Tag Archive | 2 சாமுவேல் 11

இதழ் 715 கள்ளத்தனத்துக்கு கூட்டாளி!

2 சாமுவேல் 11:6 அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்.

சில நேரங்களில் நாம் லேசாக தொடும் சிறிய பொருட்களில் நம்முடைய கை ரேகை அச்சு அதிகமாக பதிந்து விடும் அல்லவா? இதன் அர்த்தம் புரிகிறதா?

நான் இன்றைய வசனத்தில் ஒரு எச்சரிக்கை மணி அடிப்பதைப் பார்க்கிறேன். நாம் யாரோடு சேருகிறோம், யாரோடு அதிகமாக இருக்கிறோம் என்பது நமக்கு எவ்வளவு முக்கியம் என்று காட்டுகிறது. கள்ளத்தனத்துக்கு கூட்டாளியாகக் கூடாது.

பத்சேபாள் கர்ப்பம் தரித்ததைக் கேள்விப்பட்டவுடன், தாவீதுக்கு தன்னுடைய பிரச்சனைத்  தெரியும். அவனுடைய கள்ளத்தனத்துக்கு ஒரு கூட்டாளி தேவைப்பட்டது. அவனுடைய பெயர் காப்பாற்றபட வேண்டும். அவனுடைய ராஜ்யம் நிலை நிற்க வேண்டும். அப்படியானால் அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டாளி வேண்டும்.

தாவீது தன்னுடைய சேனைத் தலைவனான யோவாபுக்கு செய்தி அனுப்புகிறான். இங்குதான் கதை சுவாரஸ்யமாகிறது. ஒரு அசுத்தமான கை மற்றொரு அசுத்தமான கைக்கு உதவுவதை நாம் பார்க்க அதிகமாக காத்திருக்க வேண்டாம்.

பல வருடங்களுக்கு முன்பு 1 சாமுவேல் 26 ல், இந்த யோவாபின் சகோதரனான அபிசாய், நித்திரையில் இருந்த சவுலைக் கண்டு அவனைக் கொல்லும்படி தாவீதிடம் கூறுகிறான். ஆனால் அன்று தாவீதுக்கு கர்த்தரைப் பிரியப்படுத்தும் இதயம் இருந்தது. ஆதலால் மறுத்து விட்டான்.

பின்னர் 2 சாமுவேல் 2:8 ல் செருயாவின் மூன்று குமாரரைப் பார்க்கிறோம். அவர்கள் யோவாபும், அபிசாயும், ஆசகேலும் ஆவர். இந்த செருயா தாவீதின் ஒன்றுவிட்ட சகோதரன். அப்படியானால் இந்த மூவருக்கும் தாவீது சிறிய தகப்பன். இவர்கள் மூவரும் சேர்ந்து சவுலின் படைதலைவனான அப்னேரைக் கொலை செய்ததைப் பார்த்தோம்.

இப்பொழுது  தாவீதுக்கு குழப்பமான சூழ்நிலை! அவனுடைய பேரையும், பதவியையும் காப்பாற்ற, அவன் கள்ளத்தனத்தை மறைக்க ஒரு கூட்டாளி வேண்டும்.அதனால் அவன் யோவாபைத் தேடுகிறான்.

ஒருகாலத்தில் தேவனைத் தேடிய அந்த தாவீது இன்று கள்ளத்தனத்தை மறைக்க, இப்படிப்பட்ட காரியத்தை செய்ய கொஞ்சம் கூட கூசாத இன்னொருவனைத்  தேடுகிறான்.

தாவீது தன்னை சுற்றியுள்ளவர்களை தன்வசப்படுத்தும் சக்தி வாய்ந்தவன். அதே சமயம் யோவாபும் அப்படித்தான். தன்னை சுற்றியுள்ளவைகளை தன் கைவசப்படுத்த நன்கு அறிந்தவன்.அவர்கள் ஒருவரையொருவர் நல்ல வழியில் நடக்க உதவாமல், திருட்டுத்தனத்தில் கூட்டு சேர்ந்தனர்.ஆகமொத்தம் இரண்டு பேரும் நற்குணத்தில் திவாலாகி விட்டனர்.

ஒரு நரிக்கூட்டத்தோடு நாம் சேர்ந்து போனால் நாமும் நரி போலத்தானே அலறுவோம்! இன்று நாம் யாரோடு சேர்ந்து கொண்டிருக்கிறோம்?

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 709 ஆற்றல் மிக்க ஆறு அழிக்கும் சக்தியாய் மாறுவது போல!

2 சாமுவேல் 11:  அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார்  என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இமாலய மலையில் உள்ள தரம்சாலா என்ற மலை நகருக்கு சென்றிருந்தோம். அங்கே எங்கள் விமானம் இறங்கியவுடன் என்னுடைய செல் போனில் ஒரு மெசேஜ் வந்தது. அங்கு உள்ள நதிகளின் ஒரங்களில் நடக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை அது. அங்கே நதிக் கரையோரம் சென்ற போதுதான் அந்த எச்சரிக்கையின் அர்த்தம் புரிந்தது.  நதிகளின் ஓரங்களில் பெரிய பெரிய பாறைகள் உருண்டோடி இருந்தன. பார்க்க அமைதியாய் ஓடிக்கொண்டிருந்த அந்த நதிகளில்  எதிர்பாராத வேளையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். பெரிய பாறைகள் உருண்டோடி வரும்.

நம்முடைய வாழ்க்கையும் ஒரு நதிபோல என்று யாரோ ஒருவர் கூறியது நினைவிற்கு வருகிறது. நம்மால் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமான ஒரு சக்தியாகவும் இருக்கமுடியும், மற்றவர்களை அழிக்கும் ஒரு சக்தியாகவும் மாற முடியும்.

தாவீது தன்னுடைய உப்பாரிகையின்மேல் ஓய்வெடுக்கும் வேளையில், குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பார்த்தது மட்டும் அல்லாமல், அவளைப் பற்றி விசாரிக்கவும் ஆள் அனுப்பினான் என்று பார்த்தோம்.

இந்த “விசாரிக்க” என்ற வார்த்தை என்னை சற்று ஆழமாக சிந்திக்க வைத்தது. இந்த வார்த்தை வேதத்தில் பல முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.  1 சாமுவேல் 23:2, தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தான் என்று பார்க்கிறோம். 1 சாமுவேல் 28:6 ல் சவுல் கர்த்தரிடத்தில் விசாரித்தான் என்று பார்க்கிறோம். கர்த்தர் சவுலுக்கு பதிலளிக்காததால், அவனுக்கு  சாதகமாக பதிலளிக்க அஞ்சனம் பார்க்கும் ஒரு ஸ்திரீயை தேடி விசாரிக்க போனான் என்று 1 சாமுவேல் 28:7 சொல்கிறது.

இந்த வசனங்கள் இந்த வார்த்தையின் அர்த்தத்தை எபிரேய மொழியில் தேட வைத்தது. தாவீதும், சவுலும் கர்த்தரிடம் விசாரித்தார்கள் என்பது ‘ ஷாவால்’ என்ற வார்த்தை. அது ஆலோசனை வேண்டுவது என்று அர்த்தம். அவர்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஆலோசனையை வேண்டி சென்றார்கள்.

ஆனால் சவுல் அஞ்சனம் பார்க்கும் ஸ்திரீயிடம் விசாரிக்க சென்றதும், தாவீது பத்சேபாளை குறித்து விசாரிக்க ஆள் அனுப்பினதும் ‘ டாவ்ராஷ்’ என்ற வார்த்தை. இதன் அர்த்தம், ஒருவர் எதையாவது விரும்பி ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்வது.

தாவீதும் சவுலும் கர்த்தரை விசாரித்தபோது அவருடைய ஆலோசனையை விரும்பினர். ஆனால் இங்கோ தாவீதும் சவுலும் ஒரு தாங்கள் அடைய விரும்பிய ஒன்றை அடைய ஒரு குறிப்பிட்ட பாதையில் சென்றனர் என்பது எவ்வளவு உண்மை! தேவனாகிய கர்த்தரை வழிபடுவதைவிட்டு விலகி மனித ஆசைகளை வழிபட ஆரம்பித்தனர்.  தாங்கள் விரும்பியது நடக்க வேண்டும் என்று தாங்கள் தெரிந்து கொண்ட பாதையிலே சென்றனர்.

அமைதியான ஆறு கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடி அழிக்கும் ஆற்றலாக மாறுவது போல அவர்கள் வாழ்க்கை மாறிவிட்டது.

தாவீது பத்சேபாளைப் பற்றி விசாரிக்க ஆள் அனுப்பிய போது எதைக்குறித்து விசாரித்திருப்பான்? அவளைப்பற்றியோ அல்லது அவள் குடும்பத்தை பற்றியோ விசாரித்திருப்பானா?அல்லது அவளை தான் எப்படி அடைய முடியும் என்று விசாரித்திருப்பானா? அவன் விரும்பியதை அடைய முடிவு செய்துதான் விசாரிக்க ஆள் அனுப்பினான்.

நாம் யாரை விசாரிக்கத் தெரிந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியம்! கர்த்தரின் ஆலோசனையையா அல்லது நம்முடைய சரீரத்தின் ஆவல்களை பூர்த்தி செய்யும் காரியத்தையா? வேத வார்த்தைகள் நம்மோடு பேசும் என்று நம்புகிறேன்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 707 பார்க்க அழகாயிருந்தால் ???

2 சாமுவேல் 11:2  அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள்.

ஒரு பெண்ணைப்பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி பாருங்கள்! அந்த முகத்தில் காணும் புன்னகையே வேறாக இருக்கும். யாருக்குத்தான் பிடிக்காது தன்னை ஒருவர் அழகு என்று வர்ணிப்பது.

தாவீதின் அராசாட்சியின் இரண்டாம் பாகத்தை 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் எழுதியவர், பத்சேபாள் வெகு சௌந்தரவதியாயிருந்தாள் என்று எழுதத் தவறவில்லை.

ஒருவேளை அவள் அழகில்லாதவளாய் இருந்திருந்தால் ஒருவேளை தாவீது அவளுக்கு அந்த நாளைக் கொடுத்திருக்கமாட்டானோ என்று நான் நினைத்தது உண்டு.  இந்தக் கேள்வி எனக்கு நாம் எப்படி ஒருவரின் வெளியரங்கத்தைப் பார்த்து உடனே அவரைப் பற்றிய தீர்ப்பை நம் மனதில் எழுதுகிறோம் என்று நினைப்பூட்டியது.

என்னுடைய பள்ளியின் இறுதியாண்டுகளில் நான் ஆடம்பரமாய் உடை உடுத்தியதோ அல்லது நவீனமாய் வாழ்ந்ததோ இல்லை. என்னுடைய ஆடைகள் எனக்குத் தெரிந்தவரை அம்மா தைத்துக் கொடுத்தவை தான். ஒருநாளும் ரெடிமேட் எதுவும் வாங்கியதில்லை. தலை முடி நீளமாக இருந்ததால் நன்றாக பின்னி ரிபன் கட்டிவிடுவேன்.  சினிமாவுக்கோ அல்லது பார்க்குகளுக்கோ நண்பர்களோடு சென்றதில்லை. நான் பார்க்க அழகாக இல்லை என்று நிச்சயமாக சொல்ல மாட்டேன் ஆனால் ஆடம்பரமாய் அலைந்த கூட்டத்தில் நான் சேர்ந்ததில்லை. எனக்கென்று ஒருசில நல்ல தோழிகள் இருந்தனர். நாங்கள் ஒரு தனிப்பட்டவர்களாகவே இருந்தோம்.

சில வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் என்னோடு படித்த ஒரு நண்பனைப் பார்த்தேன். என்னைப்பார்த்தவுடன், ஐயோ அடையாளமே தெரியவில்லை! இப்படி மாறிவிட்டாய் என்றான். எப்படி மாறிவிட்டேன் என்று எனக்கு புரியவில்லை. கட்டுப்பாடான என் உள்ளான வாழ்க்கை என்றுமே மாறியதில்லை!

சென்னையை விட்டு வெளியே படித்துக் கொண்டிருந்ததால் உடை, தலை பின்னல் இவை சற்று மாறியிருந்தது. என்னுடைய வெளிப்புற மாறுதல் அவன் கண்களில் பளிச்சென்று பட்டது போலும்.  இதில் வருந்தக்கூடிய காரியம் என்னவென்றால், தாவீதைப் போலத்தானே நாமும் வெளிப்புறமாய் சற்று அழகாக ஏதாவது தென்பட்டால் நம் கண்களை அகற்றவே மாட்டோம்.

ஏவாள்  பார்த்த கனி பார்வைக்கு அழகாக இருந்தது!  அவள் அதை இச்சித்தாள்!

யோசுவா 7: 20 -21 ல்  ஆகானின் பார்வைக்கு ஒரு பாபிலோனிய சால்வையும்,  வெள்ளிச்சேர்க்கையும், பொன்பாளமும் அழகாய்த் தோன்றின! அவன் அவைகளை இச்சித்தான்.

தாவீது தன் அரமனை உப்பாரிகையின் மேலிருந்து பார்த்த பெண் கண்களுக்கு அழகாக இருந்தாள். அவன் அவளை இச்சித்தான்!

இன்று உன் பார்வையில் எது அல்லது யார் அழகாய்த் தோன்றுகிறார்கள்? யாரை இச்சிக்கிறாய்?  வெளிப்புற தோற்றம் மாயையாக இருக்கலாம்! ஏமாந்துவிடாதே!  இதுதான் தாவீதைத் தவறி விழ செய்தது! பின்னர் சங்கீதங்களை எழுதும்போது, வெளிப்புறமாய்த் தன் கண்களை அலைய விட்ட முட்டாள்த்தனத்தை பற்றி அடிக்கடி அவன் எழுதினான்.

நீயும் முட்டாளாய் இருந்துவிடாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

 

 

இதழ்: 706 ஊக்குவிக்கப்பட்ட சோதனை!

2 சாமுவேல் 11: 2  ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான்.

நம் மத்தியில் அதிகமாக பேசப்படும் தாவீது, பத்சேபாள் என்பவர்களின் கதையை நாம் ஆழமாக படிக்கப்போகிறோம்.

இந்தக் கதையை நாம் தொடருமுன், தேவனாகிய கர்த்தர் ஆதாம் ஏவாளிடம், ஏதேன் தோட்டத்தில் எச்சரித்துக் கூறிய வார்த்தைகளை  பாருங்கள்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும்   புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்  புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று  கட்டளையிட்டார். (ஆதி:2:16,17)

இது ஏதோ சாதாரண எச்சரிக்கை அல்ல!  ஏதோ ஒரு பழத்தை சாப்பிடக்கூடாது என்று!  இது கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கும் எச்சரிக்கை!   எல்லாம் அறிந்த அறிவு என்னும் நச்சுக்கழிவு  நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை அழித்துவிடும் என்ற எச்சரிக்கை. தேவன் தம்முடைய கிருபையால் தம்முடைய பிள்ளைகளை இந்த பொல்லாங்கிலிருந்து விலகியிருக்கும்படி ஞானமாக எச்சரித்தார்.

வேதத்தை முதலில் இருந்து என்னோடு படித்து வருபவர்களுக்குத் தெரியும், தேவன் தம்முடைய பிள்ளைகளை அழிக்க அல்ல பாதுகாக்கவே முயற்சிப்பவர் என்று. பல நேரங்களில் கர்த்தருடைய ஜனம் கீழ்ப்படியாமல் போன வேளையிலும், அவர்களை நியாயம்தீர்த்து தண்டித்து விடாமல், தகுதியே இல்லாத அவர்களுக்கு தன் கிருபையை அளித்து பாதுகாத்தார். இந்த தேவனாகிய கர்த்தரின் இரக்கத்தையும், கிருபையையும் பின்னணியாகக் கொண்டு, நாம் உல்லாசமாய் தன் வீட்டின் உப்பாரிகையின்மேல் தரித்திருந்த தாவீதின் வாழ்க்கையைப் பார்ப்போம்.

எபிரேய வழக்கத்தின்படி இந்த சாயங்கால வேளை என்பது மதிய வேளை. உண்டபின் வரும் சின்ன குட்டித்தூக்கம் முடிந்து எழும்பும் வேளை. தாவீது தன்னுடைய குட்டித் தூக்கம் முடித்து, தன் அரண்மனையின் உப்பாரிகைக்கு செல்கிறான். ஒருவேளை அது எருசலேமின் மிக உயர்ந்த உப்பாரிகையாக இருந்திருக்கலாம். அங்கிருந்து அவன் ஒரு பெண் குளிப்பதைப் பார்க்கிறான்.

ஒருநிமிஷம்!  தாவீது மத்தியான வேளையில் தூங்கியது தவறா? அவன் அங்கிருந்து தன்னுடைய அழகிய மாளிகையின் உச்சிக்கு சென்றது தவறா? அங்கே ஒரு பெண் குளிப்பது அவன் கண்களில் தற்செயலாய்ப் பட்டது தவறா?  இல்லவே இல்லை என்று நான் சொல்கிறேஏன்!

எப்படி ஆதாமும் ஏவாளும் மறுக்கப்பட்ட கனியைக் கண்டதும் அந்த இடத்திலிருந்து ஓடவில்லையோ அதே மாதிரி தாவீதும் ஒரு பெண் குளிப்பதைக் கண்டதும் அங்கிருந்து இறங்கி ஓடி வீட்டுக்குள் செல்லாததுதான் தவறு!

நாம் சோதனையை ஊக்குவிப்பதால்தான் அதை எதிர்க்கவோ வெல்லவோ முடியாமல் திணறுகிறோம். சோதனை என்று அறிந்தவுடன் அதிலிருந்து ஓட வேண்டாமா?

பாவம் ஒரு நச்சு போன்றது! அது ஒரே ஒரு துளி போதும் நம்மை அழித்து விடும்.

யாக்கோபு 4: 7 கூறுவதுபோல்,  ஆகையால் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.

தேவனுடைய எச்சரிக்கையை மீறி தவறான பாதையில் உன்னை இழுக்கும் ஏதாவது பாவத்தில் நீ தரித்திருக்கிறாயா? கண்ணியில் மாட்டி விடாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

(for contact premasunderraj@gmail.com)

 

 

இதழ்: 705 கீழ் நோக்கிய அந்த ஒரு நொடி!!!!!!!

2 சாமுவேல் 11:2  ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்.

ஒருநாள் காலையில் வாசலில் கால் வைக்கும்போது ஏதோ ஒன்று நீளமாக இருப்பதுபோலத் தோன்றியது. அங்கு ஒரு தொட்டியில் சிவப்பு நிற நீளமான பூக்கள் பூக்கும். அந்தப் பூ காய்ந்து  மண் கலரில் விழுந்து கிடக்கும். நான் அந்தப்பூ தான் விழுந்து கிடக்கிறது என்று காலை தூக்கி வைத்து தாண்டிப்போய் விட்டேன். ஆனால் ஏதோ உள்ளுணர்வு என்னைத் திரும்பிப் பார்க்க செய்தது. அப்பொழுதுதான் அது பாம்பு என்று உணர்ந்தேன். பின்னர் அதை அடிக்கும்போது அது விரியன் பாம்பு என்று தெரிந்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் எச்சரிக்கையோடு உற்றுப்பார்க்காமல் காலை வைப்பதே இல்லை!

நம்முடைய தினசரி வாழ்விலும் நமக்கு எச்சரிக்கைத் தேவை! இன்றைய வேதாகமப்பகுதி தாவீது ‘ஒரு ஸ்திரீயை கண்டான்’ என்று கூறுகிறது. கண்டான் என்ற வார்த்தை எபிரேய மொழியில், ‘ கற்ப்பற்ற, காம வெறிகொண்ட” பார்வையென்ற அர்த்தத்தைக் கொண்டது.

ராஜாவாகிய தான் யுத்தத்துக்கு போகாமல், இஸ்ரவேல் அனைத்தையும் யுத்தத்துக்கு அனுப்பி விட்டு, உல்லாசமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த தாவீதின் கண்கள் எல்லாவற்றையும் கண்டு ஆனந்தமாய்  அனுபவித்துக் கொண்டிருந்தன! இன்று அந்தப்பார்வையில் பட்டது ஒரு அழகிய ஸ்தீரி!

தாவீது யார் என்பதை நாம் மறந்துபோக வேண்டாம். அவன் கர்த்தரை நேசித்தவன். தேவனாகிய கர்த்தருடைய இருதயத்தை பின்பற்றும் வாஞ்சை கொண்டவன். அவரால் அளவில்லாமல் ஆசீர்வதிக்கப்பட்டவன். தயவும், இரக்கமும் உள்ளவன். வலிமையான ஒரு ராஜா, அவனைக் காண்போருக்கு உற்சாகமளிக்கும் தன்மை கொண்டவன்.

ஆனால்!!!!! 2 சாமுவேல் 11 ல் அவன் ஒரு பெரிய தோல்வியுற்றவன்!

உல்லாசமான மாலை வேளையில் தாவீது தான் நேசித்த எருசலேமில், தன்னுடைய அழகிய அரண்மனையின்மேல் உலாவும்போது அவனுடைய பார்வை அவனை எங்கோ இழுத்து சென்றது. அவன் மட்டும் அந்த இடத்திலிருந்து எழுந்து தன் பார்வையை தேவனாகிய கர்த்தர் பக்கம் திருப்பியிருப்பானாகில் சரித்திரமே மாறியிருக்கும்.

கண்கள் போனபோக்கிலே தன் எண்ணத்தையும், நோக்கத்தையும் தவற விட்ட இந்த ஒரு நொடியை தாவீது தன் வாழ்க்கையில் எத்தனைதரம் நினைத்திருப்பான்! நினைத்து வருந்தியிருப்பான்! அந்த ஒரு  நொடி அவனை மேல் நோக்கி பரலோக தேவனைக் காணாமல், கீழ்நோக்கி அழகான ஸ்தீரியை நோக்க செய்தது!

உன்னுடைய வாழ்வில் அந்த ஒரு நொடி உண்டா?

நம்முடைய கண்கள் இன்று எதை அதிகமாக பார்க்கின்றன? நம்முடைய கால்கள் நம்மை எங்கே இழுத்து செல்கின்றன? நம்முடைய ஒவ்வொரு பார்வையையும், ஒவ்வொரு நடத்தையையும் நாம் எச்சரிக்கையோடுதான் எடுத்து வைக்க வேண்டும்! யாருக்கு தெரியும்? நாம் கால் வைக்கும் இடத்தில் ஒளிந்து கொண்டிருப்பது வலுசர்ப்பமாயிருக்கலாம் அல்லவா?

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்