Tag Archive | ரெபேக்காள்

இதழ்: 809 என்ன? முறிந்த உறவை புதுப்பிக்க முடியுமா?

ஆதி:31:13 .. தூணுக்கு அபிஷேகஜ்செய்து , எனக்கு ஒரு பொருத்தனை பண்ணின பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன் நானே, இப்பொழுது நீ எழுந்து, இந்த தேசத்தைவிட்டு புறப்பட்டு உன் இனத்தாரிருக்கிற தேசத்துக்கு திரும்பிப் போ என்றார் என்றான்

பல வருடங்களாக யாக்கோபு , பேராசைக்காரன், லாபானுடைய ஆதிக்கத்துக்கு, கீழே வாழ்ந்தான் என்று பார்த்தோம். கர்த்தர் யாக்கோபின் வாழ்வில் பெரிய திட்டம் வைத்திருந்தார், அவனோ வஞ்சனையும், பொறாமையும், பேராசையும் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான். கர்த்தர் அவனைத்  தான் வாக்குத்தத்தம் பண்ணின கானானுக்கு திரும்பும்படி  கட்டளையிடுகிறார்.

இப்பொழுது நாம் யாக்கோபுடன் சேர்ந்து கானானுக்கு பயணம் செய்வோம். 

அதற்கு முன், ஒரு நிமிடம்! நம்மை யாக்கோபின் இடத்தில் வைத்து பாருங்கள்! யாக்கோபு என்ன எண்ணியிருப்பான் என்று தெரியும்! பதினான்கு வருடங்கள் பேராசைக்காரன் லாபானோடு பாடு பட்டிருக்கிறேன்!  வீட்டிலும் மனைவிமாரோடு  நிம்மதியில்லை, ஒருவருக்கொருவர் பொறாமையிலும், போட்டியிலும் மேலும் மேலும் பிரச்சனைகள் கொடுத்தனர். இப்பொழுது தான் கர்த்தர் கிருபையில் வீட்டில் சிறிது நிம்மதி. ராகேலுக்கு யோசேப்பு பிறந்த பின்னர் தான் சகோதரிகள் மத்தியில் சிறிது போட்டி குறைந்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் கர்த்தர் தரிசனமாகி  பழைய காலத்தை நினைவூட்டுகிறார். ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன்! அவர்களோடு இருந்தது போல என்னோடும்  இருப்பாராம்! நல்லது…..ஆனால்…..என்னை  வீட்டுக்கு திரும்பி போகச் சொல்கிறாரே! அங்கு நான்  ஏசாவை ஏமாற்றி விட்டு, உயிருக்கு பயந்து தானே இங்கு ஓடி வந்தேன்! இப்பொழுது எப்படி அங்கு போவது? ஏசா என்னை  ஏற்றுக் கொள்வானா? மன்னிப்பு கேட்டால் மன்னிப்பானா? அல்லது என்  மனைவிகளை, பிள்ளைகளை அழித்துவிடுவானா?  யாக்கோபின் மனதில்  போராட்டம். கானான் என்ற பெயர் அவனுக்கு இனிமையாகவும், கலக்கமாகவும் இருந்தது, கானானுக்கு செல்வதென்பது ஏசாவோடு ஒப்புரவு ஆகுதல் அல்லவா? 

நம்மில் எத்தனை பேர் இப்படிப்பட்ட நிலையிருக்கிறோம்? கர்த்தர் நம் பாவங்களை மன்னித்திருக்கிறார்,  கர்த்தர் நம்மோடிருக்கிறார், நம்மை வழி நடத்துகிறார், நான் உன்னைக் கைவிடுவதில்லை என்று வாக்கு கொடுத்திருக்கிறார், ஏதோ நிம்மதியாய் ஒவ்வொரு நாளும் நாமுண்டு, நம் வாழ்க்கை உண்டு என்று இருக்கையில், கர்த்தர், நம்மை கடந்த காலத்தை திரும்பி பார்க்க சொல்லி, நாம் துரோகம் செய்த ஒருத்தரோடு, மன்னிப்பு கேட்டு ஒப்புரவு ஆக சொன்னால் என்ன சொல்வீர்கள்? 

யாக்கோபு, இருபது வருடங்களுக்கு முன்பு, யாக்கோபு ஏசாவுக்கு தப்பி ஓடி, லாபானிடம் சரணடைந்தான்! இப்பொழுது லாபானிடம் தப்பி ஏசாவை சந்திக்க வருகிறான்! நம் பாவம் நம்மைத் தொடர்ந்து படிக்கும் என்பதற்கு யாக்கோபு ஒரு சாட்சியல்லவா?  யாக்கோபு தன் தகப்பனையும், சகோதரனையும் ஏமாற்றியதை கர்த்தர் மன்னித்திருக்கலாம், ஆனால், அவன் விதைத்த வினையின் பலனை அறுக்க வேண்டியிருந்தது. 

 யாக்கோபின் கடந்த காலம் கர்த்தருக்கு தெரியும். அவன், தான் கடந்த காலத்தில் செய்த ஒரு தவறோடு காலம் முழுவதும் கழிப்பது அவருக்கு பிரியமானதல்ல. அவன் சகோதரனோடு ஒப்புரவாகுதலே கர்த்தரின் விருப்பம். அவன் இந்த கடினமான பிரயாணத்தை தன் மனைவிமாரோடும், பிள்ளைகளோடும், எறேடுக்கும் போது கர்த்தர் ‘ நான் உன்னோடு இருப்பேன், உன்னைக் கைவிடேன்’  என்று அவனுக்கு வாக்களிக்கிறார். தேவனுடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்த  யாக்கோபின் குடும்பத்தினர் இந்த அற்புதத்தைத்தான்  அனுபவித்தனர்.

இன்று உன் வாழ்வின் கடந்த காலம் என்ன? முறிந்துபோன உறவுகள் உண்டா? பல வருடங்கள் கழிந்து விட்டன! இனி நான் என்ன செய்யட்டும் என்று எண்ணாதே. யாக்கோபின் குடும்பத்தாரைப் போல விசுவாசத்தில் முன்செல். யாக்கோபின் தேவன்  உன்னோடிருப்பார்! 

ஜெபம்:

நல்ல ஆண்டவரே! என் வாழ்வின் கடந்த காலத்தை உமக்கு ஒப்புவிக்கிறேன். நீர் எனக்கு மன்னித்த தவறுகளுக்கு நான் மன்னிப்பு கேட்டு முறிந்த உறவைப் புதுப்பிக்க எனக்கு உதவி தாரும், ஆமென்.

இதழ்: 807 இரத்தத்தை உறியும் அட்டைப் பூச்சி!

 

 ஆதி: 30: 25,26 “ ராகேல் யோசேப்பை பெற்ற பின் , யாக்கோபு லாபானை நோக்கி ; நான் என் ஸ்தானத்திற்க்கும், என் தேசத்துக்கும் போக என்னை அனுப்பிவிடும்.

நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும், என் பிள்ளைகளையும் எனக்கு தாரும், நான் போவேன்; நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.”

புத்திர சுவிகாரத்தை ஏமாற்றி பெற்றதால், தன் சகோதரன் ஏசாவுக்கு பயந்து யாக்கோபு அவன் தாயின் சகோதரனாகிய லாபானிடம் அடைக்கலமானான் என்று படித்தோம். யாக்கோபு தன்னை தேடி வந்த சூழ்நிலையையும், தன் மகள் ராகேல் மீது அவன் கொண்டிருந்த அன்பையும்  நன்கு உபயோகப்படுத்தி சதி மன்னன் லாபான் அவனை, தன்  இரண்டு குமாரத்திகளையும் மணமுடிக்க செய்ததுமல்லாமல், பதினான்கு வருடங்கள் தனக்கு கடினமாக ஊழியம் செய்ய வைத்தான்.

இந்த பதினான்கு வருடங்களும், யாக்கோபின் குடும்பம் தொடர்ந்து பல அல்லல்களுக்கு உள்ளாகியது. ராகேலுக்கு பதிலாய் லேயாளை மணந்தது, லேயாளுக்கு ஒன்று பின்னால் ஒன்றாய் குழந்தைகள் பிறந்த போது, அவன் அருமை மனைவி ராகேல் மலடியாயிருந்ததது, இவற்றினால் குடும்பத்தில் ஏற்பட்ட மன வேதனைகள், சகோதரிகளுக்குள் ஏற்பட்ட பொறாமை இவை யாக்கோபை தன் தகப்பனின்  ஊருக்கு திரும்ப விடாமல் தடுத்தது. 

இந்த இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தர் ராகேல் மேல் இரக்கம் காட்டினார். அவள்  கர்ப்பம் தரித்து யோசேப்பை பெற்றதால், யாக்கோபின் வாழ்வில் ஓர் திருப்பம் ஏற்ப்பட்டது. அவளிடமிருந்த தாழ்வு மனப்பான்மை மறைந்து அவள் சகோதரி மேலிருந்த பொறாமையும் மறைந்து போயிற்று.  குடும்ப சூழ்நிலை கர்த்தருடைய கிருபையால் மாறவே, யாக்கோபு தன் நாட்டுக்கு திரும்ப நினைத்தான். 

யாக்கோபு  லாபானிடம் தன் ஆவலைத்  தெரிவிக்கும் போது மறுபடியும், பேராசை  பிடித்த லாபானைப் பார்க்கிறோம். இத்தனை வருடங்கள் ஒரு அடிமையைப் போல யாக்கோபை நடத்தி வந்த லாபான், இப்பொழுது அவனை இழக்க தயாராக இல்லை. வேதத்தில் பார்ப்போம் லாபான் என்ன கூறுகிறான் என்று. ஆதி:30:27 அப்பொழுது லாபான்; உன் கண்களில் எனக்கு தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.” என்றான்.

என்ன ஆச்சரியம்! தன் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பிரிகிறோம் என்ற வருத்தத்தைக் கொஞ்சம்  கூட காணோம்.  யாக்கோபு போய் விட்டால் தனக்கு  வந்த வருமானம் குறைந்து விடுமே என்ற கவலையும்,  நீ வந்த பின்னர் தானே எனக்கு வியாபாரம் நன்றாக நடந்தது, நீ போய் விட்டால் நான் என்ன செய்வேன்? என்ற ஆதங்கமும்  அவன் குரலில் தெரிந்தது. லாபான் என்கிற அட்டை பூச்சி, யாக்கோபின் இரத்தத்தை உறிஞ்சிய பின்னரும் விட மனதில்லை.

அருமையானவர்களே, லாபான் என்னும் அட்டைப் பூச்சியைப் பற்றி யோசிக்கும் இந்த வேளையில், நம்முடைய வாழ்க்கையை பற்றி சிறிது சிந்திப்போம். எத்தனை முறை நாம் மற்றவர்களை அட்டை போல ஒட்டி கொண்டு  நம்முடைய காரியத்தை சாதித்திருக்கிறோம்! சில பழக்க வழக்கங்கள் நமக்கு சிற்றின்பம் கொடுப்பதால் அதை நாம் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கிறோமல்லவா? நம்மில் எத்தனை பேர் பதவியை, அதிகாரத்தை விட்டு கொடுக்காமல் அட்டையை போல ஓட்டிக் கொண்டிருக்கிறோம்? மற்றவர்களை உறிஞ்சி வாழும் குணம் நமக்கு மட்டும் இல்லையா என்ன?

கடைசியில், லாபான் என்ற பேராசைக்காரனின் பிடியிலிருந்து தப்பிக்க, யாக்கோபின் குடும்பம் இராத்திரியிலே அந்த ஊரை விட்டு ஓட வேண்டியிருந்தது. பேராசைக்காரனின் பிடியில் வாழ்நாளைக் கழிப்பதைவிட தான் செய்த குற்றத்துக்கு தண்டனையை ஏற்றுக்கொண்டு தலை நிமிர்ந்து நிற்பதே  மேல் என்று எண்ணியவனாய்,   கர்த்தர் தன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் வாக்குத்தத்தம் பண்ணின கானானை நோக்கி தன் குடும்பத்தோடு பிரயாணம் பண்ணினான் யாக்கோபு.

ஜெபம்: நல்ல ஆண்டவரே! எந்த சூழ்நிலையிலும் நான் என் சுய நலத்துக்காக மற்றவர்களை பணயமாக வைக்காதபடி என்னைக் காத்துக்கொள்ளும்.  ஆமென்!

இதழ்: 805 தற்செயலாய் நடந்ததா? கர்த்தருடைய வழிநடத்துதலா?

ஆதி: 29: 9-11 “ அவர்களோடே அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே , தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஒட்டிக்கொண்டு வந்தாள்.

யாக்கோபு தன் தாயின் சகோதரனாகிய லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருக்கிற கல்லைப் புரட்டி தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான்.

பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ் செய்து, சத்தமிட்டு அழுது..”

நாம் தாவீதை தேவனாகிய கர்த்தர் ஏன் நேசித்தார் என்ற தலைப்பைத் தொடருமுன் சற்று நாட்கள் ஆதியாகமத்தில் நடந்த சில சம்பவங்களைக் காணலாம்!

இதற்கு  முன் ரெபெக்காள் தண்ணீர் மொள்ள வந்த போது,  ஆபிரகாமின் ஊழியக்காரனைக் கண்டு ,அவனுக்கும் அவன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள் என்று படித்த ஞாபகம் உண்டு அ ல்லவா?

இப்பொழுது கடிகார முள்ளை சற்று தள்ளி வைப்போம். மறுபடியும், அதே போல ஒரு சம்பவம் நடக்கிறது.

 யாக்கோபு 500 மைல் தூரம் பிரயாணம் பண்ணி கீழ்த்திசையான தேசத்துக்கு வந்து சேருகிறான். அங்கே ஒரு கிணற்றையும், ஆட்டு மந்தைகளையும், மேய்ப்பவர்களையும், கண்டு, அவர்கள் எவ்வூரார் என்று கேட்க அவர்கள் தாம் ஆரான் ஊரார், என்றவுடன் அவன் உள்ளம் சந்தோஷத்தால் நிறைந்தது. ரெபெக்காள் எத்தனை முறை இந்த ஊரையும், தான் வளர்ந்த தன் வீட்டையும் பற்றி அவனிடம் கூறியிறுப்பாள்! இன்னும் ஒரு சந்தோஷம் அவனுக்கு காத்திருந்தது! அவன் தாய் தண்ணீர் குடத்தோடு கிணற்றண்டை வந்ததுபோலவே, அவன் தாயின் சகோதரனாகிய லாபானின் மகள் ராகேல் கிணற்றண்டை வருகிறாள்.  வேதம் கூறுகிறது அவளும் ரெபெக்காளைப் போலவே மிகுந்த அழகுள்ளவள் என்று. 

நீண்ட பிரயாணத்தினாலும், தாயை பிரிந்த சோகத்தினாலும், களைத்து இருந்த யாக்கோபு , ராகேலைக் கண்டவுடன் உணர்ச்சிவசப்பட்டு, அவளை முத்தஞ்செய்து சத்தமாக அழுகிறான். வேத வசனங்களை மறுபடியும் பாருங்கள்! ‘ தன் தாயின் சகோதரனாகிய என்ற வார்த்தை மூன்று முறை வருகிறது.  அந்த இடத்தில் அவன் நினைவுக்கு வந்ததெல்லாம் அவன் தாய் தான்.  ரெபெக்காளை நினைவு கூர்ந்து உள்ளம் உடைந்து அழுகிறான்.

ரெபெக்காள் கிணற்றண்டை வந்ததும், ஆபிரகாமுடைய வேலைக்காரன் அவளை சந்தித்ததும், ராகேல் கிணற்றண்டை வந்ததும், யாக்கோபு அங்கே அவளை சந்தித்ததும்……எப்படி தோன்றுகிறது? தற்செயலாய் நடந்த சம்பவங்கள் என்று உலகத்தார் சொல்லலாம். ஆனால் ஒரு விசுவாசியின் வாழ்க்கையில், தற்செயலாய் எதுவுமே நடை பெறுவதில்லை. தேவனுடைய கரம்  மறைமுகமாய்  தன் பிள்ளைகளை வழிநடத்துகிறது. ஆபிரகாமுடைய வேலைக்காரன் தேவனுடைய வழிநடத்துதலுக்காக ஜெபித்தான், யாக்கோபு வழி நெடுக ஜெபித்துக் கொண்டே சென்றிருப்பான்.  

அதுமட்டுமல்ல!  யாக்கோபு, ராகேலை நேசித்தான் என்று ஆதி:29:18 ல் வாசிக்கிறோம். ஆதி: 29:20, 21  கூறுகிறது அவன் ராகேலை மணக்க ஏழு வருடங்கள் லாபானுக்கு வேலை செய்தான், அவள் மேல் இருந்த பிரியத்தினாலே எந்த ஏழு வருஷங்கள் அவனுக்கு கொஞ்சநாட்களாய் தோன்றிற்று என்று.

இன்று பெரும்பாலான நம் வாலிபர்களும், பெற்றோரும் திருமண காரியங்கள் தாமதமின்றி நடைபெற வேண்டுமென்று நினைக்கிறோமே தவிர கர்த்தருடைய வழி நடத்துதலுக்காக காத்திருப்பதில்லை. அதனால் தான் பலருடைய திருமண வாழ்க்கை சோகத்தில் முடிகிறது.

கர்த்தருடைய வழி நடத்துதலுக்காக ஜெபிப்பாயானால், அவர் உன்னை கரம் பிடித்து வழிநடத்துவார்! 

ரெபெக்காள் ஆபிரகாமின் ஊழியக்காரனை சந்தித்தது போல…..

ராகேல் யாக்கோபை சந்தித்தது போல…..

ரூத், போவாசுடைய வயல்வெளியில், அவனை சந்தித்தது போல….

கர்த்தருடைய மறைமுகமான வழி நடத்துதலுக்கு பொறுமையாய் காத்திரு!

ஜெபம்:

ஆண்டவரே! உம்முடைய வழிநடத்துதலுக்கு, நான் பொறுமையாய் காத்திருக்க உதவி தாரும். ரெபெக்காளை, ராகேலை, ரூத்தை போல என்னையும் வழி நடத்தும்.  ஆமென்!