Tag Archive | யோசேப்பு

இதழ்: 824 பேசுவதில் ஞானம் என்றால் என்ன?

யாத்தி:1: 18, 19 அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனி நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்

யோசேப்பின் மன்னிப்பையும், ஆதரவையும் பெற்ற யாக்கோபின் மிகப்பெரிய குடும்பம் எகிப்திலே, கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள். அங்கே அவர்கள்  பலுகிப் பெருகினார்கள்.

யாத்தி:1: 7, 8 கூறுகிறது, யோசேப்பும், அவன் சகோதரர் யாவரும் அங்கே மரணமடைந்தார்கள். பின்னர் யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்திலே தோன்றினான்.அவன் அவர்களை சுமைசுமக்கிற வேலையினால் ஓடுக்கினான். அப்படியும் அவர்கள் அந்த தேசத்திலே பலுகிப் பெருகினார்கள் என்று பார்க்கிறோம்!

இந்த சமயத்தில் எகிப்தின் ராஜா, சிப்பிராள், பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகளை அழைத்து, எபிரேயப் பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது ஆண்பிள்ளையானால் பிரசவிக்கும்போதே கொன்றுவிடும்படி கட்டளையிடுகிறான்! ஆனால் அந்த மருத்துவச்சிகளோ தேவனுக்கு பயந்ததினால் ஆண்பிள்ளைகளையும் காப்பாற்றினார்கள்.

அவர்கள் இருவரும் பார்வோன் ராஜா முன்னால் அழைத்துவரப் பட்டார்கள். பார்வோன் அவர்களை நோக்கி கேள்விக்கணைகளை விடுகிறான். பார்வோன் ராஜாவுக்கு இந்த எபிரேய மருத்துவச்சிகள் கொடுத்த பதில் அவர்களுடைய தைரியத்தையும், பேசும்போது தேவன் அளித்த  ஞானத்தையும் காட்டுகிறது.

நீதி: 25: 11 ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்ப்பழங்களுக்குச் சமானம் என்று வேதம் கூறுகிறது.

இந்த இரு பெண்களும் பார்வோனுடைய சமுகத்தில் நின்று, அவனை நோக்கி, அமைதியாக, சாதாரணமாக, ஞானமாக பதிலளித்தனர்.

பார்வோன் அவர்களை சுமை சுமக்கப் பண்ணி கடின உழைப்பினால் அவர்களைக் கஷ்டப் படுத்திவந்தான் அல்லவா? அந்த கடின உழைப்பையே சிப்பிராளும், பூவாளும் காரணம் காட்டி, கடின உழைப்பினால், எபிரேய பெண்கள் மிகவும் பலசாலிகளாய் இருக்கிறார்கள்! நாங்கள் போகுமுன்னரே அவர்கள் பிரசவித்து விடுகிறார்கள் என்று புத்திசாலித்தனமான பதிலை பார்வோன் முன் வைத்து அவன் மறு வார்த்தை பேச முடியாதவாறு செய்தனர்.

 நீதி:15: 23. …. ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! என்று

வாசிக்கிறோம். ஞானமுடன் பேசும் திறன் உங்களுக்கு உண்டா? ஏற்றகாலத்தில் ஏற்ற வார்த்தைகளை பேசும் திறன் தேவனிடத்தில் இருந்து வரும் ஞானமே!

இந்த இரு பெண்களுக்கும் பயம் இருந்ததாகவே தெரியவில்லை! அவர்கள் தேவனுக்கு பயந்ததினால் பார்வோனுக்கு பயப்படவில்லை! எவ்வளவு பெரிய பாடத்தை நாம் இந்த இரு மருத்துவச்சிகளிடமிருந்து  கற்றுக்கொள்கிறோம்! அவர்கள் பதறவில்லை, கத்தவில்லை, பயத்தினால் உளறவுமில்லை, கர்த்தருடைய பலத்தினால் தைரியமாக பார்வோனுக்கு பதிலளித்தனர் என்று பார்க்கிறோம்.

ஞானம் என்பது எப்பொழுது பேசவேண்டும் என்று அறிந்து பேசுவதும், எப்பொழுது பேசாமலிருப்பது என்று அறிந்து அமைதியை காப்பதும் தான்! 

 நாம் ஞானமில்லாமல்  பேசிய வார்த்தைகள் என்றாவது நம் வாழ்க்கையை  பாதித்திருக்கின்றனவா? குடும்பத்தில் உன் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டா? நீ பேசும்பொழுது தேவனுடைய ஞானத்துக்காக ஜெபிப்பதுண்டா? என்று சிந்தித்துப்பார்!

சிப்பிராள், பூவாளைப் போல எந்த சூழ்நிலையிலும், பயப்படாமல், தைரியமாக, தேவ ஞானத்தோடு பேச தேவனாகிய  கர்த்தர் நமக்கு உதவி செய்வார்!

ஜெபம்: தேவனே ஞானமுள்ள வார்த்தைகளைப் பேச ஞானத்தை தாரும். இன்று என்னுடைய  வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்தாமல், சரியான வார்த்தைகளை பேச உதவி தாரும். ஆமென்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

 

இதழ்: 823 உன்னைப் புண்படுத்திய ஒருவரை மன்னிக்க முடியுமா?

ஆதி:44: 18 “ அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து, ஆ என் ஆண்டவனே , உமது அடியேன் உமது செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக;  அடியேன் மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்

நாம் கடந்த ஆண்டின் கடைசி நாளில், யோசேப்புக்கு  இழைக்கப்பட்ட தீங்கை பரலோக தேவன் எப்படி நன்மையாய், ஆசீர்வாதமாய் மாற்றியமைத்தார் என்று பார்த்தோம்.

இன்று நாம் யோசேப்பின் வாழ்விலிருந்து இன்னுமொரு காரியத்தை கற்று கொள்ளப் போகிறோம்! அதற்கு முன்னால் ஒரே ஒரு கேள்வி!

ஒரு நிமிடம்!  உங்கள் வாழ்வில் யாரையாவது பார்த்து,  ஒருவேளை  உங்கள் உறவினரை பார்த்து, நாளுக்கு நாள் அவர்கள் பேசும் கொடிய வார்த்தைகளைக் கேட்டு ,  இவர்களை கடவுள் மன்னிக்கவே மாட்டார் என்று கசப்போடு எண்ணியிருக்கிரீர்களா? உண்மைதாங்க! சிலர் செய்வதும், பேசுவதும் கத்தியால் குத்துவது போல இருக்கும், ஆனால் தாங்கள் தான் பரிசுத்தவான்கள் என்ற நினைப்பில் இருப்பார்கள்!

 நாம் சில நாட்களுக்கு முன் படித்த யூதாவை சற்று நினைவு கொள்வோம்! ஞாபகம் இருக்கிறதா யார் அவன் என்று? என்னுடைய அம்மா ஒரு பழமொழி சொல்லுவார்கள்!  ‘பக்தியான பூனை ஒன்று பரலோகம் போகும்போது நெத்திலி கருவாட்டை த் தன் பக்கத்தில் ஒளித்துக்கொண்டு  சென்றதாம் என்று’.  தன் மருமகளை அவமதித்தவன்…… யாரும் பார்க்காத வேளையில் வேசியை தேடி சென்றவன்…….பின்னர் தன் விதவை மருமகள் கர்ப்பம்தரித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டவுடன், பரிசுத்தவான் போல அவளை சுட்டெரிக்க வேண்டும் என்று சொன்னவன்….தான் அந்தக் குழந்தையின் தகப்பன் என்று அறிந்தவுடன் வாயை மூடிக் கொண்டவன்…..

இவை யாவற்றுக்கும் மேலாய் அவனுடைய பரிசுத்தமான வாழ்க்கையில் இன்னுமொரு நெத்திலியாக இருந்தது, அவன் யோசேப்பை இஸ்மவேலரிடம்  விற்றுப் போட்டது.  ஆதி: 37: 26 “யூதா தன் சகோதரரை நோக்கி, நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? அவனை இஸ்மவேலருக்கு விற்று போடுவோம் வாருங்கள்.. என்பதைப் பார்க்கிறோம்.

யோசேப்பு பதினான்கு வயது சிறுவன், அவனை விற்றுப் போடலாம் என்று யூதா எண்ணுகிறான்! ஏன் அவனை உண்மையிலேயே காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலா? இல்லை!  20 வெள்ளிக் காசுக்காகவே! பத்து சகோதரருக்கும், ஆளுக்கு  இரண்டு காசுகள் வீதம் கிடைக்குமல்லவா? எப்படி எண்ணம் பாருங்கள்! இவனை கொன்றால் நமக்கு என்ன லாபம்? இவனை விற்றால் நமக்கு கொஞ்சம் பணமாவது கிடைக்குமே! என்ற மோசமான எண்ணத்தில் வந்ததுதான் இந்த தூண்டுதல்.

இப்பொழுது 23 வருடங்களுக்கு பின்னர் எகிப்தின் அதிபதியான யோசேப்பின் முன்னால் நிற்கிறான் இந்த யூதா. யோசேப்பின் கண்கள் முன்னால் படம் போல வருகிறது அன்று நடந்த அபரீதமான சம்பவம், இவனைக் கொல்லுவதால் நமக்கு என்ன லாபம், விற்றுப் போடுவோம் என்று யூதா கூறியது காதுகளில் ஒலிக்கிறது. கசப்பான நினைவு ! மறக்கமுடியாத ஒரு வலி!  நான் ஒருவேளை யோசேப்பின் இருக்கையில் இருந்திருந்தால் எனது இரத்தக் கொதிப்பு ஏறியேப்போயிருக்கும்.

ஆனால் யூதா பேச ஆரம்பித்தவுடன், (ஆதி: 44: 33, 34) அவன் குரலில் தம்பி பென்யமீனைக் காப்பாற்ற விரும்பும் உண்மையான ஆவல் தெரிகிறது! பென்யமீனைக் கொண்டு செல்லாவிட்டால் தன் தகப்பனுக்கு தீங்கு நேரிடும் என்று அவன் பயத்தோடு கெஞ்சுவதை உணர்கிறோம். என்ன வித்தியாசம் நாம் அன்று கண்ட யூதாவுக்கும், இன்று யோசேப்பின் முன்  நிற்கின்ற யூதாவுக்கும்! அன்று அவன்  நான், எனக்கு என்று சுயநலமாய் வாழ்ந்தவன், இன்று தன் தகப்பனுக்காய், தன் இளைய சகோதரனுக்காய் தன் ஜீவனை பணயம் வைத்து பேசுகிறதைப் பார்க்கிறோம்! இத்தனை மாறுதல் எப்படி  வந்தது? யூதா மனந்திருந்தி தேவனிடம் மன்னிப்பு பெற்றானோ?

யோசேப்பு யூதாவின் குரலில் இருந்த மாற்றத்தைக் கண்டான். தன்னை இஸ்மவேலருக்கு விற்றுப் போட்ட யூதாவை உடனே மன்னிக்கிறான்! எப்படிப்பட்ட மன்னிப்பு?  நீ மனம் மாறிவிட்டதை நான் உணர வேண்டும் என்று கண்டிப்பு போட்டானா? அல்லது நான் உன்னை விட பரிசுத்தமானவன், நீ ஏன் சமுகத்தில் நிற்க தகுதியானவன் அல்ல என்ற பெருமை இருந்ததா? அல்லது அவனுடைய பழைய பாவங்களை நினைவுபடுத்தி ‘நீ குத்திய புண் இன்னும் ஆறவில்லை’ என்று குற்றம் சாட்டினானா? அல்லது அவனுடைய முதுகுக்கு பின்னால் அவனைப் பற்றி பேசினானா? எதுவுமே இல்லை! வெறும் மன்னிப்பு என்ற ஒரே வார்த்தையில் யூதாவின் பாவங்கள் கரைந்தோடின!

கர்த்தராகிய கிறிஸ்து இயேசு நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது, நம்முடைய பாவங்களை மறந்து போகிறார் என்று வேதம் சொல்லுகிறது. பாவியாகிய நாம் மனந்திரும்பி  அவருடைய சமூகத்துக்கு வரும் போது, கர்த்தர் நம்மைப் பார்த்து, சரி சரி , கையும் மெய்யுமாய் மாட்டிக் கொண்டதால் மனந்திருந்தினாய்! இன்னும் சில வருடங்கள் நல்லவனாய் வாழ்ந்து காட்டு பின்னர் மன்னிப்பதைக் குறித்து யோசிக்கிறேன் என்று சொல்லுகிறாரா?  இல்லை! அளவிட முடியாத கிருபையால் நம்மை மன்னித்து கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவாய் நம் பாவங்களை விலக்குகிறார்.

இப்படிப்பட்ட மகா மேன்மையான குணத்தைத்தான்  யோசேப்பின் வாழ்வில் காண்கிறோம்!

நம் வாழ்வில் தீங்கு இழைத்தவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? நம்மால் மன்னிக்க முடிகிறதா? உன்னுடைய அண்டை வீட்டுக்காரர் உனக்கு விரோதமாய் செய்த தவறுகளை மன்னித்து விட்டாயா? உன்னுடைய உற்றார் உறவினர் உனக்கு விரோதமாய் செய்தவையை, இயேசு கிறிஸ்து உன் பாவங்களை மன்னித்து மறந்தது போல மன்னித்து விட்டாயா?

நீ கசப்பான நினைவுகளோடு, மறக்கமுடியாத வலியோடு , மன்னிக்கவே முடியாது என்று வெறுக்கிற உன் உறவினர் ஒருவர், ஒருவேளை மனந்திருந்தியிருந்தால் , கிருபையே உருவான நம் தேவன் அவரை மன்னித்து, மறந்து விட்ட அவர் பாவங்களை மன்னியாமல் இருப்பதற்கு நீ யார்?

ஜெபம்:  நல்ல ஆண்டவரே! நீர் எங்களை மன்னிக்கிறது போல நாங்களும் பிறரை மன்னிக்க எங்களுக்கு பெலன் தாரும். ஆமென்.

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 822 நன்மையாக முடியப்பண்ணினார்!

ஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார்.

இந்த வருடத்தை நன்மையாக முடியப்பண்ணின கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரத்தோடு இதை வாசிப்போம்!

யோசேப்பு எகிப்துக்கு  அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே, மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும்,எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில் மட்டும் அல்ல, எங்குமே உணவுப் பொருள் இல்லாததால், யாக்கோபு தன் குடும்பம் பஞ்சத்தினால் அழிந்து விடுமோ என்று கலங்க ஆரம்பித்தான்.

ஒருநாள் ஓர் நற்செய்தி அவன் காதுகளுக்கு வந்தது. எகிப்திலெ தானியம் உண்டு என்ற செய்தி! ஆதி: 42: 2,3,  கூறுகிறது, யாக்கோபு, எகிப்திலே தானியம் உண்டென்று அறிந்து தன் குமாரரை அழைத்து, நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ன?  நாம் சாகாமல் உயிரோடு  இருக்கும்படி, நீங்கள் அவ்விடத்துக்கு பொய் தானியம் கொள்ளுங்கள் என்றான்.

எகிப்திலே தானியம் உண்டென்று அறிந்து ஏன் யாக்கோபின் புத்திரர் ஏன் தாமதித்தனர்? ஒருவேளை அன்று ஒருநாள், அவர்கள் சகோதரனாகிய  யோசேப்பை எகிப்தியருக்கு விற்று போட்டு, யாக்கோபிடம் ஒரு மிருகம் அவனை பீறி விட்டது என்று பொய் சொன்ன குற்ற உணர்வு அவர்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை போலும்.

ஆதி:42: 3, 4 கூறுகிறது, யோக்கோபின் பத்து குமாரர், தானியம் வாங்க எகிப்தை நோக்கி சென்றனர். ஆனால் யாக்கோபு தன் இளைய குமாரன் பென்யமீனை, அவர்களோடு அனுப்பவில்லை. யோசேப்புக்கு நடந்த விபரீதம் தன் அன்பு மனைவி ராகேல் பெற்ற பென்யமீனுக்கு வந்து விடக் கூடாது என்ற எண்ணம். ஒருவேளை, காலம் காலமாக யாக்கோபு, தன் செல்லக் குமாரன் யோசேப்புக்கு நடந்த விபரீதம் தன்னால் விளைந்தது தான் என்று தன்னையே குற்றம் சாட்டிக்கொண்டிருந்திருப்பான். அவன் பென்யமீனுக்கு ஏதோ ‘மோசம்’ வரக்கூடும் என்று நினைத்தது, ஒருவேளை, யோசேப்பின் மறைவு, அவனுடைய மற்ற குமாரரின் மோசடி செயலால் நேர்ந்தது என்று உணர்ந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஒருகணம் என்னோடு யோசியுங்கள்!

யாக்கோபின் புத்திரர் எகிப்து வந்தடைந்தவுடன் அவர்கள் புதிதான நாட்டில் நின்று கொண்டு போவோர், வருவோரை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள் அல்லவா?  விசேஷமாக அங்கிருந்த அடிமைகளை, வேலைக்காரர்களை, உற்று பார்த்திருப்பார்கள்! ஒருவேளை இவன் யோசேப்பாக இருப்பானோ? இவனைப் பார் யோசேப்பை போல இல்லை! என்ற எண்ணம் ஒவ்வொரு வேலைக்காரர்களைப் பார்க்கும்போதும் வந்திருக்கும். ஏனெனில், யோசேப்பை அடிமையாக அல்லவா விற்றுப் போட்டார்கள்!

திடீரென்று அவர்களை அத்தேசத்தார், அதிபதியான யோசேப்பின் முன்பு கொண்டு சென்றனர். அவர்கள் பத்து பேரும், யோசேப்பை தங்கள் சகோதரன் என்று அறியாது, அவன் முன்னால் முகங்குப்புற விழுந்து வணங்கினர்.

எப்படிப்பட்ட காட்சியாக இருந்திருக்கும்? நம் யோசேப்பின் சொப்பனம் நிறைவேறியது அல்லவா? அவர்கள் அவனை அறியவில்லை! ஆனால் யோசேப்பு அவர்களை அறிந்தான்!

அவர்களுடைய மோசடி புத்தி இன்னும் இருக்கிறதா என்று அறிந்து கொள்ள, அவர்களை வேவுகாரர் என்று, மூன்று நாள் காவலில் வைத்து, உங்களில் ஒருவன் சென்று உங்கள் இளைய சகோதரனை இங்கு கொண்டு வந்தால்தான் உங்களை நம்புவேன் என்று கூறுகிறான்! அப்பொழுது அவர்கள் நாம் நம் சகோதரனுக்கு செய்த துரோகம் நம் மேல் சுமந்தது ,என்று கடந்த காலத்தின் பாவத்தை நினைத்து என்று மனம் நொந்தனர்.

நாம் தொடர்ந்து வாசிக்கும்போது, அவர்கள் சிமியோனை விட்டு விட்டு சென்று பென்யமீனோடு திரும்புகிறார்கள். தன் தம்பி பென்யமீனைப் பார்த்ததும் யோசேப்பு இருக்கையை விட்டு சென்று அழுகிறான், பின்னர் திரும்பிவந்து, தான் அவர்கள் சகோதரன் யோசேப்புதான் என்று வெளிப்படுத்தி , தாங்கள் செய்த துரோகத்துக்கு இவன் தங்களை பழிவாங்கிவிடுவானோ என்று பயத்தில் நின்ற சகோதரைப் பார்த்து, “நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ அதை நன்மையாக முடியப்பண்ணினார் என்றான்!

எத்தனை அருமையான வார்த்தைகள்! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னை சிலுவையில் அறைந்தவர்களைப் பார்த்து ‘பிதாவே இவர்களுக்கு மன்னியும்’ என்று கூறியது போல!

தீமைக்கு பதிலாக நன்மை, வெறுப்புக்கு பதிலாக அன்பு, பழிக்கு பதிலாக மன்னிப்பு, இவை யோசேப்பின் நற்குணங்கள்! இவையே அவன் தேவனுடைய பிள்ளை என்பதற்கு நற்சாட்சி!

இந்த பகுதியை வாசிக்கும்போது, “ நம் பரம பிதா நமக்கு பெரிய ஆசிர்வாதத்தை கொடுக்க திட்டமிட்டாலொழிய, இருக்கிற ஆசிர்வாதத்தை எடுக்க மாட்டார்” என்று ஜார்ஜ் முல்லர் கூறியது ஞாபகத்துக்கு வந்தது.

யோசேப்புக்கு தீங்கு நேரிட்டது ஆனால் கர்த்தரோ அதை ஆசிர்வாதமாக்கினர்!

அதே தேவன் இன்று நம் வாழ்விலும் கிரியை செய்கிறார்! உனக்கு எதிராக அனுப்பப்படும் அம்பை முறித்து, உனக்கு அவற்றை நன்மையாக மாற்றுவார்! பொறுமையாக காத்திரு! அவர் உனக்காய் வைத்திருக்கிற திட்டம் நன்மைக்கேதுவானதே!

ஜெபம்: ஆண்டவரே! உம்முடைய திட்டம் என் வாழ்வில் நிறைவேற பொறுமையாய் காத்திருக்க பெலன் தாரும். ஆமென்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

இதழ்: 821 என்ன? ஒரு அவிசுவாசியா?

ஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்.

 மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.

ஒருமுறை அமெரிக்காவில் , எங்களுடைய  நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி என்னிடம் வந்து, ‘தாய்லாண்டு நாட்டு சமையல் செய்திருக்கிறேன், ஆனால் ஏதோ குறைகிறது, என்ன என்று தெரியவில்லை, என்ன சேர்த்தால் ருசி வரும் என்று பாருங்கள் என்று என்னிடம் கூறினார். நான் ருசி பார்த்துவிட்டு உப்பே சேர்க்கப்படவில்ல என்று உணர்ந்து உப்பை சேர்த்தேன். ருசி அப்படியே மாறிவிட்டது.

(மத்தேயு  5: 13) வேதம் கூறுகிறது, “ நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிரீர்கள் என்று. நீயும் நானும், உப்பைப் போல மற்றவர்கள் வாழ்வில் ருசி கூட்டவும் முடியும், உப்பில்லா பண்டத்தை போல, சாரமில்லாத உப்பைப் போல, யாருக்கும் பிரயோஜனமில்லாமல்  வாழவும் கூடும் என்பதுதான் அர்த்தம்.

யோசேப்பைப் பற்றி தொடராமல் ஏன் உப்பைப் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம்.

நாம் வாசித்த இன்றைய வேத பகுதி, யோசேப்பு, சிறையில் இருந்து வந்து, பார்வோனின் முன்னால் என்று, எகிப்துக்கு அதிகாரியாக பதவி ஏற்ற பொழுது என்ன நடந்தது என்று கூறுகிறது.

யோசேப்புக்கு முப்பது வயது, நல்ல வாலிப வயதில் யோசேப்பு பெண் துணை இல்லாமல் தனித்து இருப்பதை உணர்ந்த பார்வோன், அவனுக்கு ஒரு மனைவியை தேடிக் கொடுக்க முடிவு செய்கிறான். அது வேறு  யாரும் இல்லை! ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான் என்று பார்க்கிறோம்.

என்ன?????? யோசேப்பு மணந்தது ஒரு எகிப்திய ஆசாரியனின் மகளையா????

யோசேப்பு, என்கிற எபிரேயன், கர்த்தராகிய தேவனை வணங்குகிறவன், கர்த்தருக்கு பயந்தவன், கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்ந்தவன்,   எப்படி எகிப்த்தின் ஆசாரியனுடைய மகளை மணக்கலாம்? அப்படியானால் நானும் அவிசுவாசியை மணக்கலாமா? என்று உங்களில் ஒருவர் முணுமுணுப்பது கேட்கிறது.

யோசேப்பை போன்ற கஷ்டங்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்களானால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனை அடியோடு மறந்து விட்டு, அவனை மணந்த ஆஸ்நாத்தின், கடவுள்களை பின் தொடர்ந்து இருப்பீர்கள்!

அவன் எபிரேய பெண்ணை மணக்கக் கூடிய நிலையில் இல்லாமல், எகிப்தில் வாழ்ந்ததால், பார்வோன் விருப்பப்படி மணந்தாலும், அவனுடைய குடும்பத்தை கர்த்தருடைய பாதையில் வழி நடத்தினான். அவனுடைய அன்பினால், கர்த்தருக்கு பயந்த நடக்கையால், கர்த்தருடைய முகத்தை அனுதினமும் தேடிய ஜீவியத்தால் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும் அவன் தன்வழியில் கொண்டு வர முடிந்தது. யோசேப்பின் வாழ்க்கை சாரமுள்ள உப்பை போல அவன் குடும்பத்தில் ஆசிர்வாதத்தை கொண்டு வந்தது.

இதற்கு என்ன ஆதாரம் தெரியுமா?

ஆதி:48:1 அதற்கு பின்பு உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்கு சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு  குமாரராகிய மனாசேயையும், எப்பிராயீமையும், தன்னோடே கூட கொண்டு போனான் என்று வாசிக்கிறோம். யோசேப்பு தன் குமாரருக்கு, பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரின் ஆசீர்வாதத்தை யாக்கோபு கொடுக்க வேண்டும் என்று விரும்பினான்!

யாக்கோபு அவர்களைக் கண்டவுடன் என்ன சொல்கிறான் பாருங்கள்!

ஆதி: 48:5 நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்து தேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்

 யாக்கோபுடைய பிள்ளைகளுக்கு தேவனாகிய கர்த்தரால் கொடுக்கப்பட்ட ஆசிர்வாதம், யோசேப்புக்கு மட்டுமல்ல அவனுக்கு எகிப்து நாட்டு ஆசாரியனின் மகள் ஆஸ்நாத் மூலமாய் பிறந்த இரண்டு குமாரருக்கும் கிடைத்தன. காரணம் சூழ்நிலையினால் எகிப்தில் பெண் கொண்டாலும், அவன் குடும்பத்தில் அவன் உப்பாக இருந்து தன் அன்பினாலும், சாட்சியினாலும், அந்த குடும்பத்தை தேவனுக்குள் வளர வைத்ததினால் தான். தன்னுடைய கணவனின் ஜீவியம் அவன் மனைவியை ஜீவனுள்ள தேவனிடம் வழிநடத்தியிருக்கும்!  யோசேப்பின் குமாரர் கர்த்தரால் ஆசிர்வதிக்கப் பட்டு இஸ்ரவேல் கோத்திரமாகிய எப்பிராயீம், மனாசே கோத்திரங்களுக்கு தகப்பனாகினர்.

யோசேப்பு தன் குடும்பத்தில் உப்பாயிருந்ததால் அவன் குடும்பம் தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டது! அந்நிய பெண்ணாகிய ஆஸ்நாத்தும் அவள் பிள்ளைகளும் ஆசிர்வதிக்கப் பட்டனர். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்! அப்பொழுது யோசேப்பை போல ‘நல்ல குடும்பம்’ என்ற ஆசிர்வாதம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்.

 ஜெபம்: நல்ல ஆண்டவரே நாங்கள் சாரமுள்ள உப்பை எங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்வில் சுவையூட்ட எங்களுக்கு உதவி தாரும். ஆமென்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

இதழ்: 820 நீர் என்னோடிருந்தால்…..

ஆதி:41: 39 பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி; தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் வேறோருவனும் இல்லை

Wishing all my family who visit this garden from various countries a VERY BLESSED CHRISTMAS! May the joy of Christmas fill your hearts!

யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி சில நாட்கள்  நாம் தியானித்துக் கொண்டு இருக்கிறோம். அவனுடைய வாழ்க்கையைப்பற்றி வாசிக்கும் போது, இன்னும் ஒரு பாடத்தை கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஆதி 29:3 ல், வேதம் கூறுகிறது, யோசேப்பு தன் சகோதர்களால் விற்கப் பட்ட பின், எகிப்தை வந்து அடைகிறான். ஒரு பணக்கார வாலிபனாய் வாழ்ந்தவன், இப்பொழுது போத்திபாரின் வீட்டில், ஒரு அடிமையாக வேலை செய்கிறான். இந்த அதிகாரத்தில், இரண்டே வசனங்கள் வந்தவுடன், கர்த்தர் அவனோடிருந்தார் என்று போத்திபார் அறிந்ததாக வாசிக்கிறோம். யோசேப்பு அங்கிருந்தவர்களை விட அதிகம் படித்ததினாலோ அல்லது அழகுள்ளவன், பணக்காரன் என்பதாலோ அல்ல, அவனுடன் கர்த்தர் இருக்கிறார் என்பதே அவன் எஜமானாகிய போத்திபாரின் கண்களில் பட்டது.

அவன் காரியசித்தியுள்ளவனாய் எல்லா காரியங்களையும் சிறப்பாக செய்தது, கர்த்தர் அவன் செய்கிற யாவையும் வைக்கப் பண்ணுகிறார் என்று போத்திபாரின் வீட்டில் பறைசாற்றியது. நாம் செய்த வேலையை யாராவது பாராட்டினால் உடனே நாம், நம்முடைய கல்லூரி படிப்பிற்கோ அல்லது நம்முடைய கடின உழைப்பிற்க்கோ மகிமையை கொடுப்போம்!

ஆனால் இங்கு யோசேப்பு அமைதியாக, அடக்கமாக தேவன் தன்னோடிருப்பதை பறை சாற்றினான். எப்படி ஐய்யா இப்படி அருமையாய் செய்தாய்? என்று கேட்டால், பதில் கர்த்தர் என்னோடிருப்பதால் என்று வரும்!

அங்குமட்டுமல்ல, யோசேப்பு, சிறையில் தள்ளப்பட்டபோது, அங்கும் சிறைச்சாலையின் தலைவன் எல்லாவற்றையும் யோசேப்பிடம் ஒப்புக்கொடுத்ததின் காரணம் கர்த்தர் அவனோடிருந்ததுதான்!

பின்னர் சிறையில், பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கியபோதும் கர்த்தர் அவனோடிருந்தார்.

ஆதி: 41: 25 ல் பார்வோன் முன்பாக அழைக்கப்பட்டு, அவனுடைய நித்திரையை கெடுத்த சொப்பனத்தின் அர்த்தத்தை தெளிவாக விளக்கியபோது, யோசேப்பு  பார்வோனை நோக்கி, “தேவன் தாம் செய்யப் போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்” என்றான்.

பார்வோன் தன் சொப்பனத்தின் விளக்கத்தை கேட்டபோது, ‘உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் ஒருவனும் இல்லை என்று கூறி, யோசேப்பை பார்வோனுக்கு அடுத்தபடியாக எகிப்தை ஆளும் அதிகாரியாக்கினான்.

ஒரு உலகப்பிரகரமான ராஜா, கர்த்தரை அறியாத ஒரு மனிதன், அப்படி எதை யோசேப்பின் வாழ்வில் கண்டான்? அவனுடைய கல்லூரிப் படிப்பையா, அவன் வாங்கியிருந்த பட்டங்களையா? அழகையா? திறமையையா? குடும்ப பின்னணியையா? சிறிது நேரம் அவனுடன் இருந்த எல்லாரும் உணர்ந்த ஒரு காரியம் கர்த்தர் அவனோடிருந்தார் என்ற உண்மையே!

என்னைத் தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்!     படிப்பும், பட்டங்களும், திறமையை வளர்ப்பதும் நிச்சயமாக நமக்கு தேவையே! ஆனால் ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! பெரிய பட்டப் படிப்பு இருக்கலாம், உலகம் போற்றும் அழகு இருக்கலாம், விதவிதமான துணிமணிகள் உடுத்தலாம், ஆனால் கர்த்தர் உன்னோடு இல்லாவிடில் நீ உலகத்தை ஆதாயப்படுத்தினாலும்  உன் ஆத்துமாவை இழந்து போவாய்!

 சங்கீ:111: 10 கூறுகிறது, கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று.

தன்னுடைய பதினேழு வயதில் தன் குடும்பத்தை பிரிந்து த தேசத்துக்கு அடிமையாக வந்த யோசேப்பு தன் கண்களை ஏறேடுத்துப் பார்த்து கர்த்தரை நோக்கி அவர் தன்னோடு இருக்கும்படி அழைத்தான்! கர்த்தர் அவனோடு இருந்தார். அவன் தனிமையை அனுபவிக்கவில்லை. அவனை சுற்றி இருந்தவர்கள் சில நொடிகளில் அவனோடு கர்த்தர் இருந்ததை உணர முடிந்தது!

என்ன அற்புதமான சாட்சி? உன்னையும், என்னையும் அறிந்த நம் நண்பர்கள், நம்  குடும்பத்தினர் , நம்முடன் கர்த்தர் இருப்பதை உணர்கிறார்களோ?

 பரிசுத்த தேவன் நாம் அவரைப் பற்றி பேசுவதை விட பரிசுத்தமாய் நாம் வாழ்வதையே விரும்புகிறார்.

ஜெபம்: நல்ல ஆண்டவரே! நீர் என்னுடன் இருப்பதை இந்த உலகம் அறியும்படி நான் வாழ எனக்கு உதவி தாரும்.  ஆமென்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ or ‘ follow என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

 

இதழ்: 819 வனாந்திரத்தின் மறுபக்கம் கானான் உண்டு!

ஆதி:  39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.

 யாக்கோபின் செல்லக் குமாரனுக்கு நடந்தது என்ன? திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான் யோசேப்பு. அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது? திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல் எங்கிருந்து வந்தது?

ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை இருண்ட சிறைச்சாலைக்கே கொண்டு வந்து விட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையை  கடந்து வருபவர்களின் வேதனை, அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியம். யோசேப்பு மட்டும் அல்ல, சிறுவயதிலிருந்தே தேவனை நேசித்த தாவீது, சவுலினால், ஒரு மிருகத்தைப் போல வேட்டையாடப் பட்டான். தேவனுடைய வல்லமையை இறங்கி வர செய்த எலியா தீர்க்கதரிசி, தன் உயிருக்காக, தப்பித்து ஓட வேண்டியிருந்தது.

அநேக தேவனுடைய பிள்ளைகள் அனுபவித்த இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான அனுபவத்தை, நானும், என் குடும்பமும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அனுபவிக்க கர்த்தர் அனுமதித்திருந்தார். எங்களது நிறுவனத்தில் வேலை செய்த ஒரு பணியாளனின் மாய்மால நாடகத்தினால், நாங்கள் பொய் பழிசுமத்தப் பட்டு, யோசேப்பைப் போல இருண்ட பாதையை கடந்து வந்தோம். இத்தனை வருடங்களாய் தேவனுடைய ஊழியத்தை உண்மையாய் செய்து வந்த நமக்கு ஏன் இந்த துன்பத்தை தேவன் அனுமதித்தார் என்று எங்கள் உள்ளம் ஒருநாளும் சோர்ந்து போகவில்லை, கர்த்தர் ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் கடந்து வந்த அக்கினியில் எங்களோடு இருந்ததை உணர்ந்தோம்!

இப்படிப்பட்ட இருளான பாதைக்குள் செல்பவர்கள் கர்த்தர் மேல் மனஸ்தாபப் படுகிறதை கண்டிருக்கிறேன். யோசேப்பு என்ன குற்றம் செய்தான், இப்படிப்பட்ட தண்டனையை அனுபவிப்பதற்கு? தாயை இழந்தவன், சகோதர்களால் வெறுக்கப்பட்டு இஸ்மவேலரிடம் விற்கப்பட்டவன், மாமிச இச்சை கொண்ட ஒரு பெண்ணால் பொய் பழி சுமத்தப் பட்டவன், தேவனிடம், நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் என்னைக் கைவிட்டீர் என்று குறை கூறியிருக்கலாம், ஆனால் யோசேப்பு தேவனைக் குற்றப்படுத்தவில்லை.

பாதாளத்தைப் போன்ற இருள் சூழ்ந்த வேளையிலும், அவன் கண்கள் தேவனை நோக்கி பார்த்து, ஆண்டவரே நான் உமக்கு சொந்தம், நான் பாவத்தில் விழவில்லை, உம்முடைய பிள்ளை என்ற பெயரைக் காத்துக் கொண்டேன் என்று கூறியன!

II  கொரி  4:8 ல் பவுல், நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை, கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை” என்று கூறுகிறார்.

என்ன அருமையான அனுபவம் நிறைந்த வார்த்தைகள்!

யோசேப்பைப் போல, பவுலைப் போல, நீயும் நானும் ஒருவேளை, செய்யாத குற்றத்துக்காக தண்டனையையோ , வியாதி என்ற சிறைச்சாலையையோ, அல்லது குடும்பத்தில் பிரச்சனைகள் என்ற இருளையோ, பணத்தேவைகள் என்ற புயலையோ, கடந்து கொண்டிருக்கலாம்! ஒருவேளை கர்த்தர் மேல் சந்தேகம் என்கிற கலக்கம் கூட வந்திருக்கலாம்!

திகையாதே!  ஆதி:39:21 கூறுகிறது, “கர்த்தரோ யோசேப்போடே இருந்து அவன்மேல் கிருபை வைத்து சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்கு கிடைக்கும்படி செய்தார்.”

துயரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? தேவன் மீது சந்தேகமா? அவரைப் பார்க்க முடியாதபடி காரிருள் சூழ்ந்திருக்கிறதா? சீக்கிரத்தில், ஊடுருவும் ஒரு ஒளியில்,  உன்னை ஏந்தி, சுமக்கிற,  இரு அன்பின் கரங்களை காண்பாய்!

வனாந்திரத்துக்கு மறுபக்கம்  கானான் தேசம் காத்திருக்கிறது! கலங்காதே!

 ஜெபம்: ஆண்டவரே! தேவனே! இருள் நிறைந்த வாழ்க்கையில், துன்பங்கள் நெருக்கும்போது, உம்முடைய ஒளியை ஏன் கண்கள் காண உதவி தாரும்! ஆமென்.

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ்: 818 யாரும் இல்லாத தனிமையில்???

ஆதி:  39:14 – 15 “ அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன்,

நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள்

 போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் கண்ணைப் போட்டு வலை வீசினாள் என்று நேற்று பார்த்தோம்!

அவனது சௌந்தர்யம், இளமை, திறமை, இவை அவளை காந்தம் போல கவர்ந்தன! வீட்டின் பொறுப்புகளை திறமையாக கவனித்த அவனை பல நாட்கள் கண்களால் வலை வீசியிருப்பாள்! அவன் அந்த வலையில் விழாததே அவன் மீது அதிக தாபத்தை கொடுத்திருக்கும். பெண்களுக்கு எப்பொழுதுமே கிடைக்காததை அடைய ஆசைதான். அதுவும் பணக்காரியான போத்திபாரின் மனைவிக்கு ‘கிடைக்காதது’ என்றதே அகராதியில் இல்லை!

வேதம் கூறுகிறது (ஆதி:39:11), ஒருநாள் அவன் தன் வேலையை செய்வதற்கு வீட்டுக்குள் போனான், வீட்டு  மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை என்று.

அழகிய மாளிகை,  யாரும் இல்லாத தனிமை, அருகே ஒரு சௌந்தர்யமுள்ள வாலிபன்!……… ஒரு நிமிடம்! நமக்கு எதை இது நினைவுட்டுகிறது?

ஏதேன் தோட்டத்தில் ஏவாள் தனிமையில் உலாத்தியதல்லவா? வேதம் கூறுகிறது, அவள் தனிமையில் இருந்தபோது, யாரும் பார்க்காத வேளையில் சர்ப்பம் அவளை வஞ்சித்தது என்று.

இன்றுகூட நாம் தனிமையில் இருக்கும்போது தான், சாத்தான் நம்மை வஞ்சிக்க வருவான். தனிமை என்னும் வல்லமையான, ஆபத்தான காந்தம்  நம்மை தவறான வழிக்குள் இழுத்துவிட வல்லது.

போத்திபாரின் வீட்டுக்குள் தான் தனியாக இருப்பதை உணர யோசேப்புக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவன் ஏவாளைப் போல சர்ப்பத்துக்கு செவி சாய்க்கவில்லை. லோத்துவைப் போல அங்கிருந்து ஓடிப்போக தயங்கவும் இல்லை. வேதம் கூறுகிறது ‘அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான் என்று.

தினமும் சோதனைகளை சகிக்கிற நமக்கு யோசேப்பு ஒரு நல்ல உதாரணமாக அமைகிறான் அல்லவா? நம் வாழ்க்கையில் திரு.போத்திபாரையும், திருமதி போத்திபாரையும் சந்திக்கும்போது, அங்கே பேச்சுக்கு இடம் இருக்க கூடாது, யோசேப்பைப் போல அங்கிருந்து ஓடிவிட வேண்டும்!

தனக்கு கிடைக்காதது, யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில், திருமதி போத்திபார், எபிரேய அடிமையாகிய யோசேப்பு தன்னோடு சயனிக்க முயற்சி செய்தான் என்று , அவனுடைய வஸ்திரத்தை கையில் பிடித்துக்கொண்டு பறைசாற்றுகிறாள். என்றாவது, யாராவது உங்களிடம் நடந்தது உங்களுக்கு பிடிக்காததால், இப்படி பாம்பைப் போல படம் எடுத்திருக்கிறீர்களா? அதனால் தான் இந்த வஞ்சம் தீர்க்கிற குணத்தை சர்ப்பத்தின் குணத்தோடு ஒப்பிடுகிறார்கள் போலும்!

வேதாகம வல்லுநர் கூறுகின்றனர், திரு போத்திபார் அதை முழுவதும் நம்பியிருந்தால், யோசேப்பை மறுகணமே கொலை செய்யும்படி கட்டளையிட்டிருப்பான். ஆனால் அவன் தன் மனைவி யோசேப்பின் மேல் கண் போட்டதைப் பற்றி சிறிதாவது கேள்விப்பட்டிருப்பான். இப்பொழுது யோசேப்பின் வஸ்திரத்தை  அவள் கையில் வைத்துக்கொண்டு ‘ உம்முடைய வேலைக்காரன் என்ன செய்துவிட்டான் பாருங்கள்’ என்று கத்தியதால், வேறுவழியின்றி , யோசேப்பை அவன் சிறைச்சாலைக்கு அனுப்பினான் என்று.

ஒருநாள் யோசேப்பு போத்திபாரின் அரண்மனையில்! மறுநாள் நாற்றமுள்ள சிறைச்சாலையில்!  ஆனால் தேவன் அவனோடிருந்தார்! கர்த்தருக்கு தெரியும் அவருடைய பிள்ளை எங்கு இருக்கிறான் என்று!

ஜெபம்: ஆண்டவரே! என்னுடைய சிந்தனையிலும், செயலிலும், வாஞ்சையிலும், வேதனையிலும், தனிமையிலும் உம்மையே நோக்கி, எனக்கு வரும் சோதனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள பெலன் தாரும்! ஆமென்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்