Tag Archive | லூக்கா 7

இதழ்: 787 ஒரு தாயின் இரக்கம்!

2 சாமுவேல் 14: 5 -8 ராஜா  அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு அவள்: நான் விதவையானவள். என் புருஷன் சென்று போனான். உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்று போட்டான். வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரனைக் கொன்றுபோட்டவனை ஒப்பி, அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம். சுதந்தரவாளனாயினும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள்.இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின்மேல் வைக்காதபடிக்கு எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள். ராஜா அந்த ஸ்திரீயைப் பார்த்து: நீ உன் வீட்டுக்குப்போ. உன் காரியத்தைக் குறித்து உத்தரவு கொடுப்பேன் என்றான்.

இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் பார்க்கும் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஸ்திரீ, விதவையின் கோலம் பூண்டு ராஜாவிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள். ராஜாவே என்னை ரட்சியும் என்ற நேரடி வேண்டுகோள் அது!

இந்தப் பெண்ணுடைய வேண்டுகோளைக் கேட்ட தாவீதின் உள்ளம் உருகிற்று. தன்னுடைய குமாரரில் ஒருவன் மற்றொருவனைக் கொன்றதை அவள் துயரத்தோடும், இரக்கத்தோடும் விளக்குகிறாள்.  இழந்த குமாரனுக்கான துயர் அவள் வார்த்தைகளில் தொனித்தது. ஆனாலும் விதைவையாகக் காணப்பட்ட அவள் குரலில் உயிரோடிருக்கும் குமாரன்மேல் இரக்கம் தொனித்தது.

இதைக்கேட்ட தாவீதுக்கு தன்னுடைய குமாரனாகிய உயிர் இழந்த அம்னோனையும், உயிரோடிருக்கும் அப்சலோமையும்தான் நினைவு படுத்திற்று. ஒருவேளை தான் பாவம் செய்து படுகுழியில் விழுந்தபோது தன்மேல் கோபம் கொண்டு தன்னை அழித்து விடாமல் இரக்கம் காட்டிய தன்னுடைய பரமபிதாவையும் கூட நினைவுகூர்ந்திருப்பான்.

ஆனாலும் ஆண்டவரே நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன் ( சங்:86:15)

என்று கூறியது நம்முடைய தாவீதுதானே!  கர்த்தருடைய இரக்கத்தையும், நீடிய பொறுமையையும் அறிந்திருந்தான்.

இந்த இடத்தில் இரண்டு இரக்கமுள்ள இருதயங்கள் ஒன்று சேர்ந்தன! ஒன்று விதவையின் கோலத்தில் வந்த புத்தியுள்ள ஸ்திரீ, மற்றொன்று குடும்பத்தில் ஒரு குமாரன் அடுத்தவனைக் கொன்றதால் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து மனுடைந்து இருந்த தாவீது  ராஜா.

தெக்கோவாவிலிருந்து வந்த புத்தியுள்ள ஸ்திரீ தன்னுடைய ஞானத்தாலும், குரலாலும், வார்த்தைகளாலும் மட்டுமல்ல உயிரோடு இருக்கும் குமாரனுக்காக பரிதபிக்கும் இரக்கமுள்ள ஒரு விதவையாகவும் தாவீதிடம் பேசி அவனுக்குள் புதைந்து இருந்த இரக்கத்தை தட்டி எழுப்புகிறாள்.

என்னைப்பொறுத்தவரை இந்த தெக்கோவாவின் புத்தியுள்ள ஸ்திரீ எத்தனையோ முறைகளைக் கையாண்டு தாவீதிடம் அணுகியிருக்கலாம். ஆனால் அவள் ஒரு இரக்கமுள்ள, இளகிய மனமுள்ள ஒரு தாயாக தாவீதை அணுகி, அதே இரக்கத்தையும் இளகிய மனதையும் கொண்டத் தகப்பனாகிய தாவீதின் மனதைத் தட்டுகிறாள்!

கர்த்தராகிய இயேசு இவ்விதமாக நாயீன் என்ற ஊரில் உள்ள ஒரு விதவையை சந்தித்து, அவள் மேல் மனதுருகி,  அவளுடைய இறந்து போன ஒரே குமாரனை உயிரோடு எழுப்பி அவள் மேல் இரக்கம் காட்டினார் என்று நாம் வேதத்தில் லூக்கா 7 ல் வாசிக்கிறோம்.

என்னுடைய வாழ்க்கையில் கூட நான் பல நேரங்களில் சற்று இரக்கத்தைக் காட்டியிருந்தால் எவ்வளவோ காயங்கள் குணமாகியிருக்குமோ என்று நினைப்பேன்! தேவனாகிய கர்த்தர் நம்மேல் மனதுருகும் தேவனாயிருப்பதால் அவருடைய பிள்ளைகளான நாமும் மனதுருக்கமும், இரக்கமும் உள்ளவர்களாய் வாழ வேண்டும்.

கர்த்தரிடம் இரக்கம் பெற்ற நாம் நிச்சயமாக இரக்கம் காட்ட வேண்டும்!

கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தைகளின் மூலம் நம்மை ஆசீர்வதித்து அவருடைய குணமாகிய இரக்கத்தை நாம் மற்றவருக்கு காட்ட நமக்கு உதவுவாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

இதழ்: 674 எதிர்பார்த்தல் 1: உண்மை

சங்: 34:8  கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த வாரம் நான்கு எதிர்பார்ப்புக்ளைப் பற்றிப்படிக்கப்போவதாக சொல்லியிருந்தேன்.

உங்களிடம் ஒரு கேள்வி!  யாருடனாவது பழகும்போது அவர் மிகவும் நல்லவராகவும், மனதுக்கு  பிடித்தவராகவும் இருந்து, பின்னால் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு  முற்றிலும் மாறான  குணம் படைத்தவர் என்று தெரிய வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நம்முடைய  வாழ்வில் மறுபடியும் மறுபடியும் பார்த்தவுடன் நல்லவர் என்று நம்ப வைக்கக்கூடிய பலரை கடந்து வருகிறோம்.  அவர்கள் நல்லவர்களைப் போலக் காணப்படலாம், பேசவும் செய்யலாம்.  நாம் அதில் மயங்கி அவர்கள் வலையில் விழுந்து விடுவோம். அதன் பின் என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு சம்பவத்தின்போது நாம் சுத்தமாக எதிர்பார்க்காத ஒரு காரியத்தை அவர் செய்யும்போதுதான் நாம் ஏமாந்துவிட்டோம் என்று புரியும்.

வேதத்தில் நான் வாசித்த ஒரு சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. லூக்கா 7 ம் அதிகாரத்தில், யோவான்  தன்னுடைய சீஷர்களை இயேசுவினிடத்தில் அனுப்பி, வருகிறவர் நீர்தானா? அல்லது இன்னொருவர் வர காத்திருக்க வேண்டுமா என்று கேட்கும்படி சொல்லி அனுப்பினார். அந்த வேளையில் இயேசு அநேக அற்புதங்களை செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர்களை நோக்கி, நீங்கள் போய் கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள் என்றார்.

இதற்கு அர்த்தம் என்ன? நீர் உண்மையாகவே மேசியாவா? உம்மை நம்பலாமா என்ற அவர்களுடைய கேள்விக்கு அவர், ஆம்!, நான் தான்! என்று கூறாமல் அவர்களைத் தம்முடன் தங்க வைத்து, தம்முடைய அற்புதங்களை அவர்களைக் காண செய்து, நீங்கள் கண்டவைகளையும், கேட்டவைகளையும் விசுவாசித்தவைகளையும் பற்றி சொல்லுங்கள் என்றார்.

கர்த்தர் நம்மிடம் கூட, நான் நல்லவர், நான் உண்மையானவர், நான், நான், நான் என்று கூறுவதே இல்லை! அதற்கு மாறாக அவர்,  கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்  என்கிறார்.

நான் சிறிய வயதில் எதையும் சாப்பிட ரொம்ப கஷ்டப்படுவேன். அப்பொழுது என்னுடைய அம்மா ஒன்று மட்டும் கூறுவார்கள்.  முன்னால் வைக்கும் சாப்பாட்டில் ஒரு பிடி மட்டும் சாப்பிட வேண்டும். ஒருவேளை அந்த ருசி எனக்கு பிடிக்கவில்லையானால் அதை விட்டு விடலாம். ஆனால் அந்த ஒரு பிடி மட்டும் கட்டாயம் சாப்பிட வேண்டும்! சாப்பிடுவதா இல்லையா என்று முடிவு எடுக்கும் முன் அந்த சாப்பாட்டை ருசி பார்க்க வேண்டும்.

ஒருவேளை நல்லவர் என்று நம்பிய ஒருவர் உன்னைக் கைவிட்டதால் இன்று உன்னால் கர்த்தரைக்கூட நம்ப முடியாத நிலையில் நீ இருக்கலாம். ஒரு நிமிஷம்! கர்த்தரை நீ ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!

நீ நம்பிய ஒருவர் உன்னுடைய எதிர்பார்ப்புகளை உடைத்து, தன்னுடைய உண்மையில்லா குணத்தினாலும், பொய்யினாலும், துரோகத்தினாலும் உன்னுடைய நம்பிக்கையை உடைத்தெரிந்திருக்கலாம்! அதனால் இன்று நீ மிகுந்த கசப்புடன் உன் பரலோகப் பிதாவைக்கூட நம்ப முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம்! ஒரு நிமிஷம்! கர்த்தரை நீ ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!

நீ ஒருவேளை உண்மையாக நம்பக்கூடிய ஒரு கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாயா? ஒரு நிமிஷம்! கர்த்தராகிய இயேசுவை ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்