Tag Archive | 2 சாமுவேல் 2

இதழ்: 665 விழித்திருந்து காத்துக்கொள்!

2 சாமுவேல் 2:2 , 11 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாவோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்துக்குப் போனான்.  தாவீது எப்ரோனிலெ யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்.

இன்றைய வேதாகமப் பகுதியில், தாவீது எப்ரோனில் தன் மனைவிமாரோடு சென்று ஏழுவருடம் யூதாவின் மேல் மட்டும்  ராஜாவாயிருந்தான் என்று பார்க்கிறோம். முழு இஸ்ரவேலின் மேலும்  ராஜாவாக அவன் இந்த ஏழு வருடங்களும் காத்திருக்க வேண்டியிருந்தது.

காத்திருத்தல் என்பது நமக்கு பிடித்த ஒன்றா என்ன? எங்கேயாவது காத்திருக்க வேண்டுமானால் அந்த நேரத்தில் படிக்க புத்தகத்தையோ அல்லது வேறே ஏதாவதையோ எடுத்து சென்று நேரத்தைக் கழிக்க மாட்டோமா?

இங்கே தாவீது ஏழு வருடங்கள் காத்திருந்தான்! அந்த நாட்களில் என்னசெய்திருப்பான்? 3ம் அதிகாரம் கூறுகிறது அவன் ஆறு பெண்களை மணந்தான் என்று.  அதுமட்டுமல்ல! அந்த வருடங்களில் அவனுக்கு குறைந்தது ஆறு குமாரர் பிறந்தனர். பெண் குழந்தைகள் கணக்கில் எடுபடாவிட்டாலும், நிச்சயமாக சில பெண் குழந்தைகளும் பிறந்திருக்கக்கூடும்.

இன்னும் சில மாதங்கள் நாம் தாவீதைப் பற்றிப் படிக்கும்போது இந்த எப்ரோனில் ஏற்பட்ட சம்பந்த்தால் அவன் குடும்பத்தில் அடிக்கடி பிரச்ச்னைகள் ஏற்பட்டதைப் பார்க்கலாம்!

எப்ரோனில் இந்தக் காத்திருப்பின் காலத்தில் தாவீது  தன்னுடைய தேவனாகிய கர்த்தரை நோக்கிக் காத்திருந்திருக்க வேண்டும்! அதற்கு பதிலாக அவன் கண்கள் அந்த தேசத்தின் பெண்கள் மேல் சென்றன! அவனுடைய இருதயம் தேவனிடமிருந்து விலகி, இந்த உலகத்தின் ஆசைகளால் நிரம்பியது. அவன் விழித்திருந்து தன்னைக் காத்துக் கொள்ளாமல் தனக்கு பிடித்த பல பெண்களோடு வாழ ஆரம்பித்தான்.

நம்முடைய வாழ்விலும் இது நடக்கலாமல்லவா? நாம் நினைத்ததை அடைய முடியாமல் வருடங்கள் கழிந்து செல்லும்போது, நம்முடைய வழியில் வரும் எல்லாவற்றையும் நாம் அனுபவிக்கத் துடிக்கிறோம். அப்படிப் பட்டவைகள் கர்த்தருடைய சித்தத்துக்குள்ளானவைகளா அல்லது மாறுபட்டவைகளா என்பதை நாம் கவனிப்பதேயில்லை.

அதனால்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை விழித்திருந்து ஜெபிக்கும்படி கூறினார்.  இருதயத்தை அலையவிடாமல் ஜெபத்தால் காக்கவேண்டியது அவசியம்! தாவீதின் எப்ரோன் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமைகிறது அல்லவா!

விழித்திருந்து ஜெபியுங்கள்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Advertisements

இதழ்: 664 தடைகள் யாவும் நீங்கும்!

2 சாமுவேல் 2:1 – 10 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி, நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்கு கர்த்தர்: போ என்றார்.  எவ்விடத்திற்கு போகலாம் என்று தாவீது கேட்டதற்கு அவர் எப்ரோனுக்குப் போ என்றார்….. அப்பொழுது யூதாவின் மனுஷர்வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்….. சவுலின் படைத்தலவனான…. அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை…. இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக்கினான்….யூதா கோத்திரத்தார் மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.

சவுல் யுத்தத்தில் மரித்துப்போனான். அவனோடு அவனுடைய மூன்று குமாரரும் மரித்துப்போனார்கள். அதில் தாவீதின் நல்ல நண்பனான யோனாத்தானும் உண்டு. பல வருடங்களுக்கு முன்பே சாமுவேல் தீர்க்கதரிசி, தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணியிருந்தார்.

தாவீது உடனே ராஜாவாகிவிடுவான் என்று யாராகிலும் நினைத்திருந்தால் அது தவறு என்று இப்பொழுதாவது உணர்ந்திருப்பார்கள். சவுல் மரித்தபின்னரும் தாவீதால் இஸ்ரவேலை ஆள முடியவில்லை. சவுலின் படைத்தலைவனான அப்னேர் வேறொரு திட்டம் தீட்டியிருந்தான். சவுலின் குமாரர்களில் மிஞ்சியிருந்த இஸ்போசேத்தை இஸ்ரவேலின் ராஜாவாக்கினான்.

கர்த்தர் தாவீதை தெரிந்து கொண்டிருப்பாரானால் அப்னேருக்கு என்ன வந்தது? அவன் இஸ்போசேத்தை தெரிந்தெடுத்தான்.  இஸ்போசேத் ஒருபக்கமும், தாவீது யூதா கோத்திரத்தையும் ஆண்டார்கள்.

அதன் முடிவை 2 சாமுவேல் 3:1  நமக்கு இந்த கசப்பான சூழ்நிலையை விளக்குகிறது. தாவீதை சார்ந்தவர்களுக்கும், இஸ்போசேத்தை சார்ந்தவர்களுக்கும் இடையே வெகு காலமாக யுத்தம் இருந்தது,

தாவீது நினைத்தமாதிரி எதுவுமே நடக்கவில்லை. அவனை மலர்கள் தூவி யாரும் சிங்காசனத்தில் உட்காரவைக்கவில்லை! பெண்கள் ஆரத்தியெடுத்து வரவேற்கவுமில்லை! ஒரு கசப்பான சூழல் நிலவியது.

ஆனால் 2 சாமுவேல் 3 ல் நாம் படிக்கிறோம், தாவீது வரவரப்பலத்தான். சவுலின் குடும்பத்தாரோ வரவரப்பலவீனப்பட்டுப் போனார்கள் என்று.

வெகுகாலமாக யுத்தம் நிலவியது ஆனால் நாட்கள் செல்ல செல்ல தாவீதின் கரம் ஓங்கியது!

இதை வாசித்த நான் தாவீதின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தேன். கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட பின்னரும் எதுவுமே சுலபமாக முடியவில்லை! உயிருக்குத் தப்பி ஓடினான். சவுலால் விரட்டியடிக்கப்பட்டான். எதிரியின் நாட்டில் தஞ்சம் கொண்டான். சவுல் மரித்தபின்னரும் போட்டிக்கு இன்னொரு ராஜா வந்துவிட்டான்.

நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் இன்னும் எத்தனை நாட்கள் நான் காத்திருக்க வேண்டும் என்று கர்த்தரிடம் புலம்பியிருப்பேன். கர்த்தரை பின்பற்றிய தாவீதின் வாழ்வில்தான் எத்தனை தடைகள்!

நாம் சிலநேரம் இப்படிப்பட்ட தடைகளை பார்ப்பது இல்லையா? எல்லாம் சரியாகப்போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் வேளையில் எங்கிருந்தோ ஒரு தடை வந்துவிடும்.

தாவீதுடைய இந்த வனாந்திர வாழ்க்கை அவனுடைய சிங்காசன வாழ்க்கைக்கு அவனைத் தகுதிப்படுத்திற்று.

ஒருவேளை இன்று நீ நினைப்பதெல்லாம் தடைப்பட்டுக் கொண்டிருக்கலாம்! தாவீது இன்று நீ இருக்கும் சூழலில்தான் இருந்தான்.ஆனால் அவன் சோர்ந்துபோகவில்லை! தொடர்ந்து முன்னேறினான். கர்த்தரின் வழிநடத்துதலை கவனித்து, அவர் சத்தத்தைக்கேட்டு நடந்தான். கடைசியில் அவன் கரம் ஓங்கிற்று!

தாவீதைப்போல பொறுமையோடுக் காத்திரு! தடைகள் யாவும் நீங்கும்!

இன்று நீ உன் பாதையை அறியாமலிருக்கலாம் ஆனால் உன் பாதைகாட்டியை அறிவாய் அல்லவா? அவரை நம்பு! இளைப்பாறு!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்