Tag Archive | ராகாப்

இதழ்: 607 அகத்தின் அழகு!

1 சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றான்.

சரித்திரத்தில் நடக்கும்  சம்பவங்களில் பல, மீண்டும் மீண்டும் நடப்பதை நம்மில் பலர் படித்திருக்கிறோம், கண்டுமிருக்கலாம். வேறொரு நாட்டின் சரித்திரம் இன்னொரு நாட்டில் நடக்க வாய்ப்புண்டு. அதைபோல வேறொரு காலகட்டத்தில், வேறொரு இன மக்களிடம்  நடந்த  சம்பவங்கள் நாம் வேதத்தில் படிப்பதைப் போலவே நம் வாழ்க்கையிலும் நடக்கின்றன அல்லவா? அதனால் தான் வேதத்தில் நாம் படிக்கும் சிலருடைய வாழ்க்கை நம்மைப் பிரதிபலிப்பது போலவும், நமக்குப் பாடம் கற்பிப்பது போலவும் உள்ளது.

இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு இதைத்தான் கற்பிக்கிறது.

உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? சவுல் இஸ்ரவேலின் மேல் முதல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டபோது அவன் வாட்டசாட்டமான, உயரமான ஆணழகனாக இருந்தான். வெளியில் பார்க்கும்போது அவன் ராஜாவாகிறது இஸ்ரவேலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அவன் கர்த்தருடைய கிருபையால் ராஜரீகம் செய்ய ஆரம்பித்தபோது, திறமைசாலியாகவும் காணப்பட்டான்.  நாளாக, நாளாக அவனில் முரட்டாட்டம் காணப்பட்டபோது சாமுவேல் அவனிடம், நீ உன் பார்வையில் மிகச்சிறியவனாயிருந்தபோது கர்த்தர் உன்னை ராஜாவாகியதை மறந்து போகாதே என்று எச்சரித்தார். ஆனால் அவன் தலையில் ஏதோ ஏறிவிட்டது. அவன் தான் ராஜாவாயிப்பதற்கு மட்டுமல்ல, ஆசாரியனாயிருப்பதற்கும் தகுதியானவன் என்று முடிவுசெய்து, தகனபலிகளையும் செலுத்தி கர்த்தரை வேதனைப்படுத்தினான்.

இஸ்ரவேல் மக்கள் சவுலிடம் கண்டதற்கு எதிரிடையாக சவுலுக்குள் ஒளிந்து கொண்டிருந்த குணம் இப்பொழுது வெளியே சிந்த ஆரம்பித்துவிட்டது. இதை நாம் நம்முடைய அரசியல்வாதிகளிடம் கண்டதில்லையா? நம்முடைய ஹீரோக்களிடம் கண்டதில்லையா? நம்முடைய பாதிரிமாரிடம் கண்டதில்லையா? அல்லது நம்மிடம்தான் கண்டதில்லையா? நம்மை எவ்வளவு அழகாக நாம் சித்தரிக்க முயற்சிசெய்தாலும், ஒருநாள் நமக்குள் ஒளிந்திருக்கும் நம்முடைய உண்மையான முகம் எப்படியோ வெளிப்பட்டு விடுகிறது!

சவுலின் வெளிப்புற அழகு அவனுடைய உட்புறத்தில் இல்லை என்று சாமுவேல் கண்டு கொண்டபின்னரும் சரியான பாடத்தைக் கற்றுக்கொள்ளாமல் மறுபடியும்  ஈசாயின் குமாரனாகிய எலியாபின் முகத்தையும், சரீரவளர்ச்சியையும் கண்டு கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுகிறவன் இவன் தானாக்கும் என்றான் ( 1 சாமு 16:6).

அப்பொழுது கர்த்தர் சாமுவேலுக்கு , ‘ நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்’ என்றுகூறுவதைப் பார்க்கிறோம்.

கர்த்தர் இன்று அழகான ஆண்மகனைத் தேடவில்லை! அழகாய் ஆடையணியும் பெண்ணையும் தேடவில்லை! அழகான உள்ளத்தைத்தான் தேடுகிறார்.

அன்று ராகாபிடம் கண்ட உள்ளழகு! வானத்தையும், பூமியையும் படைத்த கர்த்தரைப் பின்பற்ற உள்ளத்தில் ஏங்கிய அழகு!

அன்று ரூத் என்ற மோவாபியப் பெண்ணிடம் காணப்பட்ட உள்ளழகு! தாவீதின் வம்சத்தை உருவாக்கிய இந்த உள் அழகை தேவன் புறம்பே தள்ளப்பட்ட மோவாபியரில் கண்டார்!

மனிதர் காணும்விதமாக கர்த்தர் உன்னைக் காண்பதில்லை! அவர் உனக்களித்திருக்கும் பரலோக கிருபையின் மூலம்தான் உன்னைக் காண்கிறார்.

இன்று உன் உள்ளத்தில் கர்த்தர் எதைக்காண்கிறார்?

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

மலர் 7 இதழ்: 548 மனம் ஏங்கும் எதிர்காலம்!

ரூத்: 1 : 16   “அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;”

தாவீதின் கதையைக்கேளுங்க!

பிள்ளைகளே தாவீதின் கதையைக் கேளுங்க!

இளைஞன் தாவீது, வீரன் தாவீது, இஸ்ரவேலின் தேவனுக்கு பயந்த தாவீது

அந்த தாவீதின் கதையைக் கேளுங்க!

இந்தப் பாடல் என் காதுகளில் தொனிக்கும் போதெல்லாம், சின்னத் தாவீது எப்படி எட்டடி உயரமுள்ள பெலிஸ்த வீரனின் முன்னால் கூழாங்கற்களோடு தைரியமாக யுத்தத்துக்கு சென்றானோ, அந்தக் காட்சி என்  மனதினுள் படமாக வரும்! தாவீது மட்டும் அல்ல,  நாம் படித்துக் கொண்டிருக்கும் ரூத்தும் கூட மிகவும் தைரியசாலிதான்!

ரூத் ஒரு தைரியசாலி என்று நான் கூறுவதற்கு, அவள்  பயமில்லாத அல்லது வேதனையில்லாத பெண் என்று அர்த்தம் இல்லை. நான் ஒருவேளை ரூத்தைப் போல என்னுடைய நாட்டையும், வீட்டையும் விட்டு, ஒரு புதிய தேசத்துக்கு செல்வேனானால் என் மனது வேதனையால் துடித்துப் போகும். ரூத் மோவாபை விட்டு புறப்பட்டபோது, அவள் மனதிலிருந்த பயத்தையும், வேதனையையும் ஊடுருவி அவள் கண்கள், அவள் மனது ஏங்கிய எதிர்காலத்தை நோக்கின! அவள் மனம் தன் வாழ்க்கையில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றவே ஏங்கிற்று.

நம்முடைய வாழ்வில் கூட  தேவனாகியக் கர்த்தர் நாம் ஒவ்வொருவரும் தைரியமாக ரூத்தைப் போல துணிச்சலுடன் அவர் வழிநடத்தும் பாதையில் அவரை விசுவாசித்து அடி எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் நமக்காக வைத்திருக்கும் எதிர்காலம் என்ன என்று நமக்கு புலப்படாதிருக்கும்போது,  நாம் செல்லும் வழி எது என்று நமக்கு புரியாதிருக்கும்போது, துணிச்சலுடன் அவரைப் பின்பற்ற வேண்டுமென்று விரும்புகிறார். ரூத் மோவாபை விட்டுப் புறப்பட்டபோது அவள் இஸ்ரவேலின் மேசியாவின் வம்சவரலாற்றில் இடம் பெறப்போவதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். விசுவாசத்தோடு,  தைரியத்தோடு மோவாபை விட்டுப் புறப்பட்ட அவளின் வாழ்க்கையில் கர்த்தர் அவள் அறியாத பெரியத் திட்டங்களை வைத்திருந்தார்.

என் தேவனாகிய கர்த்தர் என்னை வழிநடத்தும் இடத்துக்கு மறு பேச்சில்லாமல் செல்லும் துணிச்சல் எனக்கு உண்டா?

தாவீதைப் போல, தானியேலைப் போல, ரூத்தைப் போல  கர்த்தரின் கட்டளையைப் பின்பற்றும் தைரியம் எனக்கு உண்டா?

ஆண்டவரே ! என்னுடைய எல்லா பயங்களையும் நீக்கி, நீர் காட்டும் பாதையின் மறுமுனையை என்னால் பார்க்க முடியாவிட்டாலும், விசுவாசத்தோடு உம்மைப் பின்பற்றும் தைரியத்தை எனக்கு இன்று தாரும்! நான் காணாத எதிர்காலத்தை நோக்கி விசுவாசத்தோடு நடக்க எனக்கு பெலன் தாரும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ்: 425 சிவப்பு நூல் அளித்த இரட்சிப்பு!

யோசுவா: 2: 17 ” அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்பு நூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி….”

இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் எரிகோவுக்குள் நுழைந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி யாராவது புதிய மனிதர் அவள் வீட்டில் தஞ்சம் புகுந்து விட்டார்களா என்று விசாரித்தான்.

உடனடியாக சிந்திக்கும் திறன் கொண்ட ராகாப், அந்த இருவரையும் தன் வீட்டில் ஒளித்து வைத்துவிட்டு, அவர்களிடம், ஆம் இருவர் வந்தார்கள், அவர்கள் யாரென்று தெரியாது! அவர்கள் புறப்பட்டு போய்விட்டார்கள், சீக்கிரம் தேடுங்கள், கண்டு பிடித்துவிடலாம் என்றாள்.

அவர்கள் போனபின்னர், ராகாப் வீட்டு வாசலை அடைத்துவிட்டு, அவர்களை ஜன்னல் வழியாய் இறக்கிவிடும் எண்ணத்துடன் அவர்களிடம் போய், எரிகோ அழிக்கப்படும்போது, தன் குடும்பத்தை இரட்சிக்குமாறு வேண்டுகிறாள். அதற்கு அவர்கள் ராகாபிடம், தங்களை இறக்கி விடுகிற சிவப்பு நூல் கயிற்றை, அவர்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, இஸ்ரவேல் மக்களுக்கு அடையாளமாய் வைக்கும்படி கூறுகிறார்கள்.

இந்த ‘சிவப்பு நூல் கயிறு’ கதையிலிருந்து நான் கற்றுக்கொண்ட மூன்று காரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

முதலாவது சிவப்பு நூல் கயிறு ஒரு கீழ்ப்படிதலின் அடையாளம்!

சார்லஸ் ஸ்பர்ஜன் அவர்கள் ராகாபை ஒரு விசுவாசியின் கீழ்ப்படிதலுக்கு உதாரணமாக சுட்டிக்காட்டுகிறார்! வேவுகாரர் ராகாபிடம் என்ன சொன்னார்களோ அதை அப்படியே செய்கிறாள்! சிறு மாறுதல் கூட இல்லை! சிவப்பு கயிறுக்கு பதிலாய் மஞ்சளையோ, பச்சையையோ கட்டவில்லை! அவர்களுடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்தாள்! மற்றவர்களுடைய கண்களுக்கு இது ஒரு சிறு காரியமாகத் தெரிந்திருக்கலாம், ஆனால் ராகாபுக்கு அப்படியல்ல! உண்மையான அன்பு சிறு காரியங்களைக் கூட கவனிக்கும்.

நாம் ராகபைப் போல தேவனாகிய கர்த்தரை நேசிப்போமானால், கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கும் அன்றாட வாழ்க்கையின் சிறு காரியங்களைக்கூட கவனித்து அவருக்கு கீழ்ப்படிவோம் அல்லவா!

இரண்டாவதாக சிவப்பு நூல் கயிறு எல்லோரையும் இரட்சித்தது!

நான் பலமுறை ராகாப் கதையை வாசித்திருந்தாலும், இந்த சத்தியம் என் கவனத்தில் படவேயில்லை. என்ன விந்தை! வேவுகாரரை ஜன்னல் வழியே இறக்கிவிட்டபோது இந்த சிவப்பு நூல் கயிறு அவர்களை எரிகோவின் பிடியிலிருந்து இரட்சித்தது! பின்னர் ராகாபையும் அவள் வீட்டுக்குள் அடைக்கலமாய் வந்த அவள் குடும்பத்தார் எல்லோரையும் இந்த கயிறு இரட்சித்தது!

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருடைய மகா பெரிய கிருபை என்னும் சிவப்பு நூல் கயிறு இன்றும் எல்லோரையும் இரட்சிக்கிறது! ஜாதி, மதம், நிறம் எந்த பேதமுமின்றி சிலுவையில் இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தை நோக்கிப் பார்க்கும் யாவருக்கும் அது இரட்சிப்பை அளிக்கிறது.

மூன்றாவதாக இந்த சிவப்பு நூல் கயிறு ராகாபின் உள்ளான விசுவாசத்தின் வெளிப்புற அடையாளம்!

அவள் சிவப்பு கயிறை ஜன்னல் வழியாகத் தொங்க விட்டதும் எத்தனைபேர் பார்த்திருப்பார்கள்! நிச்சயமாக ராகாப் வானத்தையும் பூமியையும் படைத்த தேவனாகிய கர்த்தர் மேல் தான் கொண்ட விசுவாசத்தைப் பற்றி கூற பயந்திருக்கமாட்டாள்! இவ்வளவு நாட்கள் உள்ளேயே மறைத்து வைத்திருந்த விசுவாசத்தை வெளிப்படுத்த சிவப்பு நூல் உதவியது!

அருமையான தேவனுடைய பிள்ளைகளே நம்முடைய ஆவிக்குறிய வாழ்வின் வளர்ச்சிக்கு அடையாளம் அறிவும்,திறமையும் அல்ல, நம்முடைய கீழ்ப்படிதல் தான்!

திராட்சரசம் குறைவு பட்ட கானாவூர் கலியாணத்தில், கர்த்தராகிய இயேசு ஆறு கற்சாடிகளில் தண்ணீரை நிரப்பும்படி கட்டளையிட்டபோது, அதை நிறைவேற்றிய வேலைக்காரர்களின் மனதில் என்ன எண்ணம் ஓடியிருக்கும்! ஆனாலும் அவர் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்ததால் பெரிய அற்புதம் அல்லவா நடந்தது!

நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் கர்த்தருக்கு கீழ்ப்படிகிறோமா? கர்த்தருக்கு கீழ்ப்படிதலே நாம் அவர்மேல் வைத்திருக்கிற அன்பை வெளிப்படுத்தும்! சிறு காரியத்தைக்கூட அலட்சியம் பண்ணாதே! அப்படியே கீழ்ப்படி! அற்புதத்தைக் காண்பாய்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ்: 424 தன் குடும்பத்தை இரட்சித்த ராகாப்!

யோசுவா: 6: 25 எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்து வைத்தபடியினால் அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்.”

நமக்கு முன்னே பின்னே தெரியாத இரண்டு பேர் நம் வீட்டுக்குள் வந்து இந்தப் பட்டணம் அழியப்போகிறது, அதில் வாழ்கிற அத்தனைபேரும் அழிந்து போவார்கள் என்றால் நாம் என்ன செய்வோம். உடனே நம் மனதில் என்ன தோன்றும்! ஐயோ என் தம்பி குடும்பத்துக்கு இதை உடனே தெரியப்படுத்த வேண்டும்!, தங்கை குடும்பம் ஒரு இருபது மைல் தொலைவில் இருக்கிறார்களே அவர்களுக்கு உடனே சொல்ல வேண்டும்! அம்மா அப்பாவை உடனே நம்மிடம் கூட்டிக்கொண்டு வந்து விட வேண்டும்! என்றுதானே மனம் பதைக்கும்!

இஸ்ரவேல் மக்கள் சீனாய் வனாந்தரத்தைக் கடந்து, கானானின் எல்லைகளை அடைந்தவுடன் ராகாபின் வயிறு பிசைய ஆரம்பித்தது! எத்தனையோ நாட்கள் மன அழுத்தங்களால் இராத்திரி முழுவதும் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துவிட்டு காலையில் ஜீரண மாத்திரை சாப்பிடுவோமல்லவா அப்படிப்பட்ட அனுபவம் தான் ராகாபுக்கும்.

அவள் கானானை நோக்கி வந்து கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேல் மக்களைக்குறித்து அவள் கவலைப்பட வில்லை! அவர்களை வழிநடத்திக் கொண்டு வரும் தேவனாகிய கர்த்தருக்கு பயந்தாள்! அவரைப்பற்றிய பயமும், விசுவாசமும் அவளுக்குள் வளர வளர அவளால் அமைதியாக இருக்கமுடியவில்லை. தன்னுடைய குடும்பத்தாருக்கு அவரைப்பற்றி கூற ஆரம்பித்தாள்.  இஸ்ரவேலர் எரிகோவண்டை வந்து சேருமுன்னர் ராகாப் தன் குடும்பத்தாருக்கும், தன் நண்பர்களுக்கும் சுவிசேஷத்தை கூறி அவர்களை தன்னண்டை கூட்டி சேர்த்து விட்டாள்! (யோசு:6:23) எரிகோ பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுமுன்னர் அவள் தகப்பனும், அவள் தாயும், அவள் சகோதர்களும், அவள் குடும்பத்தார் யாவரும் இரட்சிக்கப்பட்டார்கள் என்று படிக்கிறோம்.

இதேவிதமாக சோதோம், கொமொரா என்ற பட்டணங்கள் தேவ தூதரால் சுட்டெரிக்கப்பட்டது ஞாபகம் உள்ளதா? அங்கே லோத்தின் மருமக்கள் லோத்தின் வார்த்தையைக் கேட்டு நகைத்தார்கள். கர்த்தர் லோத்தின் மீது இரக்கம் காட்டியதால் அவனையும்,அவன் மனைவியையும், இரு மகள்களையும் கைகளைப் பிடித்து இழுத்து வந்து வெளியே விட்டனர். அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாமின் குடும்பத்தார்!!

இங்கே ஒரு கானானிய ஸ்திரி, ராகாப் என்னும் வேசி, கர்த்தரை தன் முழுமனதோடு விசுவாசித்ததால் தான் எரிகோவின் அக்கிரமங்களிலிருந்து வெளியே வந்தது மட்டுமல்ல தன் முழு குடும்பத்தாரையும் வெளியே கொண்டு வந்தாள்.

அவள் முழு குடும்பமும் இரட்சிக்கப்பட்டது! என் மனதைத் தொட்ட வேதபகுதி இது! இதன் மூலம் ராகாப் எப்படிப்பட்டவள் என்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

 “ ராகாபால் தன் தகப்பனையும் தாயையும் எரிகோவில் விட்டு செல்ல முடியவில்லை, அதனால் அவள் இஸ்ரவேலின் தேவனிடம் ஒன்றை மாத்திரம் கேட்கிறாள், அது அவள் வீட்டுக்குள் அடைகலம் புகும் அவள் குடும்பத்தார் அனைவருக்கும் இரட்சிப்பு கிடைக்க வேண்டும்.” என்று இதைப்பற்றி எழுதும்போது சார்லஸ் ஸ்பர்ஜன் அவர்கள் கூறுயிருக்கிறார்.

நம்மில் எத்தனை பேருக்கு நம் குடும்பத்தின் இரட்சிப்பைக் குறித்த பாரம் உள்ளது? உன் குடும்பம் உன்னால் இரட்சிப்பு என்னும் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறார்களா? உன் குடும்பம் உன் பார்வையில் எவ்வளவு முக்கியம்? இன்று கர்த்தருடைய நாள் வருமானால் உன் குடும்பத்தை பின்னால் விட்டு விட்டு நீ தனியே கானானுக்குள் பிரவேசிப்பாயா அல்லது உன் முழு குடும்பமும் உன்னோடு கானானுக்குள் வருவார்களா? உன் குடும்பத்துக்கு சுவிசேஷத்தை கூறுவதை அலட்சியமாக எண்ணுகிறாயா? அல்லது உன் குடும்பத்தின் இரட்சிப்புக்காக ஒவ்வொருநாளும் ஜெபிக்கிறாயா?

ராகாபைப்போல நாம் நம் குடும்பத்தில் உள்ள யாவருக்கும் சாட்சியாக மாறும்போது, பரம பிதாவானவர் ராகாபின் குடும்பத்தார் யாவரையும் எரிகோவிலிருந்து இரட்சித்தது போல நம் குடும்பத்தையும் இரட்சித்து காப்பாற்றுவார்!

நம்மில் ஒருசிலர் தூர தேசத்தில் விளக்கு ஸ்தம்பமாக பிரகாசிப்பது கர்த்தருடைய சித்தமாயிருக்கலாம்! ஆனால் நம்மில் அநேகர் நம் வீட்டில், நம் குடும்பத்தில் விளக்காய் பிரகாசிப்பதே கர்த்தருடைய திரு சித்தம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்!

மத்தேயு: 1: 1-5 “ ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

யூதா பாரேசையும் சாராவையும் தாமாரிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.”

வேதத்தில் நாம் வாசிக்க விரும்பாத பகுதி வெறும் பெயர்கள் இடம்பெறும் வம்சவரலாறு அல்லவா? வேதத்தை கடமைக்காக வாசிப்பதை விட்டு விட்டு, அதைக் கூர்ந்து படிக்க ஆரம்பிக்கும் வரை நான் கூட அப்படித்தான் செய்தேன். வேதத்தை நாம் கூர்ந்து படிக்கும்போதுதான் அதில் திரும்ப திரும்பக் கூறப்பட்டுள்ள கட்டளைகளும், வம்ச வரலாற்றின் பெயர்களும் எவ்வளவு முக்கியமானவைகள் என்று தெரிய வரும்!

இன்றைக்கு நாம் மத்தேயு 1 ம் அதிகாரத்தில் வரும் வம்ச வரலாற்றுப் பட்டியலைப் பார்க்கப் போகிறோம்!

நேற்று இஸ்ரவேல் மக்கள் ராகாபையும், அவள் குடும்பத்தையும் பாளயத்துக்கு வெளியே தங்க வைத்தனர் என்று பார்த்தோம். அவள் நம்மைவிடக் குறைவு பட்டவள் என்ற எண்ணம்தான் காரணம். அவள் தன் உயிரைப் பணயம் வைத்து வேவுகாரரைக் காப்பாற்றியதால் நன்மை பெற்ற அவர்கள், ராகாபிடம் நீ எங்களுக்கு செய்த உதவிக்காக எங்களோடு வரலாம் ஆனால் எங்களிடம் இடம் இல்லை என்று சொன்னது போல அவளைப் பாளயத்துக்கு புறம்பேத் தங்க வைத்தனர்.

ஆனால் கர்த்தர் அவளுக்காக என்ன திட்டம் வைத்திருந்தார்? இஸ்ரவேலரைப் போல பாளயத்துக்கு புறம்பே விட்டு விடுவாரா? இல்லவே இல்லை! உலகமே ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு அவளுக்காக ஒரு மிகப்பெரிய, மிகப் பிரமாதமான திட்டத்தை வைத்திருந்தார்!

அதைத்தான் நாம் மத்தேயு 1 ம் அதிகாரத்தில் இயேசுவின் வம்சவரலாற்றில் பார்க்கிறோம்!

தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஒரேபேரான குமாரனை இந்த உலகத்தில் அனுப்பும்போது, அவர் வந்து பிறப்பதற்காக ஒரு அருமையான வம்சத்தை தான் தேர்ந்தெடுத்திருப்பார் இல்லையா? நாம் நம் பிள்ளைகளுக்கு அப்படித்தானே செய்வோம்? இயேசுவானவர் உலகில் அவதரித்த வம்ச வரலாற்றை சற்றுப் பார்க்கும்போது நாம் தலையை பிய்த்துக்கொண்டு பிதாவானவர் இந்த வம்சத்தைப் பற்றி ஏதாவது ஆராய்ச்சி செய்தாரா இல்லையா என்று எண்ணத் தோன்றுகிறது!

இந்த வம்ச வரலாற்றில் வருகிற ஒருசிலரை நாம் ஞாபகப்படுத்தி பார்ப்போம்! முதலில் தாமாரைப் பற்றி சிந்திப்போம்! யூதாவின் மருமகளாகிய தாமாரைப் பற்றி நாம் பல நாட்கள் ராஜாவின் மலர்களில் படித்தோம்!

யூத குலத்தின் தகப்பனாகிய யூதா ஆசை வெறியில் அடையாளம் தெரியாமல், அவன் மருமகளாகிய தாமாரை ஒரு வேசி என்று எண்ணி நெருங்கி விட்டு பின்னர் அவள் கர்ப்பவதியானாள் என்று தெரிந்தவுடன், விரல் நீட்டி  குற்றவாளியாக தீர்த்து,அவளை சுட்டெரிக்க வேண்டும் என்கிறான். இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானானேன் என்று தாமார் அடையாளம் கூறியதும் குற்றவாளி தான் என்பதை உணருகிறான்!

ஷ்ஷ்ஷ்!!!! இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் இந்த யூதாவும் தாமாரும் இடம் பெற்றிருக்கின்றனர்!

மோவாபிய பெண்ணாகிய ரூத்தும் இயேசு கிறிஸ்துவின் வம்சத்தில் இடம் பெற்றிருக்கிறாள்! ரூத் வேசித்தனம் எதுவும் பண்ணவில்லை என்றாலும் அவள் ஒரு மோவாபிய ஸ்திரி, லோத்துக்கும் அவனுடைய குமாரத்திக்கும் இடையே ஏற்பட்ட அருவருப்பான உறவினால் பிறந்த மோவாபின் வழி வந்தவள். கர்த்தரால் அருவருக்கப்பட்டு மோவாபியரிடம் பெண் கொள்ளவும் பெண் கொடுக்கவும் கூடாது என்று கட்டளையிடப்பட்ட வம்சத்தை சேர்ந்தவள்!

இவர்கள் மட்டும் அல்ல, தாவீது ராஜா விபசாரமும், கொலையும் பண்ணினவன் தானே! சாலொமோன் மாத்திரம் என்ன தொடர்ந்து தவறே செய்யவில்லையா? இவர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்!

கடைசியாக நம்முடைய ராகாபும் இயேசு கிறிஸ்துவின் வம்சத்தில் இடம் பெற்றிருக்கிறாள்! முதலில் ராகாப் ஒரு கானானிய ஸ்திரி, இரண்டாவது அவள் ஒரு வேசி! இந்த இரண்டுமே ராகாபுடைய பெயருக்கு எதிராய் தொற்றிக்கொண்டிருந்தது.

ராகாபுடைய கடந்த காலம் தேவனாகிய கர்த்தர் அவளுக்காக வைத்திருந்த மகிமையான எதிர்காலத்துக்கு தடையாக இருக்க முடியவில்லை! எப்படிப்பட்ட எதிர்காலம்! இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெறும் மகா பெரிய எதிர்காலம்!

 

இஸ்ரவேல் மக்கள் ராகாபை பாளயத்துக்கு புறம்பே தங்க வைத்திருக்கலாம்! கர்த்தரோ அவளை தன் குமாரனாகிய இயேசுவின் வம்சத்துக்குள் ஏற்றுக்கொண்டார். அவள் ’அறிந்த’ தேவனாகிய கர்த்தர் அவளுடைய வம்சத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்! தம்முடைய பிள்ளை என்ற உயர்ந்த, உன்னதமான ஸ்தானத்தை அவளுக்கு கொடுத்தார்!

இந்த கதை நமக்கு நம்பிக்கையூட்டுகிறது அல்லவா? யாராவது இனி உங்களுடைய கடந்த காலத்தைப் பற்றி பேசினால் கவலைப்படாதீர்கள்! உங்கள் குடும்பத்தின் பின்னணியைப் பற்றி பேசி சிரித்தால் கவலையே வேண்டாம்! தாமாரை, ரூத்தை, ராகாபை தன் வம்ச வரலாற்றில் ஏற்றுக்கொண்ட தேவன் உங்களுக்கும் இடம் வைத்திருக்கிறார். அவர் உங்கள் கடந்த காலத்தை கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள தூரம் போல எறிந்து விட்டார். தனக்கு புதிதாய் பிறந்த குழந்தையை ஒரு தாய் பார்ப்பது போல உங்களைப் பார்க்கிறார்!

உலகத்தாரைப் பற்றியும், உன் கடந்த காலத்தைப் பற்றியும் கவலைப்படாதே! கர்த்தரிடம் வா! பாவியாகவே வா! நீ நீயாகவே வா! இயேசு உன்னைத் தம் கரம் நீட்டி அழைக்கிறார்! அவரை ஏற்றுக்கொள்! உனக்கும் ஒரு உன்னத ஸ்தானம் காத்திருக்கிறது!

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 6 இதழ்: 422 ராகாப் நம்மை விட குறைந்தவளா என்ன????

 யோசுவா: 6:23 அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளே போய்  ராகாபையும், அவள் தகப்பனையும், அவள் தாயையும், சகோதர்களையும், அவளுக்குள்ள யாவையையும், அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்கு புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள்.

தன்னுடைய வாழ்வின் அஸ்திபாரத்தை கர்த்தர்மேல் உறுதியாகப் போட்ட ராகாப், வேவுகாரர் அவ்விடம்விட்டு போன பின்னர் அமைதியாக கவனித்து வந்தாள். இஸ்ரவேலர் ஆறு நாட்கள் எரிகோவை சுற்றிவந்தபோது அவள் என்ன நினைத்திருப்பாள்? ஏழாவது நாள் அவர்கள் ஏழுதரம் எரிகோவை சுற்றி வந்து ஏழாவதுதரம் எக்காளம் ஊதி ஆர்ப்பரித்தபோது அவள் மனநிலை எப்படியிருந்திருக்கும்?

எத்தனைமுறை விசுவாசிகளாகிய நாமும் செய்வதறியாது இப்படி அமைதியாக நம்மை சுற்றி நடப்பவைகளை கைக்கட்டி பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய சூழ்நிலைகள் வருகின்றன! அப்படிப்பட்ட சமயத்தில் நம் விசுவாசம் தடுமாறுகிறதா அல்லது ராகாபைப்போல் உறுதியாய் இருக்கிறதா?

ராகாபின் விசுவாசம் உறுதியாய் இருந்ததற்கு காரணம் அவள், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசம் என்னும் ஆரம்பக்  கல்லையும், விசுவாசத்தின் மூலம் கர்த்தரைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளுதல் , பாதுகாக்கப் படுதல், உலகத்தை மறுதலித்தல், நம்பிக்கை என்ற கற்களை உபயோகப்படுத்தி தன் அஸ்திபாரத்தை உறுதியாய்ப் போட்டதினால்தான்!

கர்த்தர் தம் பிள்ளையான ராகாபை நேசித்ததால் அவளை எரிகோவிலிருந்து பிடுங்கி, அவளைத் தமக்கு சொந்தமான ஜனமாகும்படி செய்தார்.

ஒரு புறஜாதியான பெண்ணாய், கர்த்தரை அறியாத தேசத்தில் பிறந்து வளர்ந்தாலும் கர்த்தரைப் பற்றும் விசுவாசத்தில் உறுதியாய் இருந்த ராகாபை இஸ்ரவேல் மக்கள் எப்படி நடத்தினர் என்று அறிய என் உள்ளத்தில் ஒரு ஆர்வம் எழுந்தது.

நாம் வாசிக்கிற இந்த வேதபகுதி நமக்கு அதை தெளிவாகக்காட்டுகிறது! அவர்களை (ராகாபின் குடும்பத்தை) இஸ்ரவேல் பாளயத்துக்கு புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள். பாளயத்துக்கு புறம்பே என்ற வார்த்தையை படித்தவுடன் எனக்கு என்னுடைய் கிராமம் தான் ஞாபகம் வந்தது.

நான் சென்னையில் வளர்ந்தாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள என்னுடைய சொந்த கிராமத்துக்கு அடிக்கடி போயிருக்கிறேன். எங்கள் ஊரில், ஊருக்கு துணி துவைப்பவர்களின் குடும்பமும், ஊர் ஜனத்துக்கு முடி வெட்டுபவர்களின் குடும்பமும் மாத்திரம் ஊரைவிட்டு வெளியே கால்வாய் ஓரத்தில் குடியிருக்கிறார்கள். அவர்கள் நம்மைவிட குறைவானவர்கள் ஆதலால் அவர்களை ஊருக்கு வெளியே இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் இதற்கு காரணம்!

இங்கு இஸ்ரவேல் மக்கள் ராகாபையும், அவள் குடும்பத்தையும் பாளயத்துக்கு வெளியே தங்க வைத்தனர் என்று பார்க்கிறோம்! அவள் நம்மைவிடக் குறைவு பட்டவள் என்ற எண்ணம்! ராகாப் எந்தவிதத்தில் குறைவு பட்டிருந்தாள்?

மோசே சீனாய் மலையிலிருந்து வர தாமதித்தவுடன் பொன் கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதை தேவன் என்று வழிபட்டார்களே அந்த இஸ்ரவேலரைவிட குறைவு பட்டவளா??????

அல்லது…..

கானானுக்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த மக்களின் உருவத்தைப் பார்த்து பயந்து நம்மால் கானானை சுதந்தரிக்க முடியாது என்று மோசேயிடம் வந்து அழுதார்களே அந்த இஸ்ரவேலரைவிடவா???????

மன்னியுங்கள்! அங்கிருந்த இஸ்ரவேலரில் அநேகரை விட அவள் கர்த்தரை அதிகமாகவே அறிந்திருந்தாள், அவரை உறுதியாக விசுவாசித்தாள்! வானத்தையும் பூமியையும் படைத்தவரையும், சிவந்த சமுத்திரத்தை பிளந்தவரையும், எமோரியரின் ராஜாவை முறியடித்தவரையும் அவள் அறிந்திருந்தது மட்டும் அல்ல அவருக்காக அவள் எரிகோவின் ராஜாவிடம் தன் உயிரையும் பணயம் வைத்து இஸ்ரவேலின் வேவுகாரரின் உயிரைக் காப்பாற்றினாள்!

அப்படிப்பட்டவள் இஸ்ரவேலின் பாளயத்துக்குள் சேர்க்கப்படவில்லை!

எத்தனைமுறை நீங்களும் நானும் இப்படிப்பட்ட காரியத்தை செய்கிறோம்? ஒருவேளை ராகாப் என்னுடைய வீட்டுக்குள் பிரவேசிக்க முயன்றிருந்தால் அவளை நான் ஏற்றுக்கொண்டிருந்திருப்பேனா? அதெப்படி முடியும்? அவள் நம்மில் ஒருத்தி இல்லை அல்லவா? நம்மைவிட குறைவு பட்டவள், என்று நாம் நினைக்கலாம்! ஆம்! ஆம்! அவள் நம்மில் ஒருத்தி இல்லை! நம்மைவிட அதிகமாய் அவளுடைய பரம பிதாவின் சாயலைத் தரித்தவள்!

நாம் ஒருவரையொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர், நல்லவர் கெட்டவர் என்று நியாயம் தீர்த்துக்கொண்டிருந்தால் நமக்கு அவர்களை நேசிக்க நேரமிருக்காது!  என்று அன்னை தெரேசா கூறியிருக்கிறார்.

நாம் கர்த்தருடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும்  நம்மிடம் தேக்கி வைக்கும் நீர்த்தேக்கம் போன்றவர்களாய் இருக்கக்கூடாது! கர்த்தருடைய அன்பை மற்றவர்கள் பெற்று அனுபவிக்க உதவும் ஆசீர்வாதத்தின் கால்வாய்களாக இருக்கவேண்டும்!

 

நேசிக்கக்கூடாத அவலநிலையில் வாழ்ந்து கொண்டிருந்த என்னை நீர் நேசித்தீர் ஐயா!

நீர் என்னை நேசித்தவிதமாய் நான் மற்றவர்களை நேசிக்க எனக்குள் உம் நேசத்தை தாரும் ஐயா!

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 6 இதழ்: 420 ராகாப் பெற்ற புதிய இணைப்பு!

 

எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.”

நான் என்னுடைய 13 ம் வயதில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், பள்ளியிலும், கல்லூரியிலும் அநேக காரியங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டியதிருந்தது. ஒரு கை மாறி மறு கைக்கு இரகசியமாய் மாற்றப்பட்ட கதை புத்தகங்களை மறுதலித்தது, கும்பலாய் டிக்கட் வாங்கி தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற நண்பர்களோடு போக மறுதலித்தது, சிற்றின்பமான காரியங்களை பேசி சிரித்து நேரம் கழிப்பது,  இப்படி பல காரியங்களில் நான் தனிமையாக நின்றேன். நான் வகுப்புக்கு செல்லும்போது எல்லோருடைய கண்களும் என்மேல் இருப்பதை உணர்வேன். அநேக வருடங்கள் கழிந்து போனாலும் ஒன்று மட்டும் தெளிவாக ஞாபகத்தில் உள்ளது. எவ்வளவுதூரம் நான் இப்படிப்பட்ட காரியங்களில் பங்கு பெறுவதை வெறுத்தேனோ, அவ்வளவுதூரம் நான் தனிமையாக, மற்றவர்கள் களிகூறும் சிற்றின்ப வட்டத்துக்கு வெளியே நின்றதையும் வெறுத்தேன். என்றாவது ஒருநாள் தவறி அந்த வட்டத்துக்குள் போய்விடுவோமோ என்ற பயம் கூட இருந்தது!

உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா? நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ, அல்லது உங்கள் குடும்பத்திலோ வட்டத்துக்கு வெளியே தனிமையாக நிற்கிரீர்களா? எல்லோருடைய பார்வையும் உங்களை துரத்துகிறதா?

ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் மாற ஆசைப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் போன நாளிலிருந்து, நாம் ஒவ்வொருவரும் நன்மை தீமை அறியும் கனியை அவர்கள் புசித்தற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்!

நாம் ராகாபுடைய வாழ்க்கையிலிருந்து, நம்முடைய வாழ்வின் அஸ்திபாரக் கற்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறொம்! அஸ்திபாரத்திற்கு விசுவாசம் என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால்,  விசுவாசத்தின் மூலம் கர்த்தரைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளுதல் அதற்கு தேவையான இன்னொரு கல் என்றும், பாதுகாக்கப் படுதல் நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்துக்கு தேவையான மற்றொரு கல் என்றும் பார்த்தோம். கர்த்தர் ராகாபை ஒரு நல்ல தகப்பனாக, தம்முடைய செட்டைகளின்கீழே பாதுகாத்தார்.

இன்று நாம் காண்கிற அஸ்திபாரக் கற்களில், அடுத்த கல் மறுதலித்தல் என்பதே.

உண்மையில் சொல்லப்போனால் நான் இதை எழுதும்போது ராகாபுடைய வாழ்க்கையை பூதக் கண்ணாடிப் போட்டு பார்த்தேன். வேசி என்று அழைக்கப்பட்ட அவள் கீழ்ப்படியாதவர்களோடே சேதமாகாமல் இருக்க என்ன செய்திருப்பாள்? எவற்றை மறுதலித்திருப்பாள்? சிற்றின்பத்தையா அலங்கத்தின் மேல் வாழ்ந்த வாழ்க்கையையா? எப்படி அவள் எபிரேயர் 11 ம் அதிகாரத்தில் விசுவாசத்தின் கதாநாயகர்களின் பட்டியலில் இடம் பிடித்தாள்?

விசுவாச வாழ்க்கையில் நிலைத்திருக்க நாம் எவற்றை மறுதலிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்? சிற்றின்பமாய் இருக்கலாம்! ஆனால் அதைவிட மிக மிக முக்கியமான ஒன்று உள்ளது!

ராகாப் விசுவாசித்தபோது, கர்த்தருடைய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது, கர்த்தரால் பாதுகாக்கப்பட்டபோது, அவள் ஒரு புதிய இராஜ்யத்தின் பிள்ளையானாள்! இனி எரிகோவின் அதிகாரத்துக்கு கீழே அவள் இல்லை! அவளுடைய விசுவாசம் அவளை ஒரு கர்த்தருடைய அதிகாரத்துக்கு கீழே கொண்டு வந்தது.

ஒரு மின்சாரக் கருவி, எந்த பிணைப்பில் பொறுத்தப்பட்டுள்ளதோ அந்த இடத்திலிருந்து மின்சாரத்தை வாங்கி இயங்குவது போல,  அவள் பழைய வாழ்க்கையான எரிகோ இராஜ்யத்தின் பிணைப்பிலிருந்து தன்னை எடுத்து புதிய வாழ்க்கையான கர்த்தரின் இராஜ்யத்தில் பிணைத்து விட்டாள். இப்பொழுது அவள் இயங்கும் சக்தி அவளுக்கு புதிய பிணைப்பான கர்த்தரிடமிருந்து வந்தது!

மறுபடியும் கேட்கிறேன்! ராகாபைப் போல நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ, அல்லது உங்கள் குடும்பத்திலோ, வட்டத்துக்கு வெளியே தனிமையாக நிற்கிரீர்களா? எல்லோரும் தெரிந்து கொள்ளும் பாதையை நீங்கள் மறுதலிப்பதால் எல்லோருடைய பார்வையும் உங்களை துரத்துகிறதா? தவறி அவர்களுடைய வட்டத்துக்குள்ளேயே போய்விடுவோமோ என்ற பயம் உள்ளதா? ராகாபைப் பார்!

 ராகாபைப் போல அழிந்து போகும் எரிகோவை மறுதலித்து விட்டு, உன்னை இஸ்ரவேலின் கர்த்தரோடு பிணைத்துக் கொள்! ராகாபுக்கு தனியே நிற்கும் வல்லமையை கொடுத்த கர்த்தர் ஒவ்வொரு நாளும் உனக்கும் வல்லமையை கொடுப்பார்!

நீ தீமையை மறுதலிக்காவிட்டால் நன்மையை நேசிக்க முடியாது!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!