Tag Archive | 2 சாமுவேல் 12:5

இதழ்: 745 தகுதியற்ற எனக்கு அளித்த கிருபை!

2 சாமுவேல் 12:5  அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல்                (அந்த பணக்காரன் மேல்)  மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தை செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.

தாவீதுக்கு பயங்கர கோபம்! தீர்க்கதரிசியான நாத்தான் கூறிய கதையில் வந்த ஐசுவரியவான் ஒரு ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி விட்டான். உடனே அவன் நியாயம்தீர்க்கப் பட் வேண்டும் என்று நினைத்தான் தாவீது. அதையும் தாண்டி கோபத்தின் உச்சிக்கே போய் அவன் இந்தக் காரியத்தை செய்த அந்த மனுஷன் சாக வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறான்.

இதை வாசிக்கும்போதுதான் தாவீது ஒருகாலத்தில் ஆடுகளை மேய்த்த ஒரு மேய்ப்பன் என்பது நினைவுக்கு வந்தது. சங்கீதம் 23 ல் தாவீது கர்த்தராகிய தேவனை ஒரு நல்ல மேய்ப்பனுக்கு ஒப்பிட்டு தாவீது எழுதுகிறான். நாத்தான் அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியைப் பற்றி, அது அவனுக்கு ஒரு மகள் போல இருந்தது என்று கூறிய வார்த்தைகள் மேய்ப்பனாயிருந்த தாவீதால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்த வார்த்தைகள் தான். இளம் வாலிபனாக ஆடுகளை மேய்த்த காலத்தில் அவன் நிச்சயமாக தன்னுடைய மந்தையில் இருந்த ஒவ்வொன்றின் குரலையும் அறிந்து, ஒவ்வொன்றுக்கும் பெயர் சூட்டி, அவைகளை பத்திரமாக நடத்தியிருந்திருப்பான். அவன் தன்னுடைய ஆடுகளை ஓநாயிடமிருந்தும், சிங்கத்தினிடமிருந்தும் தன்னுடைய உயிரை பணயம் வைத்து காப்பாற்றியது நமக்குத் தெரிந்ததே.

இத்தனை இளகிய மனதுள்ள தாவீதுக்கு தீர்க்கதரிசியாகிய நாத்தான் அந்த ஐசுவரியவான் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்து விட்டான் என்று கூறியதை தாங்கவே முடியவில்லை. அவனுடைய உடனடி பதில் என்ன தைரியம் அவனுக்கு, அவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என்றே வந்தது

உங்களிடம்  ஒன்று கேட்கிறேன்! நம்மில் எத்தனை பேருக்கு நாம் தவறிபோய் பாவத்தில் விழுந்தபோது, இரக்கமே உருவான நம்முடைய தேவன் நம்முடைய பாவத்துக்குத் தக்க தண்டனையை கொடுத்திருக்கிறார்? அப்படியானால் நாம் இன்று உயிரோடே இருக்கவே முடியாது அல்லவா? அவருடைய தயவுக்கும், கிருபைக்கும் கொஞ்சம் கூட தகுதியே இல்லாத என்மேல் அல்லவா அவர் தம்முடைய மகா பெரிய தயவையும், கிருபையையும்  காட்டினார்!

சங்கீதத்தில் மாத்திரம் கிருபை என்ற வார்த்தை 100 முறை வருகிறது.  இதை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது எனக்கு எத்தனை ஆதரவாக இருக்கிறது தெரியுமா? ஏனெனில் என்னுடைய தேவனாகிய கர்த்தருடைய கிருபை இந்த உலகத்தில் உள்ள நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, பாவியிலேயே மகா பாவியான எனக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது!

அந்த தேவனாகிய கர்த்தருக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை!  தேவனாகிய கர்த்தருடைய நித்திய கிருபையை நீங்கள் அனுபவித்ததுண்டா? அப்படியானால் அவரை நன்றியோடு ஸ்தோத்தரியுங்கள்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 744 உண்மையில் யார் குற்றவாளி?

2 சாமுவேல் 12:5  அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல்                (அந்த பணக்காரன் மேல்)  மிகவும் கோபம் மூண்டவனாகி….

நீ யாருடைய தவறையாவது சீர் திருத்த நினைக்கும்போது உன்னையே சற்றுக் கண்ணாடியில் பார்த்துக்கொள் என்று யாரோ எழுதியதை படித்திருக்கிறேன்.

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.  ( மத்:7:1)

என்று கர்த்தராகிய இயேசு சொன்னார்.  மற்றவருடைய குற்றத்தை நாம் சுலபமாக கண்டுபிடித்து விடுவோம், நம்முடைய குற்றம் மட்டும்தான் நம் கண்களில் படவே படாது. அப்படித்தான்  தாவீதுக்கும் ஆகிவிட்டது. நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் வந்த பணக்காரன், ஏழையினுடைய ஆட்டுக்குட்டியைத் திருடி தன்னுடைய வீட்டுக்கு வந்த வழிப்போக்கனுக்கு சமையல் செய்ததைக் கேட்டதும் அவனுக்கு கோபம் வந்து விட்டது.

நாத்தான் அவனிடம் அந்த பணக்காரன் ஏழையினுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததைக் கூறினான். மற்றவருடைய பொருளுக்கு ஆசைப்படுவதும் தவறு அதை அடைய நினைப்பதும் தவறு.  ஆனால் இங்கு தாவீது கோபப்பட்டதுதான் எனக்கு ஆச்சரியத்தை மூட்டுகிறது. உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை இச்சித்தது அவன், உரியாவை போரில் வெட்டுண்டு சாகடித்தது அவன், அவனுக்கு சொந்தமில்லாத பத்சேபாளைத் தனக்கு சொந்தமாக்கியது அவன், ஆனால் அவன் தன் குற்றத்தைக் காணாமல் கதையில் வந்த ஐசுவரியவான் மேல் கோபப்படுகிறான்.

இன்று தாவீதின் மூலமாக நாம் பார்ப்பது நம்முடைய சுய ரூபத்தைத்தானே!நம்முடைய தவறை நாம் ஒப்புக் கொள்ளாமல், மற்றவர்களுடைய தவறைப்பற்றி பெரிதாகப் பேசுகிறோம் அல்லவா? நம்முடைய தவறை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது நமக்கு எவ்வளவு கடினமான காரியம். அதனால் தான் நம்மைப்போலவே தாவீதும் மற்றவனுடைய குற்றத்தைப்பற்றி கேள்விப்பட்டவுடன் கோபப்பட்டான். ஆனால் உண்மையில் யார் அந்தக் குற்றவாளி?

இன்று நம்முடைய கண்களை நேருக்கு நேர் கண்ணாடியில் பார்த்து நம்முடைய கண்ணில் உள்ள தூசியை எடுத்துப்போட  தாவீதுக்கும், நமக்கும்  தைரியம் உள்ளதா?

தவறுகளை சுட்டிக்காட்டுவதும் ஒரு தாலந்து தான்! ஆனால் அந்த தாலந்து புதைக்கப்பட வேண்டிய ஒன்று!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

: