Tag Archive | 2 சாமுவேல் 6:12

இதழ்: 696 தலைமுறைக்கான ஆசீர்வாதம்!

2 சாமுவேல்: 7: 12 உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப் பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி அவன் ராஜ்யத்தை நிலைபடுத்துவேன்.

இங்கு தாவீதுக்கு கர்த்தர் ஒரு பெரிய ஆசீர்வாதமான வாக்குத்தத்தைக் கொடுப்பதைப் பார்க்கிறோம். அவனுடைய தலைமுறைக்கான ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வேலைகளை விட்டு இளைப்பாறி, கர்த்தரோடு உறவாடி அவரை நோக்கிப்பார்த்தபோது கர்த்தர் அவனுக்கு கொடுத்த ஆசீர்வாதம்.

தாவீது தன்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்கள்மீது அதிக அக்கறையும் பாசமும் காட்டியதாகத் தெரியவில்லை. கணக்கில்லாத பெண்களை மணந்தும், மறுமனையாட்டிகளாகக்கொண்டும் திருமண பந்தத்தை அவமதித்தான். அப்படியானால் இந்த வாக்குத்தத்தம் எப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்பட்டது என்று நாம் நினைக்கலாம். கர்த்தர் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தைப் போலத்தான் தாவீதிடமும் நீ என்னை பின்பற்றினால் உன்னை ஆசீர்வதிப்பேன் உன்னுடைய சந்ததியையும் ஆசீர்வதிப்பேன் என்று கூறுகிறார்.தேவனாகிய கர்த்தர் மேல் நம்முடைய வாழ்க்கை அமைக்கப்படும்போது மட்டுமே இந்த ஆசீர்வாதம் கொடுக்கப்படும்.

ஆனால் நாம் நம் வாழ்க்கையில் நம்முடைய சுய சித்தத்தின்படி வாழ ஆரம்பிக்கும்போது, நமக்குப் பிரியமானபடி வாழும்போது அதற்குரிய பலனும் நம்மைத்தொடரும் என்பதை நாம் மறந்தே போகிறோம். இதற்கும் தாவீதின் பிள்ளைகள் தான் நமக்கு உதாரணம்!

சில உணவு வகைகள் நமக்கு ஒத்துக்கொள்ளாது என்று  தெரிந்தும், கண்களையும், நாவையும் கட்டுப்படுத்த முடியாமல் நாம் உண்டு விட்டு அதன் விளைவை அனுபவிப்பது இல்லையா? இதற்கு யார் பொறுப்பு ஆக முடியும்? நம்முடைய முடிவின் விளைவுதானே!  ஆம் அப்படித்தான் தாவீதின் பிள்ளைகளும் நடந்து கொண்டனர். அவர்களுடைய தகப்பனாகிய தாவீதை எதிர்ப்பதாக நினைத்து தங்களுடைய வாழ்க்கையை மரணத்துக்கு உட்படுத்தினர்!

இன்று நாம் தேவனகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்களுக்கு எவ்வளவு நன்றியுடையவர்களாக இருக்கிறோம்!  அவர் கொடுக்கும் ஒவ்வொரு வாக்கையும் நாம் பற்றிகொண்டு நடக்கிறோம் அல்லவா? உன் ஜீவனுள்ள நாளெல்லாம் உன்னோடு இருப்பேன் என்ற வாக்குத்தத்தம் எனக்கு ஒவ்வொருநாளும் புதிய பெலத்தைக் கொடுக்கிறது. உன் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பேன் என்ற வாக்குத்தத்தம் என்னை தேவனை நன்றியோடு நோக்க செய்கிறது. அவரையே என் வாழ்க்கையின் மையமாக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

இன்று உங்கள் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள்? சந்திரனைப் பிடிக்க ஆவலைப் பிள்ளைகளுக்கு கொடுக்கிறீர்கள் ஆனால் பரலோகத்தில் கால் வைக்கும் ஆவலைக் கொடுக்கிறீர்களா?

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Advertisements

இதழ்:686 ஒரு தேசத்தை மாற்றிய அமைதியான சாட்சி!

2 சாமுவேல்: 6:12  தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.

2 சாமுவேல் ஆரம்பிக்கும்போது ஊசாவின் மரணத்தால் இருளாய் இருந்தாலும், அந்த இருள் சீக்கிரமே ஓபேத்ஏதோமின் சாட்சியால் மாறுகிறது.

கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தேவனுடைய பெட்டியை எடுத்து வந்ததால் ஏற்பட்ட விளைவைக் கண்ட தாவீது பயந்து அந்தப் பெட்டியை தன்னிடமாய்க் கொண்டுவராமல், ஓபேத்ஏதோமின் வீட்டிலே 3 மாதங்கள் வைத்து விட்டான். அங்கே கர்த்தரின் ஆசீர்வாதங்கள் அளவுக்கு அதிகமாய் அருளப்பட்டபோது அந்தக் குடும்பம் எல்லொருடைய கவனத்தையும் ஈர்த்தது!

தாவீது அந்த ஆசீர்வாதங்களைக் கண்டபோது அவனுடைய பயம் நீங்கியது. அவனும் மறுபடியும் கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்து கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்கு எடுத்து வர முடிவெடுத்தான்.

இன்றைய வேதாகமப் பகுதி சொல்கிறது, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குள் மகிழ்ச்சியுடனே கொண்டுவரப்பட்டது என்று! இந்த மகிழ்ச்சிக்கு உண்மையான காரணம் யார் என்று யோசியுங்கள்! ஓபேத்ஏதோமின் சாட்சி அல்லவா? அவன் தைரியமாக கர்த்தருடைய பிரசன்னம் தன் குடும்பத்தில் தங்க இடம் கொடுத்ததால் தானே!

ஓபேத்ஏதோம் எப்படி சாட்சி பகர்ந்தான்? பிரசங்கம் பண்ணினானா? யாரையும் கட்டாயப்படுத்தினானா? அற்புதங்களை செய்தானா?  தன்னுடைய வாழ்விலும், தன் குடும்பத்திலும் தேவனுடைய மகிமை ஊடுருவ செய்தான். அவனை சுற்றியுள்ளவர்கள் அவனைக் கவனிக்கத் தொடங்கினார்கள். ஊரெல்லாம் அதைப்பற்றி பேசத் தொடங்கினார்கள்!

அவனுடைய சாட்சி மற்றவர்களுடைய கண்களைத் திறந்தது! அவன் ஒன்றும் பெரிய பெயர் பலகையை அடித்து தன் வீட்டின் வாசலில் தொங்க வைக்கவில்லை! யாரூக்கும் பறைசாற்றாமலே அவன் ஒரு தேவனுடைய மனிதன் என்று அனைவரும் அறிந்து கொண்டார்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?  கிறிஸ்தவர்கள் என்ற பெயர்கொண்ட எத்தனை பேர்கள் பச்சை பொய்யை கூறுவதைப் பார்க்கிறோம்! மற்றவரை ஏமாற்றுவதையும் பார்க்கிறோம்! கிறிஸ்து அல்லாத வாழ்க்கை நடத்துவதைப் பார்க்கிறோம்! இது இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தூஷிப்பது அல்லவா?

ஓபேத்ஏதோமின் வாழ்க்கை  நமக்கு ஒரு நல்ல மாதிரியாக அமைந்துள்ளது. ஒரு மனிதனின் அமைதியான சாட்சி எப்படி ஒரு தேசத்தையே மாற்றமுடியும் என்று!

அவனுடைய சாட்சி பயத்தை மகிழ்ச்சியாக மாற்றியது ஏனெனில் அவனும் அவனுடைய குடும்பமும் கர்த்தருடைய பிரசன்னம் அவர்களுடைய வாழ்வில் ஊடுருவ இடம் கொடுத்தனர்!

நம்முடைய சாட்சி எப்படியிருக்கிறது? நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்முடைய வாழ்வில் கர்த்தரின்  மகிமையைக் காண முடிகிறதா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்