இதழ் : 700 விசேஷித்த நியாயமும் நீதியும்!

2 சாமுவேல் 8:15 இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மீதும் ராஜாவாயிருந்தான். அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்து வந்தான்.

 

நாம் இந்த நியாயம், நீதி என்ற வார்த்தைகளைக் கேட்கும்போது என்ன ஞாபகம் வரும்? நியாயம் என்ற வார்த்தைக்கு இன்றைய அரசியலும், நீதி என்ற வார்த்தைக்கு நீதி கொடுக்கும் தெய்வமும் தான்!

ஆனால் வேதத்தை கவனமாகப் படிக்கும்போது, இந்த வார்த்தைகள் இரண்டும் வெகு நெருக்கமாக அமைந்துள்ளது. நிச்சயமாக கர்த்தருடைய பிரதிநிதிகளாயிருந்தவர்கள் இதை தங்களுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினர். உண்மையில் பார்த்தால், நீதி நியாயம் என்று வாய்மொழியாகப் பேசித்திரியாமல்,  இவை இரண்டையும் அவர்கள் வாழ்ந்து காட்டினர்.

இதை கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்! நீதி என்ற வார்த்தைக்கு அல்லது எபிரேய மொழியில் ‘ tzedek’ என்ற வார்த்தைக்கு, நேர்மை அல்லது உண்மை என்ற அர்த்தம் வரும்.

இதை மனதில் கொண்டு இன்றைய வேதாகமப் பகுதியைக் காண்போம். தாவீது விசேஷித்த பெலனும், விசேஷித்த பெருதன்மையையும் கொண்டவனாய் இஸ்ரவேல் மக்களுக்கு முன் சாட்சியாக வாழ்ந்தது மட்டும் அல்லாமல் விசேஷித்த நீதியையும் கொண்டவனாய் இருந்தான்.

பரலோக தேவனின் குணமாகிய நியாயமும் நீதியும் கொண்டவனாய் இஸ்ரவேலை ஆண்டான். ஒரு நிமிஷம்! தாவீதினுடைய ஆட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமா நியாயம், நீதி கிடைத்தது?  எல்லா ஜனத்துக்கும் கிடைத்தது என்று வேதம் சொல்கிறது. இது ஒன்றும் அவன் ஓட்டு வாங்க உபயோகப்படுத்தின சொற்கள் அல்ல!  அவனுடைய ஆட்சியின் அடிப்படையே அவனுடைய நியாயமும், நீதியும் தான்!

நியாயமும், நீதியும், நேர்மையும், உண்மையும்  கொண்ட யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? இவரை முற்றிலும் நம்பலாம் என்ற குணம் உண்டா?  நாம் அப்படி ஒருவரை நம்ப ஆரம்பித்தால் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்போம்! அவர் நம்மை கைவிட மாட்டார் என்று நம்புவோம். இதைத்தான் மக்கள் தாவீதிடம் கண்டனர்.

நேர்மையான, நியாயமான வாழ்க்கை!  இந்த வார்த்தைகள் நாம் யார் என்று காட்டுபவை அல்ல! இவை நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் வாழ்ந்து காட்ட வேண்டுபவை! இவை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்று உலகத்துக்கு எடுத்துக் காட்டுபவை! இவை நம்மிடம் உண்டா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Advertisements

இதழ்: 699 கொடுப்பதில் பெருந்தன்மை!

2 சாமுவேல் 8: 10 – 12  …. மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டு முட்டுகளைக் கொண்டு வந்தான். அவன் கொண்டு வந்தவைகளைத் தாவீது ராஜா கீழ்ப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர் , பெலிஸ்தர்,அமலேக்கியர்,என்னும் சகல்ஜாதியார்களிடத்திலும் ….. சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும்  எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடும் கூடக் கர்த்தருக்கு பிரதிஷ்டைப்பண்ணினான்.

நான் இந்த 2 சாமுவேல் 8 போன்ற அதிகாரங்களை என்றுமே கவனம் செலுத்தி படித்ததேயில்லை. ஆனால் மிக சிறிதே கவனம் செலுத்தப்படும் இந்த அதிகாரம் என்னை முற்றிலும் மாற்றியது என்றே சொல்லலாம்.

நாம் முன்பு படித்தது போல தாவீது கர்த்தரால் விசேஷமான ஆசீர்வாதத்தை பெற்றிருந்தான். கர்த்தர் அவனை பல விதங்களில் ஆசீர்வதித்ததை மக்கள் கண்கூடாகக் கண்டனர்.   தாவீதின் குடும்பம் மட்டுமல்ல, இஸ்ரவேல் அனைத்தும் தாவீதை ஒரு சாட்சியாகப் பார்த்தனர்.  பூலோகம் மட்டுமல்ல பரலோகமும் கூடத்தான்! ஏனெனில் கர்த்தர் தாவீதைத் தம்முடைய இருதயத்திற்கேற்றவன் என்று சாட்சி பகர்ந்ததால்.

தாவீதால் பரலோகத்தின் வாசலை எப்பொழுது வேண்டுமானாலும் தட்டி தன்னுடைய காரியத்தை சாதிக்க முடியும் என்பது அவன் செய்த யுத்தங்களையும், அவன் அடைந்த வெற்றிகளையும் பார்க்கும்போது தெரிகிறது அல்லவா?

அவனை சுற்றியிருந்த கானானியர் இந்த அற்புதத்தைக் கண்ட போது, ஒருவன் மாத்திரம் பொன்னையும், வெள்ளியையும் பலவிதமான பரிசுகளையும் கொண்டு வந்து தாவீதைப் பிரியப்படுத்தினான். தாவீது இதில் அவ்வளவு சந்தோஷப்படவில்லை என்று அந்த அதிகாரம் விளக்கினாலும், இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய கருத்து ஒன்று உள்ளது.

தாவீது இந்தப் பரிசுகளைப்பெற்று தன்னுடைய குடும்ப சொத்தோடு சேர்த்திருக்கலாம்! அவை ராஜாவிற்கு அளிக்கப்படவை!  அதைக்குறித்து யாரும் எதுவும் பேசியிருக்க மாட்டார்கள்! அவன் இஸ்ரவேலுக்காக கடினமாக யுத்தங்களை மேற்கொண்டிருந்தான்.

ஆனால் தாவீது அப்படி செய்யவில்லை! யோராம் கொண்டு வந்த பரிசுகளை மட்டும் அல்ல,  தன்னுடைய எல்லா யுத்தங்களில் கிடைத்த பொருட்களையும் அவன் தேவனுக்கு சொந்தமாக்கினான்! ஒன்று விடாமல் அத்தனையையும் கர்த்தருக்கு அர்ப்பணித்தான்.

ஏன் அப்படி செய்தான்? ஏனெனில் தன்னுடைய வெற்றி அனைத்தும் தன்னுடைய பெலத்தால் அல்ல, கர்த்ததுடைய பெலத்தால் கிடைத்தவை என்று அவன் அறிவான். அவனுடைய இந்த விசேஷமான செயல் அவன் விசேஷமான பரலோகத் தேவன் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை காட்டியது.

பரிசுகளை தனக்கு சொத்துக்களாக குவிக்காமல் கர்த்தருக்கு அர்ப்பணித்ததைக் கண்ட இஸ்ரவேலரும், கானானியரும் யார் இந்த வெற்றிக்கு காரணம், யார் தாவீதோடு இருக்கிறார், யார் இந்த தேவன்  என்பதை புரிந்து கொள்ள ஒரு சாட்சியாக அமைந்தது.

உன்னிடம் கர்த்தருக்கு கொடுப்பதில் பெருந்தன்மை காணப்படுகிறதா? எத்தனை கிருபைகளை அளித்திருக்கும் நமக்கு அளித்திருக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்?

சிந்தித்து ஜெபியுங்கள்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதழ்: 698 விசேஷித்த பெலன்!

2 சாமுவேல்8: 1-3, 5,6  தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து……. அவன் மோவாபியரையும் முறிய அடித்து……. ரேகாபின் குமாரனாகிய ஆதாசேர் என்னும் சோபாவின் ராஜா….தாவீது அவனையும் முறிய அடித்து…….தாவீது சீரியரின் இருபதீராயிரம் பேரை வெட்டிப்போட்டு…..தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

சில நாட்களாக பெலவீனத்தை அகற்றி பெலனூட்டும் காய்கறிகள், உணவு வகைகள் பற்றி நிறைய படிக்கிறேன்.  இன்றைய வேதாகமப் பகுதியைப் படிக்கும்போது தாவீது அப்படி என்னதான் சாப்பிட்டிருப்பான், அவன் இவ்வளவு பலசாலியாக இருந்ததற்கு என்ன காரணம் என்று யோசிக்கத் தோன்றியது. தாவீதின் காலத்தில் யுத்தங்கள் வானில் நடக்கவில்லை, தரையில் நடந்தது. இந்த யுத்தத்தை நடத்த அவர்கள் அநேக நாட்கள் மலைகளிலும், வனாந்தரத்திலும் செலவிட வேண்டியிருந்தது.

இந்த அதிகாரம் என் மனதை சரித்திரத்தில் தாவீது வாழ்ந்த நாட்களுக்கு இழுத்து சென்றது. என்னுடைய ஹீரோவான தாவீது சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றுத் திரும்புவதைக் கண்டு கண்கள் மலர்ந்தது. உலகத் தலைவன் போல் எல்லா நாடுகளையும் வெற்றி சிறந்தார் என் தலைவர். ஆனால் என்னுடைய தலைவனான தாவீது ஒன்றும் தனி மனித சேனை அல்ல! அவருக்கு உதவி இருந்தது! தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். இதுதான் உண்மை!

இதை நன்கு உணர்ந்த தாவீது தன்னுடைய சங்கீதங்களில், என் பெலனாகிய கர்த்தாவே, கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார், என் பெலனே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் என்று கர்த்தர் தனக்கு பெலமாயிருந்ததைப் பற்றி எழுதுவதைப் பார்க்கிறோம்.

தாவீதின் வெற்றிக்கு காரணம் அவன் சத்தான உணவு உண்டது அல்ல என்று அவனுக்கு நன்கு தெரியும்.

இன்று உன்னுடைய போராட்டம் உன்னுடைய பெலத்தை மிஞ்சியது என்று பயப்படுகிறாயா? நம்முடைய அன்றாட வாழ்வின் போராட்டங்களில் கர்த்தரே நம் பெலனாயிருப்பார்! பயப்படாதே! உன்னுடைய அரணும், கோட்டையுமான கர்த்தரை நோக்கிப்பார்! தாவீதைக் காப்பாற்றிய அதே தேவன் உன்னையும் பாதுகாத்து உனக்கு வெற்றியளிப்பார்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ்: 697 விசேஷமான எதிர்பார்ப்பு!

2 சாமுவேல்: 7: 15  உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினது போல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.

பரலோகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்ற தாவீதிடம் கர்த்தருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லும் கர்த்தருக்கு உன்னிடமும் பெரிய எதிர்பார்ப்பு உண்டு!

சங்கீதம் 139:16 ல் என் கருவை உம் கண்கள் கண்டது.  என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும்…. உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது என்ற தாவீதின் வார்த்தைகள் எனக்கு பயத்தைக் கொடுக்கும் வார்த்தைகள். உங்களைப்பற்றி எனக்குத் தெரியாது ஆனால் தேவனாகிய கர்த்தர் நான் கருவில் உருவாகும் போதே என்னைத் தெரிந்து கொண்டிருக்கிறார், என்னுடைய வாழ்வில் அவருடைய நோக்கம் பெரிது என்று எண்ணும்போது எனக்கு சற்று பயம் தான் வரும்.

தேவனை நேசிக்கும் ஒவ்வொரு பிள்ளைகளின் வாழ்க்கையிலும் அவர் மிகப்பெரிய நோக்கம் வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல! இஸ்ரவேல் மக்களும் கூட தாவீதிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். தாவீதின் வாழ்க்கையில் தேவனுடைய ஆசீர்வாதம் பலவகைகளில் அருளப்படுவதைக் கண்ட மக்கள் தாவீது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தனர். தாவீதுடைய நடை, உடை, பாவனையெல்லாம் கர்த்தரை பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

தாவீதிடம் கர்த்தருடைய குணமான இரக்கம், தயவு போன்ற நற்குணம் நிறைந்து காணப்பட்டது. தாவீதின் நற்குணங்களைக் கண்ட மக்கள் தாவீதின் தேவனாகியக் கர்த்தரின் குண நலன்களை தாங்களும் அடைய வேண்டினர். ஒருவரையொருவர் அன்புடன் நடத்தினர். இஸ்ரவேலை சுற்றியுள்ள மக்களும் இதைக் காண முடிந்தது.

தாவீது தேவனை நோக்கிப்பார்த்து, அவரால் கனம் பெற்றபோது, அவனையும் அவன் சந்ததியையும் அவர் ஆசீர்வதித்தபோது, அவன் எப்படிப்பட்ட சாட்சியை தன் மக்கள் முன்பு வைக்கிறான் பாருங்கள்!

ஆனால் அப்படிப்பட்ட விசேஷமாய் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவன் சரீரப்பிரகாரமான பாவத்தில் விழுந்தபோது அவனுடைய ஜனம் மட்டுமல்ல, அவர்களை சுற்றியிருந்த அனைவரும் தாவீதையும், அவனுடைய தேவனையும் கூட பரிகாரம் செய்தனர்.

இது நம்மை எச்சரிக்கும் காரியம் அல்லவா? கர்த்தர் உன்னை நேசிப்பதால், உன்னை ஆசீர்வதிப்பதால், உன்னோடு பேசுவதால், உன்னை நோக்கிப்பார்க்கும் உன் குடும்பமும், உன்னுடைய சமுதாயமும் உன் வாழ்க்கையின் மூலம் அநேக காரியங்களைக் கற்றுக் கொள்ள ஆவலாய் உள்ளனர். ஆனால் உன்னுடைய சாட்சி தவறும் போது நீ மட்டுமல்ல, உன் தேவனாகிய கர்த்தரும்கூட பரிகாரத்துக்குள்ளாகிறார்.

நான் கருவாய் உருவானபோதே என்னைக்கண்ட தேவன் என் வாழ்க்கையில் என்ன நோக்கம் கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கும்போது அதைத்தான் நானும் என் வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்ளவேண்டும் என்று ஜெபிப்பேன்! நீங்கள் எப்படி?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 696 தலைமுறைக்கான ஆசீர்வாதம்!

2 சாமுவேல்: 7: 12 உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப் பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி அவன் ராஜ்யத்தை நிலைபடுத்துவேன்.

இங்கு தாவீதுக்கு கர்த்தர் ஒரு பெரிய ஆசீர்வாதமான வாக்குத்தத்தைக் கொடுப்பதைப் பார்க்கிறோம். அவனுடைய தலைமுறைக்கான ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வேலைகளை விட்டு இளைப்பாறி, கர்த்தரோடு உறவாடி அவரை நோக்கிப்பார்த்தபோது கர்த்தர் அவனுக்கு கொடுத்த ஆசீர்வாதம்.

தாவீது தன்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்கள்மீது அதிக அக்கறையும் பாசமும் காட்டியதாகத் தெரியவில்லை. கணக்கில்லாத பெண்களை மணந்தும், மறுமனையாட்டிகளாகக்கொண்டும் திருமண பந்தத்தை அவமதித்தான். அப்படியானால் இந்த வாக்குத்தத்தம் எப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்பட்டது என்று நாம் நினைக்கலாம். கர்த்தர் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தைப் போலத்தான் தாவீதிடமும் நீ என்னை பின்பற்றினால் உன்னை ஆசீர்வதிப்பேன் உன்னுடைய சந்ததியையும் ஆசீர்வதிப்பேன் என்று கூறுகிறார்.தேவனாகிய கர்த்தர் மேல் நம்முடைய வாழ்க்கை அமைக்கப்படும்போது மட்டுமே இந்த ஆசீர்வாதம் கொடுக்கப்படும்.

ஆனால் நாம் நம் வாழ்க்கையில் நம்முடைய சுய சித்தத்தின்படி வாழ ஆரம்பிக்கும்போது, நமக்குப் பிரியமானபடி வாழும்போது அதற்குரிய பலனும் நம்மைத்தொடரும் என்பதை நாம் மறந்தே போகிறோம். இதற்கும் தாவீதின் பிள்ளைகள் தான் நமக்கு உதாரணம்!

சில உணவு வகைகள் நமக்கு ஒத்துக்கொள்ளாது என்று  தெரிந்தும், கண்களையும், நாவையும் கட்டுப்படுத்த முடியாமல் நாம் உண்டு விட்டு அதன் விளைவை அனுபவிப்பது இல்லையா? இதற்கு யார் பொறுப்பு ஆக முடியும்? நம்முடைய முடிவின் விளைவுதானே!  ஆம் அப்படித்தான் தாவீதின் பிள்ளைகளும் நடந்து கொண்டனர். அவர்களுடைய தகப்பனாகிய தாவீதை எதிர்ப்பதாக நினைத்து தங்களுடைய வாழ்க்கையை மரணத்துக்கு உட்படுத்தினர்!

இன்று நாம் தேவனகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்களுக்கு எவ்வளவு நன்றியுடையவர்களாக இருக்கிறோம்!  அவர் கொடுக்கும் ஒவ்வொரு வாக்கையும் நாம் பற்றிகொண்டு நடக்கிறோம் அல்லவா? உன் ஜீவனுள்ள நாளெல்லாம் உன்னோடு இருப்பேன் என்ற வாக்குத்தத்தம் எனக்கு ஒவ்வொருநாளும் புதிய பெலத்தைக் கொடுக்கிறது. உன் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பேன் என்ற வாக்குத்தத்தம் என்னை தேவனை நன்றியோடு நோக்க செய்கிறது. அவரையே என் வாழ்க்கையின் மையமாக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

இன்று உங்கள் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள்? சந்திரனைப் பிடிக்க ஆவலைப் பிள்ளைகளுக்கு கொடுக்கிறீர்கள் ஆனால் பரலோகத்தில் கால் வைக்கும் ஆவலைக் கொடுக்கிறீர்களா?

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 695 எவைகள் முக்கியம்?

2 சாமுவேல்: 7: 8,9  இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு  அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்துக்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.

2 சாமுவேல் 7: 8-29 தேவனுடைய சித்தத்துக்குள் நாம் நடக்கும் போது நம்முடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதை போதிக்கும் ஒரு வேதாகமப் பகுதியாகும்.

தாவீது தன் கண்களை மேல் நோக்கிப் பார்த்து தேவனுடைய பெட்டி நிரந்தரமாகத் தங்கும் ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று தரிசனம் கண்ட பின், தேவனாகிய கர்த்தர் தாவீதுடைய நண்பனும், தீர்க்கதரிசியுமாகிய நாத்தான் மூலம் பேசிய காரியம் என்னவெனில், தாவீதிடம் சொல்லு, அவன் அல்ல! நானே அவனைத் தெரிந்துகொண்டேன்!, ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அவனை என்னுடைய ஜனங்களுக்கு ராஜாவாக உயர்த்தினேன். சமன்வெளியில் அவனோடு இருந்த நான் சிம்மாசனத்திலும் அவனோடு இருப்பேன்!

எத்தனை பெரிய வாக்குத்தத்தம்! தாவீது தன் வாழ்வில் தேவனை மையமாக வைத்து, தேவனுடைய பணியைத் தன் தரிசனமாக கொண்டவுடன் கர்த்தர் அவனோடு கூட இருப்பதாக வாக்களிக்கிறார். தாவீது தரிசனமில்லாமல் அலைந்து கொண்டிருந்தபோது அவனுக்கு இந்த வாக்குத்தத்தம் அளிக்கப்படவில்லை. தேவனுடைய சித்தத்தை செய்ய அவன் சிந்திக்க ஆரம்பித்தபோதுதான் அளிக்கப்பட்டது.

தாவீது தேவனுடைய சித்தத்தின் கீழ் வாழ ஆரம்பித்தவுடன் அவனுக்கு கஷ்டமே வராது என்றுதானே கடவுள் சொன்னார்.  கர்த்தர் அவன் சத்துருக்களையெல்லாம் நிர்மூலமாக்குவேன் என்று சொன்னாரே!  அப்படியானால் நானும் என்னை தேவனுடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து விட்டால் எனக்கு துன்பமே வராது அல்லவா? என்று நீங்கள் கேட்கலாம்!  உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அதற்கு என் பதில், நிச்சயமாக அப்படியல்ல என்பதுதான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியவிதமாய், முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும். ( மத்:6:33)

இவைகளெல்லாம் என்றால் எவைகள்? கஷடமில்லாத, துன்பமில்லாத வாழ்க்கையா?  இல்லை! நிரந்தரமான தேவ பிரசன்னம்! எல்லாவற்றிலும், எல்லா நேரங்களிலும் நம்மோடிருக்கும் பிரசன்னம்!

ஒருவேளை இன்று தீர்க்கதரிசியாகிய நாத்தான் நம்மிடம் வந்து தாவீதைப்போல கர்த்தருடைய ஆசீர்வாதம் உன்னுடைய வாழ்க்கையில் இருக்கிறது என்று சொல்வாரானால் நாம் எதை கர்த்தரிடம் எதிர்பார்ப்போம்? நிரந்தரமான அவருடைய பிரசன்னத்தையா அல்லது இலகுவான உலக வாழ்க்கையையா?  எவைகள் முக்கியம்? யோசித்துப் பார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ்: 694 மேல் நோக்கிய தரிசனம்!

2 சாமுவேல் 7: 2,3 ராஜா தீர்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது,தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.

அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும். கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.

உங்களுடைய மனதில் என்றாவது ஒரு பாரம் அழுத்துவது போல உணர்ந்திருக்கிறீர்களா? ஆனால் அது என்ன பாரம் என்றே தெரியவில்லை அல்லவா? ஒருவேளை யாருக்கோ ஒருவருக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறது என்ற ஒரு பாரம். அல்லது ஒருவேளை எங்கோ உடனே போகவேண்டும் என்ற ஒரு பாரம்!

இதைப்போன்ற ஒரு பாரமும், மன உருத்தலும் தான் தாவீதை வாதித்தது. கர்த்தர் அவன் வீட்டில் இளைப்பாறும் சூழ்நிலயை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். தன்னுடைய வீட்டில் இளைப்பாறிய அவன் தேவனோடு உறவாடிக் கொண்டிருந்தபோது அவன் கண்கள் திறந்தது. அவன் தேவனாகிய கர்த்தருக்கு தான் செய்ய வேண்டிய கடமை ஒன்று உள்ளதை உணர்ந்தான்.

தன்னுடைய நண்பனும் தீர்க்கதரிசியுமான நாத்தானை அழைத்து, தன் உள்ளத்தின் பாரத்தை பற்றி கூறுகிறான்.  நான் கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம் பண்ணும்போது தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்று தன் பாரத்தை கூறுகிறான்.

தாவீது தன் வேலைகளிலிருந்து சற்று ஒய்ந்து இளைப்பாறியபோது தேவனுடைய பெட்டிக்கு ஒரு நிரந்தர வாசஸ்தலம் வேண்டும் என்பதை உணர்ந்தான். உலகத்தின் பல்வேறு சத்தங்களுக்கு நம்முடைய செவிகள் அடைபட்டு நம்முடைய ஆத்துமா கர்த்தரை மட்டும் தேடும்போதுதான் தேவன் நம்முடைய செவிகளில் மெல்லிய சத்தத்தோடு கூறும் காரியங்கள் நமக்கு கேட்கும். இந்த உலகத்தில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பணி நமக்கு புலன்படும்.

இன்று நம்முடைய செவி தேவனுடைய சத்தத்தைக் கேட்கவும், நம்முடைய கண்கள் தேவனுடைய தரிசனத்தைக் காணவும் தயாராக உள்ளதா? தாவீதைப் போல உன்னுடைய எல்லா வேலைகளிலிருந்தும் சற்று விடுபட்டு கர்த்தரிடம் சற்று நேரம் செலவிடு! தாவீதைப் போல உன் கண்கள் திறக்கப்படும்!

நீ உனக்குள் காணும் தரிசனம் உன் கடமையாக மாறும்!

நீ உன்னை சுற்றிக் காணும் தரிசனம் உன் ஆர்வமும், நாட்டமுமாகும்!

நீ மேல் நோக்கி காணும் தரிசனம் உன் விசுவாசமாகும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்