Bible Study, Call of Prayer

மலர்: 2 இதழ்: 152 அன்றாட பிரச்சனைகள்!

 

யோசுவா: 7: 2 – 3 “…… அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பி வந்து அவனை நோக்கி, ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்;

 இஸ்ரவேல் நாட்டிற்குப் போயிருந்தபோது, கெனேசரேத்து என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த கிபுட்ஸ் கெனேசரேத் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தோம். இயேசு கிறிஸ்து கடலின் மேல் நடந்த கெனேசரின் கடற்கரையில் அமைந்த ஊர் அது. இஸ்ரவேல் நாட்டின் விசேஷ உணவு வகைகளோடு பேதுரு மீன் என்று பெயரிடப்பட்டுள்ள மீன் பரிமாறப்பட்டது.

நாங்கள் அங்கு போய் சேரும்போதே இருட்டாகிவிட்டது. மிகுந்த களைப்பினால் அசந்து தூங்கிவிட்டேன். விடியற்காலையில் சூரியனின் கதிர்கள் இலேசாக வெளிவரும் வேளையில், கிச் கிச் என்ற பறவைகளின் சத்தம் என் செவிகளை எட்டிற்று! இலேசாக ஜன்னல் திரைகளை அகற்றிவிட்டுப் பார்த்தேன். மிகச்சிறிய சிட்டுக்குருவிகள் ஆயிரக்கணக்கில் மொத்தமாக வந்து தரையில் இறங்கின! அத்தனை பறவைகளும் தரையிலிருந்து எதையோ கொத்தித் தின்றன! பின்னர் ஒரு நொடியில் அவைகள் மொத்தமாக பறந்து சென்று விட்டன! நான் அவற்றை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இன்னொரு கூட்டம் வந்து தரையில் இறங்கின! ஆயிரமாயிரமாய் வந்து கொத்தித் தின்ன அந்தப் புல்வெளியில் அப்படி என்னதான் இருந்தது? என் கண்ணுக்கு ஒன்றுமே தெரியவில்லை.

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சிறிது தொலைவேயிருந்த மலையில் கர்த்தராகிய இயேசு தன் சீஷரைப் பார்த்து ‘ஆகாயத்துப் பட்சிகளை கவனித்துப் பாருங்கள்! அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்! அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் இந்தக் குருவிகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது” என்றது என் செவிகளில் தொனித்தது.

அந்த ஆயிரமாயிரம் குருவிகளில் மிகச்சிறிய சிட்டுக்குருவியின் மேல்கூட நோக்கமாயிருக்கும் கர்த்தரின் கண்களில் உன்னுடைய மிகச்சிறிய தேவைகள் படாமல் போய்விடுமா?

 ஆனால் நீயும், நானும் இந்த வேதகமப்பகுதியில் இஸ்ரவேல் மக்கள் செய்த தவறைத்தான் செய்கிறோம்

நேற்று நாம் அவர்கள் எரிகோ போன்ற பெரிய பிரச்சனையிலிருந்து விடுதலை வேண்டும் என்று கர்த்தரை நோக்கி ஓடினர். ஆனால் ஆயியைப் போன்ற சிறிய பாவங்கள், பிரச்சனைகள் அவர்கள் கண்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை! முடிவு ஆயிக்கு முன்னால் முறிந்தோடினர் என்று பார்த்தோம்!

இன்று இஸ்ரவேலின் போர் வீரர்கள், ஆயியைப் பார்த்தவுடன், ப்பூபூ! ஒரு சின்ன ஊர்! இதை ஒரு இரண்டாயிரம் அல்லது மூவாயிரம்பேரை வைத்து நாமே சமாளித்து விடலாம், கர்த்தர் எதற்கு? இது ஒன்றும் பெரிய எரிகோ இல்லை!  என்று எண்ணியதால் அவர்கள் ஆயிக்கு முன்னால் முறிந்தோடினர் என்று பார்க்கிறோம்.

அவர்களைப் பற்றி எழுதும் முன், நான் எத்தனைமுறை இப்படி நடந்து கொண்டிருக்கிறேன் என்று சிந்தித்துப்பார்த்தேன்! அன்றாட வாழ்வில் வரும் சிறு பிரச்சனைகளை கர்த்தருடைய சமுகத்துக்கு எடுத்து செல்லாமல், இவை நான் தினமும் பார்க்கிற பிரச்சனைகள் தானே, இவற்றை நானே சமாளித்துவிடுவேன் என்ற அசட்டுத்தனமான சுயநம்பிக்கையோடு செயல்பட்டதின் விளைவே என்னுடைய இரத்த அழுத்தமும், சர்க்கரைநோயும்! நம்மில் பலர் என்னைப்போல. நம்முடைய மிகச்சிறிய அன்றாடத்தேவைகளை கர்த்தரிடம் எடுத்துசெல்வதில்லை

செங்கடலை இரண்டாய்ப்பிளந்து உன்னை வழிநடத்தியவர், மன்னாவால் போஷித்தவர், கற்பாறையை தண்ணீர்த்தடாகமாய் மாற்றியவர், எமோரியரின் ராஜாவையும், ஓகுவின் ராஜாவையும் முறியடித்தவர், யோர்தானின் நடுவே வழியமைத்துக் கொடுத்தவர், எரிகோவின் மதிலைத் தகர்த்தவர், உன்னோடுதானே இருக்கிறார்! ஆயி போன்ற அன்றாடப் பிரச்சனைகள் வரும்போது ஏன் நீ அவரைத் தேடுவதில்லை!  சுனாமி போல பெரிய பிரச்சனைகள் வந்தால் தான் கர்த்தரின் உதவி தேவையோ? அன்றாட வாழ்க்கையின் சிறு பிரச்சனைகளுக்கு கர்த்தர் தேவையில்லையோ?

எரிகோ போன்ற பெரிய பிரச்சனையோ அல்லது ஆயி போன்ற அன்றாடப்பிரச்சனையோ, எது வந்தாலும் சரி, கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்பதை மறந்து போகாதே!

பயப்படாதிருங்கள்! அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும், நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்!  (மத்:10:31) என்ற தேவன் உன்னுடைய எரிகோவையும் அறிவார், ஆயியையும் அறிவார்!

 

இருள் சூழும்போதும், புயல் வீசும்போதும் மட்டுமல்ல,

தெளிந்தநீரோடையாய் என் வாழ்க்கை செல்லும்போதும்,

அடைக்கலான் குருவியைக் காணும் கண்கள்

என் மேல் நோக்கமாயிருப்பதை அறிவாயா?

என் மனமே நீ அறிவாயா?

 

கானகப்பாதையிலும், பள்ளத்தாக்கிலும் மட்டுமல்ல,

சமமான பாதையை நான் கடக்கும்போதும்,

அடைக்கலான் குருவியைக் காணும் கண்கள்

என் மேல் நோக்கமாயிருப்பதை அறிவாயா?

என் மனமே நீ அறிவாயா?

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

1 thought on “மலர்: 2 இதழ்: 152 அன்றாட பிரச்சனைகள்!”

  1. God’ Word is rich and Powerful! Yes! We are better than the sparrows!! He is so mindful of us!!! When we seek Him, we can find Him with all our hearts,mind and soul!!!! In our difficult situation/circumstance let Lord take His First Place in our lives!!!!!

Leave a comment