Tag Archive | 2 சாமுவேல் 6

இதழ்: 684 கர்த்தர் மேல் சற்று வருத்தமா?

2 சாமுவேல் 6: 6,7 ….மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி அதைப் பிடித்தான்,

அப்பொழுது கர்த்தருக்கு   ஊசாவின்மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார். அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

பரிசுத்தமான தேவனைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று!

யாத்திராகமம் 25 – 30 வரை வாசிப்பீர்களானால் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை வைக்கவேண்டிய தேவனுடைய கூடாரத்தை அவர் எப்படியெல்லாம் உருவாக்கச் சொன்னார், அதற்கு எவ்வளவு ஞானத்தை தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுத்தார் என்றும் பார்க்கிறோம். அதைப்படிக்கும்போது அந்தப் பெட்டியின் மகிமை நமக்குத் தெரியும்.

ஆனால் இஸ்ரவேலின் வாழ்க்கைச் சக்ககரத்தில் எங்கோ ஒரு இடத்தில், பரிசுத்தமான கர்த்தருடைய பெட்டியின்மேல் இருந்த பயம், மரியாதை குறைந்து விட்டது. கர்த்தர் மோசேயின் மூலமாக இந்த பெட்டியை அவர்கள் எப்படி எடுத்து செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் தாவீது இதைப்பற்றி சிந்தித்ததாகவேத் தெரியவில்லை, அதைக் கடைப்பிடிக்கவும் இல்லை.

கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டுவர வேண்டும் என்பது நல்ல எண்ணமாக இருந்தாலும், கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாதது ஊசாவின் மரணத்தில் முடிந்தது.  தாவீதுக்கு எப்படியிருந்திருக்கும்? கர்த்தர்மேல் சற்று வருத்தம் ஏற்பட்டிருக்கும் அல்லவா?

இதைப் படிக்கும்போது, தாவீது செய்த தவறால் கர்த்தர் எப்படி ஊசாவைத் தண்டிக்க முடியும் என்று நாம் நினைக்கலாம். இன்றும் நம்முடைய பாவமும், கீழ்ப்படியாமையும் நம்மை சார்ந்தவர்களை பாதிக்கும் என்பது தெரியுமா?

இன்று நாமும் தாவீதைப் போன்ற சூழலில் இருக்கலாம். நாம் செய்த ஒரு தவறு நம்முடைய குடும்பத்தை அல்லது நண்பர்களை அல்லது சமுதாயத்தை பாதித்திருக்கலாம். இன்று ஒருவேளை நாம்  நம்முடைய கீழ்ப்படியாமையின் விளைவையும், அதை கர்த்தர் சிட்சிப்பதையும் பார்க்கலாம். ஆனால் நாளை நாம் இந்த சிட்சையின் மூலம் கர்த்தர் நமக்கு கொண்டு வந்த ஆசீர்வாதத்தை நிச்சயமாகப்  பார்ப்போம்.

யாரோ ஒருவர் எழுதிய விதமாக, கர்த்தர் இன்று நம்மை நம்முடைய நோயின் மூலம் திருத்தலாம், ஏழ்மையின் மூலம் நம்மை ஆத்துமத்தில் பணக்காரராக்கலாம்,  பெலவீனத்தின்மூலம் பெலசாலிகளாக்கலாம்!

பொறுமையாயிரு!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 683 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்!

2 சாமுவேல் 6:1,2  பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம் பேரைக்கூட்டி, கேருபின்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தருடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,

வேதம் ஒரு அற்புதமான புத்தகம்!  இதை நாம் கதையிலிருந்து கதை என்று போகாமல், இங்கு  படிப்பதுபோல முறையாக தொடர்ந்து வாசிக்கும்போது அது ஒரு சரித்திரமாக அல்லாமல் மிகுந்த ஆசீர்வாதமாக அமையும்.

நாம் படிக்க ஆரம்பித்திருக்கும் இந்த அதிகாரத்தை இன்னும் சில நாட்கள் படிக்கலாம், ஏனெனில் இந்த அதிகாரத்தில் நாம் பரிசுத்தராகிய தேவனாகிய கர்த்தரைப் பற்றி பார்க்கிறோம்!

இந்த அதிகாரம் எந்தவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் இது தாவீது பத்சேபாளுடன் பாவத்தில் விழுந்த சம்பவத்துக்கு முன்னால் இடம் பெற்றிருக்கீறது. இதைப் படிக்கும்போது, இது மறுபடியும் என்னை தேவனுடைய பரிசுத்தத்தையே என்னுடைய வாழ்வின் மையமாகக் கொள்ளவேண்டும் என்று சிந்திக்கத் தூண்டியது.

என்னுடைய சிறு வயதிலிருந்தே எங்களுடைய பாரம்பரிய திருச்சபையில் அமர்ந்து,  பரிசுத்த தேவனை ஆராதிக்க விரும்புவேன். ஆலயத்தின் மூன்றாம் மணி அடிக்கும் முன்னரே உள்ளே போய் முழங்கால் போட்டுவிடுவோம்.  உள்ளே சென்ற பின்னர்  யாரிடமும் பேச மாட்டோம், முழங்கால் படியிட்டு ஜெபிப்போம். பரிசுத்த தேவனின் ஆலயத்தில் நாம் எப்படி பரிசுத்தமாய் இருக்கவேண்டுமென்று சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்தனர். இப்பொழுது சில ஆலயங்கள்  பல மாடர்ன் டெக்னாலஜிகளைக் கொண்டதாய் ஏதோ ஷோ பார்ப்பது போல நடக்கின்றன!

தாவீதின் காலத்தில் என்ன நடக்கிறது பாருங்கள்! ஜனங்கள் பரிசுத்த தேவனை மறந்தே போய்விட்டார்கள். அவர்கள்  ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்வாங்கி போய்விட்டார்கள். அவருடைய பரிசுத்த பிரசன்னத்துக்குள் வரும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் அத்தனையும் பழைய நாகரீகமாகிவிட்டது!

அச்சமயம் தாவீது  தேவனுடைய பெட்டியை எருசலேமுக்கு  எடுத்துவர முடிவு செய்கிறான். ஒரு உயர்ந்த உள்ளம் அவனுக்கு. எருசலேம் தேவனை ஆராதிக்கும் ஸ்தலமாக மாற விரும்பினான்.

ஆனால் தாவீது அந்த முடிவு எடுக்கும் முன்  அந்தப்பெட்டியை எப்படி எடுத்து வருவது என்று முடிவு செய்யவில்லை.  அவர்கள் அதை ஒரு புதிய வண்டியில் ஏற்றி ஆடல் பாடலுடன் கொண்டுவந்தனர்.

இது கேட்க மிகவும் நன்றாகவே இருக்கிறது! மகிழ்சியான கொண்டாட்டம்! தாவீதும் அவனோடிருந்தவர்களும் கர்த்தருடைய பெட்டியை தங்கள் ஊருக்கு கொண்டுவருவதை அவர்களுடைய வழியில் ஒரு பண்டிகையைப்போல கொண்டாட முடிவு செய்தனர்! ஆனால் கர்த்தருடைய வழியைப் பற்றி சிந்திக்கவே இல்லை!

எங்கேயோ ஒரு இடத்தில், அது  வனாந்தரத்திலோ அல்லது ஆலயத்திலோ எங்கோ நாம் கர்த்தருடைய பரிசுத்தத்தை மறந்தே விட்டோம். நாம் நிற்பது பரிசுத்தமான ஸ்தலம் என்றே மறந்து விட்டோம்.  அதை மறக்கும்போது நாம் எதற்காக உருவாக்கப்பட்டோம் என்பதையும் மறந்தே விட்டோம்.

கர்த்தருடைய அன்பையும், கிருபையையும் அனுபவிக்க ஆசைப்படுகிற நாம் அவற்றுக்கு முன்பு அவருடைய பரிசுத்தத்தை அனுபவித்தே ஆகவேண்டும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்