Tag Archive | மோசே

இதழ்: 846 யோசுவாவின் தலைமைத்துவம்!

யோசுவா: 1: 9  நான் உனக்குக் கட்ளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்..”

மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வழிநடத்த கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட தாசன். யாத்திராகமம் 3 ம் அதிகாரத்திலிருந்து உபாகமம் 34 ம் அதிகாரம் வரை வேதத்தில் மோசேயுடைய ஊழியத்தைபற்றிப் படிக்கிறோம்.  நீண்ட காலம் தலைவராயிருந்த மோசேயை இழந்ததும் மக்கள் துக்கமடைந்தனர். இன்னும் வனாந்தரத்தை தாண்டவில்லை! யோர்தானைக் கடக்க வேண்டும்! எதிரிகளை முறியடிக்கவேண்டும்! கானானை சுதந்தரிக்க வேண்டும்! அதற்குள் மோசே எடுத்துக்கொள்ளப் பட்டதும் ஒரு கணம் அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள் போல பரிதபித்தனர். ஆனால் கர்த்தரோ அவர்களைக் கைவிடவில்லை. கர்த்தர் யோசுவாவை ஆயத்தம் பண்ணியிருந்தார்.

நாம் இன்றிலிருந்து யோசுவா புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கப் போகிறோம். அதற்கு முன்னால் இன்று இந்த யோசுவா யார்? என்று சற்று ஆராய்வோம்!

யோசுவா என்னும் பெயருக்கு எபிரேய மொழியில் ‘ யெகோவாவே இரட்சகர்’ என்ற அர்த்தம் உண்டு. அவன் இளம் பிராயத்திலேயே கர்த்தருடைய இரட்சிப்பை கிருபையாய் அடைந்தவன். எகிப்தின் அடிமைத்தனத்தில் பிறந்த அவன் எப்பிராயீம் கோத்திரத்தை சேர்ந்த நூனின் தலைப் பிள்ளை. எகிப்தில் தலைப்பிள்ளைகள் சங்காரம் பண்ணப்பட்ட இராத்திரியிலே கர்த்தருடைய துதனாவர் கடந்து வந்த போது, நூனின் வீட்டுவாசலில் ஆட்டுக் குட்டியின் இரத்தம் இருந்ததால் அவனுடைய தலைப் பிள்ளையாகிய யோசுவா இரட்சிக்கபட்டான்!

தன்னுடைய வாலிப வயதிலேயே கர்த்தரை விசுவாசித்தவன். அவன் மோசே மூலமாய் கர்த்தர் செய்த அற்புதங்களையெல்லாம் கண்களால் கண்டவன். செங்கடல் பிளந்தபோது அதன் வழியாய்க் கடந்து வந்தவன். விசுவாசம் அவனுக்குள் வேரூன்றியிருந்தது.

யாத்தி:17:13 ல் யோசுவாவை ஒரு நல்ல போர்ச்சேவகனாகப் பார்க்கிறோம். ஒரு சேனைத் தலைவனாக அவன் அமலேக்கியரோடு போராடி வெற்றி பெற்றான். ஒரு சேனையை யுத்தத்தில் நடத்தும் திறமையும், பட்டயத்தை உபயோகப்படுத்தும் பயிற்சியும் எங்கிருந்து வந்தது யோசுவாவுக்கு? ஒருவேளை அவன் எகிப்தில் யுத்த வீரனுக்கான பயிற்சி பெற்றிருக்கலாம். மோசே தன்னுடைய மக்களுக்காக பார்வோனின் அரண்மனையை விட்டுக்கொடுத்தது போல ஒருவேளை யோசுவாவும் எகிப்தின் சேனையில் பதவியேற்காமல் தன் ஜனங்களோடு புறப்பட்டு வந்திருக்கலாம் என்ற யூகம் உள்ளது! யோசுவா எதிரிகளை எதிர்த்து போராடும் மனத்தைரியம் கொண்டவனாக இருந்தான்.

யாத்திராகமம் 24 ம் அதிகாரம் 13ம் வசனத்தில் நாம் யோசுவாவை மோசேயுடைய ஊழியக்காரன் என்று வாசிக்கிறோம். இஸ்ரவேலின் தலைவனான மோசேக்கு அவன் ஊழியம் செய்தான். நாற்பது வருட வனாந்தர நாட்களில் இஸ்ரவேலின் பாளயத்துக்கு வெளியே மோசே தனியாக ஒரு கூடாரம் அமைத்து அதில் கர்த்தரோடு பேசுவது வழக்கம்(யாத்தி:33:7-11). அப்படியாக மோசே சென்றபோதெல்லாம் ஊழியக்காரனான யோசுவா கூடாரத்துக்கு வெளியே தங்கியிருப்பான். அவன் ஒரு நல்ல போர்ச்சேவகன் மட்டும் அல்ல, கர்த்தருடைய பிரசன்னத்தையும் அவருடைய மகிமையையும் உணர்ந்தவன்!

எண்ணாகமம் 13 ம் அதிகாரத்தில் யோசுவா கானானை வேவு பார்க்க காலேபோடும் இன்னும் பத்து பேரோடும் சேர்ந்து மோசேயால் அனுப்பப்படுவதைப் பார்க்கிறோம். மற்ற பத்துபேரும் அங்குள்ள சூழ்நிலைகளைக் கண்டு பயந்து மக்களைப் பயப்படுத்தியபோது யோசுவாவும், காலேபும் சுற்றியுள்ள சூழ்நிலைகள் தங்கள் விசுவாசத்தை மேற்கொள்ளாமல் தைரியமாக நாம் கானானை சுதந்தரிப்போம் என்றனர்! இஸ்ரவேல் மக்கள் விசுவாசிக்காததால் இன்னும் நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் அலைய வேண்டியிருந்தபோதிலும், அவர்களுடைய தலைமுறையினர் எல்லோரும் வனாந்தரத்தில் மரித்தபோதிலும் யோசுவாவும் காலேபும் தாங்கள் கானானை சுதந்தரிப்போம் என்ற விசுவாசத்தில் தளரவேயில்லை.

உபாகமம் 34: 9 ல் யோசுவா ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்என்று பார்க்கிறோம். கர்த்தருடைய ஊழியத்தை செய்ய தேவையான உதவி நமக்கு பரத்திலிருந்து அருளப்படுகிறது என்பதற்கு யோசுவாவே உதாரணம்!

கர்த்தர் யோசுவாவை தெரிந்து கொண்டு அவனை தன்னுடைய ஊழியத்துக்காக ஆயத்தப்படுத்தியிருந்தார். மோசேயைப் போல யோசுவாவும் ஒரு சாதாரண மனிதனாகப் சில தவறுகளை செய்தாலும் அவன் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு தலைவனாக சிறந்து விளங்கியதின் இரகசியம் என்ன? அவன் கர்த்தருடைய வார்த்தையின் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை!

யோசுவாவிடம் இருந்த குணநலன்கள் நம்மிடம் உள்ளதா? இரட்சிப்பின் அனுபவம் உள்ளதா? கர்த்தர் மேல் விசுவாசம் வேரூன்றியிருக்கிறதா? ஒரு நல்ல போர்ச்சேவகனாக கர்த்தருடைய வார்த்தை என்னும் பட்டயத்தைக் கொண்டு எதிரியாகிய சாத்தானை எதிர்த்து போராடும் திறமை உள்ளதா? ஊழிய மனப்பான்மை உள்ளதா? சூழ்நிலைகளைக் கண்டு தளராத தைரியம் உள்ளதா? ஆவியானவரால் நிரப்பப்பட்டிருக்கிறீர்களா? எல்லாவற்றுக்கும் மேலாக கர்த்தருடைய வார்த்தைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதா? இவையே ஒரு சிறந்த கிறிஸ்தவ தலைமைத்துவத்தின்  அடையாளங்கள்!

இவை நம்மில் காணப்படுமானால் கர்த்தர் நம்மையும் நமக்கு கொடுத்திருக்கிற பொறுப்புகளில் சிறந்து விளங்க செய்வார்! நீயும் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறாய்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

 

 

இதழ்: 845 மோசே முகமுகமாய் அறிந்த அநாதி தேவன்!

உபாகமம்:33:27 “ அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்;

வேதத்தை வாசிப்பது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அநேகர் சங்கீதத்தை தவிர மற்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர்த்து விடுவதைப் பார்த்திருக்கிறேன்! அதிலும் இந்த உபாகமம் புத்தகத்தின் விநோதமான இந்தப் பெயருக்கு நமக்கு அர்த்தமே தெரியாது பின்னர் எப்படி வாசிப்பது என்று நினைப்பார்கள்! இந்த உபாகமம் புத்தகத்தை நாம் சில வாரங்கள் படிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்தார்.

இன்று நம்முடைய கடைசி நாள்! மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கும் கடைசி உபதேசத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம்! இன்றைக்கு நாம் வாசிக்கிற வசனம் ஒரு தங்கப் புதையலைப் போல மோசேயின் உபதேசத்தில் புதைந்து கிடக்கிறது!

மோசேயுடைய வாழ்க்கை கற்பாறையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது என்றும், தவறும்போதும் கர்த்தருடைய பாதங்களில் விழுந்து கிடக்கும் இயல்பும், கர்த்தருடைய வார்த்தைகளால் போதனையடையும் இயல்பும் அவருக்கு இரு தூண்களைப் போல இருந்தன என்று பார்த்தோம்.

இப்பொழுது தன்னுடைய அருமையான, கர்த்தரோடு சஞ்சரித்த வாழ்க்கையின் கடைசி பகுதியில் மோசே ”அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்” என்று கூறுவதைப் பார்க்கிறோம். மோசேயின் குரலில் திடநம்பிக்கை தொனிக்கிறது! தாம் முகமுகமாய் அறிந்த தேவனே தனக்கு அடைக்கலம், அவர் நித்தியமானவர், என்றென்றைக்கும் நம்பப்படத்தக்கவர் என்கிறார்.

இதை வாசிக்கும்போது என்னுடைய வாழ்க்கையின் கடைசிமூச்சில் இப்படிப்பட்ட சாட்சியை நான் கொடுக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். வெளியே காற்று வேகமாக அடித்தது, இடியோடு மழை பெய்தது! வாசலில் நிற்கும் மரம் காற்றின் வேகத்தில் ஒடிந்து விழுந்து விடுவாற்போல் அசைந்தது! அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு சிறிய பறவை தனக்கென்று ஒரு சிரு கூட்டை அமைத்துக்கொண்டு அதிலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. பெருங்காற்றும், இடியும், மழையும் அந்தப் பறவையை அசைக்க முடியவில்லை. இந்த பறவையைப்போல இன்று அவருடைய நித்திய புயத்துக்குள் அடைக்கலமாக வாழும் நான் கடைசிவரை விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே என் பெருமூச்சின் ஜெபமாக வெளிப்பட்டது!

எகிப்தில் எல்லா ஆண் பிள்ளைகளையும் கொல்லும்படியாக பார்வோன் உத்தரவு கொடுத்திருந்த போது இரண்டு எபிரேய மருத்துவச்சிகள் மூலமாக கர்த்தர் மோசேக்கு அடைக்கலம் கொடுத்தார்! பின்னர் மூன்று மாதக் குழந்தையாக நாணற்பெட்டியில் நைல் நதியில் மிதந்த போது பார்வோன் ராஜாவின் குமாரத்தியால் அடைக்கலம் பெற்றார்! குழந்தையை வளர்க்க ஒரு தாய் தேவைப்பட்டபோது கர்த்தர் மோசேயை அவருடைய தாயின் கரத்திலேயே அடைக்கலமாகக் கொடுத்தார்! மோசே மீதியான் வனாந்தரத்தில் தலைசாய்க்க இடமில்லாமல் அலைந்தபோது கர்த்தர் எத்திரோவின் மகளான சிப்போராளை மனைவியாகக் கொடுத்து அடைக்கலம் கொடுத்தார்! இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் பெரும்பொறுப்பை ஏற்றபோது அவனுடைய ஆத்துமாவை உற்சாகப்படுத்த துதி பாடல்களோடு ஆராதனை நடத்திய தீர்க்கதரிசியாகிய அவர் சகோதரி மிரியாமைக் கர்த்தர் அடைக்கலமாகக் கொடுத்தார்!

மோசே தன் முதிர் வயதில் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தபோது அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம் என்று திட்டமாகக் கூற முடிந்தது!

உன்னால் இன்று தேவனே எனக்கு அடைக்கலம் என்று நிச்சயமாகக் கூற முடியுமா? கர்த்தருடைய புயத்துக்குள் அடைக்கலமாக வந்திருக்கிறாயா? அவருடைய பிரசன்னம் உன்னோடு எப்பொழுதும் தங்கியிருக்கிறதா?

உன்னுடைய நிகழ்கால வாழ்க்கையையும், நீ அறியாத உன் எதிர்காலத்தையும் மோசே முகமுகமாய் அறிந்த இந்த தேவனாகிய கர்த்தரிடம் ஒப்புவிக்க பயப்படாதே! அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்! 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

 

இதழ்: 844 உம்முடைய வார்த்தை என் வாழ்வின் அங்கமாகட்டும்!

உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து  உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.

 நாம் மோசே இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கடைசி உபதேசத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்க்கை என்னும் வீட்டின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்து என்றும், நம்முடைய வீட்டின் முதல் தூண் நாம் பயப்படும் வேளையிலும், நாம் இடறும் வேளையிலும், அவருடைய பாதத்தில் விழுந்து அவர் கால்களை விடாமல் பிடித்துக்கொள்ளும் வாழ்க்கை என்றும் பார்த்தோம்.

இன்று கிறிஸ்துவை அஸ்திபாரமாகக்கொண்டு கட்டப்பட்ட வீட்டின் இரண்டாவது தூணாக அமைவது என்ன என்று பார்க்கப்போகிறோம்.

“உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்”. கர்த்தருடைய வார்த்தைகள் நம்மை போதித்து வழிநடத்தும் என்பது நான் என் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிற ஒரு உண்மை.

நாற்பது வருடங்களுக்கு முன்னால் நான் வேதாகமக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒருநாள் எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் கூடியிருந்த சபையில் அவர்கள் முன்பாக ஒரு பிரசங்கம் பண்ணிக் காட்ட வேண்டியதிருந்தது. அதை நான் முடித்துவிட்டு வெளியே வரும்போது எங்கள் கல்லூரியின் தலைமை ஆசிரியர் என்னை அழைத்து நீ ஒரு பெரிய பிரசங்கியாக வருவாய் என்று என்னால் நிச்சயமாக கூற முடியும் என்றார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என் உள்ளத்தில் தெளிவான குரலில் நீ பிரசங்கிக்கப் போவதில்லை, வேதத்தை கற்பிக்கப்  போகிறாய் என்றார். அன்றிலிருந்து இன்றுவரை வேதத்தை சிறியோர் பெரியோருக்கு கற்பிக்கும்  கிருபையை கொடுத்திருக்கிறார். இந்த ராஜாவின் மலர்கள் மூலமாக நான் உங்களோடு கர்த்தருடைய வார்த்தையை போதிப்பதும்  கர்த்தருடைய அநாதி தீர்மானம் அல்லவா!

மோசே நாற்பது ஆண்டுகள் தேவனை முகமுகமாய் அறிந்த அனுபவத்தில் நம்மை நோக்கி கர்த்தருடைய வார்த்தைகளின் போதனையை ஏற்றுக்கொள்ளும்படி கூறுகிறார். என்னுடைய அனுபவத்தில் நான் இன்று உங்களுக்கு சாட்சியாக சொல்லுகிறேன் வேதவார்த்தைகள் ஜீவனுள்ள வார்த்தைகள், அவை உங்களை போஷிக்கும், உங்களை வழிநடத்தும், உங்களைக் காக்கும், தேவனோடு நெருங்கி வாழவும், அவருடைய திருமுக பிரகாசத்தை நாம் காணவும் நமக்கு உதவும். கர்த்தருடைய வார்த்தை நமக்கு மனமகிழ்சியைக் கொடுக்கும், ஆறுதலைக் கொடுக்கும், நம் பாதைக்கு தீபமாக இருக்கும். இது நிச்சயமாக என் அனுபவம் மாத்திரம் அல்ல, என்னைப் போன்ற உங்களில் பலருடைய அனுபவமும் தான்!

நம்மில் அநேகர் பிரசங்கத்தை கேட்கும்போது ஆம் ஆம் என்று தலையசைக்கிறோம். ஆனால் அவற்றை ஒரு காதில் கேட்டு விட்டு மறுகாதில் விட்டுவிடுவோம். இங்கு மோசே உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள் என்கிறார். போதனையடைவார்கள் என்ற வார்த்தைக்கு அர்த்தம்  அவற்றைக் காதுகளால் கேட்பது மட்டும் அல்ல, அவை நம் வாழ்வின் அங்கமாக வேண்டும். அவற்றை நாம் உட்கொள்ள வேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளில் நம் வாழ்க்கை வேரூன்றியிருக்கும் போதுதான் நாம் நல்ல கனி கொடுக்கும் மரமாக வாழ முடியும்.

அனுபவ முதிற்சியுள்ள மோசே இஸ்ரவேல் மக்களைப் பார்த்து ‘ கர்த்தருடைய வார்த்தைகளால் போதனையடையும்படி’  தன்னுடைய கடைசி உபதேசத்தில் கூறுகிறான். இன்று கர்த்தருடைய வார்த்தை உன் வாழ்வில் அங்கமாக இருக்கிறதா? அதுவே நாம் கற்பாறையாகிய கிறிஸ்துவின் மேல் கட்டும் வாழ்க்கை என்னும் வீட்டின் இரண்டாவது பெலமான தூண்!

கர்த்தருடைய வார்த்தையானது பாதைக்கு தீபம்!

அது நாம் இருளில் நடக்கும்போது

வழிகாட்டும், நம் கால்கள் தவறாதபடி காக்கும்!

கர்த்தருடைய வார்த்தையானது கொழுந்து விட்டு எரியும் அக்கினி!

அது நம்முடைய சாட்சியை

தைரியமாக பறைசாற்ற உதவும்!

கர்த்தருடைய வார்த்தையானது ஒரு சுத்தியைப் போன்றது!

அது கல்லான நம் இருதயத்தை உடைத்து, நொறுக்கி,

நாம் அவருடைய சித்தப்படி வாழ நம்மை உருவாக்கும்!

கர்த்தருடைய வார்த்தையானது ஒரு சிறிய விதையைப் போன்றது!

அது நல்ல நிலமாகிய நம் இருதயத்தில் விழும்போது

நம்மை நற்கனி கொடுக்கும் மரமாய் மாற்றும்!

கர்த்தருடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள பட்டயம்!

அது நம் இருதயத்துக்குள் ஊடுருவி சென்று,

நம்மை ஆராய்ந்து பரிசுத்தமாய் நாம் வாழ உதவும்!

கர்த்தருடைய வார்த்தையானது சத்துணவைப் போல!

நாம் குழந்தைகளான போது பாலைப் போல நம்மை புஷ்டியாக்கும்!

நாம் பெரியவர்களான போது மாமிசத்தைப் போல நம்மை திருப்தியாக்கும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

 

இதழ்: 843 தடுக்கி விழுந்தாலும் விட்டு விடாதே!

உபாகமம்: 33:3 மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து…

மோசே தன் வாழ்க்கையை கன்மலையாகிய கர்த்தரின் மேல் கட்டியிருந்தான், கர்த்தரை முகமுகமாய்  அறிந்திருந்தான் என்று பார்த்தோம். நம்முடைய வாழ்க்கையும் கற்பாறையாகிய கிறிஸ்து இயேசுவின் கட்டப்பட்டால் எந்த புயல் வீசினும், எந்த அலை வந்தாலும் அது நிலைத்திருக்கும் என்று பார்த்தோம்.

ஒரு வீட்டின் அஸ்திபாரத்தை கன்மலையின்மேல் போட்டால் மாத்திரம் போதாது. அந்த வீடு நிலைத்திருக்க நல்ல தூண்கள் வேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட தூண்களில் ஒன்றுதான் இந்த வசனத்தில் “அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து” என்று நாம் பார்க்கிறோம். இது ஆங்கில வேதாகமத்தில் உம்முடைய பாதத்தில் அமர்ந்து என்று எழுதப்பட்டுள்ளது.

இவற்றில் எனக்கு தமிழ் மொழியாக்கமே மிகவும் பிடித்தது. அது எபிரேய மொழியாக்கத்தைப் போலவே இருந்தது. பாதத்தில் விழுந்து என்றால் என்ன?

இந்த வார்த்தை எனக்கு என் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தைதான் நினைவுபடுத்தியது! நாங்கள் திருச்செந்தூர் தாலுக்காவை சேர்ந்த நாசரேத்து என்ற ஊரில் வாழ்ந்து கொண்டிருந்தோம்! அம்மா ஒருநாள் தாலுக்கா ஆபீசுக்கு போக வேண்டியதிருந்ததால் என்னையும் கூட அழைத்துச் சென்றார்கள். வேலை முடிந்தவுடன் கடற்கரைக்கு சென்றோம். அதுதான் முதல்தடவையாக நான் கடலைப் பார்த்தது!`அம்மாவுடைய கையைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன். ஒரு பெரிய அலை என்னிடமாய் வந்ததும், பயத்தில் நான் அம்மாவின் கையை உதறிவிட்டு பின்னோக்கி ஓட முயன்றேன் ஆனால் ஏதோ ஒன்று காலைத் தட்டியதால் நான் கீழே விழுந்து, அம்மாவின் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டேன். அந்த அலை வந்துவிட்டு போகுமட்டும் நான் கால்களை விடவேயில்லை!

இதைத்தான் நான் இந்த வார்த்தையில் பார்க்கிறேன். நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக அவரோடு நடக்கும்போது, அவருடைய சத்தத்தைக் கேட்டு அவரைப் பின்பற்றும்போது, நாம் எதிர்பார்க்காத சோதனைகள், கடல் அலைகள் போல வந்து நம்மைத் தாக்கும் வேளையில் ஒருவேளை நாம் பயத்தில் இடறினாலும் அவருடைய பாதத்திலேயே விழுந்து, அவருடைய பிரசன்னத்தை உணர்ந்து, அவருடைய கரத்தைப் பற்றிக்கொண்டு எழும்பி மறுபடியும் அவரைப் பின் தொடரும் இயல்புதான் நம் வாழ்க்கையில் தூணாக அமையும்.

நம்முடைய வாழ்க்கை என்னும் வீட்டின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்து என்று பார்த்தோம்.  நம்முடைய வீட்டின் முதல் தூண் நாம் பயப்படும் வேளையிலும், நாம் இடறும் வேளையிலும், அவருடைய பாதத்தில் விழுந்து அவர் கால்களை விடாமல் பிடித்துக்கொள்ளும் வாழ்க்கை!

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் எந்த நேரத்தில் புயல் வீசும் என்று நம்மால் கூறமுடியுமா? சாத்தான் நம்மைத் தடுக்கி விழப்பண்ண அநேக இன்னல்களைக் கொண்டு வருவான். வேலை பார்க்கும் இடத்திலும், வீட்டிலும் நிம்மதியில்லாத வாழ்க்கையைக் கொடுத்து உன்னை இடறுதலடைய செய்வான். சூழ்நிலைகளைப் பார்த்து நீ கலங்கி பயமடைய செய்வான்.

கர்த்தருடைய தாசனாகிய மோசே பலமுறை தவறினார் ஆனாலும் முற்றிலும் கவிழ்ந்து விடவில்லை. கால் தடுக்கி தவறின பொழுதும் கர்த்தருடைய பாதத்திலேயே விழுந்து அஸ்திபாரமாகிய கன்மலையின் மேலேயே தங்கியிருந்தார்.

 உன் வாழ்க்கையிலும் நீ இடறும்போது அவர் பாதங்களைப் பற்றிக்கொள்! விழமாட்டாய்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

இதழ்: 842 மோசே அறிந்த கன்மலை!

உபாகமம்:34:12 ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை”

நாங்கள் இஸ்ரவேலில் கெத்செமனே தோட்டத்தில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூதாஸ் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட மரத்தடியில் நின்று கொண்டு எங்கள் இருவரையும் சேர்த்து போட்டோ எடுக்கமுடியாமல்,  யாரிடம் கேட்பது என்று திகைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு சகோதரி, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர்கள், எங்களிடம் வந்து கேமராவை வாங்கி சேர்ந்து நில்லுங்கள் நான் போட்டோ எடுக்கிறேன் என்று சொல்லி எங்கள் இருவரையும் படம் எடுத்ததுமட்டுமல்லாமல், என்னிடம் வந்து நீங்கள் கிறிஸ்தவரா?  என்று கேட்டார்கள், நான் ஆம் என்றெதும் என்னை பாசத்துடன் முத்தமிட்டு விட்டு கடந்து சென்றார்கள். அந்த சகோதரியின் முகப்பிரகாசமே, கர்த்தருடைய கிருபையையும், அன்பையும் அவர்கள் அதிகமாய் அறிந்தவர்கள் என்று காட்டிற்று. அவர்கள் முகம் என் கண்ணிலிருந்து மறையவேயில்லை!

எந்த மனிதனையும்விட கர்த்தராகிய தேவனை அதிகதிகமாக அறிந்த மோசேயின் வாழ்க்கையையும், அவர் கர்த்தரோடு கொண்டிருந்த தொடர்பையும் இன்றுமுதல் சில நாட்கள் நாம் படிக்கலாம். இதுவே நாம் உபாகமம் புத்தகத்தைப் படிக்கும் கடைசி வாரமாகும்.

மோசே தேவனை முகமுகமாய் அறிந்திருந்தார்! இந்த தேவன் யார்? மோசேயின் வார்த்தைகளைக் கேளுங்கள்!  கர்த்தருடைய நாமத்தை பிரசித்தம் பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்.  அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம்; அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”  (உபா:32 : 3 – 4)

மோசேயின் வாழ்க்கையின் கடைசிக்கட்டமாக கர்த்தர் அவரை நேபோ மலையின் உச்சியில் உள்ள பிஸ்கா கொடுமுடிக்கு கொண்டுபோய் கானான் தேசத்தை அவருக்கு காட்டும் முன்னதாக மோசே இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, கர்த்தரை அறிந்த ஜீவியத்தை ஜீவிக்கிறதைப் பற்றி உபதேசிக்கிறதை நாம் உபாகமம் 32 ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.

மோசே இந்த உபதேசத்தை பண்ணும்போது அவருக்கு வயது 120! முதல் நாற்பது வருடங்கள் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாக எகிப்தின் அரண்மனையில் கழிந்தன! இரண்டாவது நாற்பது வருடங்கள் மீதியானின் வனாந்தரத்தில் ஆடுகளை மேய்ப்பதில் கழிந்தன! மூன்றாவது நாற்பது வருடங்கள் அடிக்கடி வழிதவறிய, முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் நடத்துவதில் கழிந்து விட்டன!

இத்தனை வயதில் கணீரென்ற குரலில், மோசே உரத்த சத்தமாய் ” நான் என் ஜீவியத்தில் அறிந்த தேவனாகிய கர்த்தர் ஒரு கன்மலை! என்று கூறுகிறார். இந்தக் கன்மலைமேல் மோசேயின் வாழ்க்கையின் அஸ்திபாரம் இருந்ததால், அவருடைய வாழ்வின் முடிவில் ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று கூறும்படியாய் அமைந்தது

கர்த்தரை அறிந்த ஜீவியத்திற்கு உறுதியான அஸ்திபாரம் தேவை! அது நாம் ஒரு வீடு கட்டுவது போலத்தான்! உறுதியான துருப்பிடிக்காத கம்பிகளோடு போடும் தூண்களும், அஸ்திபாரமும் வீட்டின் உறுதிக்கு ஆதாரம் அல்லவா? அவ்வாறு நம் வாழ்க்கையின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்துவின்மேல் போடப்பட வேண்டும் என்று மோசே கூறுவதைப் பார்க்கிறோம்!

இந்த இடத்தில் நாம் முகமுகமாய் அறிந்த என்ற வார்த்தையின் எபிரேய மொழியாக்கத்தைப் பார்ப்போம். நாம் யாராவது நமக்கு நன்றாகத் தெரிந்தவர்களைப் பற்றி பேசும்போது ‘ஓ அவர்களை எனக்கு நன்றாகத் தெரியுமே’ என்கிறோம் அல்லவா அந்த வார்த்தைதான் அறிந்த என்ற வார்த்தையும். மோசேயும் கர்த்தரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்தனர், அவர்கள் இருவரும் நண்பர்கள்! ஒன்றாய் நடந்தனர்! பேசினர்! எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தனர்! என்ன அருமையான வாழ்க்கை!

பரலோகத்தின் தேவனை மோசே அறிந்ததாலே, பூமியிலே அவருடைய பிரசன்னத்தை ஒவ்வொரு நாளும் உணர்ந்தார்! என்ன வாழ்க்கை!! வானாதி வானங்களைப் படைத்தவர் பூமியிலே மோசேக்கு நண்பரானார்!

பரிசுத்த பவுல் இயேசு கிறிஸ்துவை நான் இன்னும் அதிகமாக அறிய வேண்டும் என்றார்.  நீ கன்மலையாகிய தேவனை அறிந்திருக்கிறாயா? அவர் உனக்கும் நண்பரா?? உன் கவலைகள், பாரங்கள் எல்லாவற்றையும் அவரிடம் சொல்வாயா? அவருடைய கிருபை, இரக்கம், அன்பு இவற்றை அறிந்திருக்கிறாயா? அவர் உன்னுடன் பேசுவாரா? இல்லையானால் இன்றே அவரிடம் வா!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

 

 

இதழ்: 837 தலைக்கு வந்த ஆபத்து கீழ்ப்படிதலால் போனது!

யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்….

வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார்.

அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய  நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.

சிப்போராள் மோசேக்கு பாலைவனத்தில் கிடைத்த நீரோடை.  பல கனவுகளோடு அவள் மோசேயை மணந்தாலும் அவள் கனவுகள் எதுவும் பலிக்க வில்லை. அவளுக்கு மோசேயோடு கிடைத்தது 40 வருடங்கள் நாடோடியாய் கானானுக்கு போகிற வழியில் நடந்து திரிந்த வாழ்க்கைதான. அப்படி இருந்தபோ சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக வாழ்ந்தாள் என்று பார்த்தோம்.

இன்று சிப்போராளின் வாழ்க்கையில் காணப்பட்ட கீழ்ப்படிதல் என்னும் குண நலனைப் பற்றி சிறிது அறியலாம்!

கர்த்தர் மோசேயோடு பேசி, அவனை இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படியான பெரிய பொறுப்பைக் கொடுத்து எகிப்துக்கு திரும்பி போகும்படி கட்டளை கொடுக்கிறார்.

நாம் தியானிக்கிற இந்த சம்பவம் மோசே தன்னுடைய மனைவியோடும், பிள்ளைகளோடும் எகிப்த்துக்கு போகும் வழியில் சம்பவித்தது. அவன் தன் குடும்பத்தோடு தங்கிய இடத்தில்  கர்த்தர் அவனை  கொலை செய்ய முயற்சித்தார் என்று பார்க்கிறோம்.

இதை வாசிக்கிற உங்களைப் பற்றி தெரியவில்லை, ஆனால் எனக்கு கொஞ்சம் பயங்கரமாகத்தான்  தோன்றியது இந்த சம்பவம்!

இதை வாசிக்கும் நமக்கு,  கர்த்தர் ஏன் மோசேயிடம் இப்படி நடந்து கொண்டார்? இவரை எப்படி நான் நேசிப்பது என்ற எண்ணங்கள் வரலாம். தேவன் அன்பானவர், இரக்கமும், கிருபையும் உள்ளவர் என்று நாம் விசுவாசிப்போமானால், கர்த்தருடைய இப்படிப்பட்ட செயல்களுக்கு பின்னால் உள்ள அர்த்தத்தையும், அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் இன்று வாசிக்கிற வேத பகுதி நமக்கு மோசேயின் பிள்ளைகளில் ஒருவர் விருத்தசேதனம் பண்ணப்படாமல் இருந்ததைக் காட்டுகிறது.

கர்த்தர் தமக்கு சொந்தமான ஜனமாக இஸ்ரவேலைத் தெரிந்து கொண்டபோது அவர்களுக்கு விருத்தசேதனம் பண்ண வேண்டும் என்ற புது கட்டளையையும் கொடுத்தார். இதை ஏன் செய்யவேண்டும் என்று அவர்களுக்கு விளக்கி கூறியதாக வேதம் சொல்லவில்லை. இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தனர். மோசேயின் தாய் தகப்பன் இருவரும் தேவனுக்கு கீழ்ப்படிந்தவர்கள் ஆதலால் தங்கள் குமாரனாகிய மோசேக்கு நிச்சயமாக விருத்தசேதனம் செய்திருப்பார்கள்.

ஆனால் 40 வருடங்கள் எகிப்தின் அரண்மனையில் வாழ்ந்ததாலும், இன்னுமொரு   40 வருடங்கள் மீதியான் தேசத்தின் வனாந்திரத்தில் வாழ்ந்ததாலும் அவன்  விருத்தசேதனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம், அல்லது அதின் முக்கியத்துவத்தைப் பற்றி அவன் மனைவிக்கு எடுத்துரைக்காமல் இருந்திருக்கலாம்.

அதனால் அநேக வேதாகம வல்லுநர்கள் எண்ணுகின்றனர், மோசே தன்னுடைய மூத்த மகனுக்கு எபிரேய முறைப்படி விருத்தசேதனம் செய்திருப்பான், ஆனால் இளையவனுக்கு விருத்தசேதனம் செய்ய விடாமல் சிப்போராள் தடை செய்திருக்கக் கூடும் என்று. இது நமக்கு மோசேயின் இரு குமாரரில் ஒருவன் ஏன் விருத்தசேதனம் செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் கொடுக்கிறது அல்லவா?

தன்னுடைய கணவனுக்கு வந்த ஆபத்தைக் கண்டவுடன் சிப்போராள் ஒரு கருக்குள்ள கத்தியை எடுத்து, தன் புத்திரனின் நுனித்தோலை அறுத்தது எறிந்தது மாத்திரமல்லாமல், நீர்  எனக்கு இரத்தத சம்பந்தமான புருஷன் என்று கூறினது அவள் இந்த இரத்த சம்பந்தமான விதிமுறையை விரும்பவில்லை என்று தெரிகிறது.

இந்த சம்பவத்தில் கீழ்ப்படிதல் என்ற பெரிய பாடம் நமக்கு காத்திருக்கிறது.

மோசே மீதியான் தேசத்தில் போய் பெண் எடுத்த போது, அவன் அந்த தேசத்து பழக்க வழக்கங்களின் படி நடக்க ஆரம்பித்திருப்பான். தன் வாழ் நாள் முழுவதும் அந்த தேசத்தில் கழிந்துவிடும் என்று தானே நினைத்திருப்பான்? எகிப்துக்கு திரும்புவதை கனவில் கூட நினைத்திருக்கமாட்டான். அதேவிதமாய் சிப்போராள் முதலில் அவனை மணந்தபோது, மோசேயுடைய எபிரேய பழக்க வழக்கங்களில் ஆர்வம் காட்டியிருப்பாள். அதனால் தான் அவர்கள் முதல் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்திருந்தனர். ஆனால் காலப்போக்கில் அந்த ஆர்வம் குன்றியிருக்கும்.   கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுப்பதும், கீழ்ப்படிவதும் அவர்களிடம் குறைவு பட்டிருக்கும்.

இப்பொழுது மோசே இஸ்ரவேல் மக்களின் தலைவனாக எகிப்துக்கு செல்கிறான். தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளான மோசேயும், சிப்போராளும் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாதவர்கள், தங்கள் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யாதவர்கள் என்ற குறையோடு  இஸ்ரவேல் மக்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. அதனால் வழியில் இடைப்பட்டு  சிப்போராள் தன் குமாரனுக்கு விருத்தசேதனம் செய்யாததால் மோசேயின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று வெளிப்படுத்துகிறார்.

சிப்போராளின் கீழ்ப்படிதல், அவள் கணவன் உயிரைக் காத்தது.

தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்தலும், கீழ்ப்படிதலும், உன்னுடைய குடும்பத்தில் குறைந்து காணப்படுகிறதா? இன்று உன் குடும்பத்தில் இருக்கிற ஆபத்தான சூழ்நிலைக்கு உன் கீழ்ப்படியாமை காரணமாயிருக்கக் கூடும்! கீழ்ப்படியாமை நம் தலைக்கு கத்தியை கொண்டு வரும்! ஏனெனில் நாம் அவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்காமல் இருக்கும்போது கர்த்தர் நம்மைக் காத்து வழிநடத்த முடியாது. உன்னைக் காக்கிறவர் உறங்கார் என்ற வாக்குத்தத்தம் நமக்கு சொந்தமாகாது,

நாம் குடும்பமாக தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் போது கர்த்தர் நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையமிடுகிறார். அதை யாரும் முறிக்க இயலாது. நம்மைத் தொடுகிறவன் அவர் கண்மணியைத் தொடுகிறான் என்று கூறினார் அல்லவா?

பலிகளையல்ல கீழ்ப்படிதலையே நம் தேவன் நம்மிடத்தில் விரும்புகிறார்! சிப்போராளைப் போல கீழ்ப்படிந்து இந்த புதிய மாதத்தில் தேவனுடைய  ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

இதழ்:836 உன் திருமண வாழ்க்கையின் கனவுகள் நனவாயிற்றா?

யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு  கொடுத்தான்;

அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான்.

மோசே!    40 வருடங்கள் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய  ராஜகுமாரன் ஒருநாள் எபிரேயரைக் கொடுமைப் படுத்திய ஒரு எகிப்தியனை வெட்டிக் கொன்றதால், பார்வோனின் வெறுப்புக்கு ஆளாகி, சிங்காசனத்தை துறந்து, மீதியான் நாட்டின் வனாந்தரத்துக்கு ஓடிப்போனான்.

யாத்தி: 2: 15 ல் வேதம் கூறுகிறது, மோசே மீதியான் தேசத்திலே ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். அதே அதிகாரத்தில் நாம் , மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள், அவர்கள் மோசே அமர்ந்திருந்த துரவண்டை வந்து தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்தபோது, அங்கிருந்த மேய்ப்பர்கள் அவர்களை துரத்தினார்கள், அப்பொழுது மோசே அவர்களுக்கு துணைநின்று அவர்கள் மந்தைக்கு தண்ணீர் காட்டினான் , என்று வாசிக்கிறோம்.

அவர்கள் வீட்டுக்கு சீக்கிரம் வந்து சேர்ந்த காரணத்தை அவர்கள் தகப்பன் கேட்டபோது எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களை தப்புவித்து  எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான் என்றார்கள். மோசே எகிப்தைவிட்டு புறப்பட்டபோது அணிந்தருந்த எகிப்தியரின் ஆடை அவனை எகிப்தியன் என்று அந்தப் பெண்களுக்கு காட்டிற்று.

மீதியான் தேசத்தில் அவன் வாழ்ந்தபோது, அந்த பாலைவன மக்கள், அரேபியரான இஸ்மவேலருடன் தொடர்புள்ளவர்கள் என்று உணர்ந்தான். ஆதி 37 ம் அதிகாரத்தில், இந்த மீதியானியர், யோசேப்பை இஸ்மவேலரிடம் விற்றதை மறந்து விட வேண்டாம். அதுமட்டுமல்ல, மீதியானியர், ஆபிரகாம் சாராள் மரித்தபின்னர் , மணந்த கெத்தூராளின் பிள்ளைகளின் வம்சத்தினர்.

ஒன்றை நன்கு கவனியுங்கள்!

மோசே ஒரு இஸ்ரவேலன், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஈசாக்கின் வழியில் வந்தவன்.

இஸ்மவேலர், ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்த பிள்ளையின் வம்சத்தார்.

மீதியானியர், ஆபிரகாமுக்கும் கெத்தூராளுக்கும் பிறந்த பிள்ளைகளின் வம்சத்தினர்.

இந்த மூன்று வம்சங்களுக்குமே தகப்பன் ஆபிரகாம் தான். இது ஒன்றே அவர்களுக்குள் போட்டியையும் பொறாமையையும் கொண்டு வர போதுமான காரணம் அல்லவா! எங்காவது ஒரு தகப்பனின் மூன்று மனைவிமாருக்கு பிறந்த பிள்ளைகள் ஒற்றுமையாய் இருப்பதை நாம் கண்டிருக்கிறோமா?

இப்பொழுது ஒரு அழகிய ராஜகுமாரன் மீதியான் தேசத்து ஆசாரியனின் வீட்டுக்கு வருகிறான். அவனுடைய ஏழு குமாரத்திகளில் சிப்போராள் ஒருவேளை மூத்தவளாக இருந்திருக்கலாம். ஒரு ஆசாரியனின் மூத்த மகளாகிய அவள் அந்த தேசத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவளாக இருந்திருப்பாள். அவளை அவள் தகப்பன் திருமணத்தில் மோசேக்கு கொடுத்தபோது, அவள் ஒரு விலையேறப்பெற்ற பரிசாகத்தான் இருந்திருப்பாள். மீதியான் பாலைவனத்தில் மோசேக்கு கிடைத்த நீரோடையல்லவா அவள்!

பல கனவுகளோடு தன்னுடைய ராஜ குமாரனுக்காக காத்திருந்த அவளுக்கு என்ன கிடைத்தது தெரியுமா? ஒரு எபிரேய மேய்ப்பன் தான்!  40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான்! பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். அவள் கனவு பலிக்கவில்லை! அவள் கால்கள் ஓயவே இல்லை!

சிப்போராள் தன் கணவனோடும், பிள்ளைகளோடும் அமைதியாய் மீதியான் தேசத்தில் வாழ விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண்ணாகத்தான் இருந்திருப்பாள், அவள் ஆசை நிறைவேறவில்லை!

இன்று உன் திருமண வாழ்க்கையில் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்த நீ ஒருவேளை ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று உன் உள்ளத்தில் நீ நினைக்கலாம்!

நீ உன் கணவன் அல்லது மனைவி உன்னுடைய விருப்படிதான் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா? சரியான துணைவனை தேடிக் கண்டடைவதைவிட கர்த்தருடைய உதவியோடு சரியான துணையாக நாம் வாழ்வதுதான் முக்கியம்.  சிப்போராளைப் பார்! அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை! ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக இருந்தாள்!

 கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்த்த எந்த குணநலனுமே இல்லையெனினும், நம்மை அளவில்லாமல் நேசிக்கிறாரே அந்த நேசத்தைதான்  நாம் நம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டும்!

ஜெபம்: ஆண்டவரே! ஒருவரையொருவர் நேசித்து, குறைகளைப்பார்க்காமல்,நிறைகளைப் பார்த்து சந்தோஷமாய் வாழ எனக்கு பெலன் தாரும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்