Tag Archive | மீகாள்

இதழ்: 668 மிரட்டிப் பறிக்கும் குணம்!

2 சாமுவேல் 3: 12,13 அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பி , தேசம் யாருடையது? என்னோடே உடன்படிக்கை பண்ணும். இதோ இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான். அதற்கு தாவீது: நல்லது. உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன். ஆனாலும் ஒரேகாரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். அது என்னவெனில் நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும்.

நான் பலமுறை வேதத்தைப் படித்திருந்தாலும் ராஜாவின் மலர்களுக்கு எழுதுவதற்கு படிப்பதைப்போல என்றும் படித்ததில்லை. அதனால்தானோ என்னவோ இன்றைய வேதாகமப் பகுதி அமைந்துள்ள 2 சாமுவேல் 3 ம் அதிகாரத்தை 5 நாட்கள் படித்தேன்.

இன்றைய வசனங்களை நாம் சாதாரணமாக கடந்து போக முடியும். ஆனால் இது தாவீதின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்களை நமக்குக் காட்டுகிறது.

இங்கு அப்னேர் சவுலின் குமாரனாகிய இச்போசேத்துக்கு எதிராக எழும்பி தாவீது பக்கம் நிற்பதாக செய்தி அனுப்புகிறான். நானாக இருந்தால் அப்னேர் மாதிரி ஒரு எதிரியுடன் கை கோர்க்க பயந்திருப்பேன். ஆனால் தாவீது அவனை மிரட்டுகிற மாதிரி ஒரு காரியத்தைக் கேட்கிறான்.

சவுலின் குமாரத்தியாகிய மீகாளை அழைத்து வர சொல்லுகிறான். தாவீது மீகாளை மறக்கவே இல்லை. சவுல் அவளை இன்னொருவனுக்குக் கொடுத்தபின்னரும் தாவீதால் அவளை மறக்கவே முடியவில்லை. அதனால் தாவீது அப்னேரை மிரட்டி  மீகாளை திரும்பக் கேட்பதைப் பார்க்கிறோம்.

நம்முடைய உலகத்தில் அடிக்கடி நாம் கேள்விப்படுகிறது இதுதானே! எனக்கு வேண்டியதை நான் மிரட்டியாவது பெற்றுக்கொள்வேன் என்பது! என்னுடைய வாழ்க்கையில் நான் என்றுமே இருக்கக்கூடாது என்று நினைக்கும் ஒரு குணம் இந்த மிரட்டி காரியத்தை சாதிக்கும் குணம்தான்!

நாம் எத்தனைமுறை தாவீதைப் போல நடந்து கொள்கிறோம். நம்முடைய குடும்பத்தையோ அல்லது மற்றவரையோ மிரட்டி, பயமுறுத்தி எத்தனை காரியங்களை சாதித்துக் கொள்கிறோம்.

தாவீது அப்னேரை மிரட்டி மீகாளைக் கேட்காமலிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும்! இன்னொருவனுக்கு மனைவியான அவளை அப்படியே விட்டிருக்கலாமல்லவா? கர்த்தருடைய இருதயத்திற்கேற்றவனாய் கருதப்பட்ட அவன் பின்னர் பத்சேபாளுடன்  நடந்த பாவம் தற்செயலாய் நடந்ததா? இல்லவே இல்லை! இந்த எப்ரோனில் விதைத்த விதை தாவீதின் நகரத்தில் கனிகொடுத்தது.

இதை நினைத்துதான் சங்கீதக்காரன் இப்படி எழுதினான் போலும்

என் இருதயம் பொருளாசையை சாராமல் உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும். மாயையை பாராதபடிக்கு நீர் என் கண்களை விலக்கி உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்  ( சங் 119:36,37)

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Advertisements

இதழ்: 622 எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பொய்!

1 சாமுவேல்: 19: 17  அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்ப அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி; என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்ல வேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.

எனக்கு மீகாளை ரொம்ப பிடிக்குங்க! அவள் கணவனாகிய தாவீதை நேசித்தாள்! அவனுடடைய உயிருக்கு ஆபத்து வந்தபோது தன் உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றினாள்! தைரியமாக, துணிகரமாக முடிவு எடுத்தவள்!  எனக்கு இந்தப்பெண்ணின் குணம் நிச்சயமாகப் பிடிக்கும்.

ஆனால் நம் எல்லோரையும் போல இவள் வாழ்க்கையிலும் சில சரிவுகள் இருந்தன! தாவீதுக்குப் பதிலாக ஒரு சுரூபத்தைப் படுக்கவைத்து அங்கு வந்த எல்லா ஆண்களையும் அவன் வியாதியாயிருக்கிறான் என்று பொய் சொல்லி  ஏமாற்றிய அவள், பிடிபட்டு அவள் நாடகம் வெட்ட வெளிச்சமானவுடன் மறுபடியும் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

ஏதாவது ஒரு காரியத்தில் ஒருதடவை நாம் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டால், அது நம்மைத் தொடர்ந்து பொய் சொல்ல வைக்கும் என்பதை கவனித்திருப்பீர்கள் அல்லவா!

மீகாள் ஏமாற்றிவிட்டதைக் கண்டுபிடித்த சவுல் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டான்! அவள் இப்படி ஏய்த்தது ஏன் என்று சவுல் கேட்டதும் பொய்க்கு மேல் பொய்  சொல்ல ஆரம்பித்தாள்.

இப்பொழுது மீகாள்  என்னைப் போகவிடு நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று தாவீது சொன்னதாகக் கூறியப் பச்சைப்  பொய், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினது போல் பற்றியது. தான் சொன்னதை உண்மை என்று நிரூபிக்க மீகாள் அழுதும், பயந்ததுபோல நடித்தும் இருப்பாள். சவுல் அவள் பொய்யை நம்ப வேண்டுமே!

தன்னுடைய மகளையே கொன்றுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறானே தாவீது! என்ன நெஞ்சழுத்தம்! இவனை நான் விடவே மாட்டேன் எப்படியாவது கொல்லுவேன் என்றுதான் சவுலின் நினைவுகள் ஓடியிருக்கும். பின்னால் சவுல் தாவீதை விரட்டி விரட்டி கொல்ல முயன்றதற்கு இதையும் ஒருக் காரணமாக வேதாகம வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒரே ஒரு பொய்! அதை மறைக்க இன்னொரு பொய்! இன்னொரு பொய்! பொய் ஒரு குடும்பத்தையே இரண்டாக்கிவிட்டது!

ஒரு பொய் சொல்லிட்டாபோதுங்க! அடுத்தடுத்தது தானா கோர்வையா வந்துடும்! அது கூட சகஜமாக வரும்! இது  நம்முடைய நாவின் அநீதியான செயல்!

ஒரு நிமிஷம்!  நீங்கள் யாரையாவது ஏமாற்ற பொய் சொல்லியதுண்டா? அதன் விளைவுகள் என்ன? அப்படி பொய் சொன்னபின் உங்கள் உள்ளுணர்வு  என்ன சொல்லிற்று? சற்று யோசித்து சொல்லுங்களேன்!

நீ யாரையாவது ஏமாற்ற ஒரு பொய்யை  சொல்லும்போது உன்னை சிக்கவைக்கும் சிலந்தி வலையை உனக்கே பின்னிக்கொண்டு இருக்கிறாய் என்பதை மறந்துபோகதே!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 621 இந்தத் துணிவுக்குப் பின்னால்!

1 சாமுவேல் 19:13 – 16  மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே , ஒரு வெள்ளாட்டுத்தோலைப் போட்டு, துப்பட்டியினால்  மூடி வைத்தாள். தாவீதைக்கொண்டு வர சேவகரை அனுப்பினபோது அவர் வியாதியாயிருக்கிறார் எனறாள். அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான். சேவகர் வந்தபோது, இதோ சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.

மீகாளை ஒரு தைரியசாலியான பெண்ணாக நாம் கடந்த வாரத்தில் படித்தோம். பெண்களுக்கு சமுதாயத்தில் எந்த இடமும் கொடுக்கப்படாத காலம் அது. அவள் தகப்பனாகிய சவுலுக்கு சொந்தமான ஒரு பொருள் போலத்தான் அந்த ராஜாங்கத்தில் வளர்ந்தாள். அங்கு ஆண்கள் எடுத்த எந்த முடிவையும் மாற்றவோ, எதிர்க்கவோ திராணியற்றவர்கள் பெண்கள்.

ராஜாவாகிய சவுல், தாவீதைக் கொல்லும்படி தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கும், சேவகர்களுக்கும் கட்டளையிட்டபோது, மீகாள் மிகவும் தைரியமான முடிவை எடுக்கவேண்டியிருந்தது.

அவள் தாவீதை ஜன்னல் வழியாக இறக்கி தப்புவித்ததுமல்லாமல், அவன் படுத்திருந்த படுக்கையில் ஒரு சுரூபத்தை படுக்கவைத்து,அதை ஒரு வெள்ளாட்டுத்தோலினால் மூடினாள் என்று பார்க்கிறோம். தாவீதைத் தேடி யாராவது வந்தால் அவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல ஏதுவாக்கினாள்.

மூர்க்கமாய் தாவீதைக் கொல்லத்தேடும் சவுலுக்கு எதிராக எடுத்த முடிவு அவளுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கக்கூடும். சவுல் கையில் ராஜா என்னும் அதிகாரம் இருந்ததை மறந்துவிடாதீர்கள்!

தாவீது வியாதியாயிருக்கிறான் என்று அவள் சவுலுக்கு சொல்லியனுப்பியபோது, அவனை படுக்கையிலேயே கொல்ல முடிவு செய்து தன்னுடைய சேவகரை அனுப்புகிறான் சவுல். இங்கேதான் மீகாளுடைய நாடகம் வெட்ட வெளிச்சமாகியது.

கட்டிலில் படுத்திருந்தது தாவீது அல்ல என்ற உண்மையை அந்த சேவகர் எந்த முகத்துடன் சவுலிடம் கூறியிருப்பார்கள் என்று சற்று யோசித்துப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது!!!!

தைரியம் என்ற வார்த்தைக்கு பயத்தை வெல்லும் என்று மட்டும் அர்த்தம் அல்ல, அதற்கு ஆபத்து வரும்போது துணிவாக முடிவு எடுப்பது என்பதும் பொருந்தும். மீகாள் துணிகரமான முடிவை எடுத்து தாவீதைக் காப்பாற்றினாள்!

புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுல் பாடு, நிந்தை, போராட்டம் மத்தியில் சுவிசேஷத்தை சொல்லும்படி தேவனுக்குள் தைரியம் கொண்டதாக ( 1 தெச: 2:1) ல் கூறுவதைப் பார்க்கிறோம். அவர்களுடைய தைரியம் கர்த்தரால் வந்தது.

அநேக வேதனைகளும், பாடுகளும் நம்மை சுற்றியிருக்கும் வேளையில் துணிகரமாக முடிவு எடுக்க நமக்கு தேவனாகிய கர்த்தரின் தயவு வேண்டும்.

ஒருவேளை தாவீது இந்த இரகசியத்தை தன் மனைவியாகிய மீகாளுக்கு கற்றுக் கொடுத்தானோ என்னவோ? தாவீது சொல்வதைப் பாருங்கள்!

கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?

என்னை பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. (சங்: 18:31-32)

இன்று உனக்கு தேவனாகிய கர்த்தரின் பலம் தேவையா? அவர் உன்னோடு இருப்பாரானால் நீ எந்த இருண்ட சூழ்நிலையில் இருந்தாலும், ஒரு  நல்ல முடிவை நீ துணிவாக தைரியமாக எடுக்க உனக்கு உதவிசெய்வார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

இதழ்: 620 பயத்தை வென்ற தைரியம்!

1 சாமுவேல் 19: 11,12 தாவீதைக் காவல்பண்ணி மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான். இதை தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: இன்று இராத்திரியிலே உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால் நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிடாள். அவன் தப்பி ஓடிப்போனான்.

சவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்துத் திருமணம் செய்துகொண்டாள். ஆனால் மீகாளுக்கு நன்கு தெரியும் சவுல் அவனைக் கொலைசெய்ய அலைகிறான் என்று. சவுலால் வளர்க்கப்பட்ட அவளுக்கு அவனின் மூர்க்ககுணம் தெரியாதா என்ன?

ஒருதடவை, இருதடவை அல்ல! சவுல் தொடர்ந்து தாவீதைக் கொலை செய்ய முயன்று கொண்டிருந்தான். அப்படிப்பட்ட சூழலில் அவள் தாவீதை மணந்த அவள் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருந்திருக்கவேண்டும்!

இன்றைய வசனத்தில் நாம் பார்க்கும் அந்த இராத்திரியில் மீகாளின்  வாழ்க்கையில் காணப்பட்ட தைரியம் புல்லரிக்க வைக்கும் ஒன்று. அவள் தகப்பனுடைய மூர்க்கமும், கோபமும் தன் கணவனை மட்டும் அல்ல ஒருவேளை அவளையும் கூட அழித்துவிடலாம் என்று தெரியும். அந்த இருண்ட இராத்திரி மீகாள் தைரியமாக தன் கணவனைப் பாதுகாத்து, சவுலும் உறங்கிக் கொண்டிருந்த  அதே மாளிகையிலிருந்து ஜன்னல் வழியாக இறக்கி அவனைத் தப்பிக்கவும் செய்தாள்.

அவளுக்கு பயமில்லாமல் இருந்திருக்கும்  என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருந்திருக்கும்! சவுல் கண்டுபிடித்து விட்டால் அவள் உயிருக்கே ஆபத்து அல்லவா? அவள் தாவீது மேல் கொண்ட அன்பு பயத்தை மேற்கொள்ள உதவியது.

நம்முடைய வாழ்க்கையில் மீகாளைப் போல் தைரியமாய் நடக்கவேண்டிய சூழல் என்றாவது ஏற்பட்டதுண்டா?

என்னுடைய வாழ்க்கையில் தைரியம் எப்பொழுது தேவைப் படுகிறது தெரியுமா?  பெரிய மலையைத் தாண்டவோ அல்லது நீரில் மூழ்கவோ இல்லை!  என்னால் இதை செய்ய முடியாது என்ற ஒரு காரியத்தை செய்து முடிக்க நான் அடிமேல் அடி வைக்கும்போதுதான்!  ஒருவேளை என்னால் முடியாவிட்டால் என்ற பயத்தின் மத்தியில் நான் எடுக்கும் ஒவ்வொரு அடியும் தைரியத்தைத்தான் காட்டுகிறது!

மீகாளைப் பொறுத்தவரை அவள் ஒருவனை நேசிக்கவும் தைரியம் தேவைப்பட்டது! அவனோடு ஒவ்வொருநாளும் வாழவும் தைரியம் தேவைப்பட்டது! அவனைத் தன் தகப்பனிடமிருந்து  காப்பாற்றவும் தைரியம் தேவைப்பட்டது!

உன் வாழ்க்கை எப்படி? நிச்சயமாய் பயம்  உண்டு! ஆனால்  பயத்தை வெல்வதற்கு பெயர் தான் தைரியம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ்: 618 மகளின் நேசத்தை சதியாக்கின தகப்பன்!

1 சாமுவேல்: 20.21 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள். அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்கு  சந்தோஷமாயிருந்தது. அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி…

மீகாள் தாவீதை நேசித்தாள் என்னும் இந்த வேத வசனம் ஒரு சாதாரணமாய்த் தோன்றினாலும், அது இன்னும் ஒரு பெரிய காரியத்தையும் நமக்கு போதிக்கிறது.

மீகாள் நேசித்தவன் அவளுடைய தகப்பனாகிய சவுலின் எதிரி என்று தெரிந்தும் மீகாள் தாவீதை நேசித்தாள். எப்படியாவது தாவீதை கொன்றுவிட சவுல் நினைப்பது அவளுக்குத் தெரியாதா என்ன?

ஆனால் சவுலோ தாவீதைத் தன் மருமகனாக்கத் துடித்தான்! அவன் துடித்ததில் ஒரு சதி இருந்தது மீகாளுக்குத் தெரியுமோ என்னவோ தெரியவில்லை!

மீகாளுடைய அப்பா தாவீதை எப்படியாவது தன்னுடைய மருமகனாக்கத் துடித்ததின் காரணம்  தன் பிள்ளைகளை தாவீதோடு வாழ வைப்பதற்காகவா? தாவீதை யுத்தத்துக்கு அனுப்பி பெலிஸ்தரின் கையினலால் சாகடிப்பதற்கல்லவா?

தாவீதின் குடும்பம் பெரிய பணக்காரக் குடும்பம் இல்லை. ஆதலால் ராஜாவாகிய சவுலின் மகளை மணக்க வேண்டுமானால் பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணி தன்னை வல்லவன் என்று காண்பிக்க வேண்டும்!  அவனுடைய மூத்த மகள் மேராவை மணக்க தாவீது மறுத்துவிட்டான். இப்பொழுது மறுபடியும் ஒரு தருணம்! மீகாள் அவனை நேசிக்கிறாள் அல்லவா? மீகாளுடைய காதலைக் கொண்டு தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றலாம்  என்று எண்ணினான். காதலைக் கொண்டு கொல்ல சதி!

சவுல் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சகல வல்லமைகளும் எடுபட்டுவிட்டது. ராஜாங்கம் அவனைவிட்டு விலகும் என்று சாமுவேல் சொல்லிவிட்டார். உள்ளே பயம், நடுக்கம், கோழைத்தனம் ஆனால் வெளியே அதைக் காட்ட முடியவில்லை. தன்னைவிட பேரும் புகழும் வாங்கும் தாவீதை வேறோடு அழித்துவிட நினைத்தான். எல்லோரும் அவனை நேசிக்கின்றனர் அவன் மேல் கைபோட முடியாது.  ஆதலால் தன்னுடைய குடும்பத்தின் பெண்களையும் அவர்களுடைய அன்பையும் அவனுடைய  பகடையாய் உபயோகித்தான். தன்னுடைய பலத்தையும் அதிகாரத்தையும் தன் மனைவி, பிள்ளைகளிடம் மட்டும்தானே காட்ட முடியும்.

இது சில  குடும்பங்களிலும் நடப்பதுதானே!  சவுலைப்போல உள்ளத்தில் பெலவீனமான ஆண்கள்  தங்கள் பெலவீனத்தை மறைக்க தங்கள் குடும்பத்தில் மனைவியிடமோ அல்லது பிள்ளைகளிடமோ வீரமாக நடந்து கொள்வது உண்டு அல்லவா?  வெளியே காட்டமுடியாத வீரத்தை வீட்டில் காட்டுவது மட்டுமல்ல, குடும்பத்தினரை தரக்குறைவாக நடத்துவதும் , அவர்களை கைநீட்டி அடிப்பதும், அவர்களுடைய அன்பை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்துவதும் கூட உண்டு!

இன்று சவுலைப் போல ஒரு கணவனோ அல்லது தந்தையோ உன் வாழ்வில் உண்டா? உன்னுடைய அன்பை யாராவது தங்களுக்கு சாதகமாக உபயோகத்திருக்கிறார்களா? நீ நேசித்த ஒருவரிடம் உன் அன்பு விலை போயிற்றா? உன் உள்ளம் புண்பட்டு இருப்பதை கர்த்தர் காண்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் தாமே இன்று உங்கள் புண்பட்ட உள்ளத்தை ஆற்றித் தேற்றுவார்! அவர் உங்களுக்கு சுகமளிக்கும்  தைலமாக இருந்து நீங்கள் புதுபெலத்தோடு காலூன்றி நிற்க அருள் செய்வார்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்