Tag Archive | 2 சாமுவேல் 11:4

இதழ்:714 எல்லையைத் தாண்டி……

2 சாமுவேல் 11: 4  அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான்.

அக்கிரமம்  என்ற வார்த்தை நமக்கு பிடிக்காத ஒன்று என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த வார்த்தை வேதத்தில் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதியாகமம்: 6:5 ல் மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்று சொல்கிறது.

இந்த வார்த்தை தாவீது பத்சேபாளுடைய வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும் என்று நினைக்கிறேன். அக்கிரமம் பெருகின இடத்தை  நன்மை இல்லாத இடம் என்று சொல்லாமல், நன்மையே தீமையாக மாறின இடம் என்று சொல்லலாம். கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற எல்லையை தாண்டிப் போகும் இடம்.

இந்த வார்த்தையை நாம் சற்று அதிகமாக பார்ப்பதின் காரணம், நாம் சிலவேளைகளில் சாதாரணமாக செய்யும் செயல்கள் கூட, கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் எல்லையைத் தாண்டும் போது தீமையாக மாறிவிடுகிறது.

கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்!

தாவீது யுத்தத்துக்கு போகாமல் தன் அரமனையின் மாடியில் உல்லாசமாக ஓய்வெடுத்தது அக்கிரம செயல் இல்லை. அவன் அங்கு உலாவும் போது ஒரு பெண் குளிப்பதை தற்செயலாகப் பார்த்தான் அதுவும் அக்கிரமம் இல்லை. அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க ஆள் அனுப்பி, சற்று நேரத்தில் கர்த்தருடைய எல்லையை மீறி, அவளை அவனுடைய படுக்கை அறைக்கு அழைத்து சென்றானே அந்த செயல்தான் அக்கிரம செயல்.

தாவீதின் இந்த அக்கிரம செயலால் ஒரு குழந்தை உருவானது. கர்த்தருடைய திட்டம் என்னும் எல்லைக்கு அப்பால் உருவான குழந்தை.

நம்மை சுற்றிலும் நடக்கும் அக்கிரம செயல்களை பார்த்து அவர்களை அக்கிரமக்காரர் என்று நாம் பெயர் கொடுக்கலாம். ஆனால் நம்முடைய இருதயத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால் எத்தனைமுறை நாம் கர்த்தர் நமக்கு பாதுகாப்பாக  கொடுத்திருக்கும் எல்லையை தாண்டியிருக்கிறோம் என்று தெரியும்.

பாவம் என்பது நாம் செய்யும் பொல்லாப்பான செயல்கள் மட்டும் அல்ல, நமக்குள்ளாக வாழும் அக்கிரமம் தான்! நாம் தினசரி பார்க்கும் பெரிய பெரிய ஆட்களின் வாழ்க்கையில் உள்ள பொல்லாப்பை கண்டு அதைப்பற்றி விமசரிக்கும் நம் உள்ளத்தில் எத்தனை அக்கிரமம் ஒளிந்து கொண்டுள்ளது?  எத்தனைமுறை நாம் தாவீதின் இந்த செயலைப் பற்றி படிக்கும்போது தாவீது செய்தது அக்கிரமம் என்று தீர்ப்பு கொடுக்கிறோம்.

அதனால் தான் கர்த்தராகிய இயேசு, நாம் மற்றவருடைய கண்களில் உள்ள குறைகளைப் பற்றி பேசுமுன் நம்முடைய கண்களில் உள்ள குறையைப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.  தேவனுடைய சித்தம் என்ற எல்லையைத் தாண்டி நாம் தீமையான பாதையில் கால் எடுத்து வைக்காமல் இருக்க ஒவ்வொருநாளும் கர்த்தருடைய கிருபை நமக்குக் கொடுக்கப்பட வேண்டுமாறு ஜெபிப்போம்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 712 உனக்கு சொந்தமில்லாததை பறித்துக் கொள்ளாதே

2 சாமுவேல் 11: 4  அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்.

 

கவுதாரி என்ற பறவையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். எரேமியா தீர்க்கதரிசி இதைப்பற்றி 17 ம் அதிகாரத்தில் எழுதுகிறார். நானும் சற்று ஆர்வத்தோடு இதைப்பற்றி படித்தேன். மற்ற பறவைகளைப் போல இது மரங்கள் மேல் கூடு கட்டுவதில்லை. அது தரையிலேயே முட்டையிட்டு அடைகாக்கும். சில நேரங்களில் மற்ற பறவைகளின் கூடுகளில் தன் முட்டையை இடும். எது எப்படியோ சுலபமான வழியில் காரியத்தை சாதித்துக் கொள்ளும் பறவைதான் இது.

எங்கேயோ கேள்விப்பட்டது போல இல்லை! ஆமாம்! தாவீது பத்சேபாளை அழைத்து வர ஆள் அனுப்பியது இந்தக் கதை போலத்தான் உள்ளது. இந்த அழைத்து வர என்ற வார்த்தையை எபிரேய மொழியில் பார்த்தேன். அதன் அர்த்தம் தாவீதின் செயலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

லாவ்காஹ் என்ற இந்த வார்த்தை , வாங்குவதற்கு, பறித்துக் கொள்வதற்கு, உபயோகப்படுத்த, என்ற பல அர்த்தங்களைக் கொண்டது. இப்பொழுது இந்த அர்த்தங்களை தாவீதின் செயலோடு இணைத்துப் பாருங்கள்.

பத்சேபாள் ஒரு பொருளைப் போல தாவீது அவளைத் தனக்கு சொந்தமாக்க ஆசைப்படுகிறான். தாவீது ஆள் அனுப்பியபோது பத்சேபாள் அதை ஒரு சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கலாம். அவளுடைய கணவன் தாவீதின் ராணுவத்தில் ஒரு நம்பகமான பராக்கிரமசாலி. அவளுடைய குடும்பம் தாவீதுக்கு ஊழியம் செய்தனர்.  நிச்சயமாக தாவீதின் ஆட்களைப்பார்த்து அவளுக்கு ஒன்றும் சிவப்பு கொடி கண்ணில் படவில்லை!

திருடு அல்லது களவு என்ற வார்த்தையைப் பற்றி கிறிஸ்தவ புத்தகங்கள் அதிக போதனை கொடுக்கவில்லை, ஆனால் வேதம் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.  யாத்திராகமம் 20:15  களவு செய்யாதிருப்பாயாக என்பது தேவனுடைய கட்டளை. பணக்காரர்கள் ஏழைகளைத் திருடுவது நாம் சகஜமாக பார்க்கும் ஒன்று.  நாம் எத்தனை முறை நம்மைவிட குறைவானவர்களை எப்படி பார்க்கிறோம். பெலவீனரை ஒடுக்கக்கூடாது என்று வேதம் நமக்குத் தெளிவாக கூறுகிறது.

தாவீது பத்சேபாளை அழைத்துவர ஆள் அனுப்பிய போது அவன் சுலபமாய் அவளை அடைய முடிவு செய்தான். இது களவு செய்வதற்கு சமம் தானே!

உனக்கு சொந்தமில்லாத ஒன்றை அடைய விரும்புகிறாயா?  நாம் படிக்கும் தாவீதின் வாழ்க்கை உன்னுடைய வாழ்க்கையைப் போல உள்ளதா? மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிடும் கவுதாரியைப் போல மற்றவருக்கு உரிமையானதை நீ பறித்துக் கொள்ள முயலுகின்றாயா? மனந்திரும்பு!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்