Archives

இதழ்: 754 தேவனுக்கு விரோதமான செயல்!

2 சாமுவேல் 12:13 அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான்.

மறுபடியும் இந்த தியானத்தைத் தொடரக் கிருபை அளித்த தேவனுக்கு ஸ்தோத்திரம்!

யூதாவையும் இஸ்ரவேலையும் வல்லமையோடு ஆண்ட தாவீது தன்னுடைய மகிமையின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் போது தான் தீர்க்கதரிசியாகிய நாத்தான் அவனிடம் வந்து, அவனும் ஒரு சாதாரண மனிதன் தான், ஒரு பாவிதான் என்று நினைவூட்டினான்!

தாவீதுக்கு தன்னுடைய நிலையை உணர ஒரு கணம் கூட ஆகவில்லை! நம்முடைய இருதயத்தில் கொளுந்து விட்டெரியும் வார்த்தைகளில் அவன் நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தேன் என்றான். நாம் கடந்த நாட்களில் படித்தது போல கர்த்தர் அவனிடம் நீ ஏன் என்னை அசட்டை பண்ணினாய் என்று கேட்டபோது தான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ் செய்ததை உணர்ந்தான். தன்னை உருவாக்கின தேவனை துக்கப்படுத்தியதையும் உணர்ந்தான்.

நமக்கும் இது ஒரு முக்கியமான பாடம் என்று நினைக்கிறேன். நம்முடைய செயல்கள் நம்ம்மமை சுற்றியுள்ளவர்களை மாத்திரம் பாதிப்பது போலத் தோன்றினாலும், அவை நம்முடைய பரமத் தகப்பனையே அதிகமாக பாதிக்கின்றன. இதைக் கேட்க எனக்கு சற்றுகூட இஷ்டமில்லை! நீங்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஆனால் இதுதான் உண்மை!

நம்முடைய ஒவ்வொரு பாவமும் நம்முடைய இருதயத்தில் நாம் தேவனுக்கு விரோதமாய்ப் போராடுவது போலத்தான். தேவனாகியக் கர்த்தரைப் போன்ற இருதயம் இல்லாமல், பரலோக தேவனின் சித்தத்தை இந்த பூமியில் நிறைவேற்றாமல், தாவீது தன்னையே இந்த பூலோகத்தின் ராஜாவாகவும், ஆளுகை செய்பவனாகவும் நினைத்து தன்னுடைய இஷ்டம் போல நடந்து கொண்டான்.

இதைப்படிக்கும்போதுக், அன்று ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாள் என்ற தேவனால் அருமையாக படைக்கப்பட்ட, தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்த அந்த இருவர், நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே….. நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்   ( ஆதி:3:5) என்ற வார்த்தைகளை நம்பி, அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே ஆளுகை செய்ய முடிவு எடுத்தார்களே அந்தக் கொடூரம்தான் ஞாபகம் வந்தது. விரோதமான இருதயம் தான் தேவனுடைய ஆளுகையை புறம்பேத் தள்ளும்.

பாவத்தில் சிறிய பாவம், பெரிய பாவம் என்று ஒன்றும் இல்லை என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஏனெனில் நாம் விரோதிக்க சிறிய கடவுள், பெரிய கடவுள் என்று யாரும் இல்லை! நாம் செய்யும் ஒவ்வொரு தவறும் நம்மை ஆளுகை செய்யும் தேவனுக்கு விரோதமானதுதான்!

தாவீது தன்னுடைய பாவத்தை உணர்ந்தவுடன் தான் தன்னை ஆளுகை செய்த தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக தான் பாவம் செய்ததை உணர்ந்தான்! தான் யாருடைய இருதயத்தை பிரியப்படுத்த விரும்பினானோ அந்த தேவனாகிய கர்த்தருடைய இருதயத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டதை உணர்ந்தான்!

இன்று நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? கர்த்தருடைய இருதயத்தை பிரியப்படுத்தும்படி நடந்து கொள்கிறோமா அல்லது அவருடைய இருதயத்தை காயப்படுத்திக் கொண்டிருக்கிறோமா?உன்னுடைய ஒவ்வொரு பாவமும் தேவனுடைய முகத்தில் ஓங்கி அறைவது போலத்தான்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Advertisements

இதழ்: 753 என் எலும்புகளில் சவுக்கியமில்லை!

சங்கீதம் 38: 3,4  உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று. அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.

இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் பார்க்கும் தாவீதின் வார்த்தைகள் எனக்கு பாவத்தை நாம் நம்முடைய வாழ்வில் அனுமதிக்கும்போது வரும் விளைவு எப்படியிருக்கும் என்று விளக்கிற்று!

தகப்பனுடைய ஆடுகளை மேய்த்த மேய்ப்பனாகத் தன் வாழ்வைத் தொடங்கிய தாவீது, மந்தைவெளியில் தேவனாகியக் கர்த்தரை நோக்கிப்பார்த்த தாவீது, எங்கோ ஒரு இடத்தில் பாவம் அவனுடைய வாழ்வில் விளையாட இடம் கொடுத்து விட்டான். கடைசியில் அவன் வேதத்தில் இடம் பெற்ற ஒரு மோசமான விபசாரத்திற்கு சொந்தக்காரனாகிவிட்டான்.

ஒரே ஒரு கணம் அவன் தவறியது தாவீதை என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை என்று எழுத வைத்தது.

அவனுடைய குடும்பம் அனுபவித்த துன்பங்களை இன்று நாம் சிந்திக்க வேண்டாம் ஆனால் அவன் தன்னுடைய வாழ்வில் அனுபவித்த வேதனையைப் பாருங்கள்!

தாவீது தன்னுடைய மாம்சத்தில் ஆரோகியமில்லை என்று சொல்லுகிறான். பாவம் நம்முடைய ஆரோக்கியத்தை சிதைத்து விடுகிறது! வியாதியும், வேதனையும் தொடருகின்றன! அதுமட்டுமல்ல அவனுடைய  பாவம் ஒரு வெள்ளம் போல, ஒரு சுனாமி போல அவனுடைய தலைக்கு மேலாக பெருகிற்று. அவை தன்னை பாரச்சுமையைப் போல தாங்கமுடியாமல் பாரமாக அழுத்தியது என்று கூறுகிறான்.

பாரச்சுமையைத் தாங்கமுடியாமல் குனிந்து கொண்டு செல்லும் ஒருவன் தள்ளாடி நடப்பதை நம்முடைய மனக்கண்ணால் பாருங்கள்! அழகான மாளிகையில், உலக அழகி பத்சேபாளுடன் இருந்த அந்த கணம் அவனுக்கு எத்தனை பெரிய பாரமாக மாறிவிட்டது பாருங்கள்! அதைத் தாங்கமுடியாமல் அவன் தத்தளிப்பதைப் பார்க்கிறோம்.

சங்கீதம் 38 ல் தாவீது எழுதியவை, பாவம் அவனுடைய வாழ்வில் ஏற்படுத்திய பேரழிவைக் தெளிவாக காட்டுகின்றன. தாவீது தேவனுடைய கட்டளையை மீறியதால், கர்த்தர் அவனை நோக்கி நீ ஏன் என்னை அசட்டை செய்தாய்? ஏன் என்னை இழிவு படுத்தினாய்?  என்று கேட்ட கேள்வி, அவனுக்கும் கர்த்தருக்கும் நடுவில் ஏற்பட்ட பிளவைக் காட்டியது!

பாவம் என்னும் நச்சு நாம் தேவனோடு கொண்டிருக்கும் உறவை அறுத்து விடுகிறது. நான் நேசிக்கும் என்னை என்னுடைய பாவம் அசிங்கமான சாக்கடையில் தள்ளி விடுகிறது! அதனால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை! பாவம் என்னும் பாரம் சுமையாக என்னை அழுத்துகிறது! எனக்கு நிம்மதியே இல்லை! இதுதானே தாவீதைப்போல நம்முடைய கதையும்!

ஆனால் கர்த்தராகிய இயேசு , வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அழைக்கிறார்! இன்றே வாருங்கள்! பாரச்சுமையினால் வாடும் உங்களுக்கு இளைப்பாறுதல் உண்டு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை!

2 சாமுவேல் 12:12    நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார்…

தாவீதின் அரண்மனைக்கு முன்னும், பின்னும், இருபுறமும் புருவங்கள் உயர்ந்தன! தாவீது ஒளிப்பிடத்தில் செய்த பாவத்தை, உரியாவைக் கொன்றதை பத்சேபாளிடமும், அரண்மனையில் உள்ளோரிடமும் மறைக்க பெரும்பாடுதான் பட்டிருப்பான். ஒவ்வொருநாள் காலையிலும் அவன் இருளில் செய்த காரியம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தான் எழுந்திருப்பான். தாவீது இஸ்ரவேலின் புகழ் வாய்ந்தவன் மட்டும் அல்ல அவனுக்கு வேண்டாதவர்களும் இருந்தனர் என்பதை மறுதலிக்க முடியாது. இன்னும் சவுலின் ஆட்கள், சவுலின் ஆதரவாளர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலம்தான் அது!  தாவீதின் இரகசியம் கிசுகிசுப்பாக மாறிக்கொண்டிருந்தது!

கர்த்தர் தாவீதிடம் நாத்தான் தீர்க்கதரிசி மூலம் அவனுடைய பாவத்தைக் குறித்து பேசியபோது,  நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய். நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றதை இன்றைய வேதாகமப் பகுதியில் காண்கிறோம். தாவீது ஒருவேளை யோசித்திருப்பான் நான் நான்கு சுவருக்குள், இருட்டில் செய்த காரியம் யாருக்கும் வெளியே தெரியாது என்று. யாருக்கும் தெரியாதது என்று அவன் நினைத்தது கர்த்தர் மட்டும் அல்ல அரண்மனைக்கு வெளியேயும் தெரிய ஆரம்பித்தது!

தாவீதுக்கு இஸ்ரவேலின் ராஜாவாகும் பெரிய பொறுப்பை ஒப்புக்கொடுத்த தேவன், அவன் வாழ்க்கை அந்த ஜனத்துக்கு முன் சாட்சியாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்த்தார். இன்றைக்கு நாம் நம்முடைய போதகர்மாருடைய வாழ்க்கையை, ஊழியக்காரருடைய வாழ்க்கையை நமக்கு மாதிரியாக பார்க்கவில்லையா அப்படித்தான்!  தாவீது இந்தப் பாவத்தை இருளில் செய்து அதை இரகசியமாகக் காப்பாற்றி  அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தால் அப்படித்தானே அவனுடைய நாட்டு மக்களும் நினைப்பார்கள்!

பாவம் என்பது ஒரு நோய் போலத்தான். அதை உடனே கவனிக்கவில்லையானால் அது நம்மையே அழித்துவிடும்! ஒரு சிறிய பூச்சி நம்முடைய ஆடையை அரித்து ஓட்டை போடுவதில்லையா அப்படித்தான்! ஒரு சிறிய ஒட்டை கப்பலைக் கவிழ்ப்பதில்லையா அப்படியேத்தான்! ஒரு சிறிய மறைக்கப்பட்ட பாவம் நம்முடைய ஆத்துமாவையே அழித்துவிடும் என்பதும் உண்மை!

ஒவ்வொரு நாள் காலையிலும் நம்மை வெறுமையாக்கி கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை சுத்திகரித்து நம்மை பரிசுத்தப்படுத்தி,  தவறுகளை மன்னித்து,அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிரம்ப செய்வார். அவருடைய அழகை நம் வாழ்க்கையின் மூலம் பிறர் காணச் செய்வார்! ஜெபிப்போமா!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

இதழ்:751 நீ விதைப்பதை உன் குடும்பம் அறுக்கும்!

2 சாமுவேல் 12: 10,11  இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக  எடுத்துக்கொண்டபடியினால் , பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு மைதானத்தில் இருந்த ஒரு குழியான மூலையில் செடிகள் போடும்படியாக எங்களை ஊக்குவித்தனர். நாங்களும் அதை கொத்தி, பதப்படுத்தி கேரட் விதைகளையும், முள்ளங்கி விதைகளையும் போட்டோம். திடீரென்று எங்களுக்கு பூச்செடி விதைகளை வரிசை வரிசையாகப் போட்டுப் பார்ர்க வேண்டுமென்று. பலவித நிறங்களில் பூக்கும் பால்சம் பூக்களின் விதைகளை வரிசையை வரிசையாய் போட்டோம். எல்லா விதைகளும் முளைத்து எழும்பின. என்ன நிறத்தில் பூக்கள் வரும் என்று ஆசையோடு காத்திருந்தபோது, கேரட்டுகளும், முள்ளங்கிகளும் இடத்தை நிரப்ப ஆரம்பித்தன! பூச்செடிகளின் வேர்கள் பாதிக்கப்பட்டு அவை வளைந்து நெளிந்து வளர இடமில்லாமல் பெலனற்று நின்றன! நாங்கள் விதைத்த போது எங்களுக்கு அது பெரிய யோசனையாகத் தெரிந்தது. ஆனால் நாங்கள் பெரிய அளவில் விதைத்திருந்த பூமிக்கடியில் விளையும் காய்கறி செடிகளின் வேர்கள் அதை நாசம் செய்து விட்டன!

நம்முடைய வாழ்க்கையிலும்  தவறாக விதைத்தால் தவறாகவே அறுப்போம் என்பது நமக்கு அனுபவப்பூர்வமாகத் தெரியும் அல்லவா? இதுதான் நம்முடைய தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் நடந்தது!

தாவீது இன்னொரு மனிதனின் மனைவி மீது ஆசைப்பட்டு விட்டான். அவள் கணவனைக் கொலை செய்தும் விட்டான், பின்னர் கர்த்தர் அவனை மன்னித்து விட்டார், அதற்கு பின் தாவீது சுகமாக வாழ்ந்தான் என்று எழுததான் எனக்கும் ஆசை! ஆனால் அப்படி எழுத முடியவில்லையே!

ஒரு இடத்தில் நடக்கும் குற்றம் அதில் சம்பத்தப்பட்ட ஒருவரையா பாதிக்கிறது? அந்தக் குடும்பங்களை, சமுதாயத்தை, அந்த ஊரை, அந்த நாட்டையும் கூட பாதிக்கவில்லையா? அதுமட்டுமா? இன்றைய கால கட்டத்தில் சக்தி வாய்ந்த  மீடியா மூலம் உலகமே அதிர்ச்சியாகிறது அல்லவா?  நாம் ஒன்றும் ஒரு நீர்க்குமிழிக்குள் வாழ்வில்லை! நன்மையோ தீமையோ எதுவுமோ மற்றவரை பாதிக்காமல் செல்லாது. நாம் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதால் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நம்முடைய ஒவ்வொரு செயலும் மற்றவரையும் தொடுகிறது.

தாவீதின் செயலால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி ஒருநிமிடம் சிந்திப்போம்!  தாவீதின் வாழ்க்கையோடு ஒரு நாடே சம்பத்தப்பட்டு இருந்தது. அநேகரவனோடு பின்னி இணைந்து இருந்ததால் அவன் விதைத்த விதை அவனுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்தவருக்கும் வேதனையைக் கொண்டு வந்தது.

பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் இதோ நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன் என்று தேவனாகிய கர்த்தர் கொடுத்த தண்டனை தாவீதுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்திருந்தவருக்கும் தான்!

தாவீது விதைத்த விதையின் பலனை அவனுடைய குடும்பமும், அவனுடைய ராஜ்யமும் அவன் வாழ்நாள் முவதும் அனுபவித்தனர். நாம் இன்று எதை விதைக்கிறோம்? நாம் விதைக்கும் விதை நாம் நேசிக்கும் நம்முடைய குடும்பத்தை பாதிக்கும் என்பதை மறந்து போக வேண்டாம்!

நீ விதைப்பதை உன் குடும்பம் அறுக்கும் என்பதற்கு தாவீதே சாட்சி!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்?

2 சாமுவேல் 12:9  கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பான இந்தக் காரியத்தை செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன?

தாவீதும் பத்சேபாளும் உண்மையாக மனந்திருந்தியதால் கர்த்தர் அவர்களை  மன்னித்து ஏற்றுக்கொண்டார் என்று எழுதவேண்டுமென்றுதான்  எனக்கு ஆசை! ஆனால் கர்த்தர் தன்னுடைய பாதைத் தவறிப் போய் மனந்திருந்திய பிள்ளைகளை எவ்வாறு முற்றிலும் மன்னிக்கிறார் என்று நாம் பார்க்குமுன், இன்றைய வேதாகம வசனத்தை சற்று நேரம் படிப்போம். இந்த இடத்தில் நம்மை தேவனாகிய கர்த்தருடைய இடத்தில் வைத்துப் பார்ப்போமானால், அவர் நம்மைக் காணும்போது அவருடைய மனம் வேதனைப்படுவது கொஞ்சமாவது புரியும்!

நாத்தான் தாவீதிடம் வெளிப்படையாக அவனுடைய ஏமாற்றுத்தனத்தையும், கொலையையும் பற்றி பேசினபோது, நீ ஏன் இந்தப் பொல்லாப்பானதை செய்தாய்? ஏன் கர்த்தரை அசட்டை பண்ணினாய் என்று கேட்கிறார்.

ஒரு கொடிய காரியத்தைப் பற்றி பேப்பரில் படிக்கும்போதோ, கேட்கும்போதோ நம்முடைய குமுறலில் நாம் கேட்போம் அல்லவா,  ஏன் இந்த சிறுமியை கொலை செய்தான்?  ஏன் இந்த வெறித்தனமான செயல்? எப்படி இதை செய்ய மனது வந்தது? என்று, அவ்விதம் தான்  நாத்தான் தாவீதிடம் நீ ஏன் இந்தப் பொல்லாப்பான காரியத்தை செய்தாய், ஏன் கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணினாய் என்று கேட்கிறார்.

இதை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள, இந்த அசட்டை என்ற வார்த்தையை எபிரெய மொழியில் பார்த்தேன். அதற்கு அந்த மொழியில் பார்த்த அர்த்தம் என்னை அதிர வைத்தது. ஆம்! அதற்கு அவமதிப்பு, இகழ்ச்சி அல்லது கேவலம் என்று அர்த்தம்.

இஸ்ரவேலின் ராஜாவானதும் கர்வம் தலைக்கு ஏறிவிட்டது தாவீதுக்கு. அந்தப் பதவிக்கு கொண்டுவந்த கர்த்தரைத் தள்ளிவிட்டு தன் இஷ்டமாக நடக்கலாம் என்று நினைத்து விட்டா!

இது ஏதோ நமக்கு நன்கு தெரிந்த ஒரு காரியம் போல இல்லை? நான் என்னுடைய வாழ்வில் எத்தனைமுறை கர்த்தரை ஒதுக்கிவிட்டு சுயநலமாக நடந்து கொண்டேன் என்று யோசித்தேன்.

தாவீது கர்த்தரை அவமதித்து அல்லது கர்த்தரை இழிவு படுத்தியது போல நடந்த இந்தக் காரியத்தைக் கர்த்தர் பார்த்துக் கொண்டு இருந்தார். மலைகளிலும் குகைகளிலும் அலைந்து திரிந்த அவனை அரண்மனையில் அமர்த்திய தேவனுடைய கண்கள் முன்னே உரியாவை பட்டயத்தால் குத்தும்படி செய்தானே அது அவரை இழிவு படுத்திய காரியம் அல்லவா? கர்த்தரை அவமானப்படுத்திய காரியம் அல்லவா?

தேவனாகிய கர்த்தரின் அளவில்லா கிருபையை, அளவிட முடியாத அன்பை எத்தனையோ முறை அலட்சியம் பண்ணுகிற நாம் யாரும் தாவீதை விட சிறந்தவர்கள் ஆக முடியாது. தேவனுடைய கட்டளைகளை மீறுகிற நாம் யாரும் தாவீதை விட சிறந்தவர்கள் அல்ல! நான் இங்கு கூறுவது உங்களில் சிலருக்கு நன்கு புரியும் என்று நினைக்கிறேன்.

உன் குடும்பம் முன்  நீ ஏன் என்னை இழிவு படுத்தினாய்? நீ வேலை செய்யும் இடத்தில் என் நாமத்தை ஏன் அசட்டை பண்ணினாய்? நீ தனியாக இருக்கும்போது நீ ஏன் என்னை கேவலப்படுத்துகிறாய்? இந்த சத்தம் காதுகளில் கேட்கிறதா?

நம்மை நேசிக்கும் கர்த்தரை மறுபடியும் மறுபடியும் நாம் புண்படுத்த வேண்டாமே! அவருடைய பார்வையில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவரை இழிவு படுத்தாமலும், அவரை அசட்டை பண்ணாமலும் இருக்கும்படியாக வாழ்வோம்!  கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 749 இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்!

2 சாமுவேல் 12:7  ….இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னை சவுலின் கைக்கு தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன். இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.

நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் முன்னால் நின்று  ஒரு ஐசுவரியவான் ஒரு ஏழையினுடைய ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்த கதையைக் கூறியது மட்டுமல்லாமல், தாவீது கோபத்தால் கொதித்தவுடன், நீயே அந்த மனுஷன் என்று கூறியதையும் பார்த்தோம்.

உண்மையில் பார்த்தால் ராஜாவாகிய தாவீதைப் பார்த்து நாத்தான் கூறிய அந்த இரண்டு வார்த்தைகள் போதும் அவன் நாத்தானின் தலையை வாங்கும்படி உத்தரவு கொடுக்க! அங்கு நாத்தான் சிறு பயமும் இல்லாமல் கர்த்தர் தனக்கு கொடுத்த செய்தியைத் தொடருவதைப் பார்க்கிறோம்.

நாத்தான் தாவீதுக்கு தேவனாகிய கர்த்தரே அவனை இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் ராஜாவாக்கியதை நினைவூட்டுகிறான். தாவீது ஒன்றும் தானாய் இந்த சிங்காசனத்துக்கு வரவில்லை. எங்கோ ஒரு இடத்தில் தன்னுடைய இளமையும், அழகும், வீரமும் தன்னை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்ததாக தாவீது ஒருவேளை தன் மனதில் நினைத்திருக்கலாம். ஆதலால் நாத்தான் அவனுக்கு சற்றும் தாமதிக்காமல் கர்த்தரே உன்னை ராஜாவாக உயர்த்தினார் என்று ஞாபகப்படுத்துகிறான்.

அதுமட்டுமல்ல தாவீதுக்கு சொந்தமான யாவும், அவனுடைய குடும்பம் கூட கர்த்தர் அவனுக்கு பரிசாக அளித்ததுதான்.

நாத்தான் இதைக் கூறிய பின்னர் என்னை உடம்பு ச்லிர்க்க வைத்த ஒரு வாக்கியத்தையும் கூறுகிறார்.  ஒருவேளை தாவீது தனக்குக் கர்த்தர் கொடுத்ததுபோதாது, தனக்கு இன்னும் வேண்டும் நினைத்திருந்தால்  இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன் என்று கர்த்தர் கூறியதாகவும் நாத்தான் உரைக்கிறான்.

வேதத்தை வாசிக்கும்போது எத்தனைமுறை நாம் அதில் புதைந்திருக்கும் முத்துகளை கவனிக்காமல் விட்டு விடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு முத்து தான் இந்த வரியும்  இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன்.

தாவீதின் பரலோக தேவன் அவன் கேட்டதை அருள சித்தம் கொண்டிருந்தார். ஆனால் அவன் எப்படி தன்னுடைய ஊழியனின் மனிவியாகிய பத்சேபாளைக் கேட்டிருக்க முடியும்? அதனால் தான் தாவீது தன்னுடைய அதிகாரத்தை உபயோகப்படுத்தி பத்சேபாளை அடைந்து விட்டான். ஆனால் இந்தத் தருணத்தில் நாத்தான் அவன்முன்னால் வந்து கர்த்தருக்கு அவன் செய்த எல்லா செயலும் தெரியும் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறான். அவன் பெற்ற யாவுமே கர்த்தருடைய பரிசு என்பதையும், உனக்கு போதாதிருந்தால் என்னை ஏன் கேட்கவில்லை என்றும் கர்த்தர் கேட்பதாகக் கூறுகிறான்.

அதே கர்த்தர் இன்று உன்னையும் என்னையும் பார்த்து கூறுகிறார்,

இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன் என்று. நம்முடைய தேவன் நமக்கு சகலத்தையும் அருள வல்லவர்!

 நாம் வேண்டிக்கொள்வதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு  (எபே 3:20)

என்று பவுல் எழுதுவது மறந்து விட்டதா?  கர்த்தருடைய சமுகத்தில் உங்களுடைய குறைகளை எடுத்துச் செல்லுங்கள். கர்த்தர் எல்லா குறைகளையும் தீர்க்க வல்லவர். நம்முடைய சுய முயற்சியில் எதையும் அடைய மட்டும் நினைக்க வேண்டாம்.

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 748 நீ என்ன அவ்வளவு பெரியவனா?

2 சாமுவேல் 12:7  ….இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி…..

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும்  வெள்ள நீர் தலைமேல் போய் நாம் மூச்சுத்திணறுவது போன்ற காலம் வருவதுண்டு அல்லவா?  அப்படிப்பட்ட நேரங்களில் நான் இரவில் வெளியெ வெறித்துப் பார்ப்பதுண்டு! நட்சத்திரக் கூட்டங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை!  அவைகளைப் பார்க்கும்போது கர்த்தர் எவ்வளவு அழகான வடிவமைப்பாளர் என்று யோசிப்பேன்!

யோபு 38:31ல்   ஆறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருக சீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?  என்ற வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.   இத்தனை பெரிய மகத்துவமுள்ள தேவன் எனக்கு அருகாமையில் இருந்து என் கால்கள் வழுவாமல் காப்பது போலத் தோன்றும். என் வாழ்க்கை அமைதியாக சீராக இருக்கும்போது மட்டும் அல்ல, நான் அலையில் தத்தளிக்கும்போதும் கூட இந்த சர்வவல்லவரை  மீறி என்னை எதுவும் ஒன்றும் செய்து விட முடியாது என்று நினைப்பேன்.

இப்பொழுது தாவீதின் அரண்மனைக்குள் செல்லலாம்! நாத்தான் அவனிடம் நீ உன்னை மறந்து மிகவும் உயரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய் ஆனால் நீ ஒன்றும் அவ்வளவு பெரியவனல்ல,  உன்னை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்ததே தேவனாகிய கர்த்தர் தான் என்று கூறுகிறான். சவுல் ராஜாவின் கையிலிருந்து தப்புவித்து இஸ்ரவேலையும், யூதாவையும் ஆளும்படி அவனை உயர்த்தியது கர்த்தரே என்று நாத்தான் நினைவு படுத்துகிறான்.

வானத்தின் நட்சத்திரங்களை அதினதின் இடத்தில் வைத்த தேவன் தானே தாவீதை இந்த சிங்காசனத்தில் உட்கார வைத்தது. அதை தாவீது எப்படி மறக்க முடியும்? அப்படியே மறந்து போயிருந்தால் அவனுக்கு இப்பொழுது பெரிய உதவி தேவை! யாராவது அவனுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்! பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரே இதை யாவையும் அவனுக்கு செய்தார் அவன் அல்ல என்று அவனுக்கு சொல்ல வேண்டும்! அதைத்தான் நாத்தான் தீர்க்கதரிசி செய்வதைப் பார்க்கிறோம்.

இந்த உதவி உனக்கும் எனக்கும் இன்று தேவைப்படுகிறதா? நீ இன்று அமர்ந்திருக்கும் உயர்ந்த அடைக்கலத்தில் உன்னைக் கொண்டுவந்தது யார்? நீயே உயர்ந்து விட்டாயா? நீ என்ன அவ்வளவு பெரியவனா?  பரலோகத்தின் தேவன் உன்னை வடிவமைத்து, எல்லாத் தடைகளையும் தாண்டி நீ இருக்கும் இந்த இடத்திற்கு அழைத்து வந்ததை எப்படி மறப்பாய்? அப்படியானால் இன்றைய வேத வசனங்கள் உன்னோடு பேசட்டும்! உன்னுடைய பெருமையிலிருந்து இறங்கி வா!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்