Archive | December 2010

அன்பு சகோதர சகோதரிகளே!

இயேசுவின் இனிய நாமத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு  வாழ்த்துக்கள்!

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த ராஜாவின் மலர்கள் என்ற தியான மலரை எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் பலர் இதைப் படித்து பயனடைந்து வருவதால் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

இதை நான் பெண்களுக்கான தியான மலராக எழுதிய போதிலும் அநேக சகோதர்கள் இதை வாசித்து பயன் பெறுவதாக எனக்கு எழுதினர். அதனால் புதிய ஆண்டு பரிசாக இதை குடும்ப மலராக அளிக்க விரும்புகிறேன். வேதத்தில் இடம் பெற்றிருக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தாலும், இது அனைவரும் படித்து பயன் பெறும்படி எழுதப்படும் குடும்ப மலராக புது வருடத்திலிருந்து  வெளி வரும்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் நம்அனைவரோடும் தங்குவதாக!

தங்கள் அன்பு சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்,

premasunderraj@gmail.com

மலர்:1இதழ்: 75 பாலைவனத்தில் கிடைத்த நீரோடை!

 

யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு  கொடுத்தான்;

அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான்.

         மோசே!    40 வருடங்கள் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய  ராஜகுமாரன் ஒருநாள் எபிரேயரைக் கொடுமைப் படுத்திய ஒரு எகிப்தியனை வெட்டிக் கொன்றதால், பார்வோனின் வெறுப்புக்கு ஆளாகி, சிங்காசனத்தை துறந்து, மீதியான் நாட்டின் வனாந்தரத்துக்கு ஓடிப்போனான்.

யாத்தி: 2: 15 ல் வேதம் கூறுகிறது, மோசே மீதியான் தேசத்திலே ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். அதே அதிகாரத்தில் நாம் , மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள், அவர்கள் மோசே அமர்ந்திருந்த துரவண்டை வந்து தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்தபோது, அங்கிருந்த மேய்ப்பர்கள் அவர்களை துரத்தினார்கள், அப்பொழுது மோசே அவர்களுக்கு துணைநின்று அவர்கள் மந்தைக்கு தண்ணீர் காட்டினான் , என்று வாசிக்கிறோம்.

அவர்கள் வீட்டுக்கு சீக்கிரம் வந்து சேர்ந்த காரணத்தை அவர்கள் தகப்பன் கேட்டபோது எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களை தப்புவித்து  எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான் என்றார்கள். மோசே எகிப்தைவிட்டு புறப்பட்டபோது அணிந்தருந்த எகிப்தியரின் ஆடை அவனை எகிப்தியன் என்று அந்தப் பெண்களுக்கு காட்டிற்று.

மீதியான் தேசத்தில் அவன் வாழ்ந்தபோது, அந்த பாலைவன மக்கள், அரேபியரான இஷ்மவேலருடன் தொடர்புள்ளவர்கள் என்று உணர்ந்தான். ஆதி 37 ம் அதிகாரத்தில், இந்த மீதியானியர், யோசேப்பை இஸ்மவேலரிடம் விற்றதை மறந்து விட வேண்டாம். அதுமட்டுமல்ல, மீதியானியர், ஆபிரகாம் சாராள் மரித்தபின்னர் , மணந்த கெத்தூராளின் பிள்ளைகளின் வம்சத்தினர்.

ஒன்றை நன்கு கவனியுங்கள்!

மோசே ஒரு இஸ்ரவேலன், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஈசாக்கின் வழியில் வந்தவன்.

இஸ்மவேலர், ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்த பிள்ளையின் வம்சத்தார்.

மீதியானியர், ஆபிரகாமுக்கும் கெத்தூராளுக்கும் பிறந்த பிள்ளைகளின் வம்சத்தினர்.

இந்த மூன்று வம்சங்களுக்குமே தகப்பன் ஆபிரகாம் தான். இது ஒன்றே அவர்களுக்குள் போட்டியையும் பொறாமையையும் கொண்டு வர போதுமான காரணம் அல்லவா! எங்காவது ஒரு தகப்பனின் மூன்று மனைவிமாருக்கு பிறந்த பிள்ளைகள் ஒற்றுமையாய் இருப்பதை நாம் கண்டிருக்கிறோமா?

இப்பொழுது ஒரு அழகிய ராஜகுமாரன் மீதியான் தேசத்து ஆசாரியனின் வீட்டுக்கு வருகிறான். அவனுடைய ஏழு குமாரத்திகளில் சிப்போராள் ஒருவேளை மூத்தவளாக இருந்திருக்கலாம். ஒரு ஆசாரியனின் மூத்த மகளாகிய அவள் அந்த தேசத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவளாக இருந்திருப்பாள். அவளை அவள் தகப்பன் திருமணத்தில் மோசேக்கு கொடுத்தபோது, அவள் ஒரு விலையேறப்பெற்ற பரிசாகத்தான் இருந்திருப்பாள். மீதியான் பாலைவனத்தில் மோசேக்கு கிடைத்த நீரோடையல்லவா அவள்!

பல கனவுகளோடு தன்னுடைய ராஜ குமாரனுக்காக காத்திருந்த அவளுக்கு என்ன கிடைத்தது தெரியுமா? ஒரு எபிரேய மேய்ப்பன் தான்!  40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான்! பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். அவள் கனவு பலிக்கவில்லை! அவள் கால்கள் ஓயவே இல்லை!

 சிப்போராள் தன் கணவனோடும், பிள்ளைகளோடும் அமைதியாய் மீதியான் தேசத்தில் வாழ விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண்ணாகத்தான் இருந்திருப்பாள், அவள் ஆசை நிறைவேறவில்லை!

இன்று உன் திருமண வாழ்க்கையில் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்த நீ ஒருவேளை ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று உன் உள்ளத்தில் நீ நினைக்கலாம்!

 நீ உன் கணவன் அல்லது மனைவி உன்னுடைய விருப்படிதான் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா? சரியான துணைவனை தேடிக் கண்டடைவதைவிட கர்த்தருடைய உதவியோடு சரியான துணையாக நாம் வாழ்வதுதான் முக்கியம்.  சிப்போராளைப் பார்! அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை! ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக இருந்தாள்!

 

கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்த்த எந்த குணநலனுமே இல்லையெனினும், நம்மை அளவில்லாமல் நேசிக்கிறாரே அந்த நேசத்தைதான்  நாம் நம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டும்!   

ஜெபம்: ஆண்டவரே! ஒருவரையொருவர் நேசித்து, குறைகளைப்பார்க்காமல்,நிறைகளைப் பார்த்து சந்தோஷமாய் வாழ எனக்கு பெலன் தாரும்!

மலர்:1இதழ்: 74 குடும்பம் ஒரு பரிசு!

யோவான்:13: 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன்

உங்களில் யாராவது ராஜாவின் மலர்களுக்கு புதிதாக வந்திருப்பீர்களானால், ஒரு சிறு முன்னுரை கொடுக்க விரும்புகிறேன்!

நாம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆதியாகமத்திலிருந்து ஆரம்பித்தோம். நம்முடைய வேத ஆராய்ச்சியில் நாம் பெண்களைப்பற்றி மாத்திரம் படிக்கவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்று பலரைப் பற்றிப் படித்தோம்.

ஆனால் வேதத்தில் ஏதாவது ஒரு பெண்ணின்பெயர் வரும்போது அதை நிறுத்தி, ஆராய்ந்து, அந்தப் பெண்ணின் பெயர் ஏன் வேதத்தில் இடம் பெற்றது? இவளைப் போன்ற பெண் என்னைப் போன்ற பெண்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறாள்? என்று ஆராய்வது நம் வழக்கம்.

ராஜாவின் மலர்கள் நம்மை ஆதியாகமத்திலுள்ள எல்லா பெண்களின் குடும்ப வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ள செய்தது. கடந்த சில வாரங்களாக நாம்  யாத்திராகம புத்தகத்தில் வரும் பெண்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம்.

எபிரேயக் குழந்தைகளை சிசுகொலையினின்று காத்த சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளை சந்தித்தோம்! பார்வோன் குமாரத்தியைப் பற்றியும், மோசேயின் தாயாகிய யோகெபெத் பற்றியும் அறிந்து கொண்டோம். சில நாட்களாக மோசேயின் சகோதரி மிரியாமை சந்தித்து, தேவனால் தீர்க்கதரிசி என்றழைக்கப்பட்ட, இஸ்ரவேல் மக்களுக்கு துதி ஆராதனை நடத்திய பெண்ணைப் பற்றி  பல காரியங்களை கற்றுக்கொண்டோம்.

இந்த வாரம் முழுவதும், மோசேயின் வாழ்வில் முக்கிய இடம் பிடித்த, அவன் மனைவியாகிய சிப்போராள் என்ற பெண்ணைப் பற்றி படிக்கலாம்.

நாம் மோசேயின் தாயாகிய யோகெபெத் பற்றி படிக்கும்போது அவள் பிள்ளைகளுக்கு கர்த்தராகிய தேவனைப் பற்றி கற்றுக் கொடுத்ததால் அவளுடைய மூன்று பிள்ளைகளும் இஸ்ரவேலின் தலைவர்களானார்கள், அவள் குடும்பம் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று பார்த்தோம். அதனால் குடும்பத்தில் எல்லாமே வெண்ணெயும், சர்க்கரையும் போல இருந்தது என்று எண்ணிவிடாதீர்கள்!

நாம் விசுவாசிகளாய் இருந்தால் நம் குடும்பத்தில் எல்லாமே சந்தோஷமாக அமையவேண்டும் என்று எண்ணுகிறோம்! கிறிஸ்தவர்களாக இருப்பதால் நம் குடும்பத்தில் உள்ள எல்லோரின் எண்ணங்களும் ஒன்று பட்டு விடுமா? எல்லோரும் எல்லா காரியத்திலும் ஒன்று பட்டு செயல்படுவார்களா? புதிய ஏற்பாட்டின் இரு பெருந்தலைவர்கள் பவுலும், பர்னபாவும், மாற்கு என்றழைக்கப்பட்ட யோவானை தங்களுடன் ஊழியத்துக்கு அழைத்து செல்லும் விஷயத்தில் கருத்து வேறு படவில்லையா?  அதனால் அவர்கள் பிரிந்து வேறு வேறு திசைக்கு சென்றனர் என்று வேதத்தில் வாசிக்கிறோமே!

நம் குடும்பங்களிலும் கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமே!

 வீட்டில் உள்ள பெரியவர்கள் மறைந்து போவதும், புதிய நபர்கள் திருமணத்தின்  மூலம் குடும்பத்தில் இணைக்கப்படுவதும் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிற சம்பவம் தான்! சில நேரங்களில் வேறே கலாச்சாரத்தில் உள்ள பெண்களோ அல்லது ஆண்களோ நம் குடும்ப உறுப்பினராகும்போது நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்! அவர்களை நாம் கிறிஸ்துவின் அன்போடு ஏற்றுக் கொள்கிறோமா?

அனுபவம் இல்லாமல் பேசாதீர்கள், வேறு கலாச்சாரத்திலிருந்து ஒரு பெண்ணை ஏற்றுக்கொண்டால் குடும்பத்தில் என்ன குழப்படிகள் நடக்கும்  தெரியுமா? என்று யாரோ என்னைப் பார்த்துக் கூறுவது போல உள்ளது.

அனுபவத்துடன் தான் பேசுகிறேன்! எங்கள் குடும்பத்தில், கிறிஸ்தவ குடும்பம், இந்து குடும்பம், தமிழ் நாட்டு கலாச்சாரம், வட நாட்டு கலாச்சாரம் , மேலை நாட்டு கலாச்சாரம் என்று எல்லாம் ஒன்றாகி உருகி ஒரு குடும்பம் என்ற பாத்திரமாகியிருக்கிறோம்!

 நாம் கிறிஸ்துவைப் போல அன்பினாலும் அரவணைப்பினாலும் குடும்பத்தைக் கட்டும்போது நம் குடும்பத்தில் அமைதி காணப்படும், கலாச்சாரங்களும், ஜாதி, மத வேறுபாடுகளும் பிரிவினையைக் கொண்டு வர முடியாது.

நாளையிலிருந்து சில நாட்கள் நாம், மீதியான் தேசத்து வனாந்தரத்தில் வளர்ந்த சிப்போராள் என்ற பெண்ணுக்கும், எகிப்திய நாட்டில் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாய் அரண்மனை சுகத்தில் வாழ்ந்த மோசேக்கும், மத்தியில் வளர்ந்த காதல் திருமணத்தையும், பின்னர் பெண்களாகிய நாம் கர்த்தருடைய கிருபையால் நம்முடைய குடும்ப நலனுக்காக வளர்க்க வேண்டிய குணாதிசயங்கள் இவைகளைப் பற்றி படிக்கப் போகிறோம்.

கடந்த வருடம் நாங்கள், கென்யா தேசத்தில் உள்ள  நைரோபிக்கு  சென்றிருந்தபோது ‘டெஸ்மொண்ட் டுடு விருந்தினர் விடுதியில்’ தங்கினோம். அங்கே கண்ட நீ உன் குடும்பத்தை தெரிந்துகொள்ளவில்லை, உன் குடும்பத்தார் கர்த்தர் உனக்கு கொடுத்த பரிசு ,  நீ அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு   என்ற அவருடைய வாசகம் உள்ளத்தில் நிலைத்தது.

நாம் குடும்ப உறவுகளைப் பற்றி படிக்கப் போகிற இந்த நாட்களில் தேவன் நமக்கு பரிசாக அளித்திருக்கிற நம் குடும்பத்துக்காக தேவனுக்கு நற்றி செலுத்துவோம்!

ஜெபம்: நல்ல ஆண்டவரே! என்னுடைய குடும்பத்துக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். எங்கள் குடும்பத்தில் என்றும் சந்தோஷமும்  சமாதானமும் நிலைத்திருக்கட்டும்.  ஆமென்!

மலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்?????

 

எண்ணா:12: 13, 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி; தேவனே அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான்.

அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலகப்பட்டிருந்தாள். மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்.

 

தேவனுடைய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அநேக மிஷனரிகளைப் பற்றி படிக்கும்போது நாம் இவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று எண்ணுவதுண்டு!

அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறுபவர் டாக்டர் பால் பிராண்ட் என்ற மருத்துவரும் அவர் மனைவி மார்கரெட் அம்மையாரும்.  அவர் நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு மிஷனரி பெற்றோருக்கு பிறந்தவர். தன் தகப்பனைப் போல லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு  1946 ல் இந்தியாவுக்கு சேவை செய்ய திரும்பி வந்தனர்.

       நம் ஊரில் குஷ்டரோகிகள் பிச்சை எடுப்பதைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் சரீரம் உருவிழந்து போயிருக்கும். இப்படிப்பட்ட சில குஷ்டரோகிகள் பிச்சையெடுத்துக் கொண்டு வருவதை டாக்டர் பால் பிராண்ட் அவர்கள், பார்த்தார். அவர் அப்பொழுது  வேலூரில் வாழ்ந்து வந்தார். அங்கு  அந்த கொடிய நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். அதுவரை குஷடரோகிகளின் கைகளும் கால்களும் ஏன் இவ்வாறு உருமாறி அரிக்கப்பட்டு போகிறது என்று உலகத்திற்கு தெரியாது, இந்த நோய் வந்தால் இப்படி ஆகிவிடும் என்று தான் தெரியும்  டாக்டர் பிராண்ட்டுடைய ஆராய்ச்சிக்கு பின், குஷ்டரோகம் முதலாவது ஒரு மனிதனின் நரம்புகளை பாதிக்கிறது, பின்னர் அதை சார்ந்த தசைகளையும் பாதிக்கிறது, ஆனால் முதலில் அது நரம்பை பாதிப்பதால் அதை சுற்றிய தசை அழுகும்போது மனிதன் வலியை உணர்வதில்லை என்ற பேருண்மையை உலகுத்துக்கு அளித்தார்.

இந்த மருத்துவ ஆராய்ச்சியை ஏன் நான் இன்று எழுதுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். நாம் நேற்று வேதத்தில் முதலாவது தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்ட மிரியாம், தேவனுக்கு துதி ஆராதனை நடத்திய பெண்மணி, மோசேக்கு எதிராக முறுமுறுத்ததால் குஷ்டரோகியானாள் என்று படித்தோம்.

குஷ்டரோகம் ஒருவனின் சரீரத்தின் நரம்பை பாதிப்பதுபோல், முறுமுறுப்பு நம்முடைய ஆத்துமாவின் நரம்பை பாதிக்கிறது! குஷ்டரோகம் சரீரத்தில் உணர்வு இல்லாமல் செய்வதால் தசை அழுகுவது கூட தெரியாது. முறுமுறுப்பு ஆத்துமத்தில் உணர்வு இல்லாமல் செய்வதால், நாம் தேவனை துதிப்பதில் பெறும் வல்லமையை இழந்து போகிறோம்!

 முதலில் மிரியாம் குஷ்டரோகியானாள் என்று வாசித்ததும், கர்த்தர் இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கக் கூடாது என்று எண்ணினேன். ஆனால் குஷ்டரோகம் சரீரத்திற்கு என்ன கேடு விளைவித்ததோ அதையே முறுமுறுப்பும், கசப்பு எண்ணங்களும் நம் ஆத்துமாவிற்கு செய்யும் என்று உணர்ந்த போது, கர்த்தர் நமக்கு போதிப்பதற்காகத்தான் இதை அனுமதித்தார் என்பதை உணர்ந்தேன்!

நாம் எத்தனை முறை, கர்த்தருடைய ஊழியக்காரர்களைப் பற்றி குறை கூறுகிறோம், முறுமுறுகிறோம் என்று யோசித்து பாருங்கள்!

1 பேதுரு: 2: 17 கூறுகிறது எல்லாரையும் கனம் பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்பு கூறுங்கள்; தேவனுக்கு பயந்திருங்கள்; ராஜாவை கனம்பண்ணுங்கள் என்று.

 

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தர் மிரியாமை கைவிடவில்லை! ஒரே வாரத்தில் அவள் சுத்தமானாள்! இஸ்ரவேல் மக்கள் அவள் சுகமாகும்வரை காத்திருந்து பிரயாணத்தை தொடர்ந்தனர்! மிரியாம் மறுபடியும் இஸ்ரவேலின் முதல் தீர்க்கதரிசி என்ற உன்னத பதவியைத் தொடர்ந்தாள்! மிரியாமின் கடந்த காலத்தின் கசப்பான எண்ணங்கள், வெறுப்பான பேச்சு, முறுமுறுப்பு இவை யாவும் கர்த்தர் அவளை எதிர்காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாக உபயோகப்படுத்த தடையாக இருக்கவில்லை.

நாம்கூட எத்தனை முறை கசப்பான எண்ணங்கள், வெறுப்பான பேச்சு, முறுமுறுப்பு இவைகளுக்கு நம் வாழ்க்கையில் இடம் கொடுத்து, ஆசிர்வாதத்தை இழந்து போகிறோம். இவ்வாறான தேவையில்லாத எண்ணமும், பேச்சும், நம்முடைய ஆத்துமாவையும், இருதயத்தையும் , நமக்கு தெரியாமலே குஷ்டரோகம் போல அரித்து விடுகிறது. இதற்கு சரியான மருந்து துதியும் ஸ்தோத்திரங்களும்தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஜெபம்: ஆண்டவரே மற்றவர்களை பற்றி குற்றமாய் பேசும் பழக்கத்தை என்னைவிட்டு எடுத்துப் போடும். முறுமுறுப்பு உமக்கு பிடிக்காத குணம் என்பதை எனக்கு உணர்த்தும். ஆமென்!

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.