Tag Archive | 1 சாமுவேல் 25

இதழ்: 637 பகையை மாற்றிய அன்பின் விருந்து!

1 சாமுவேல்: 25:18  அபொழுது அபிகாயில்  தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளைதும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருனூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து கழுதைகள் மேல் ஏற்றி

அபிகாயில் என்ற இந்த அழகும், அறிவும் வாய்ந்த பெண் தன்னுடைய  ஊழியக்காரன் தன்னிடம் கூறிய வார்த்தைகளை எடை போட்டு, தன்னுடைய கணவன் நாபாலின் புத்திகெட்ட செயலால் விளையப்போகும் தீங்கை உணர்ந்து சற்றும் தாமதியாமல் செயலில் இறங்குகிறாள் என்று இன்றைய வேத பாகம் குறிக்கிறது.

அவள் தன்னுடைய ஊழியக்காரரின் உதவியுடன் தாவீதுக்கும் அவனோடிருந்த மனிதருக்கும்  பெரிய விருந்து பண்ணுவதைப் பார்க்கிறோம். ஆம் மிகப்பெரிய விருந்து! அவள் குடும்பத்தாரோடு தாவீதுக்கு ஏற்பட்ட பகையைத் தீர்க்க அவள் தன்னால் முடிந்த பெரிய விருந்தைப் பண்ணுகிறாள். தாவீது தங்களுக்கு  செய்த தன்னலமற்ற  உதவியை நினைத்து அவள் உள்ளம் நன்றியால் நிரம்பிற்று.

தாவீதும் அவனோடிருந்தவர்களும் பட்டயத்தை அறையில் கட்டிக்கொண்டு நாபாலுக்கு சொந்தமானவைகளை அழிக்க தயாராக இருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!

அபிகாயில் தன்னுடைய தாவீதுக்காக ஆயத்தம் பண்ணின மிகப்பெரிய விருந்துடன் அவனை நோக்கி புறப்படுகிறாள். ஐந்து ஆடுகளை அடித்து சமையல் பண்ணி, இருனூறு அப்பங்களை சுட்டு, ஐந்துபடி பயற்றை வறுத்து, திராட்சை ரசம், திராட்சை வத்தல், அத்திப்பழ அடைகள் என்று வகை வகையான சாப்பாடு!  அவளுடைய இந்தப் பெருந்தன்மையும், பரந்த உள்ளமும் பாராட்டத்தக்கவை தானே! இதை செய்வதற்கு அவளுக்குள் எந்தத் தயக்கமும் இல்லை!

இதைப்படிக்கும் போது எந்தத் தயக்கமும்  இல்லாமல் ஒரு விலை உயர்ந்த பரிமள தைலத்தை  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் ஊற்றி தன்னுடைய நன்றியைத் தெரிவித்த மரியாள்தான் என் ஞாபகத்துக்கு வருகிறாள். அவள் தன் செயலில் காட்டிய நன்றி இன்றும் படிப்போரின் உள்ளங்களைத் தொடுகிறது. அப்படித்தான் அபிகாயிலின் செயலும் தாவீதின் உள்ளத்தைத் தொட்டது. அவன் உள்ளம் மாறியது, அவன் கோபம் தணிந்தது! எல்லாவற்றுக்கும் மேலாக அவனுடைய பட்டயம் கீழே இறங்கியது.

அபிகாயில் போன்ற ஒரு சூழ்நிலை நமக்கு வந்தால் என்ன செய்திருபோம்?

ஒரே ஒரு காரியம் நம் சிந்தனைக்கு!  இன்று எத்தனை மன வருத்தங்கள், கோபம், விரோதம், பழிவாங்குதல் இவற்றை நம் மத்தியில் பார்க்கிறோம்! இவைகள் நம் குடும்பங்களில் மட்டும் அல்ல  திருச்சபைகளையும் விட்டு வைக்கவில்லையே! அபிகாயிலைப் போல ஒரு அன்பின் விருந்து ஒருவேளை சில மன தர்க்கங்களை மாற்றலாம் அல்லவா?  துப்பாக்கி குண்டுகளைப் போல வீசப்பட்ட வார்த்தைகளைக் கூட இந்த அன்பு மாற்றிவிடும்!

நாம் இன்று முயற்சி செய்யலாமே! நம்முடைய குடும்பத்தில், திருச்சபையில் அன்போடு நாம் தாராளமாய் பரிமாறும் செயல் , தாவீது அபிகாயிலைப் பார்த்து கூறியதைப்போல, ‘ உன்னை இன்றையதினம் என்னை சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகியக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ ( 25:32)  என்று நம் பகையை விலக்கலாமே!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Advertisements

இதழ்: 636 கவனித்து செயல்படுதல் புத்திசாலித்தனம்!

1 சாமுவேல் 25: 15 -17   அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள். நாங்கள் வெளியிடங்களில் இருக்கும்போது அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை. நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப் பாரும்.

ஒருவேளை கடவுள் இந்த வேதப்புத்தகத்தை  கட்டுரைகளாக எழுதியிருந்தால் எப்படி அவை மனதில் நின்றிருக்குமோ என்னவோ? ஆனால் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கைகளில் நடந்த நன்மை, தீமை யாவற்றையும் கதையைப்போல  நம் மனதில் நிற்பவைகளாக எழுதியிருக்கிறார்.  அதனால் தான் நாம் வேதத்தில் காணும் அன்றாட வாழ்க்கைக்கானப் பாடங்களை தவறாமல் படித்து, புரிந்து, அவற்றை நம்  மனதில் எழுதிக்கொள்ளவேண்டும். அப்படி செய்வோமானால் அவை நம்மை நல்லவழியில் நடக்க உதவும்.

இங்கு தாவீதின் வாழ்வில் கால்பதித்த அபிகாயிலை ஒரு புத்திசாலியானப் பெண்ணாகப் பார்க்கிறோம். புத்திசாலித்தனத்தில் பலவகை உண்டுதானே!  இந்தப்பெண்ணிடம் நான் கண்டது நடைமுறை புத்திசாலித்தனம்! அவளுடைய ஊழியக்காரன் ஒருவன் வந்து அவள் கணவனாகிய நாபால் தாவீதின் மனுஷரிடம் சீறினான் என்று சொன்னவுடன் அவள் இருக்கையிலிருந்து எழுந்து கண்ட வார்த்தைகளால் நாபாலைத் திட்டவில்லை ! தொடர்ந்து அவன் கூறிய சம்பவங்களை பொறுமையோடு கேட்டாள். ஒரு புத்திசாலியின் அடையாளம்!

அவளுடைய ஊழியக்காரனின் வார்த்தைகளைப் பொறுமையோடு செவிடகொடுத்து கேட்டதால் அபிகாயிலுக்கு தாவீது தமக்கு எந்த தீமையும் செய்யவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது. அவள் கணவன் தாவீதிடம் பொல்லங்கான வார்த்தைகளைப் பேசியது தவறானது என்றும் புரிந்துகொண்டாள்.

தன்னிடம் பேசிய ஊழியக்காரனை அபிகாயில் தெரிந்திருக்கக்கூட வாய்ப்பில்லை. அநேகர் வேலையில் இருப்பார்கள், விசேஷமாக ஆடுகள் மயிர் கத்தரிக்கும் வேளையில் எல்லோரும் அங்கு கூடுவார்கள். அவளுக்கு ஒவ்வொருவரையும் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அதனால் அந்த ஊழியன், திருமதி நாபால் அவர்களே! என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! அதனால் நான் சொல்வதை கொஞ்சம் கவனித்து செயல் படுங்கள்! என்று கூறியிருக்கலாம்.

அபிகாயிலுக்கு அவளுடைய கணவனைப்பற்றி நன்கு தெரியும். அவனுடைய செயல்களில் அவன் துராக்கிருதன் என்று அறிவாள். நாபாலின் குணத்தோடு இந்த ஊழியரின் வார்த்தைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெளிவாகப் புரிந்தது. முழுக்கதையையும் கேட்டு அறிந்து கொண்டாள்!

கவனித்து செயல் படுவது புத்திசாலித்தனம்! இது நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம்! எந்த முக்கிய்மான காரியத்திலும்  பொறுமையாக யோசித்து, கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து செயல்படுவோமானால் தவறான முடிவுக்குள் நாம் செல்ல மாட்டோம்.

இன்னும் ஒருபடி அதிகமாகக் கூறுகிறேன். கர்த்தருடைய வார்த்தையை தியானித்து, படித்து, அவர் நமக்கு வேதத்தின் மூலமாக அளிக்கும் ஞானத்தின் மூலம் செயல் படுவதுவதுதான் நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த புத்திசாலித்தனம்!

நீ செய்யவேண்டிய காரியத்தை கவனித்து, கர்த்தருடைய சமுகத்தில் காத்திருந்து அவருடைய வழிநடத்துதலை அறிந்து செயல்படு! அபிகாயிலைப்போல ஒவ்வொரு காரியத்தையும் சரியாக எடை போட்டு பின்னர் செயல்பட வேண்டும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

இதழ்: 634 ஏன் இந்தக் கோபம்!

1 சாமுவேல் 25: 10-13  நாபால் தாவீதின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தமாக, தாவிது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்?….  நான் என் அப்பத்தையும், தண்ணீரையும் என் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். தாவீதின் வாலிபர் தங்கள் வழியேத் திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது தாவீது தன் மனுஷரைப்பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக் கொள்ளுங்கள் என்றான்…. தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான். ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப் போனார்கள்.

நாபால் ஒரு முட்டாள்த்தனமான பொல்லாத மனிதன் என்று நாம் பார்த்தோம். தாவீது அவனுடைய வேலைக்காரருக்குக் காட்டிய கருணையை அவன் மதிக்கவில்லை என்று இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது.

நாபால்   தாவீதுக்கு அளித்த பதிலைக் கேட்டவுடன் இவன் ஒரு புத்திகெட்டவன், இவனிடமிருந்து என்ன பதிலை எதிர்பார்க்க முடியும் என்ற எண்ணம்தான் நமக்கு வந்திருக்கும். புத்திசாலியான தாவீதும் அப்படி நினைத்து அவனைப் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம். தாவீது ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு இவன் ஒரு ஆளா, இவனைப்போல முட்டாளிடம் நான் தவறாக, என் உதவிக்கு பதிலை எதிர்பார்த்துவிட்டேன் என்று நினைக்காமல் போனதுதான் எனக்குமட்டுமல்ல, உங்களுக்கும்கூட இன்றைய பாடமாக அமைகிறது.

எத்தனையோ முறை நானும்கூட இப்படி நடந்து கொள்வதுண்டு! ஒருவருடைய பொல்லாத குணத்தை நான் நன்கு அறிந்தபின்னும், அவர்கள் என்னைப்பற்றி ஏதாவதுகூறிவிட்டார்கள் என்று கேள்விப்படும்போது உடனே கோபம் வந்துவிடுகிறது.  இந்தக் கோபம் நமக்கு எவ்வளவு கெடுதி தெரியுமா? நமக்கு கோபத்தை வர வைத்ததே அந்த சம்பவத்தைவிட நம்முடைய கோபம் நம்மை கடுமையாக பாதிக்கும்.

தாவீது தன்னுடைய ஊழியக்காரர் தன்னிடம் நாபால் கூறியதைச் சொன்னபோது சற்று அமைதியாக இருந்து, தன்னுடைய ஊழியரையும் அமைதிப்படுத்தியிருக்கலாம். எல்லோருடைய நாவையும் அடக்கியிருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் கர்த்தர் தன்னிடம் எதை விரும்புவார் என்று சற்று எண்ணியிருக்கலாம். அவனுடன்  இருந்த ஊழியரை சமாதானப்படுத்துவற்குப் பதிலாக தாவீது, பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கட்டளைக் கொடுத்தான்.

இதைப்படிக்கும்போது இன்னொரு சம்பவமும் ஞாபகத்துக்கு வந்தது. கர்த்தராகிய இயேசுவைப் பிடிக்கவந்தவர்களைப் பார்த்ததும் பேதுரு பட்டயத்தை உருவினாரே அது தான். ஆனால் நம்முடைய ஆண்டவர் பேதுருவை நோக்கி உன் பட்டயத்தை உறையிலே போடு என்றார் என்பது நமக்குத் தெரியும்.

நாபாலுக்கும் தாவீதுக்கும் நடுவே யாரும் வராதிருந்தால் எத்தனை உயிர்களின் இரத்தம் தரையிலே சிந்தியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நாபால் செய்த காரியத்தை  நிச்சயமாக நான் சரியென்று சொல்லவில்லை!  ஆனால் அதைப்பழிவாங்க தாவீது ஆத்திரத்தில் எடுத்த முடிவுதான் எனக்கு சரியென்றுத் தோன்றவில்லை. நாபாலுக்கு நான் யாரென்று காட்டுகிறேன் என்று தாவீது நினைத்ததுதான் சரியென்றுத் தோன்றவில்லை.

அதேசமயம் தாவீது நாபாலை மன்னிக்க முடிவு எடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும்! அதுதானே தாவீதின் குணம்!  கர்த்தரைக் கேட்காமல் முடிவு எடுக்கமாட்டானே! பட்டயத்தை எடுங்கள் என்று கூறுமுன் சற்று யோசித்திருக்கலாம்!

இந்த சம்பவம் பரலோக தேவன் நாம் தவறிவிடாமல் நம்மைப் பாதுகாக்க, வழிநடத்த நமக்கு அளிக்கும் இன்னொரு பாடம்! தாவீதைப்போல நாம் கோபத்தில் செயல் படாமல் சிந்தித்து செயல்பட வேண்டுமென்பதே கர்த்தருடைய ஆவல்.

யாரோ ஒருவர் கூறியதைப் போல ‘கோபம்வந்தால் பத்துவரை எண்ணுங்கள்! மிகவும் கோபம் வந்துவிட்டால் நூறுவரை எண்ணுங்கள்!’

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 633 நன்றியற்ற நாபால்!

1 சாமுவேல் 25: 5-8 தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப்போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச் சொல்லி, …. இப்பொழுது ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள். அவர்கள் கர்மேலிலிருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை.  அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதுமில்லை.  உம்முடைய வேலைக்காரரைக் கேளும் அவர்கள் உமக்குச் சொல்வார்கள்.

வேதம் இன்றைய வேதாகமப் பகுதியில் தெளிவாக ஒரு விளக்கத்தைக் கொடுக்கிறது. கர்மேலில் ஆடுகளுக்கு மயிர்க்கத்தரிக்கும் நேரம் அது. ஆடுகளுக்கு உணவைத்தேடி வனாந்திரங்களில் அலைந்த நாட்களின் பலனைஇப்பொழுது அனுபவித்துக்கொண்டிருந்தனர். ஆடுகளை மேய்த்த மேய்ப்பர்களும், ஆடுகளின் சொந்தக்காரர்களும் ஒன்றாய்க் கூடியிருக்கும்  காலம் அது,  விருந்தும் கூட இருந்தது.

அதுமட்டுமல்ல அந்த சமயத்தில் நாபாலின் ஆடுகளைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றிய தாவீதுக்கும், அவனோடு சேர்ந்த வாலிபருக்கும் கைமாறு செய்திருக்கவேண்டிய வேண்டும். ஆனால் நாபால் அப்படி செய்யவில்லை. ஆதலால் தாவீது தன்னோடிருந்த பத்து வாலிபரை நாபாலிடம் அனுப்பி தாங்கள் நாபாலின் ஆடுகளைப் பாதுகாத்ததை அவனுக்கு நினைவு படுத்துகிறான்.

நாபால் தான் அவனுக்கு செய்த உதவியை நினைக்காமல் தன்னை உதறியபோது தாவீதின் உள்ளத்தில் ஏற்பட்ட வலியை நான்கூட என் வாழ்க்கையில் அனுபவித்து இருக்கிறேன்.  நான் செய்த உதவிக்கு பதில் செய்யவேண்டும் என்று ஒருநாளும் நான் யாரிடமும்  எதிர்பார்த்ததில்லை, ஆனால் அதற்கு  நன்றியுள்ள இருதயத்தைத்தான் எதிர்பார்த்தேன்.

நாபால் எவ்வளவு முட்டாள், துராகிதன் என்று அறிந்திருந்தால் ஒருவேளை தாவீது தன் உதவிக்குப் பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டான் என்று ஒரு எண்ணம் எனக்குள் வந்தது. ஆனால் தாவீது அவனிடம் தான் செய்த உதவிக்கு கைமாறு எதிர்பார்த்தான்.

ஒரு நிமிஷம்! நாம் நமக்கு உதவி செய்தவர்களை எப்படி நடத்துகிறோம்? அவர்கள் செய்த தயவுக்கு பதிலாக அவர்களுக்கு தயவு செய்கிறோமா அல்லது மறந்தே போய்விட்டோமா? அப்படி மறந்து போயிருப்போமானால் நாமும்கூட நாபாலைப் போல முட்டாள்தான் தான்!

நாளைக்குத் தொடர்ந்து படிப்போம்!  நன்றியை எதிர்பார்த்த தாவீதுக்கு நாபால் அளித்த  புத்தியற்ற  பதில் என்ன விளைவை ஏற்படுத்தியது என்று!  நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒரு காரியம் இது. ஏனெனில் நாம் நம்முடைய ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு நன்றிகெட்ட நாபாலைக் கண்டிப்பாக சந்திப்போம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 632 நாபால் என்னும் முட்டாள்!

1 சாமுவேல்: 25 2-3  மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான். அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது. அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான். அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது….. அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்.

வேதத்தை வாசிக்க வாசிக்கத்தான் நாம் அது எத்தனை அருமையான பொக்கிஷம் என்பதை உணர முடியும்! அது இந்த வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது நான் மிகவும் உணர்ந்தேன். இதை ஒவ்வொருநாளும் நாம் வாசிப்போமானால் எத்தனையோ பொல்லாங்குகளிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளலாம் என்பது சத்தியமான உண்மை!

இன்று இந்த 1 சாமுவேல் 25ம் அதிகாரத்தில் நாம் நாபால் என்ற மனிதனைப் பார்க்கிறோம். நாபாலின் பெயருக்கு முன்னால் அவனுடைய சொத்தின் மதிப்பீடு வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவன் பெரிய பணக்காரன். சமுதாயத்தில் மிகுந்த வல்லமை வாய்ந்தவன். அவனுடைய கால்நடைகளின் எண்ணிக்கைதான் அந்த காலத்தில் அவனுடைய செவத்தின் அறிகுறி.

நாம் யாராவது பணக்காரரைப் பார்த்தால் என்ன நினைப்போம்? ஒருவேளை பரம்பரையாக வந்த சொத்து போல என்று நினைப்போம் அல்லது ஒருவேளை அவர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்ததுபோல என்று நினைப்போம். என்றைக்காவது ஒரு பெரிய பணக்காரரைப் பார்த்து நாம் இவன் ஒரு முட்டாள் என்று நினைத்தது உண்டா?

இந்த நாபாலின் பெயரோடு முட்டாள் என்ற அர்த்தமும் ஒட்டிக்கொண்டு வருகிறது. வேதாகம அகராதியில் நாபால் என்பதற்கு முட்டாள் என்று அர்த்தம்! அவனுக்கு உலக ஆஸ்திகள் எல்லாம் சொந்தமாக இருந்தாலும் ஏதோ ஒரு குறைபாடு இருந்தது!

அவனுடைய முட்டாள்த்தனத்தினால் அவன் நீதிக்குப் பதிலாக அநீதியைத் தெரிந்து கொண்டான். ஏனெனில் வேதம் அவன் முரடனும், துராகிருதனுமாயிருந்தான் என்று 3 ம் வசனத்தில் கூறுகிறது. இதே அதிகாரம் 25 ம் வசனத்தில் நாபாலின் மனைவியாகிய அபிகாயில் அவனை பேலியாளின் மகன் என்கிறாள்.

சங்கீதக்காரனாகிய தாவீது, ‘தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்’ (சங்:14:1) என்று சொல்வதைப் பார்க்கிறோம்.

நாபால் அவனுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் கடவுள் இல்லையென்று அல்லது தனக்குக் கடவுள் வேண்டாம் பணம் மட்டும் போதும், பணத்தைக்கொண்டு எல்லாவற்றையும் சாதிக்க முடியும்  என்று மதிகேடான முடிவு செய்தான்.

எத்தனையோமுறை நானும் என்னால் இதை சாதிக்கமுடியும், யாருடைய துணையும் வேண்டாம் என்று முடிவு எடுத்ததுண்டு என்று ஆவியானவர் இன்று என்னுடன் பேசினார். அந்த முடிவு நாபாலைப்போல என்னையும் முட்டாள் ஆக்கி விட்டது.

நீங்கள் எப்படி?

யாரோ ஒருவர் நீ எதை செய்தாலும் ‘தேவனோடு ஆரம்பி ‘என்று கூறியதைப் படித்திருக்கிறேன். அதோடு சற்று கூடுதலாக எந்தக் காரியத்தையும்  ‘தேவனோடு ஆரம்பி, தேவனோடு நிலைத்திரு, தேவனோடு முடிவு செய்’  என்று என் உள்ளம் இன்று கூறியது!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

இதழ்: 631 வனாந்திரம் ஒரு பயிற்சி முகாம்!

1 சாமுவேல் 25:1,2    சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். தாவீது எழுந்து பாரான் வனாந்திரத்துக்குப் புறப்பட்டுப் போனான்.

மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான். அவனுடையத் தொழில்துறை கர்மேலில் இருந்தது.அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான். அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும், இருந்தது. அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.

நாம் 1 சாமுவேல் 25 ம் அதிகாரத்தைப் படிக்க ஆரம்பிக்கும்போது இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் கூடி சாமுவேலுடைய மரணத்துக்காக துக்கம் கொண்டாடியதைப் பார்க்கிறோம். இஸ்ரவேல் மக்களின் நேசத்துக்குரிய தீர்க்கதரிசி, ஆசாரியன், தன்னுடைய உலகப்பிரகாரமான பணியிலிருந்து விடுபெற்று பரலோகத்தில் ஓய்வளிக்கப்பட்டார்.

இஸ்ரவேல் மக்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள் போலிருந்தனர். ராஜாவாகிய சவுலுக்கோ மக்களை சரியான வழியில் நடத்த  கடவுளின் கிருபையும் ஞானமும் இல்லை.

அதுமட்டுமல்ல!  எதிர்கால ராஜாவாக சாமுவேலால் அபிஷேகம்பண்ணப்பட்ட தாவீது இப்பொழுது எங்கேயிருக்கிறான்? அவன் பாரான் வனாந்திரத்தில் இருந்ததாக இன்றைய வசனம் கூறுகிறது. அவனுடைய திறமை மறக்கப்பட்டது! அவனுடைய தாலந்துகள் உபயோகப்படுத்தப்படவில்லை! அவன் நாட்டிலே இல்லை! காட்டிலே இருந்தான்.

ஆனால் இதுவரை விளங்காத ஒரு புதிரைக் கர்த்தர் நான் இதைப் படிக்கும்போது விளக்கினார். தாவீது இந்த வனாந்திர வாழ்க்கையில் இருந்தபோதுதான் கர்த்தர் அவனுடைய நாட்டைக் காக்க வேண்டியத் திறமைகளை அவனுக்குள் வளர்த்தார். வனாந்திரத்தில் அவன் ஒரு சேனைக்கு எப்படி உத்தரவு கொடுப்பதைக் கற்றுக்கொண்டான், அதுமட்டுமல்ல இஸ்ரவேலை சுற்றியுள்ள நாடுகளின் பலத்தையும் பலவீனத்தையும் கூட அறிந்துகொண்டான்!

எல்லாவற்றுக்கும் மேலாக தாவீது தன்னுடைய நாட்டின் மக்களைக் காப்பாற்றும் ஒரு கருவிபோல இருந்தான். இஸ்ரவேல் நாட்டின் பூகோள அமைப்பு எப்படிப்பட்டதென்றால், அவர்கள் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் எதிரிகள் தாக்கிவிடுவார்கள். அந்த சமயத்தில் தாவீதும் அவனோடு இருந்தக் கூட்டமும் ஒருமனதோடு திட்டம்போட்டு எதிரிகளை ஒடுக்கி அவர்களுடைய ஆடுமாடுகளையும், நிலங்களையும் கைப்பற்றி விடுவார்கள். அதுமாத்திரமல்ல இந்த தாவீதின் சேனை அவர்களுக்கு சொந்தமல்லாத எதையும் தொட மாட்டார்கள் அதனால் அவர்களுக்கு ஜனங்களின் மத்தியில் மதிப்பு பெருகிற்று. சொன்னதை சரிவர செய்து முடிக்கும் தாவீதின் புத்திசாலித்தனம் ஜனங்களை அவன்பால் இழுத்தது.

தாவீதைப் பொறுத்தவரை வனாந்திர வாழ்க்கை வீணான நேரமல்ல!  கர்த்தர் அவனோடு இருந்ததால் அது அவனுக்கு வேலைசெய்யும் நேரமாயிற்று!

நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

ஐயோ நான் தனியாக இருக்கிறேன். எல்லாமே எனக்கு எதிராக இருக்கிறது.என் தாலந்துகள் வீணாய் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை! நான் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று பதில் சொல்லாதே!

நம்மால் முடிந்ததை நாம் செய்துகொண்டிருப்பதுதான் வாழ்க்கையில் வெற்றி தரும். வனாந்திர வாழ்க்கையைக் கண்டு சோர்ந்து போகாதே! அதை உனக்கு சாதகமாக்கிக்கொள்!

கர்த்தர் தாவீதோடு இருந்து, அவனுடைய வனாந்திரத்தை ஒரு பயிற்சி முகாமாக்கியதைப் போல உன்னோடும் இருந்து இந்த வெட்டுக்கிளிகள் அரித்துப் போட்ட நாட்களை உனக்கு ஆசீர்வாதமாக்குவார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்