1 சாமுவேல் 19: 19,20 தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது சவுல் தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான். அப்பொழுது அவரகள் தீர்க்கதரிசனம் சொல்கிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள். அப்பொழுது சவுலினுடைய சேவகரின்மேல்; தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
வேதத்தில் உள்ள சில கதைகள் நம் எல்லோருடைய மனதிலும் நின்றுவிடுகிறது. தானியேல் சிங்கத்தின் கெபியில் இருந்ததை மறப்போமா? அல்லது எஸ்தர் ராஜாத்தியின் கதையை மறப்போமா? ஆனால் இன்றைய வசனத்தில் உள்ள அருமையான கதை நம் நினைவில் தங்குவதேயில்லை!
தாவீதைக் காப்பாற்ற அவன் மனைவி மீகாள் ஜன்னல் வழியே இறக்கிவிட்டதைப் பார்த்தோம். ஆவேசமாக இருந்த தன் தகப்பனிடம் அவர் என்னைக் கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தினார் என்று பொய்யும் சொன்னாள். அது சவுலின் மூர்க்கத்தை அதிகரித்தது என்று பார்த்தோம். தாவீது எங்கேயிருக்கிறான் என்று உடனே கண்டுபிடிக்கக் கட்டளை கொடுத்தான்.
சவுலுக்கு பதில் கொண்டுவந்தனர் அவனுடைய சேவகர்கள்! தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று.
இந்த வேத பகுதியை பல தடவை நான் வாசித்திருந்தும் நான் ஒரு அருமையான காரியத்தை உணராதிருந்தேன். ஆம்! ராமாவிலே சாமுவேல் தீர்க்கதரிசி இருந்தார் என்பதுதான் அது. சாமுவேல் வாழ்ந்த ராமா தீர்க்கதரிசிகளின் பட்டணமாகவே மாறியிருந்தது! தாவீது சவுலின் கோபத்துக்குத் தப்பி ஓடி கர்த்தருடைய பிரசன்னம் குடிகொண்டிருந்த ராமாவிலே அடைக்கலம் புகுந்தான்.
தேவனுடைய வல்லமையை விசுவாசித்த கர்த்தருடைய மனிதர் வாசம்பண்ணிய ராமாவில் தன்னுடைய ஆவிக்குரியத் தகப்பன் சாமுவேலிடம் தங்க ஆரம்பித்தான்.
அதனால் என்ன நடந்தது பாருங்கள்! சவுலுடைய சேவகர்கள் அங்கு வந்தபோது அவர்களும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்! பாலாம் என்ற தீர்க்கதரிசி இஸ்ரவேலரை சபிக்கத் தன் வாயைத் திறந்தபோது அவர்களை சபிக்காமல் ஆசீர்வதித்தது போல தாவீதை சிறைபிடிக்க வந்தவர்கள் தீர்க்கதரிசிகளானார்கள். இது ஒருமுறை மட்டுமல்ல, இரண்டுமுறையல்ல, மூன்றுமுறை நடந்தது!
கடைசியில் தானே வேலையை முடிக்க எண்ணி ராமாவை நோக்கிப் புறப்பட்டான் சவுல். என்ன நடக்கிறது? அவனும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பிக்கிறான். கர்த்தருடைய பிரசன்னம் நிரம்பியிருந்த இடத்தில் தாவீது என்ற கர்த்தருடைய பிள்ளைக்கு தீமை செய்ய நினைத்த சவுல் வல்லமையை இழந்துபோனான்!
இன்று உலகமே உனக்கு எதிராக இருப்பதாக நீ நினைக்கலாம். ஒருவேளை பணப்பிரச்சனையாகவோ, குடும்ப பிரச்ச்னையாகவோ, நோய்வாய்ப் பிரச்சனையாகவோ இருக்கலாம்! எனக்குத் தெரியாது! நீ எங்கேயும் போகமுடியாமல் ஒரு மூலையில் ஒதுங்கியிருக்கலாம்.
இன்று உனக்கு நான் ஒரே ஒரு ஆலோசனை சொல்லட்டுமா? தாவீது ராமாவுக்கு ஓடியதுபோல தேவனுடைய பிரசன்னத்துக்குள் அடைக்கலம் புகுந்து அங்கேயே தரித்திரு!
உன்னை அழிக்கவும், உன்னை சிறைப்பிடிக்கவும், நெருங்கும் எல்லா பிரச்சனைகளும் உன்னை நெருங்க விடாமல் விழுந்துபோவதை உன் கண்கள் காணும்! தேவனுடைய பிரசன்னத்தில் சர்வ வல்லவரின் வல்லமையினால் மூடப்பட்ட உன்னை உன் சத்துரு நெருங்கவே முடியாது.
தாவீதைக் கொல்ல வந்தவர்கள் தீர்க்கதரிசிகளாகிய கதையை ஒருக்காலும் மறந்து போகாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்