Tag Archive | 2 சாமுவேல் 12:14

இதழ்: 761 கண்ணீர் மூலம் காணும் வானவில்!

2 சாமுவேல் 12: 14  உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும்.

நாம் என்றைக்காவது கடவுளிடம் நம்முடைய வேதனை, கண்ணீர், மனக்குளைச்சல் இவற்றைப்பற்றி நேரிடையாக பேச முடியும் என்று நினைக்கிறீர்களா? முடியாது என்று நினைத்தால் எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளைப் பாருங்கள்!

கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால் தேவரீர் நீதியுள்ளவராமே, ஆகிலும் உம்முடைய நியாங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன். ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன? (எரே12:1)

இந்த மனிதனின் துணிச்சல் எனக்கு மிகவும் பிடிக்கும்! எனக்கு அந்தத் துணிச்சல் ஒரு துளி கிடைத்தால் எரேமியா கேட்ட கேள்விக்கு மேல் ஏன் குற்றமற்றவர் பழியை சுமக்கிறார்கள் என்பதையும் சேர்த்து விடுவேன்.

தாவீது பத்சேபாள் என்ற இருவரின் பாவத்தால் ஒரு குற்றமற்ற குழந்தை இறந்து போயிற்று. அந்தக் குழந்தையைக் கர்த்தர் அடித்தார் அந்த வேதனையை அது அனுபவித்தது என்ற உண்மையை மறைக்க முடியாது. குழந்தையை பெற்று வளர்த்த நம்மாலும் இதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தானே இருக்கிறது!

இந்தக் குழந்தையின் வேதனை யாருடைய கீழ்ப்படியாமையால் வந்தது? பல நேரங்களில் அப்பாவிகள்தான் யாரோ செய்த பாவத்தின் தண்டனையை அனுபவிக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை!

ஆனால் சிறிது நேரம் தாவீதின் வாழ்க்கையைப் படித்தபோது தேவனுடைய நியாயத்தீர்ப்பு  தவறாகாது என்றுதான் புரிந்தது. ஒருவேளை அந்தக்குழந்தை உயிருடன் இருந்திருந்தால், அந்த அரண்மனையில் அந்தக் குழந்தை எப்படி இருந்திருக்கும்? தாவீதின் அரண்மனையில் வாழ்ந்தவர்கள் அதை எப்படி நடத்தியிருப்பார்கள். நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் பாவத்தின் பலனாக நடக்கும் என்று சொல்லிய காரியங்கள் நிறைவேறியபோது அந்தக் குழந்தை அந்த அரண்மனையில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  அந்தக் குழந்தை அங்கு நிம்மதியாகவே இருந்திருக்க முடியாது!

பத்சேபாளின் குழந்தை மரித்ததால் அது குற்றவாளியாகத் தீர்க்கப்படவில்லை! நம்முடைய கண்களுக்கு அநியாயமாய்த் தோன்றினாலும் பரலோக தேவனின் கண்களுக்கு அதில் ஒரு நியாயம் தென்பட்டது. உரியாவின் மனைவியாகிய பத்சேபாளுக்கு தாவீதின் மூலம் பிறந்த பிள்ளை என்ற அவச்சொல்லை வாழ்நாள் முழுதும் ஏற்று அவமானத்தில் கூனி நிற்க வேண்டாம் என்று கர்த்தர் சீக்கிரம் எடுத்துக்கொண்டரோ என்னவோ?

இன்று நாம் எரேமியாவைப் போன்ற கேள்வியோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம்! கர்த்தர் எரேமியவைப் பார்த்து கோபப்படவில்லை. ஏனெனில் கர்த்தர் கிரியை செய்வது இன்று நம் கண்களில் புலப்படாமல் இருக்கலாம் ஆனால் ஒருநாள் அதின் முழு அர்த்தமும் விளங்கும்!  இன்று அவருடைய பிள்ளைகள் அனுபவிக்கும் எல்லாத் துன்பங்களும் அவர்களை கர்த்தரிடம் நெருங்கச் செய்யத்தான். இன்று நமக்கு அநீதியாய்க் காணப்படும் காரியம் பரலோக தேவன் பார்க்கும் கோணத்தில் வானவில்லாய்த் தோன்றலாம் அல்லவா?

நம்முடைய கண்களில் கண்ணீர் இல்லாவிடில் நம்முடைய ஆத்துமாவில் வானவில் எப்படி ஏற்படும்? சிந்தியுங்கள்! ஜெபியுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 756 தூஷணம் வேண்டாம்! நறுமணம் வீசு!

2 சாமுவேல் 12:14 ஆனாலும்  இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினாலே …..

நம்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வேத வார்த்தைகளில் ஒன்றுதான் இன்றைய வேதாகமப் பகுதி நினைக்கிறேன். தேவனாகிய கர்த்தர் தாவீதும் பத்சேபாளும் செய்த பாவத்தின் எதிர்விளைவைப் பற்றி பேசியது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

தாவீது பத்சேபாளுடன் செய்த பாவத்தை அவனுக்கு உணர்த்திய நாத்தான், அந்தக் காரியம் கர்த்தருடைய சத்துருக்கள் அவரை தூஷிக்க காரணமாகி விட்டதை உணர்த்துகிறான்.

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது பாவம் செய்தபோது தேவனாகிய கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்பட்டது என்று கர்த்தர் கூறுகிறார். நல்லதொரு தோட்டத்தில் தூவப்பட்ட விதைகள் போல தேவ தூஷணம் முளைக்கும்!

நாம் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தாமல் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவருடைய நாமத்தை தூஷணப்படுத்தும் அல்லவா? சற்று யோசித்துப் பார்ப்போம்!  நம்முடைய அலுவலகத்தில், உறவினர் மத்தியில், குடும்பத்தில், சமுதாயத்தில் உள்ளவர்கள் நாம் தவறு செய்யும்போது என்ன நினைப்பார்கள்? நாம் கிறிஸ்தவர் என்று சொல்லும்போது கிறிஸ்துவின் நாமம் அல்லவா அவதூறுப்படும்!

ஒரு பெர்சியக் கதையை வாசித்திருக்கிறேன்!

ஒரு வழிப்போக்கன் வழியில் ஒரு அழகான வர்ணத்தில் கிடந்த ஒரு மண் பாண்டத்தின் துண்டை கையில் எடுத்தாராம். அது அழகாய் மட்டும் அல்ல ஒரு நறுமணம் வீசியதாக இருந்ததாம். அதை ஏதோ ஒரு விலையேறப்பெற்ற கல் என்று நினைத்து அதினிடம் நீ யாரோ என்று கேட்டாராம்!

நீ விலைமதிப்பெற்றவியாபாரப் பொருளோ? நீ கிடைக்காத ஒரு விசேஷக் கல்லோ என்றார்?

அதற்கு அந்தப் பாண்டம் நான் ஒரு சாதாரண மண்தான் என்றதாம்!

பின்னும் அவர் அப்படியானால் உனக்கு இந்த நறுமணம் எப்படி கிடைத்தது என்றார்!

அதற்கு அது என் நண்பனே உனக்கு என் இரகசியத்தை சொல்லிவிடுகிறேன்! நான் ரோஜா மலரோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். தினமும் வாசனையுள்ள மலர்களைத் தாங்கிய ஒரு ஜாடிதான் நான். அந்த மலர்களிடமிருந்து  கிடைத்தது தான் இந்த மணம் என்றதாம்!

இதைத்தான் நம்முடைய மிகப் பழமையானத் தமிழ் மொழியில், பூவோடு சேந்த நாரும் மணக்கும் என்று பழ மொழியாக சொல்லுவோம்!

நண்பர்களே!  சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்கின் லீலியுமானவர்  நமக்குள் வாசம் செய்வாரானால் நாமும் நம்முடைய நற்கிரியையால் அவர் நாமம் மகிமைப்பட நற்கந்தம் வீசுவோம்!  நாம் ஒவ்வொருநாளும் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய சத்தியத்தின் படி வாழும்போது வெறும் களிமண்ணான நாம் நறுமணம் வீசும் விசேஷக்கல் ஆக முடியும்!

உங்கள் வாழ்க்கையின் மூலமாக கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்பட வேண்டாம்! மாறாக நீங்கள் கர்த்தருடைய மகிமையை நற்கந்தமாக வீசும் ஒரு சாட்சியாக வாழுங்கள்!

ராஜாவின்மலர்த் தோட்டம் உங்களை சாரோனின் ரோஜாவகிய கர்த்தரிடம் கிட்டி சேர உதவும் தோட்டம் என்பதை உணர்வீர்களானால்  உங்களுடைய நண்பர்களுக்கும் இதைப் பற்றி பகருங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்