிர்க்க வைத்த ஆராதனையில் கலந்து கொண்ட பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் வேதத்தின் மூலமாய் நம் மனக்கண்களால் அதைப் பார்க்கும் கிருபையை தேவன் நமக்கு அருளியிருக்கிறார். செங்கடலைப் பிளந்து, நம்மையும் நம் பிள்ளைகளையும் வழிநடத்தி, எகிப்தியரை முறியடித்ததால்,  கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று மிரியாம் பாடியது நம் காதுகளில் தொனிக்கிறது!

ஒருவேளை உன்னுடைய வாழ்க்கையில் ஒரு பக்கம் அலைவீசும் கடலும், மறுபக்கம் முறியடிக்க வரும் எதிரிகளும் நெருக்கிக் கொண்டிருக்கலாம். துதியா??? நான் எப்படி துதிக்க முடியும்? என்னைப் போல கஷ்டங்கள் இருந்தால் என் நிலைமை புரியும் என்று நீங்கள் எண்ணலாம்.

ஆனால் உன் வாயிலிருந்து துதி புறப்படும்போதே தேவன் தன் வல்லமையை புறப்படப் பண்ணுவார் என்று அறிவாயா? செங்கடலைப் பிளந்து உன்னை வழி நடத்துவார். மிரியாமைப் போல தேவனைத் துதித்து பாடு!  கர்த்தர் வல்லமையான காரியங்களை செய்வார்!

உன் வாழ்க்கை இன்று துதியால் நிரம்பியிருக்கிறதா? என்று சிந்தித்து பார்!

ஏசா:12: 5  கர்த்தரை கீர்த்தனம் பண்ணுங்கள்; அவர் மகத்துவமான கிரியைகளை செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்;

 ஜெபம்: நீர் செய்த அதிசயங்களை எண்ணி உம்மை துதிக்க, ஆராதிக்க எனக்கு உதவி தாரும். என்னுடைய வாழ்க்கை எல்லா சூழ்நிலைகளிலும் துதி ஸ்தோத்திரங்களினால் நிறைந்திருக்க உதவி தாரும்! ஆமென்!

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

 

இதழ்: 832 திடமான நம்பிக்கையினால் வரும் விசுவாசம்!

சங்கீ: 16: 1 தேவனே என்னைக் காப்பாற்றும். நான் உம்மை நம்பியிருக்கிறேன்

நாம் நேற்று மிரியாமை ஒரு ஞானமுள்ள பெண்ணாய்ப் பார்த்தோம். பார்வோன்  குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுக்கிறாள்.

ஞானமுள்ளவள்  மட்டுமல்ல, மிரியாமை ஒரு திடமான பெண்ணாகக் கூட இங்கு காண்கிறோம்.

நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார் அந்தப் பக்கம் வருகிறார்களோ,  அந்தப் பெட்டி யார் கண்ணில் படப்போகிறதோ என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பெட்டி பார்வோனின் படை வீரர் கண்ணில் படுமானால் தன் தம்பி மறுநிமிடம் நைல் நதியில் பிணமாக மிதப்பான் என்பதும் இந்தப் பெண்ணுக்கு தெரியும். நிச்சயமாக அவள் தன் தம்பியை இழக்க விரும்பவில்லை, மனது திக் திக் என்று அடித்தது.

எந்த நிமிடம் என்ன நடக்குமோ என்று தெரியாத சூழலில், பார்வோன் குமாரத்தி அங்கு வருகிறாள்.  தன்னுடைய மனத்தைரியத்தை எல்லாம் ஒன்றாக சேர்த்து, கைகாலில் நடுக்கம் இல்லாமல், திடமாக நின்று பார்வோன் குமாரத்தியிடம், தன் தாய் தனக்கு கற்றுக் கொடுத்த விதமாய் அழகாக பேசி, தன் தம்பியின் உயிரைக் காக்கிறாள் இந்த இளம் பெண் மிரியாம். இந்த திடமான தைரியம் அவளுக்கு எப்படி இந்த இளம் வயதில் வந்தது?

நான்  பள்ளியில் படித்த இளம் வயதில்,  ஏதாவது ஒரு புதிய இடத்துக்கு போகவோ அல்லது புது நபர்களைப் பார்க்கவோ வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டால், என்னை தேடி கண்டு பிடிக்க முடியாது. எங்காவது ஒரு மூலையில் புத்தகமும் கையுமாக  ஒதுங்கி விடுவேன். ஒரு கடையில் போய் பொருட்கள் வாங்க கூட தைரியம் இருக்காது.

ஒருநாள் என்னுடைய வேதாகம கல்லூரியில் நான் எல்லா ஆசிரியர் முன்பாகவும் ஒரு பிரசங்கம் செய்து காட்டவேண்டியிருந்தது. அந்த பத்து நிமிட செய்திக்காக , பத்து நாட்கள் யாரும்  பார்க்காத இடத்துக்கு போய், சத்தமாய் எனக்கு நானே பிரசங்கம் பண்ணிப் பழகினேன். அவ்வளவு வெட்கமும், பயமும் நிறைந்த நான் இன்று பலருக்கு வேதத்தை போதிப்பதையும், ஒரு நிறுவனத்தை பொறுப்பாக நடத்துவதையும்  பார்க்கும்போது எப்படி நான் இப்படி மாறினேன் என்று யோசிப்பேன். இந்த மனத்திடனும், தைரியமும் நிச்சயமாக ஒரே இரவில் வந்தவை அல்ல. தேவனாகிய கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையும், விசுவாசமும், பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளாய் வாசம் செய்ததுமே என்னை பெலப்படுத்தியது.

வேதத்தில் நியாதிபதிகள் 6 வது அதிகாரத்தில் கிதியோனைப் பற்றி படிக்கிறோம். அவன் மீதியானியருக்கு பயந்து, யாருடைய கண்ணுக்கும்  படாத இடம் பார்த்து கோதுமையை போரடித்துக் கொண்டிருந்த வேளையில் கர்த்தர் அவனை மீதியானியருடன் போரிட அழைக்கிறார். தொடை நடுங்கியாகிய அவன் சந்தேகப்பட்டு, அடையாளங்கள் கேட்டு, பல சாக்கு போக்கு சொல்லி தப்பித்து கொள்ள முயன்றான். ஆனால் நியா:6:34 ல் , கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கியபோது அவன் எக்காளம் ஊதி , அனைவரையும் தன்னைப் பின் தொடருமாறு யுத்தத்துக்கு அழைத்தான் என்று பார்க்கிறோம். என்ன ஆச்சரியம்! இந்த தைரியமும், மனப்பலமும் எங்கிருந்து வந்தது. தேவனானவர் அவன் ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்காக அவனோடு இருந்து அவனைப் பெலப்படுத்தினார்.

சிறுவயதிலேயே தன் தாயின் மூலம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் மீது திட நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்ட மிரியாம், ஆபத்தான வேளையில் தேவனாகிய கர்த்தர் அவளுக்கு கொடுத்த பெலத்தினால் எந்த தயக்கமும், பயமும் இன்றி பார்வோன் குமாரத்தியை அணுகினாள் என்று பார்க்கிறோம்.

 விசுவாசம் என்பது தேவனுடைய கிருபையின் மேல் நாம் வைக்கிற திடமான நம்பிக்கை என்று மார்டின் லூதர் கூறினார்.

நானும் இப்படியான திட நம்பிக்கை எனக்கு வேண்டும் என்று  ஓவ்வொருநாளும் ஜெபிக்கிறேன்! நீங்களும் ஜெபியுங்கள்! கர்த்தர் உங்களை பலப்படுத்தி, திடப்படுத்தி, நீங்கள் செய்ய இருக்கிற காரியத்தை வெற்றியுடன் முடித்து தருவார்!

ஜெபம்:ஆண்டவரே! உம்முடைய பலத்தினால் என்னை இடை கட்டும். எனக்கு தேவையான தைரியத்தையும் திட நம்பிக்கையையும் தாரும். உம்முடைய கரத்தின் பாதுகாப்புக்குள்ளே தங்க எனக்கு பெலன் தாரும். ஆமென்.

உங்கள்சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

இதழ்: 831 ஒரு தாய் விதைத்த நம்பிக்கை என்னும் விதை!

சங்கீ: 25: 4, 5 கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும்.  உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி என்னைப் போதித்தருளும். நீரே என் இரட்சிப்பின் தேவன்; உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

சில நாட்கள் நாம்  மோசேயின் தாயாகிய யோகெபெத்தைப் பற்றி ஒரு பொறுப்புள்ள, பெலசாலியான, திறமைசாலியான, ஆசீர்வாதமான தாயாகப் பார்த்தோம். இன்று முதல் மோசேயின் தமக்கையாகிய மிரியாமைப் பற்றி ஒரு சில நாட்கள் படிப்போம்.

குழந்தை மோசேயை நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியோரமாய் நாணல் நிறைந்த கரையில் மிதக்க வைத்து, குழந்தையின் அக்காவாகிய மிரியாமை தூரத்தில் இருந்து காவல் காக்கும்படி செய்தாள் யோகெபெத்.

மிரியாமுக்கு அப்பொழுது பத்திலிருந்து பதின்மூன்று வயதிற்குள் இருக்கும். யார் அந்த நதிக்கரையோரமாக வருவார்களோ? யார் இந்த பெட்டியைப் பார்ப்பார்களோ?  என்று அவள் ஆவலும், பயமும் கலந்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது, அவள் கண்களை நம்பவே முடியவில்லை! பார்வோனின் ராஜகுமாரத்தி தன் தாதியரோடு நீராட அங்கு வருகிறாள்.

இந்த வயதில் நான் எப்படி இருந்தேன் என்று ஒரு நிமிடம் யோசித்து பார்த்தேன். என்னுடைய நிழலைப் பார்த்து நானே பயந்த வயது,  யாரையும் பார்த்தால் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட தைரியமாய் பேசாமல், அம்மாவுக்கு பின்னால் ஒளிந்து கொள்வேன். ஆனால் இந்த மிரியாம் இவ்வளவு சிறிய வயதில் தைரியமாய், தெளிவாய் பேசும் வரத்தை தேவனிடமிருந்து பெற்றிருந்தாள். பார்வோன் குமாரத்தி நாணல் பெட்டியை திறப்பதையும், குழந்தை மோசே அழுத சத்தத்தையும் கேட்ட மிரியாம், குழந்தையை வளர்க்க உதவி செய்வதாக ராஜகுமாரத்தியிடம் பேசும் எண்ணத்தில் நெருங்குகிறாள்.  எவ்வளவு தைரியமும், தெளிவும் கொண்ட பெண் இவள்! ஒருவேளை தேவனாகிய கர்த்தரை விசுவாசித்த தாய் யோகெபெத் விதைத்த நம்பிக்கையின் விதை இவளுக்குள் கிரியை செய்ததோ? யாருடைய கட்டளையின் கீழ் எபிரேய ஆண் பிள்ளைகள் கொலை செய்யப்பட்டர்களோ, அவனுடைய குமாரத்தியையே அணுகி பிள்ளையை வளர்க்க ஏற்பாடு செய்ய தைரியம் எப்படி வந்தது?

சிறு வயதிலேயே அவள் தாயின் பாதத்தில் அமர்ந்து கற்றுக்கொண்ட ஞானம் அவள் மற்றவர்களைத் தெளிவாக புரிந்துகொள்ள உதவியது. ராஜகுமாரத்தி குழந்தையைப் பார்த்தவுடன் மிரியாம் அவளை கூர்ந்து கவனித்தாள். அவள் முகத்தில் தெரிவது என்ன? கனிவா? வெறுப்பா? ராஜகுமாரத்தியின் முகத்தில் கனிவையும், கண்களில் பரிவையும் கண்டவுடன் அவளிடம் விரைகிறாள். குழந்தையை வளர்க்க ஒரு எபிரெயத் தாயை அழைத்து வருவதாக சொல்கிறாள். ராஜகுமாரத்தியின் இருதயத்தை ஊடுருவி, நன்மையா தீமையா என்று பகுத்தறியும் ஞானம் இந்த சிறு பெண்ணுக்கு தேவன் அருளியிருந்தார்.

எல்லா குணங்களைப் பார்க்கிலும், மற்றவர்களைத் தெளிவாக புரிந்து கொண்டு, நன்மைதீமையை பகுத்தறிந்து, ஞானமாய் பேசி, ஞானமாய் நடந்து கொல்லும் விசேஷமான கிருபைக்காக நாம் ஒவ்வொருவரும் தேவனிடம் ஜெபிக்க வேண்டும்.

I ராஜா: 3: 9, ல் தாவீதிடமிருந்து சிங்காசனத்தைப் பெற்றுக் கொண்ட சாலோமொன் ராஜா, ஆஸ்திகாகவோ, வல்லமைக்காகவோ தேவனிடம் கேட்காமல், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கத் தக்க தெளிவான ஞானமுள்ள இருதயத்தை கேட்பதைப் பார்க்கிறோம்.

நம்முடைய சரீரத்துக்கு கண்கள் போல செயல்பட்டு, நம்முடைய இருதயத்தின் சிந்தனைகளையும், செயல்களையும் ஆராய்ந்து பார்த்து, நாம் ஒரு காரியத்தை செய்வது அல்லது பேசுவது  சரியா தவறா என்று நமக்குள் உணர்த்துவது இந்த ஞானமே. இந்த விசேஷ ஞானமில்லாமல் நாம் எத்தனை தவறுகள் செய்திருக்கிறோம். பேசக்கூடாத இடத்தில் பேசக்கூடாத வார்த்தைகளை பேசி எத்தனை பிரச்சனைகளை சந்தித்தோம்! பின்னர் ‘ஐய்யோ நான் ஞானமில்லாமல் நடந்து கொண்டேனே! இதனால் என் குடும்பம் இரண்டாகிவிட்டதே! என் கணவர் என்னை விட்டு போய்விட்டாரே! என் பிள்ளை என்னோடு பேசாமல் இருக்கிறானே!’ என்றெல்லாம் கதறி அழுதால் என்ன பிரயோஜனம்.

தேவன் நமக்கு  மிரியாமைப் போல நன்மைதீமை என்று பகுத்தறியும் ஞானத்தை,  மற்றவர்களை தெளிவாக புரிந்து கொள்ள செய்யும் ஞானத்தை, சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை பேசும் ஞானத்தை அருளுமாறு ஜெபிப்போம்.

 ஜெபம்: தேவனே நீர் என் கால்களுக்கு தீபமாய் இருந்து என் சொல்லிலும், செயலிலும் என்னை வழிநடத்தும். ஆமென்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

மலர் 6 இதழ் 357 தம்பி மனைவி ஆகாதவளா?

எண்ணா:12: 1, 2  எத்தியோப்பியா  தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து  ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.

மோசேயின் மனைவியாகிய சிப்போராளின் மூலம் நம் குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நல்ல குணநலன்களைப் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம். மோசே தன் மாமனாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, அவருடைய ஆலோசனையைக் கேட்டு செயல் பட்டான் என்று பார்த்தோம். இன்று குடும்பத்தில் வந்த குழப்பத்தைப் பற்றி பார்க்கலாம்.

என்னோடு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை. அதனால் அண்ணன் மனைவி, தம்பி மனைவிமாருக்குள் வரும் மனத்தாங்கல் எனக்கு அனுபவம் இல்லை.

ஆனால்  அநேக கிறிஸ்தவருடைய வாழ்க்கையில், அண்ணன், தம்பிமாரின்  மனைவிகளோடும், அக்கா, தங்கைகளின் கணவர்களோடும் ஏற்படும் பிரச்சனைகளால், சகோதர சகோதரிகளுக்குள் காணப்படும் பொறாமை, மனமுறிவு, வேதனை, கண்ணீர், இவற்றைக் கண்டு, தேவனிடம், என் வாழ்க்கைக்கு பின்னர் என் பிள்ளைகளுக்குள் இப்படிபட்ட வேதனை எந்தக் காரணத்தினாலும் வராமல் காத்துக் கொள்ளும்படி ஜெபிப்பேன்.

பல குடும்பங்களில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முதல் காரணம் நாக்கு அடக்கம் இல்லாமை என்று திட்டமாக கூற முடியும்.

இந்த பிரச்சனை மோசேயின் குடும்பத்தில் கூட நேரிட்டது. நேற்று நாம் மோசேயின் மாமனார் எத்திரோ, மோசேயின் மனைவி சிப்போராளையும், அவனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு மோசே பாளையமிறங்கியிருந்த தேவ பர்வதம் வந்தடைந்தான் என்று பார்த்தோம்.

இதுவரை மோசேயும், ஆரோனும், மிரியமும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களாக இருந்தனர். லட்சக் கணக்கான மக்களை எகிப்திலிருந்து கானான் தேசத்து வழி நடத்திக் கொண்டிருந்த மகா பெரிய தலைவர்கள். அவ்வேளையில் திடீரென்று ஒருநாள் மீதியான் நாட்டு ஆசாரியனான எத்திரோ, சிப்போராளோடும் அவள் பிள்ளைகளோடும்  வந்து சேருகின்றான்.

அங்கு நடப்பதை சற்று நம் மனக் கண்களால் பார்ப்போம்! மோசே அவர்களைக் கண்டவுடன் எழுந்து, கூடாரத்துக்கு வெளியே போய், தன் மாமனாரை வணங்கி முத்தஞ் செய்து வரவேற்றான். ஆரோனும், மிரியாமும், மோசேயும் மாத்திரம் சந்தித்து தேசத்து காரியங்களை ஆலோசித்த கூடாரத்துக்குள் எத்திரோவை அழைத்து செல்லுகிறான். அதுமட்டுமல்ல எத்திரோவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்து கொள்ளுகிறான். இது போதாதா ஒரு குடும்பத்தில் குழப்பம் நேரிட? மிரியாமுக்கும் ஆரோனுக்கும் யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்திருக்கும்..

மிரியாமால் தன் தம்பி மனைவியாகிய  சிப்போராளை ஏற்றுக்கொள்ள முடியவில்ல. மோசேயின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகுத்துக்கொண்டிருந்த இந்த சகோதரிக்கு இன்னொரு பெண்ணின் வருகை பொறுக்கவில்லை. சிப்போராள் எத்தியோப்பிய நாட்டை சேர்ந்தவளாதலால் அவள் நிறத்தில்  இஸ்ரவேலரை விட குறைந்தவளாக இருந்திருப்பாள். மோசே இந்த பெண்ணை மணந்திருக்கக் கூடாது என்று தான் மிரியாம் நினைத்திருப்பாள். அவள் அவர்களில் ஒருத்தி இல்லை என்பதை மிரியாமும் ஆரோனும் வெறுத்தனர்.

அதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சிப்போராளைத் தாக்கினர். அவளுடைய பின்னணியை, அவளுடைய கலாசாரத்தை, அவளுடைய நடைமுறையை, பழக்கவழக்கங்களைத்  தாக்கினர்.

மனவருத்தத்தொடு இதை எழுதுகிறேன். இந்த தவறை நாம் செய்யவில்லையா? “அவள் குடும்பம் அப்படி,….அவள் வளர்ந்த வளர்ப்பு சரியில்லை….. தாய் தகப்பன் சரியில்லை……பணத்தின் அருமை இவளுக்கு எங்கே தெரியும், இவள் நன் குடும்பத்துக்கு தகுதியேயில்லை….” இப்படியெல்லாம் நாம் பேசுவதில்லையா?

இந்த சூடான சண்டையில் ஒன்று குறைவுபடுகிறது. சிப்போராளின் எதிர் வார்த்தைகள். ஆரோனின், மிரியாமின் தாக்குதலுக்கு சிப்போராள் ஒருவார்த்தை திருப்பி பேசியதாகக் கூட வேதம் கூறவில்லை. அதுமட்டுமல்ல சிப்போராள் இதை மோசேயிடம் கண்ணீரோடு குறை கூறியதாகவும் வேதம் சொல்லவில்லை.

ஒன்று மட்டும் வேதம் கூறுகிறது ‘ கர்த்தர் அதைக் கேட்டார் என்று.

இன்று குடும்ப பிரச்சனையால் சிப்போராளைப் போல அமைதியாக, யாரும் பார்க்காத இடத்தில் கண்ணீர் சிந்துகிறாயா? நீ அமைதியாய் பொறுத்துக்கொண்டிருப்பதை கர்த்தர் காண்கிறார்!

நீதி:17:27  அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்

நாம் பேசும் வார்த்தைகள் வெள்ளியைப் போன்றது என்றால், நாம் காக்கும் அமைதி பொன்னைப் போன்றது என்று யாரோ கூறியது எவ்வளவு உண்மையானது!

கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தைகளின் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர் 6 இதழ் 348 சரியாகப் பேசத் தெரிந்த ஒரு சிறுமி!

சில நாட்கள் நாம்  மோசேயின் தாயாகிய யோகெபெத்தைப் பற்றிப் பார்த்தோம்! இன்று முதல் மோசேயின் தமக்கையாகிய மிரியாமைப் பற்றி ஒரு சில நாட்கள் படிப்போம்.

குழந்தை மோசேயை நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியோரமாய் நாணல் நிறைந்த கரையில் மிதக்க வைத்து, குழந்தையின் அக்காவாகிய மிரியாமை தூரத்தில் இருந்து காவல் காக்கும்படி செய்தாள் யோகெபெத்.

மிரியாமுக்கு அப்பொழுது பத்திலிருந்து பதின்மூன்று வயதிற்குள் இருக்கும். யார் அந்த நதிக்கரையோரமாக வருவார்களோ? யார் இந்த பெட்டியைப் பார்ப்பார்களோ?  என்று அவள் ஆவலும், பயமும் கலந்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது, அவள் கண்களை நம்பவே முடியவில்லை! பார்வோனின் ராஜகுமாரத்தி தன் தாதியரோடு நீராட அங்கு வருகிறாள்.

இந்த வயதில் நான் எப்படி இருந்தேன் என்று ஒரு நிமிடம் யோசித்து பார்த்தேன்! என்னுடைய நிழலைப் பார்த்து நானே பயந்த வயது அது! யாரையும் பார்த்தால் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட தைரியமாய் பேசாமல் அம்மாவுக்கு பின்னால் ஒளிந்து கொள்வேன்!
ஆனால் இந்த மிரியாம் இவ்வளவு சிறிய வயதில் தைரியமாய், தெளிவாய் பேசும் வரத்தை தேவனிடமிருந்து பெற்றிருந்தாள். பார்வோன் குமாரத்தி நாணல் பெட்டியை திறப்பதையும், குழந்தை மோசே அழுத சத்தத்தையும் கேட்ட மிரியாம், குழந்தையை வளர்க்க உதவி செய்வதாக ராஜகுமாரத்தியிடம் பேசும் எண்ணத்தில் நெருங்குகிறாள்.  எவ்வளவு தைரியமும், தெளிவும் கொண்ட பெண் இவள்! ஒருவேளை தேவனாகிய கர்த்தரை விசுவாசித்த தாய் யோகெபெத் விதைத்த நம்பிக்கையின் விதை இவளுக்குள் கிரியை செய்ததோ? யாருடைய கட்டளையின் கீழ் எபிரேய ஆண் பிள்ளைகள் கொலை செய்யப்பட்டர்களோ, அந்த பார்வோனின் குமாரத்தியையே அணுகி பிள்ளையை வளர்க்க ஏற்பாடு செய்ய தைரியம் எப்படி வந்தது?

சிறு வயதிலேயே அவள் தாயின் பாதத்தில் அமர்ந்து கற்றுக்கொண்ட ஞானம் அவள் மற்றவர்களைத் தெளிவாக புரிந்துகொள்ள உதவியது. ராஜகுமாரத்தி குழந்தையைப் பார்த்தவுடன் மிரியாம் அவளை கூர்ந்து கவனித்தாள். அவள் முகத்தில் தெரிவது என்ன? கனிவா? வெறுப்பா? ராஜகுமாரத்தியின் முகத்தில் கனிவையும், கண்களில் பரிவையும் கண்டவுடன் அவளிடம் விரைகிறாள். குழந்தையை வளர்க்க ஒரு எபிரெயத் தாயை அழைத்து வருவதாக சொல்கிறாள். ராஜகுமாரத்தியின் இருதயத்தை ஊடுருவி, நன்மையா தீமையா என்று பகுத்தறியும் ஞானம் இந்த சிறு பெண்ணுக்கு தேவன் அருளியிருந்தார்.

எல்லா குணங்களைப் பார்க்கிலும் மற்றவர்களைத் தெளிவாக புரிந்து கொண்டு, நன்மைதீமையை பகுத்தறிந்து, ஞானமாய் பேசி, ஞானமாய் நடந்து கொள்ளும் விசேஷமான கிருபைக்காக நாம் ஒவ்வொருவரும் தேவனிடம் ஜெபிக்க வேண்டும்.

I ராஜா: 3: 9, ல் தாவீதிடமிருந்து சிங்காசனத்தைப் பெற்றுக் கொண்ட சாலோமொன் ராஜா, ஆஸ்திகாகவோ, வல்லமைக்காகவோ தேவனிடம் கேட்காமல், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கத் தக்க தெளிவான ஞானமுள்ள இருதயத்தை கேட்பதைப் பார்க்கிறோம்.

நம்முடைய சரீரத்துக்கு கண்கள் போல செயல்பட்டு, நம்முடைய இருதயத்தின் சிந்தனைகளையும், செயல்களையும் ஆராய்ந்து பார்த்து, நாம் ஒரு காரியத்தை செய்வதும், பேசுவதும் சரியா? தவறா? என்று நமக்குள் உணர்த்துவது இந்த ஞானமே. இந்த விசேஷ ஞானமில்லாமல் நாம் எத்தனை தவறுகள் செய்திருக்கிறோம். பேசக்கூடாத இடத்தில் பேசக்கூடாத வார்த்தைகளை பேசி எத்தனை பிரச்சனைகளை சந்தித்தோம்! பின்னர் ‘ஐய்யோ நான் ஞானமில்லாமல் நடந்து கொண்டேனே! இதனால் என் குடும்பம் இரண்டாகிவிட்டதே! என் கணவர் என்னை விட்டு போய்விட்டாரே! என் பிள்ளை என்னோடு பேசாமல் இருக்கிறானே!’ என்றெல்லாம் கதறி அழுதால் என்ன பிரயோஜனம்?

தேவன் நமக்கு மிரியாமைப் போல இதைப் பேசலாமா? வேண்டாமா? என்று பகுத்தறியும் ஞானத்தை, மற்றவர்களைத் தெளிவாக புரிந்து கொள்ளும் ஞானத்தை அருளுமாறு ஜெபிப்போம்.

சங்கீ: 25: 4, 5 கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும்.

உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி என்னைப் போதித்தருளும். நீரே என் இரட்சிப்பின் தேவன்; உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

 
கர்த்தர் தாமே அவருடைய வார்த்தையின் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

ஜெபக்குறிப்புகள் இருந்தால் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்! உங்களோடு இணைந்து ஜெபிக்கிறேன்!

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

மலர் 6 இதழ் 347 ஒரு தாயின் கனவு!

எண்ணா: 26: 59 அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்

யோகெபெத்தைப் பற்றி நாம் படித்து வருகிறோம்! அவள் ஆரோன்,மிரியாம், மோசே இவர்களைப் பெற்றத் தாய்!

யோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்கள் மேல் கடினமான சுமை சுமத்தப்பட்டது. அப்படிப்பட்ட இருண்ட சமயத்தில் வாழ்ந்த இந்த இளம் தாய் தன் பிள்ளைகளுக்கு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவனாகிய கர்த்தரின் வழிகளை  போதித்தாள். அவர்களை  வளர்க்கும்போதே தேவனாகிய கர்த்தரின் வல்லமையைப் பற்றியும், அவர் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க வல்லவர் என்றும் போதித்தாள்.

மோசே குழந்தையாய் இருந்தபோது அவனைத் திறமையாய் காப்பாற்றி அவனுக்கு ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் தேவனைப் பற்றி சொல்லிக்கொடுத்து, பார்வோனின் அரண்மனையின் எல்லா செல்வ சிறப்புகளிலும், எல்லா கலைகளிலும் வல்லவனாய் அவன் வளருவதை தூரத்திலிருந்து பார்த்து, என்றாவது ஒருநாள் தன் மகன் நம் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பான் என்று கனவு கண்டுகொண்டிருந்தாளே, அவள் கனவு நனவாயிற்றா?

மோசே பெரியவனானபோது அவன் தன் சகோதரர் சுமை சுமந்து கஷ்டங்கள் அனுபவிப்பதை பார்த்து, ஒரு எகிப்தியனை வெட்டிப் போட்டு விட்டு, அது பார்வோன் செவிகளுக்கு எட்டியபடியால், எகிப்தை விட்டு ஓடிப் போனான். அவன் மீதியான் தேசத்தில் 40 வருடங்கள் ஆடு மேய்த்து அலைந்து திரிந்த போதும் அவள் மோசே மேல் கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை.

ஆம்!  40 வருடங்களுக்கு பின்னர், யோகெபெத் தன் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்திய அதே தேவனானவர், அவளுடைய மூன்று பிள்ளைகளையும், இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் மிகப்பெரிய ஊழியத்துக்கு அழைத்ததைப் பார்க்கிறோம். ஆம்! அவளுடைய மூன்று பிள்ளைகளும் தேவனுடைய பணிவிடைக்காரர் ஆயினர். மோசே அந்த ஊழியத்தின் தலைவனாகவும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசாரியராகவும், மிரியாம் தேவனுடைய முதல் தீர்க்கதரிசியாகவும் ஆயினர்! ஒரு தாயின் கனவு நிறைவேறிற்று!

யோகேபெத்தை எத்தனை அருமையான ஒரு தாயாகப் பார்க்கிறோம். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு சொத்து சுகம் தேடிகொடுத்தால் மட்டும் போதாது, அவர்களை கர்த்தரின் வழிகளில் நடத்த வேண்டும். நாம் தேடி வைக்கிற பணத்தினால் நம் பிள்ளைகள் நம்மை நினைவு கூற மாட்டார்கள். நாம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தோம் என்பதைக்கொண்டு தான் நினைவு கூறுவார்கள். கர்த்தருடைய சமூகத்துக்கு போய் 38 வருடங்கள் கடந்து போனாலும், என்னுடைய அம்மாவைப் பற்றி நினைத்தவுடன் என் கண்கள் கலங்கும். அவர்கள் எனக்கு சொத்து தேடி வைத்துவிட்டு செல்லவில்லை, ஆனால் என் வாழ்க்கையில் அவர்கள் ஆசீர்வாதமாக இருந்ததுதான் நினைவுக்கு வரும்.

பரிசுத்த பவுல் பிரயாணங்கள் செய்து பல நாடுகளில் தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்து, பல சபைகளை நிறுவியவர் என்று நமக்கு நன்கு தெரியும். அவர் ஒவ்வொரு இடத்தை விட்டு சென்ற பின்னரும், அவர்களுக்கு கடிதம் எழுதி அவர்களை கர்த்தருக்குள் உற்சாகப்படுத்துவார். அப்படி எழுதப்பட்டவை தாம் நாம் வேதத்தில் படிக்கிற ரோமர், கலாத்தியர், எபிசேயர், கொரிந்தியர், கொலோசெயர், பிலிப்பியர் என்கிற நிருபங்கள். இதில் சில நிருபங்களை அவர் சிறையிலிருக்கும்போதும் எழுதினார். எபிரேயருக்கு விசேஷமாக ஒரு நிருபத்தை எழுதினார். அதுமட்டுமல்ல தன்னுடைய ஆவிக்குரிய மகன் தீமோத்தேயுவுக்கும், தீத்துவுக்கும், பிலேமோனுக்கும்  தனியாக நிருபங்களை எழுதினர்.

பவுல் எழுதிய இந்த நிருபங்கள் இரண்டாயிரம் வருடங்களாக, தலைமுறை தலைமுறையாக கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆசீர்வாதமாக இருந்து வருகிறது. அவருடைய வாழ்க்கையும், அவருடைய வார்த்தைகளும் நம்மை எவ்வாறு ஒவ்வொருநாளும் கிறிஸ்தவ வாழ்க்கையில் பெலப்படுத்துகிறது என்பதை பவுல் இன்று பரத்திலிருந்து கண்ணோக்குவாரானால் அசந்து விடுவார். பரிசுத்த பவுல் நம் எல்லாருக்கும் விட்டு சென்றது ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை!

யோகெபெத் தன் பிள்ளைகள் மூவரையும் கர்த்தருக்குள் வழி நடத்தியதால், அவளுடைய மூன்று பிள்ளைகளும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியக்காரராகி, இஸ்ரவேலின் சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்றனர். ஒரு தாயால் இதைவிட பெரிய ஆசீர்வாதத்தை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமா?

நீ  இன்று யாருக்கு ஆசீர்வாதமாக இருக்கிறாய் என்று எண்ணிப்பார்! உன் பிள்ளைகளை கர்த்தருக்குள் வழிநடத்தியிருக்கிறாயா? கர்த்தரின் வார்த்தைகளை போதிக்கிறாயா? நீ கிறிஸ்துவால் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாயானால் நிச்சயமாக நீயும் உன் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாய் இருப்பாய்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

ஜெபக்குறிப்புகள் இருக்குமாயின் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். உங்களோடு சேர்ந்து ஜெபிக்க வாஞ்சையுடன் இருக்கிறேன்!
.