Tag Archive | ரூத்

இதழ்: 625 எதிர்பாராத நாட்டில்!

1 சாமுவேல் 22: 3 தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய் மேவாபின் ராஜாவைப் பார்த்து; தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும் என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவு செய்யும் என்று சொல்லி,

நம்முடைய தேவனாகிய கர்த்தர்  நாம் செல்லும் எல்லா கரடு முரடான பாதையிலும் நம்மோடு இருப்பார், நாம் எதிர்பார்க்காத இடத்தில் எதிர்பாராத வேளையில் நம்மோடு இருந்து அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற அவரால் கூடும் என்பதை இன்றைய வேத பாகம் அழகாகக் காண்பிக்கிறது.

தாவீது, சவுலுக்கு தப்பி அதுல்லாமென்னும் குகையில் ஒளிந்திருந்தான். அவனுடைய குடும்பத்தார் அதைக்கேள்விப்பட்ட போது அங்கே அவனிடத்தில் போனார்கள்.( 1சாமு:22:1) தாவீது இப்படி தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருந்ததால் அவன் குடும்பம் அவனைப் பார்த்து பல நாட்கள் ஆகியிருக்கலாம். அதுமட்டுமல்ல, ஒருவன் இப்படி அரசரால் தேடப்படும் கைதியாக இருந்தால் முதலில் அவன் குடும்பம் கண்காணிக்கப்படுவது இன்று கூட நடக்கும் ஒன்றுதானே!

தாவீது இந்தப் பிரச்சனை தன் பெற்றோருக்கு உருவாகிறதை அறிந்து மோவாபுக்குப் போய் தன் தாயும் தகப்பனும் தங்கியிருக்க அடைக்கலம் கேட்பதைப் பார்க்கிறோம்.

மோவாப்? எதற்கு இந்த நாட்டுக்கு சென்றான் தாவீது? மோவாபியரோடு எந்த சம்பந்தமும் வேண்டாம் என்று கர்த்தர் கூறியிருந்தாரே! அதைமீறி தாவீது எப்படி அங்கு சென்றான் என்றக் கேள்வி எனக்கு எழுந்தது!

ஆம்! ஆம்! தடை செய்யப்பட்ட நாடுதான்!

ஆனால் ஒருநாள் அந்த நாட்டின் பெண்ணான ரூத் தன்னுடைய மாமியாராகிய நகோமியிடம், ‘உம்முடைய தேவன் என் தேவன்’ என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொன்னதை கர்த்தர் அங்கீகரித்தார் அல்லவா!  இந்த மோவாபியப் பெண்ணான ரூத், இஸ்ரவேலனாகிய போவாசை  முறைப்படி திருமணம் செய்தாள். அவர்களுக்கு ஓபேத் என்ற குமாரன் பிறந்தான்.  அந்த ஓபேத் தான் தாவீதின் தாத்தா! ஓபேத்தின் மகன் ஈசாய் தான் தாவீதின் அப்பா!

அப்படியானால் தாவீதின் தகப்பன் வழியாக அவன் மோவாபியருக்கு சொந்தம் தானே! இப்பொழுது அவர்களுக்கு அடைக்கலம் வேண்டியபோது, அவர்கள் குடும்பம் ஆபத்தில் இருக்கும்போது அவர்களுக்கு உதவி செய்யக் கர்த்தர் மோவாபை என்றோ ஆயத்தம் பண்ணிவிட்டார்.

இந்த சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. எத்தனை அற்புதமான வழிநடத்துதல்! எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத சமயத்தில் கர்த்தரின் உதவிக்கரம் அவர்களை வழிநடத்தியது!

உன் வாழ்க்கையிலும் கர்த்தர் இந்த அற்புதத்தை செய்ய முடியும். நீ ஒருவேளை இன்று மோவாபைப் போன்ற அந்நிய நாட்டில்  இருக்கலாம். இது என்னுடைய வீடு இல்லை! இங்கு எனக்கு பாதுகாப்பு உண்டா? நான் எவ்வளவு நாட்கள் இங்கு கஷ்டப்படவேண்டும், என்னை சுற்றிலும் எல்லாம் இருளாகத் தோன்றுகிறது என்று புலம்பிக்கொண்டிருக்கிறாயா?

ஒவ்வொரு நாளும் உன் தகப்பனாகிய தேவனை நோக்கிப்பார்! நீ அவரை விசுவாசிப்பாயானால், அவரை முழுமனதோடு நபுவாயானால் அவர் மோவாபில் இன்று உன்னோடு இருப்பார். உன் இருண்ட வாழ்வில் ஒளிக்கதிர் வீசி உனக்கு பாதையைக் காட்டுவார்! நீ தவறாக எடுத்த உன்னுடைய கோணலான பாதை செவ்வையாகும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 607 அகத்தின் அழகு!

1 சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றான்.

சரித்திரத்தில் நடக்கும்  சம்பவங்களில் பல, மீண்டும் மீண்டும் நடப்பதை நம்மில் பலர் படித்திருக்கிறோம், கண்டுமிருக்கலாம். வேறொரு நாட்டின் சரித்திரம் இன்னொரு நாட்டில் நடக்க வாய்ப்புண்டு. அதைபோல வேறொரு காலகட்டத்தில், வேறொரு இன மக்களிடம்  நடந்த  சம்பவங்கள் நாம் வேதத்தில் படிப்பதைப் போலவே நம் வாழ்க்கையிலும் நடக்கின்றன அல்லவா? அதனால் தான் வேதத்தில் நாம் படிக்கும் சிலருடைய வாழ்க்கை நம்மைப் பிரதிபலிப்பது போலவும், நமக்குப் பாடம் கற்பிப்பது போலவும் உள்ளது.

இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு இதைத்தான் கற்பிக்கிறது.

உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? சவுல் இஸ்ரவேலின் மேல் முதல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டபோது அவன் வாட்டசாட்டமான, உயரமான ஆணழகனாக இருந்தான். வெளியில் பார்க்கும்போது அவன் ராஜாவாகிறது இஸ்ரவேலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அவன் கர்த்தருடைய கிருபையால் ராஜரீகம் செய்ய ஆரம்பித்தபோது, திறமைசாலியாகவும் காணப்பட்டான்.  நாளாக, நாளாக அவனில் முரட்டாட்டம் காணப்பட்டபோது சாமுவேல் அவனிடம், நீ உன் பார்வையில் மிகச்சிறியவனாயிருந்தபோது கர்த்தர் உன்னை ராஜாவாகியதை மறந்து போகாதே என்று எச்சரித்தார். ஆனால் அவன் தலையில் ஏதோ ஏறிவிட்டது. அவன் தான் ராஜாவாயிப்பதற்கு மட்டுமல்ல, ஆசாரியனாயிருப்பதற்கும் தகுதியானவன் என்று முடிவுசெய்து, தகனபலிகளையும் செலுத்தி கர்த்தரை வேதனைப்படுத்தினான்.

இஸ்ரவேல் மக்கள் சவுலிடம் கண்டதற்கு எதிரிடையாக சவுலுக்குள் ஒளிந்து கொண்டிருந்த குணம் இப்பொழுது வெளியே சிந்த ஆரம்பித்துவிட்டது. இதை நாம் நம்முடைய அரசியல்வாதிகளிடம் கண்டதில்லையா? நம்முடைய ஹீரோக்களிடம் கண்டதில்லையா? நம்முடைய பாதிரிமாரிடம் கண்டதில்லையா? அல்லது நம்மிடம்தான் கண்டதில்லையா? நம்மை எவ்வளவு அழகாக நாம் சித்தரிக்க முயற்சிசெய்தாலும், ஒருநாள் நமக்குள் ஒளிந்திருக்கும் நம்முடைய உண்மையான முகம் எப்படியோ வெளிப்பட்டு விடுகிறது!

சவுலின் வெளிப்புற அழகு அவனுடைய உட்புறத்தில் இல்லை என்று சாமுவேல் கண்டு கொண்டபின்னரும் சரியான பாடத்தைக் கற்றுக்கொள்ளாமல் மறுபடியும்  ஈசாயின் குமாரனாகிய எலியாபின் முகத்தையும், சரீரவளர்ச்சியையும் கண்டு கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுகிறவன் இவன் தானாக்கும் என்றான் ( 1 சாமு 16:6).

அப்பொழுது கர்த்தர் சாமுவேலுக்கு , ‘ நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்’ என்றுகூறுவதைப் பார்க்கிறோம்.

கர்த்தர் இன்று அழகான ஆண்மகனைத் தேடவில்லை! அழகாய் ஆடையணியும் பெண்ணையும் தேடவில்லை! அழகான உள்ளத்தைத்தான் தேடுகிறார்.

அன்று ராகாபிடம் கண்ட உள்ளழகு! வானத்தையும், பூமியையும் படைத்த கர்த்தரைப் பின்பற்ற உள்ளத்தில் ஏங்கிய அழகு!

அன்று ரூத் என்ற மோவாபியப் பெண்ணிடம் காணப்பட்ட உள்ளழகு! தாவீதின் வம்சத்தை உருவாக்கிய இந்த உள் அழகை தேவன் புறம்பே தள்ளப்பட்ட மோவாபியரில் கண்டார்!

மனிதர் காணும்விதமாக கர்த்தர் உன்னைக் காண்பதில்லை! அவர் உனக்களித்திருக்கும் பரலோக கிருபையின் மூலம்தான் உன்னைக் காண்கிறார்.

இன்று உன் உள்ளத்தில் கர்த்தர் எதைக்காண்கிறார்?

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

மலர் 7 இதழ்: 548 மனம் ஏங்கும் எதிர்காலம்!

ரூத்: 1 : 16   “அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;”

தாவீதின் கதையைக்கேளுங்க!

பிள்ளைகளே தாவீதின் கதையைக் கேளுங்க!

இளைஞன் தாவீது, வீரன் தாவீது, இஸ்ரவேலின் தேவனுக்கு பயந்த தாவீது

அந்த தாவீதின் கதையைக் கேளுங்க!

இந்தப் பாடல் என் காதுகளில் தொனிக்கும் போதெல்லாம், சின்னத் தாவீது எப்படி எட்டடி உயரமுள்ள பெலிஸ்த வீரனின் முன்னால் கூழாங்கற்களோடு தைரியமாக யுத்தத்துக்கு சென்றானோ, அந்தக் காட்சி என்  மனதினுள் படமாக வரும்! தாவீது மட்டும் அல்ல,  நாம் படித்துக் கொண்டிருக்கும் ரூத்தும் கூட மிகவும் தைரியசாலிதான்!

ரூத் ஒரு தைரியசாலி என்று நான் கூறுவதற்கு, அவள்  பயமில்லாத அல்லது வேதனையில்லாத பெண் என்று அர்த்தம் இல்லை. நான் ஒருவேளை ரூத்தைப் போல என்னுடைய நாட்டையும், வீட்டையும் விட்டு, ஒரு புதிய தேசத்துக்கு செல்வேனானால் என் மனது வேதனையால் துடித்துப் போகும். ரூத் மோவாபை விட்டு புறப்பட்டபோது, அவள் மனதிலிருந்த பயத்தையும், வேதனையையும் ஊடுருவி அவள் கண்கள், அவள் மனது ஏங்கிய எதிர்காலத்தை நோக்கின! அவள் மனம் தன் வாழ்க்கையில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றவே ஏங்கிற்று.

நம்முடைய வாழ்வில் கூட  தேவனாகியக் கர்த்தர் நாம் ஒவ்வொருவரும் தைரியமாக ரூத்தைப் போல துணிச்சலுடன் அவர் வழிநடத்தும் பாதையில் அவரை விசுவாசித்து அடி எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் நமக்காக வைத்திருக்கும் எதிர்காலம் என்ன என்று நமக்கு புலப்படாதிருக்கும்போது,  நாம் செல்லும் வழி எது என்று நமக்கு புரியாதிருக்கும்போது, துணிச்சலுடன் அவரைப் பின்பற்ற வேண்டுமென்று விரும்புகிறார். ரூத் மோவாபை விட்டுப் புறப்பட்டபோது அவள் இஸ்ரவேலின் மேசியாவின் வம்சவரலாற்றில் இடம் பெறப்போவதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். விசுவாசத்தோடு,  தைரியத்தோடு மோவாபை விட்டுப் புறப்பட்ட அவளின் வாழ்க்கையில் கர்த்தர் அவள் அறியாத பெரியத் திட்டங்களை வைத்திருந்தார்.

என் தேவனாகிய கர்த்தர் என்னை வழிநடத்தும் இடத்துக்கு மறு பேச்சில்லாமல் செல்லும் துணிச்சல் எனக்கு உண்டா?

தாவீதைப் போல, தானியேலைப் போல, ரூத்தைப் போல  கர்த்தரின் கட்டளையைப் பின்பற்றும் தைரியம் எனக்கு உண்டா?

ஆண்டவரே ! என்னுடைய எல்லா பயங்களையும் நீக்கி, நீர் காட்டும் பாதையின் மறுமுனையை என்னால் பார்க்க முடியாவிட்டாலும், விசுவாசத்தோடு உம்மைப் பின்பற்றும் தைரியத்தை எனக்கு இன்று தாரும்! நான் காணாத எதிர்காலத்தை நோக்கி விசுவாசத்தோடு நடக்க எனக்கு பெலன் தாரும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 541 தகுதியற்ற நமக்கு அளிக்கப்பட்ட கிருபை!

ரூத்: 2 : 15  அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ண வேண்டாம்.

பிறருக்கு கொடுப்பதில் மூன்று வகைகள் உள்ளன என்று வாசித்திருக்கிறேன். ஒன்று முணங்கிக்கொண்டே, ஐயோ வந்து நிற்கிறார்களே என்ன செய்வது என்று கொடுப்பது, இரண்டு கொடுக்க வேண்டியக் கடமை, இதிலிருந்து தப்பவே முடியாது என்று கொடுப்பது, மற்றொன்று மனமுவந்து நன்றியறிதலோடு கொடுப்பது என்று.

பல வருடங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில் இருந்துவிட்டதால், ஊழியத்துக்குக் கொடுப்பவர்களின் எல்லா வகையினரும் எனக்குத் தெரியும். ஆனால் போவாஸைப் போல யாரையுமே இதுவரை நான் பார்த்ததேயில்லை. அரிக்கட்டுகளின் நடுவே இருக்கும் நல்ல வாற்கோதுமையை அந்தப் பெண் பொறுக்கிக்கொள்ளட்டும் என்ற குணம் யாருக்கு வரும்?

இன்று நாம் போவாஸுடைய குணநலத்திலிருந்து நம்முடைய பரமபிதாவானாவர் நாம் அவருடைய செட்டைகளின் கீழ் வரும்போது நம்மை ஏற்றுக்கொண்டு நடத்தும் குணத்தின் பிரதிபலிப்பைப் பற்றி பார்க்கலாம். தம்முடைய இரக்கத்தினாலும், கிருபையாலும் ரூத்தையும் நகோமியையும், பெத்லெகேமிலே வாற்கோதுமை அறுவடை செய்யும் காலத்தில் வரவைத்து, அவர்களைப் போஷித்துக் காப்பாற்ற மறைமுகமாக வழிநடத்தியது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தாராளமான பரிசுகளையும் வழங்கினார்.

இன்றைய வேதாகமப் பகுதியில் போவாஸ் தன்னுடைய ஊழியரிடம்  அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்,என்று கூறுவதைப் பார்க்கிறோம். ஒரு நிமிடம்! அரிக்கட்டுகள் அடுக்கி வைத்துள்ள வரப்பை கற்பனைப் பண்ணிப் பார்ப்போம். அந்த வரப்பின் ஓரத்தில் சிந்தியுள்ளவைகளைப் பொறுக்க அநேக ஏழைகள் நின்று கொண்டிருக்கும்போது, போவாஸ், ரூத்தை அரிக்கட்டுகளின் நடுவே அல்லது வயல் வரப்பின் நடுவே வந்து கோதுமையைப் பொறுக்கும்படி அனுமதிக்கிறான். ரூத் போவாஸுடைய, அல்லது எஜமானுடைய சுதந்தரத்துக்குள்ளே வரும்படியாக அனுமதிக்கப்பட்டாள். மோவாப் தேசத்திலிருந்து இஸ்ரவேலுக்குள் வந்த ரூத்துக்கு இந்த அழைப்பு கொடுக்கப்பட்டது. நமக்கு நன்கு ஞாபகம் இருக்குமானால் இந்த மோவாபியரை தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலின் பாளையத்துக்குள் நுழையவே அனுமதி கொடுக்காமலிருந்தது நமக்குத் தெரியும்.

அதுமட்டுமல்ல, போவாஸ்  அவளை ஈனம் பண்ண வேண்டாம் என்று கூறுவதையும் பார்க்கிறோம். ஈனம் என்ற வார்த்தைக்கு அவளை வெட்கமடைய செய்ய வேண்டாம், அவள் நாணிப்போக வேண்டாம் என்று அர்த்தம். போவாஸ் அவளுக்கு செய்யும் உதவியைப் பார்த்து அவள் தன்னுடைய தாழ்வான நிலையை நினைத்து வெட்கப்பட்டுப் போகக் கூடாது என்றுதான் இந்தக் கட்டளையைக் கொடுத்தான்.

போவாஸ் அவளுக்கு உதவி செய்தது அவனுடைய தாராள மனதால்தானேயொழிய, அவளுடைய தாழ்வு நிலையை சுட்டிக்காண்பிப்பதற்காக அல்ல.

என்ன அருமையான கருத்து! நம்முடைய தேவனாகிய கர்த்தரும் தகுதியில்லாத நம்மை இவ்விதமான கிருபையினால் நிரப்புகிறார்.

போவாஸ் வரப்புக்கு வெளியே நின்ற ரூத்தை தன்னுடைய சுதந்தரத்துக்குள்ளே வரும்படி அழைத்தது போல கர்த்தர் நம்மையும் அழைத்து தம்முடைய சுதந்தரத்திலே பங்கு கொடுக்கிறார்.

நாம் அவருக்குத் தருணம் கொடுப்போமானால் அவருடைய தாராளத்திலிருந்து நம்மை முழுவதுமாக நிரப்புவார். தருணம் கொடுக்கத் தாமதிக்காதே! 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 540 மறைமுகமான கிரியை!

ரூத்: 1: 22    “இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்”.

ராஜாவின் மலர்களின் தோட்டத்திற்கு வரும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பார்ந்த புதுவருட வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு 2017 உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாய் இருக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன்!

நாம் கடந்த வாரத்தில் நகோமியின் வாழ்வில் கசப்பு என்ற விஷம் கிரியை செய்து அவள் விசுவாசத்தை அழித்ததால், பெத்லெகேமில் அவளை வரவேற்க வந்த உறவினரிடம் தன்னை நகோமி என்று அழைக்காமல் மாரா என்று அழைக்கும்படி கூறினாள் என்று பார்த்தோம்.

நகோமியின் வாழ்க்கையை நாம் படிக்கும்போது அவளுடைய குடும்பம் கர்த்தருடைய அழைப்புக்கு இணங்கி மோவாபுக்கு செல்லவில்லை, அவளுடைய கணவன் தன் குடும்பத்தை பஞ்சத்திலிருந்து தப்பவைக்க சுயமாய் எடுத்த முடிவே அது என்று அறிந்தோம். இதே காரணத்துக்காக கானானைவிட்டு எகிப்துக்குள் சென்ற ஆபிரகாம் குடும்பத்தினரையும் நாம் அறிவோம். இந்த இரண்டு குடும்பங்களுமே தேவனுடைய சித்தத்தைவிட்டு விலகியதால், அவர்களுடைய உடனடி தேவை சந்திக்கப்பட்டாலும், அதன் விளைவை நீண்ட நாள் அனுபவிக்க வேண்டியிருந்தது.

ஆனாலும் கர்த்தர் அவர்களை கைவிடவில்லை! அவர்களுடைய வாழ்வில் மறைமுகமாக கிரியை செய்து கொண்டிருந்தார்.

மோவாபைவிட்டு பெத்லெகேமுக்கு வந்த பின்னரும், நகோமியாலும், ரூத்தாலும் ஒளியைக் காணமுடியவில்லை. அதை அவளுடைய கசப்பான வார்த்தைகளே வெளிப்படுத்திற்று. ஆனால் தேவனுடைய சித்தம் அல்லாத மோவாபை விட்டு, தேவனுடைய சித்தமான பெத்லெகேமுக்குள் அவர்கள் நுழைந்தவுடன் அவள் கண்களுக்கு எந்த மாற்றமுமே தெரியவில்லை. அவளுடைய நீண்டகாலத் துயரம் அவளைத் தொடருவதைப் போலத்தான் இருந்தது.  ஆனால் இன்றைய வசனம் கூறுகிறது அவர்கள் வாற்கோதுமை அறுவடை செய்யும் காலத்தில் வந்தனர் என்று. நகோமி தன்னுடைய வாழ்க்கையில் இருளையே பார்த்துக்கொண்டிருந்தபோது தேவனாகிய கர்த்தர் அவளுக்காக யாவற்றையும் செய்து முடித்துக்கொண்டிருந்தார். அவள் வாற்கோதுமையின் அறுவடை காலத்தில் ஆசீர்வாதம் பெறுவதற்காக அவர் விதைத்து, உரமிட்டு, அறுவடைக்கு ஆயத்தம் பண்ணிக்கொண்டிருந்தார்.

என்னுடைய சிறு வயதில் சென்னையிலிருந்து, மும்பைக்கு ரயிலில் பயணம் செய்த போது  நீண்ட இருளான குகை ஒன்றுக்குள் ரயில் சென்றபோது , எங்கும் ஒரே இருள் காணப்பட்டது, நான் பயத்தால் என் கண்களை இறுக மூடிக்கொண்டேன். நம்மில் பலர் , இன்று நீண்ட குகை போன்ற துன்பங்களின் வழியாய் நடந்து கொண்டிருக்கலாம். எங்குமே இருள், என் வாழ்வில் ஒளியே வராது போலிருக்கிறது என்று மனம் சோர்ந்து போய், பயத்தால் கண்களை மூடிக்கொண்டிருக்கலாம்.

பயப்படாதே! கர்த்தர் உன்  இருண்ட வாழ்வில் கிரியை செய்து கொண்டிருக்கிறார். ஒருவேளை கர்த்தரின் கிரியை இன்று நமக்குக் கண்கூடாகத் தெரியாமல் இருக்கலாம், ஆதலால் கர்த்தர் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று நாம் நினைக்கக்கூடாது. கர்த்தர் உனக்காக கிரியை செய்து கொண்டிருக்கிறார்! வெகுசீக்கிரம் நகோமியின் செவிகளில் விழுந்த அறுவடையின் சத்தம் உன் காதுகளிலும் கேட்கும்!

நாளைய தினத்திலிருந்து  சில  வாரங்கள் நாம் 2, 3 அதிகாரங்களை  படிக்கப் போகிறோம்.  சகோதரி கோரி டென் பூம் கூறியது போல, கர்த்தருடைய சித்தத்துக்குள் அடங்கியிருப்பதே நமக்கு பாதுகாப்பு என்ற உண்மையை நகோமியின் வாழ்க்கையும், ரூத்தின் வாழ்க்கையும் நமக்கு நினைப்பூட்டுகின்றன. இவை நம்முடைய வாழ்வில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய உண்மையும் கூட!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 529 ஓர்பாள் எடுத்த முடிவு தவறா?

ரூத்: 1: 6  “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,

ரூத்: 1: 7      தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில்,  “

ரூத்: 1: 8   நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக.

ரூத்: 1: 9  கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது அவளைப் பார்த்து;

ரூத்: 1: 10  உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்றார்கள்.

ரூத்: 1: 11 அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என்  கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?

ரூத்: 1: 12 என் மக்களே திரும்பிப்போங்கள்;

இன்று நாம் நகோமியின்  மருமகளாகிய ஒர்பாளைப் பற்றிப் படிக்கப் போகிறோம். ஒர்பாள் மோவாபிலிருந்த தன் குடும்பத்துக்கு திரும்பி சென்று விட்டதால் அவளை நாம் எப்பொழுதுமே உலகத்தைத் தெரிந்து கொண்ட ஒரு பெண்ணாகவே பார்க்கிறோம்.

பல வருடங்களாக நான் கூட ஒர்பாள் தவறான முடிவை எடுத்ததாகவும், ரூத் சரியான முடிவை எடுத்ததாகவுமே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த முறை ராஜாவின் மலர்களுக்காக நான் ரூத் புத்தகத்தை படித்த போதுதான் ஒர்பாளை நான் தவறாக நியாயம் தீர்த்து விட்டேனோ என்ற எண்ணம் வந்தது.

ஒர்பாள் மோவாபுக்குத் திரும்பிப் போக முடிவு எடுத்ததற்குக்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளவே நான் இன்று பல வசனங்களை குறிப்பிட்டுள்ளேன்.

முதலில் நகோமி மோவாபைவிட்டு யூதேயாவுக்கு செல்ல முடிவு செய்தவுடனே அவளுடைய இரண்டு மருமக்களும் அவளோடே எழுந்து புறப்பட்டனர் என்று பார்க்கிறோம். யாரும் அவர்கள் இருவரையும் மாமியாரோடு கூட செல்ல வேண்டும் என்றக் கட்டளையைப் போடவில்லை. அதுமட்டுமல்ல அவர்கள் இருவரும் சிறு பிள்ளைகளும் அல்ல. இருவரும் தானாகவே முடிவு எடுத்து மாமியாரைப் பின் தொடர்ந்தனர்.

இரண்டாவதாக நகோமி தன் மருமக்களைப் பார்த்து உறுதியானக் குரலில்  நீங்கள் திரும்பி உங்கள் தாய்வீட்டுக்கு போங்கள் என்றுக் கூறுவதைப் பார்க்கிறோம். யோசித்து முடிவு செய்யுங்கள் என்றோ, நீங்கள் திரும்பிவிட்டால் நல்லது என்று நினைக்கிறேன் என்றோ அவள் சொல்லவில்லை. திட்டமாகத் திரும்பும்படிக் கட்டளைக் கொடுக்கிறாள்.

அதுமட்டுமல்ல நகோமி அவர்களை  நோக்கி கர்த்தர் உங்களை சுகமாய் வாழ்ந்திருக்க செய்வாராக என்று ஆசீர்வதித்து திரும்பிப் போக சொல்வதையும் பார்க்கிறோம். நிறைந்த மனதுடன் நாம் நம் பிள்ளைகளை ஆசீர்வதிப்பது போல அவர்களை ஆசீர்வதித்து வழியனுப்புகிறாள்.

நான்காவதாக இதைக்கேட்ட ஒர்பாள் சந்தோஷத்தால் மகிழ்ந்து துள்ளி எழுந்து அம்மா வீட்டுக்கு புறப்பட்டு போகத் தயாராகவில்லை. அவளும், ரூத்தும் மனவேதனைத் தாங்காமல் சத்தமாய் அழுதனர் என்று பார்க்கிறோம்.

அப்படியாக அழுது புலம்பி, ஒருவரையொருவர் முத்தமிட்ட பின்னரும் அவர்கள் நகோமியைப் பிரிய மனதில்லை. ஒர்பாளும் ரூத்தைப் போலவே ஒரே மனதாக  உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்பதைப் பார்க்கிறோம்.

கடைசியாக நகோமி அவர்களைப் பார்த்து  நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என்  கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ? என்பதைப் பார்க்கிறோம். அவள் ஒர்பாளும், ரூத்தும் சந்தோஷமாகத் திருமணம் செய்து வாழ வேண்டுமென்று மனதார விரும்பினாள். தனக்கு இன்னும் இரண்டு பிள்ளைகள் இருந்திருந்தால் அவர்களை ஒர்பாளுக்கும், ரூத்துக்கும்தான் மணம் முடித்துக் கொடுத்திருப்பாள். அவ்வளவு அருமையான பிள்ளைகள் அவளுடைய மருமக்கள் இருவரும்.

இதை வாசிக்கும்போது ஒர்பாளைப் பற்றி என்ன தோன்றுகிறது? அவள் ஒரு புறஜாதிப் பெண், தன் மாமியாரை விட்டு விட்டு உலகத்தை நோக்கி சென்றுவிட்டாள் என்றா தோன்றுகிறது? தன் மாமியாரை இவ்வளவுதூரம் நேசித்தவள், எல்லா இழப்புகளின் மத்தியிலும் தன் கணவனின்  குடும்பத்துக்கு உறுதுணையாயிருந்தவள் ஒரு நொடியில் பொல்லாதவளாய் மாறிவிடுவாளா?

ஒர்பாளும் ரூத்தைப் போலவே தன்னுடைய வாழ்க்கையை நகோமியின் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்புவித்திருந்தாள் என்றுதான் தோன்றுகிறது. நகோமிதான் ஒரு நல்லத் தாயின் ஸ்தானத்தில் இருந்து ஒர்பாளைத் திருப்பி அனுப்புகிறாள் என்பதை நாம் மறந்து போக வேண்டாம்.

நாளைய தினத்தில்  இந்தத் தோட்டத்துக்கு வாருங்கள்! தேவனாகிய கர்த்தர் ஒர்பாளுக்கு மோவாபிலே என்னத் திட்டத்தை வைத்திருந்திருப்பார் என்று  சற்று சிந்திக்கலாம்!

ஒர்பாளை மோவாபிலும், ரூத்தை யூதேயாவிலும் வைத்து தம்முடைய சித்தத்தை நிறைவேற்றிய தேவன் இன்று உன்னை இந்தியாவிலோ, சவுதி அரேபியாவிலோ, கனடாவிலோ, அமெரிக்காவிலோ, மலேசியாவிலோ, ரஷ்யாவிலோ வைத்திருக்கலாம்! நாம் வாழும் இடத்திலே தேவனுடைய சித்தம் நிறைவேற வேண்டியதிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்! 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 526 நறுமணம் வீசிய மலர்!

ரூத்: 1: 7     (நகோமி)  தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில்,  “

இன்று நான் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தபோது பின்வரும்  வாசகங்கள் தான் நினைவுக்கு வந்தன!

“நாம் வாழும் வாழ்க்கை நாம் பிரசிங்கிக்கிற  சிறந்த பிரசங்கம் போன்றது! 

நம்முடைய வாழ்க்கையின் மூலமாக நாம் என்ன செய்தியை பரப்புகிறோம்!

நாம் வார்த்தைகளால் பிரசிங்கிப்பதை ஒருவேளை நம்மை சுற்றியுள்ள மக்கள் விசுவாசியாமல் போகலாம், ஆனால் வாழ்க்கையினால் பிரசிங்கிப்பதை நிச்சயமாக விசுவாசிப்பார்கள்! “

ஒரு நிமிடம் என்னோடு கூட நகோமியின் வாழ்க்கையை சிந்தித்துப் பாருங்கள்.

முதலாவதாக, நகோமியின் மகன் இருவரும் யூதகுலத்துப் பெண்களை மணக்கவில்லை. அவர்கள் மணந்தது புறஜாதியினர் என்று யூதரால் ஒதுக்கப்பட்ட மோவாபியப் பெண்கள். இன்றைய முறையில் சொல்வோமானால் அவர்கள் இருவரும் அவிசுவாசிகள்

தெரிந்து கொள்ளப்பட்ட ஜனத்தையும், கோத்திரத்தையும் சேராதவர்களை பெத்லேகேம் ஊரார் ஒருவேளை ஒதுக்கி வைத்து விடலாம். ஆனால் நகோமி தன் மருமக்களை நோக்கி பெத்லெகேமுக்கு போகலாம் என்றவுடனே அவர்கள் இருவரும் அவள் சொல்லுக்கு கீழ்ப்படிந்தனர் என்று பார்க்கிறோம்.

இந்த இரண்டு இளம் பெண்களின் வாழ்க்கையிலும் இது எத்தனை முக்கியமான முடிவு என்று பாருங்கள்! அவர்கள் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு, தங்கள் உறவினரை விட்டு, நண்பர்களை விட்டு, தங்களுடைய பண்பாடுகளையும், பாரம்பரியங்களையும் விட்டு, முன் பின் தெரியாத யூதருடைய நாட்டுக்கு, மோவாபியராகியத்  தங்களைப் புறஜாதியார் என்று கீழ்த்தரமாய் நோக்குகிற மக்களண்டைக்கு போகப் புறப்பட்டனர்.

இந்த முடிவை அவர்கள் எப்படி எடுத்தனர்? யாரோ பெரிய ஊழியக்காரரின் பிரசங்கம் மூலம் அவர்கள் அழைக்கப்பட்டார்களா? பெரிய கன்வென்ஷன் கூட்டத்துக்கு போய் கைத்தூக்கி ஒப்புக்கொடுத்தார்களா? இல்லவே இல்லை! தங்களுடைய அருமை மாமியார் நகோமியின் வாழ்க்கையே அவர்களுக்கு பிரசங்கமாய் அமைந்திருந்தது! அவள் பிரதிபலித்த அன்பு, தயவு , பண்பு இவைகள் நிறைந்த வாழ்க்கை, அவர்களை  நகோமியண்டைமட்டும் அல்ல, அவளுடைய தேவனிடத்திலும் கிட்டி சேரச் செய்தது.

சில நேரங்களில்  கிறிஸ்தவர்கள் என்று சொல்பவர்கள், மற்றவர்கள் பாவிகள் நாங்கள் தான் நீதிமான் என்று பேசிவிட்டு பின்னர் அதற்கு எதிர்மாராக வாழ்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவர்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்னால் எப்படி சாட்சியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன்.

ஆனால் நகோமியின் வாழ்க்கை மோவாபியரான தன் மருமக்களுக்கு முன்பு ஒரு பிரசங்கமாகவே அமைந்திருந்தது. அவளுடைய மலர்த் தோட்டத்தில் மலர்கள் இருந்தன! அவற்றில் நறுமணம் இருந்தது! அவள் விதைத்த அன்பு, தயவு என்ற விதைகள் அவளுடைய நன்னடத்தை என்ற நல்ல நிலத்தில் விழுந்து ஒன்று, பத்தும் நூறுமாய் பலன் கொடுத்தன.

அன்பும் தயவும் மற்றவர்களை தன்னிடமாய் இழுக்கும் என்று உணர்ந்திருந்த இந்த மாமியார் மோவாபை விட்டுப் புறப்பட்டு பெத்லெகேமுக்கு திரும்பிய போது தனித்து செல்ல நேரிடவில்லை! அவளுடைய மருமக்கள் அன்பினால் பிணைக்கப்பட்டு அவளோடு புறப்பட்டு சென்றனர்.

இன்று நம்முடைய வாழ்க்கை நம் குடும்பத்தினருக்கு ஒரு பிரசங்கமாக இருக்கிறதா? அல்லது மாய்மாலமாக இருக்கிறதா?

கர்த்தராகிய இயேசுவே நாங்கள் உம்மைப் பிரசங்கிக்க உதவி தாரும் ஆனால் வெறு வார்த்தைகளால் அல்ல எங்கள் வாழ்க்கையின் மூலமாகவும், எங்கள் சாட்சியின் மூலமாகவும்….  என்று ஜெபித்த அன்னை தெரெசாவின் ஜெபம் இன்று நம்முடையதாகட்டும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்