Archive | October 2012

மலர் 3 இதழ் 235 அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கு போல மனைவி அமையக் காரணம்??

நியாதிபதிகள்: 14:15 ” ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து; உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு…”

இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், பிளாக்பெரியிங் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும்  பெண்ணையும்  அதிவேகமாய்த் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இன்றைய வாலிபர் மட்டும் அல்ல, அன்றைய வாலிபனான சிம்சோன் கூட ஒரு பார்வையில் தன் வாழ்க்கைத்துணையை முடிவு செய்தான்.

திம்னாத்தில் கண்ட பெண்தோழி அவன் கண்களுக்கு பிரியமானவளாய் இருந்ததால், அவளை தனக்கு கொள்ள வேண்டும் என்று அவன் பெற்றொரை சிம்சோன் வற்புறுத்தினான். அந்தப்பெண், அவன் அடைய ஆசைப்பட்ட ஒரு பொருளாகிவிட்டாள். என்ன விலை கொடுத்தாவது அவளை அடையவேண்டும் என்ற வெறி அவனை உந்தியது. இந்த சம்பந்தத்தில் தேவனாகிய கர்த்தரை அறவே மறந்துவிட்டான்.

அவனுக்கு திம்னாத்தில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை முறைப்படி கொடுக்கும் விருந்தும் ஆரம்பமாகிவிட்டது. திருமணத்தன்று தான் செய்த முடிவுதான் மிகசிறந்த முடிவு என்று நினைத்திருப்பான்.உற்சாகத்தில் காற்றில் மிதந்த அவன் ஒரு விடுகதையை எடுத்து விடுகிறான்.மாப்பிள்ளை கொடுக்கும் ஏழு நாள் விருந்து முடியுமுன் அந்த விடுகதைக்கு அர்த்தம் கண்டு பிடித்துவிட்டால் முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன் என்றான்.

திருமணமாகி ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து,  உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு என்றனர்.

ஒரு நிமிஷம்! நயம் பண்ணு என்றால் என்ன? ஏவாள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? ஆதாமிலிருந்து சிம்சோன் வரை வஞ்சனை என்ற கொடிய சொல் மறுபடியும் மறுபடியும் தலை தூக்கி ஆடுகின்றது அல்லவா?

திடீரென்று ஒரே ராத்திரியில் சிம்சோனின் வாழ்க்கை மாறி விட்டது. வெளிப்புறமாய் கண்களுக்கு அழகாய், இச்சிக்கும் வண்ணமாய்த் தோன்றிய அவனுடைய அழகு மனைவி ஒரே நாளில் ஒரு அரிப்பு பெட்டகமாய் மாறிவிட்டாள். தன்னிடம் கைவசமுள்ள அத்தனை வஞ்சனையான வார்த்தைகளையும் அள்ளி அவன்மீது வீசினாள், ஏழு நாட்களும் அழுது புரண்டும் சாதிக்கிறாள்.அவளைப்பற்றி நான் யோசித்தபோது நீதிமொழிகளில் உள்ள ஒரு வசனம் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

” அடைமழை நாளில் ஓயாத ஒழுக்கும், சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.    அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான். (நீதிமொழிகள்: 27:15,16)

ஏழே நாட்களில் சிம்சோன் திம்னாத்தின் அழகி தனக்கு ஏற்ற மனைவி இல்லை என்பதை உணர்ந்தான். அவளுடைய அடைமழை போன்ற அரிப்பைத் தாங்காமல் தன் விடுகதையின் அர்த்தத்தை அவளிடம் கூறுகிறாம். அவளும் தன்னுடைய இஸ்ரவேல் நாயகனுக்கு மனம்கூசாமல் துரோகம் பண்ணிவிட்டு, தன் பெலிஸ்தருக்கு அதன் அர்த்தத்தை சொல்லிவிடுகிறாள்.
இவையெல்லாம் எங்கே நடக்கிறது?கல்யாண வீட்டில்! எங்கே விருந்தும், உபசரிப்பும், அன்பும், சந்தோஷமும் , களிப்பும் நிறைந்திருக்கவேண்டுமோ அங்கே நயவஞ்சகமும், துரோகமும், கோபமும், கொலையும் நடக்கிறது.
ஜாக்கிரதை! அவசரப்பட்டு தேவனுடைய சித்தத்தைவிட்டு விலகி, திருமண பந்தம் என்ற உறவுக்குள் செல்லும் உங்களில் சிலருக்கு இது ஒரு அருமையான பாடம்!  தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் காரியத்தில் சிம்சோனைப் போல நாம் கர்த்தரைத் தேடாமல், நம் சுய இச்சையின்படி அவசரப்பட்டு முடிவு எடுக்கும்போது நம் திருமண வாழ்க்கையும் சிக்கலில்தான் முடியும்.
திருமணம் செய்யும் வரை இயேசு கிறிஸ்துவை நாம் நம் ஒப்பந்தத்துக்குள் கொண்டுவருவதேயில்லை. திருமணத்துக்கு பின்பு சிக்கலில் மாட்டும்போது தான் தேவனைத் தேடுகிறோம்.சிக்கலான நம் திருமண வாழ்க்கைக்கு கடவுள் எப்படி பொறுப்பாவார்?
திருமணம் என்பது இரண்டு நபருக்கு நடுவில் ஏற்படும் ஒப்பந்தம் அல்ல,
மூவருக்குள் ஏற்படும் புனித  உடன்படிக்கை!
இயேசு கிறிஸ்துவை முன் வைக்காமல் திருமண பந்தத்துக்குள் நுழைய முயற்சிக்காதே!
உங்கள்  சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

மலர் 3 இதழ் 234 கண்களுக்குப் பிரியமானவை?

நியாதிபதிகள்: 14:3    அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய் விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக்கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி :அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.

நாம் சிம்சோனைப் பற்றிப் படிப்பதைத் தொடருவோம்.

தேவனுடைய பணியாக பெலிஸ்தரின் ஊரான திம்னாத்துக்கு அனுப்பப்பட்ட சிம்சோன், அங்கு ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு அவள் தான் எனக்கு வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். அவன் அந்தப் பெண்ணின் மேல் காதல் கொண்டதாக வேதம் சொல்லவில்லை, அவளைக் கண்டவுடன் அவன் நோக்கம் சிதறியது என்றுதான் வேதம் சொல்லுகிறது.

அவன் தாயும் அவன் தகப்பனும் அவனைப் பார்த்து, நீ போய் விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக்கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்று அவனை மனம் மாற செய்ய முயற்சி வீணானது.

சிம்சோனின் தாயும் தகப்பனும் இஸ்ரவேல் பாளையத்தில் பார்த்த அழகிய இளம் பெண்களையெல்லாம் தன் மகனுக்கு இவள் பொருத்தமானவளா என்ற கண்ணோடுதான் பார்த்திருப்பார்கள். தம் செல்லக் குமாரனை திருமண கோலத்தில் பார்க்க எத்தனை ஆசை இருந்திருக்கும்! திம்னாத்துக்கு போய் வந்த சிம்சோன் பெற்றொரின் வார்த்தைக்கு செவிகொடாமல், அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான் என்றுப் பார்க்கிறோம்.

சிம்சோன் தேவனுடைய பரிசுத்த ஊழியத்துக்காக அழைக்கப்பட்டவன். நசரேய விரதத்தைப் பின்பற்றியவன். தேவனுடைய வல்லமையைப் பெற அவன் தேவனுடைய கட்டளைகளைக் கைப்பற்ற வேண்டியவன். தேவனுடைய சமுகத்தைவிட்டு விலகவோ, பொல்லாதகாரியத்தை செய்யவோ கூடாது.தன்னுடைய கண்களுக்குப் பிரியமானதை அல்ல, தேவனுக்குப் பிரியமானதையே செய்ய வேண்டியவன்.

தேவனுடைய பிள்ளைகளே இது  சிம்சோனுக்கு மட்டுமல்ல, நமக்கும் கொடுக்கப்பட்ட கட்டளைதானே! தாவீது ராஜா சொல்லுவதைக் கேளுங்கள்!

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான் (சங்:91:1)

கீழ்ப்படிதலோடு தேவனுடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வாழவேண்டிய அவன், தன் கண்களின் போக்கின்படி வாழ முடிவு செய்தான். தேவனின் சித்தப்படி வாழ தன் இருதயத்தில் வாஞ்சிக்க வேண்டிய  அவன், கண்களின் பிரியத்தை வாஞ்சிக்க ஆரம்பித்தான்.

இன்றும் நம்மில் அநேகம்பேர் உலகம் தரும் உல்லாச இன்பங்களால் நம் வாழ்வை நிரப்ப வாஞ்சிக்கின்றோம். நம்மில் பலரை பொருளாசையும், பண ஆசையும், பெண் ஆசையும், புகழ் ஆசையும், பதவி ஆசையும்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக வைத்திருக்கும் தீர்மானத்திலிருந்தும், நாம் அவருக்காய் செய்ய வேண்டிய ஊழியத்திலிருந்தும் திசை திருப்புகின்றன.ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குத் தரும் நிறைவான சந்தோஷத்துக்கு இவை எதுவுமே நிகராகாது.

இன்று தேவனுடைய சமுகத்திலிருந்து வழி விலகிப்போய்க் கொண்டிருக்கிறாயா? கர்த்தருடைய சமுகத்துக்கு வா! அவர் தம்முடைய ஜீவ மன்னாவால் உன் ஆத்துமாவை திருப்தியாக்குவார்! வழி விலகி விடாதே!

ஆண்டவரே என் பாத்திரம் நிரம்பி வழியட்டும்!

என் பாத்திரத்தை உம்முடைய சமுகத்துக்கு முன்பாக உயர்த்துகிறேன்,

என்னை நிரப்பி என் ஆத்தும தாகத்தைத் தீரும்!

பரலோகத்தின் ஜீவ அப்பமாகிய நீர்,

என்னைப் போதுமென்னுமட்டும் போஷியும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

சோதனையென்னும் என்னும் தேன்கூடு!

யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய  சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன்.

சமீபத்தில் ஒரு பெண்கள் பத்திரிக்கையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் கடையில் போய் மளிகை சாமான் வாங்குவோரில் ஒருவர் எந்த சமயத்தில் கடைக்கு போனால் அதிகம் செலவிடுகின்றனர் என்று கணக்கெடுத்திருந்தனர். அவர்கள் கணிப்புப்படி, ஒருவர் சாப்பிடுமுன்னர் பசியாயிருக்கும்போது கடைக்கு சென்றால் அதிகம் செலவிடுவதாகவும், சாப்பிட்ட பின்னர் சென்றால் குறைவாய் செலவிடுவதாகவும் சொல்லியிருந்தனர். நம்முடைய பசி, உணவை உண்ணவேண்டும் என்ற ஆசை இவை நம்முடைய வாங்கும் செயலில் காட்டப்படுகிறது. நம்முடைய உள்ளத்தின் வாஞ்சை நம் செயலில் வெளிப்படும் என்பதே இவர்களுடைய கணக்கெடுப்பின் ஆதாரம்!

இது நமக்குத் தெரிந்த உண்மைதானே! எத்தனைமுறை நாம் மனதில் தோன்றும் ஆசைகளை செயலில் வெளிப்படுத்தி விடுகிறோம். இந்த உண்மையை நாம் படித்துக்கொண்டிருக்கிற ஆகானின் வாழ்க்கையில் ஒப்பிட்டுப்பார்ப்போம்.

ஆகான் இஸ்ரவேலின் போர்சேவகனாய் கர்த்தரின் கட்டளையை நிறைவேற்றும் பணியில் எரிகோவுக்கு அனுப்பப்பட்டான். இதுவரை அவனைப்பற்றிய எந்த குற்றச்சாட்டும் இல்லை, அவன் துன்மார்க்கனும் இல்லை. அவன் கர்த்தருடைய பிள்ளை தான் என்பதற்கு, ஆகான் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டபோது நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்ற வாக்குமூலமே சாட்சியாகும். வெளிப்புறமாகப் பார்க்கும்போது ஆகான் எல்லாவிதத்திலும் ஒரு நல்ல இஸ்ரவேலனாகத் தான் தெரிகிறான்.

எங்கேயோ ஆகானின் உள்ளத்தில் ஒரு சிறிய பொருளாசை என்ற விதை ஊன்றப்பட்டுவிட்டது. சீனாயின் வனாந்தரத்தில் வாலிபனாக அலைந்து திரிந்த அவன், இப்பொழுது பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் பிரவேசிக்கும்போது, தன் குடும்பத்தாருக்கு இந்த பொன்னும் வெள்ளியும் இருந்தால் உதவியாக இருக்குமே என்ற  எண்ணியிருக்கலாம்.

நாம் ஒருதடவை ஒரு பொய்யை சொல்லும்போது, ஒரு நல்ல காரியம் நடக்கத்தானே சொன்னேன், நான் ஒன்றும் மற்றவர்கள் போல பெரிய தப்பு செய்யவில்லை என்று நம்மைத் தேற்றிக்கொள்வோமானால், பின்னர் எவ்வளவு பெரிய பொய் சொன்னாலும் அது தவறாகவேத் தெரியாது. நல்ல நோக்கத்தினால் சொல்லும் பொய்யும் பொய்தான்.

அதேவிதமாகத்தான் ஆகான் செய்த குற்றமும். ஒருவேளை சீனாய் வனாந்தரத்தில் வெறுமையாய் அலைந்த தன் குடும்பம் சற்று வசதியாக கானானில் குடியேறட்டுமே என்று அவன் நினைத்து அவன் கர்த்தரால் சாபத்தீடானவைகள் என்று தடை செய்யப்பட்டவைகளில் சிலதை எடுத்திருக்கலாம். நல்ல நோக்கத்தோடு செய்யப்பட்டாலும் அது தேவனுடைய கட்டளையை மீறியதே ஆகும்.

கர்த்தரை அறிந்தவனாய், தேவனுடைய சேனையில் ஒருவனாய் , அவருடைய கட்டளைகளை நிறைவேற்றும்படியாய் எரிகோவுக்கு சென்றவன், தன் உள்ளத்தின் வாஞ்சை தூண்டிய இடத்துக்கு கண்களைத் திருப்பினான். அவன் எரிகோவுக்கு வந்த நோக்கத்தை ஒருகணம் மறந்தே விட்டான். அவன் கண்கள் அந்தப் பொருட்களை நோக்க, நோக்க அவன் மனம் தடுமாறியது. கர்த்தருக்கு சேவகமா? அல்லது தனக்கு சேவகமா? இருமனதாய் சற்றுநேரம் நிற்கிறான்.

ஆகான் எரிகோவுக்குள் போகும்போது திருடனாய்ப் போகவில்லை, ஆனால் ஒருகணம் தன் நோக்கத்தை தடுமாறவிட்டதால் எரிகோவிலிருந்து வரும்போது திருடனாய் வெளியே வந்தான்.

இதைத்தான் நம்மில்  அநேகர் செய்து கொண்டிருக்கிறோம்! கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்ட நாம், கர்த்தருடைய ஊழியத்தை செய்துகொண்டிருக்கிற நாம் ஒரு கணம் நம்முடைய நோக்கத்தைத் தடுமாற விடுவோமானால் கூட நாம் ஆகானைப்போலாகி விடுகிறோம்.

ஒருவேளை நாம் ஆகானைப்போல என் குடும்பத்துக்காகத்தான் இதை செய்கிறேன், யார் யாரோ எவ்வளவோ திருடுகிறார்கள், நான் செய்யும் இந்த சிறிய காரியத்தை கர்த்தர் பெரிது பண்ணமாட்டார், நான் கர்த்தருக்குத்தானே ஊழியம் பண்ணுகிறேன் என்று நினைக்கலாம்.

கர்த்தர் உன்னைப்பார்த்து பதவி ஆசையிலிருந்து, பெண்ணாசையிலிருந்து, பொருளாசையிலிருந்து,  உன்னைப் பாதுகாத்துக்கொள் என்கிறார்.

சற்று சிந்தித்துப்பார்! நீ என்றாவது உனக்கு சொந்தமில்லாத எதையோ அல்லது யாரையோ அடைய ஆசைப்பட்டிருக்கிறாயா? ஜாண் பனியன் அவர்கள் எழுதியதுபோல,” சோதனைகள் முதலில் நம்மிடம் கெர்ச்சிக்கிற சிங்கம் போல வரும். நாம் அவற்றை மேற்க்கொண்டு விட்டால் பின்னர் அது தேன் ஒழுகும் தேன்கூடாக வரும்!

உனக்கு சொந்தமில்லாததை நீ அடைந்தபின் அது உனக்கு சந்தோஷமும் நிம்மதியும் கொடுப்பதில்லை என்று ஆகானின் வாழ்க்கையிருந்து தெரிந்துகொள்!

 

உங்கள்சகோதரி,

பிரேமாசுந்தர்ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

பொருளாசை என்னும் புளித்தமாவு!

யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய  சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து……”

லூக்கா: 12:15 “பின்பு இயேசு அவர்களை நோக்கி, பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்”.

இன்று எங்களது பகுதியில் தேர்தல் விளம்பரங்கள் உற்சாகமாய் நடந்து கொண்டிருக்கின்றன! ஒலிப்பெருக்கியின் சத்தம் காதுகளைப் பிளந்து கொண்டிருக்கிறது. அதைக் கேட்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களைப் பார்த்துக் கூறிய இந்த பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், என்றவார்த்தைகள் தலைமுறை தோறும் இவ்வாறு ஒலிப்பெருக்கியின் மூலம் கூறப் பட்டால் எவ்வளவு நலமாயிருக்கும் என்று எண்ணினேன்.

நாம் வாழும் இந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் பொருளாசை பிடித்துதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த விலைமதிப்பில்லாத வசனம் நம்முடைய தலைமுறையினருக்கு மிகவும் பொருந்துமாதலால், நாம் அந்த வசனத்தின் பின்னணியை சற்று பார்ப்போம்.

முதலில் இயேசு தம்முடைய சீஷரை நோக்கி (லூக்:12:1) நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.

இந்த அதிகாரம் முழுவதும் பொருளாசையை பற்றிதான் படிக்கிறோம். அப்படியானால் பரிசேயருடைய புளித்தமாவு சுவிசேஷம் என்ன? நீங்கள் பணக்காரராக, சொத்து சுகத்தோடு இருப்பீர்களானால் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீங்கள் ஏழைகளாக இருபீர்களானால் கர்த்தருடைய சாபத்தைப் பெற்றவர்கள் என்பதே! இதைத்தான் கர்த்தராகிய இயேசு புளித்தமாவு சுவிசேஷம் என்று நிராகரித்தார்.

தேவனுடைய பிள்ளைகளே இதை வாசிக்கும்போது ஒருவேளை உங்கள் மனது சற்று வேதனையடையலாம். ஏனெனில் கர்த்தரை விசுவாசித்தால் பணமும் வசதியும் தேடி வரும் என்று புளித்தமாவு சுவிசேஷத்தை போதிக்கிற போதகர்கள் இன்று அநேகம்பேர் உண்டு. அவர்கள் போதனையின்படி ஒருவன் கர்த்தரோடு நெருங்கி ஜீவிப்பதின் அடையாளம்,அவனுடைய வீடும், பணமும், வாகனமும் தான்!

பொருளாசை புளித்தமாவு போன்றது, பொருளாசை பிடித்து அலையாதே! கர்த்தர் உன் தேவைகளை அறிவார், என்று கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுக்கு போதித்துக் கொண்டிருந்தபோது, இவற்றை எதையும் காதிலே போட்டுக்கொள்ளாமல் தன் ஆஸ்தியை மாத்திரம் நினைத்துக்கொண்டிருந்த ஒருவன்,போதகரே ஆஸ்தியை பாகம்பிரித்து என் வீதத்தை எனக்கு தரும்படி என் சகோதரனுக்கு கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.(லூக்:12:13- 15)

நம்மில் எத்தனை பேர் தேவனுடைய சமுகத்தில் அமர்ந்திருக்கும்போதும், திருச்சபையில் அமர்ந்திருக்கும்போதும் கூட நம்முடைய பணம் சம்பாதிக்கும் திட்டங்களைப் பற்றியும், வங்கிக்கணக்கையும் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்! அப்படித்தான் இந்த மனிதனும், கர்த்தருடைய போதனையை கவனிக்காமல் தன் குடும்ப ஆஸ்தியைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தான் போலும்!

அதற்கு அவர் என்னை உங்களுக்கு நியாதிபதியாகவும், பங்கிடுகிறவனாகவும் வைத்தது யார் என்று கேட்டுவிட்டு, அவர்களை நோக்கி, பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்”.

பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்ற இந்த வார்த்தைக்கு கிரேக்க மொழியில் ’உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ அல்லது ’உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்’ என்ற அர்த்தம் உண்டு.

பொருளாசை! நமக்கு சொந்தமல்லாதவற்றை அடைய ஆசை! இன்னும்வேண்டும் இன்னும்வேண்டும் என்ற பேராசை! அளவுக்கு மீறி சேர்த்துவைக்க ஆசை! ஆகானுடைய வாழ்க்கையில் நாம் பார்த்தவிதமாய் கர்த்தருடைய கட்டளையை மீறி, பார்வைக்கு இன்பமாய் பட்டவைகளை அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை!

ஆகான் கண்டான்! இச்சித்தான்!

நாம் எதிபார்க்காதவேளையில் பொருளாசை என்னும் இச்சையானது நம்முடைய இருதயத்தையும், ஆத்துமாவையும் சங்கிலியால் கட்டி அடிமைப்படுத்தி விடும்! கர்த்தருடைய வார்த்தைகள் நம் செவியில் எட்டாதபடி நம்முடைய நினைவுகளை அடிமைப்படுத்திவிடும்!

ஒவ்வொருநாளும் இதுவரை கர்த்தர் தந்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்தி, இன்று நாம் வாழும் திருப்தியான வாழ்க்கைக்காக நன்றி செலுத்தி,  நம்மைவிட குறைவுபட்டு தேவையில் வாழும் மக்களை நினைவுகூர்ந்து, நமக்காக ஏழ்மையின் ரூபமெடுத்த நம் கிறிஸ்து இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கும்போது தான், நாம் பொருளாசை என்னும் புளித்தமாவு நம்மைக் கெடுத்துவிடாதபடி, பாதுகாக்க முடியும்.

உங்கள்சகோதரி,

பிரேமாசுந்தர்ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

எங்கே உன் கூடாரம்?

 

ஆதி: 33:18 யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும், சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே  சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம் போட்டான்.

 

கீழ்படிதலினால் வருகிற கஷ்டங்களை விட கீழ்ப்படியாமையினால் வரும் கஷ்டங்கள் மிகவும் அதிகம் என்று ஒருவர் கூறியிருக்கிறார்.

இது நமக்கும் தெரிந்த உண்மையே, ஆனாலும் நம்மில் பலருக்கு கீழ்ப்படிதல் என்றால் அறவே பிடிக்காது. பிள்ளைகளுக்கு பெற்றோருக்கு கீழ்ப்படிய பிடிக்காது, பெரியவர்களுக்கு அதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து நடக்க பிடிக்காது. சிலருக்கு யாரும் புத்தி சொன்னால்  கூட பிடிக்காது. பெற்றோர் புத்தி சொன்னால், எனக்கு வீட்டில் சுதந்திரம் இல்லை என்று  வாலிபர் எண்ணுகிறார்கள்.

இதே போலத்தான் நாம் தேவனிடமும் நடந்து கொள்கிறோம். கர்த்தர் தமது வார்த்தையின் மூலம் நமக்கு புத்தி சொல்லி, நாம் அந்த வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். ஆனால் நாம், கடவுளுக்கு நாம் ஜாலியாக இருப்பது பிடிக்கவில்லை என்று நினைக்கிறோம். இப்படித்தான் அன்று ஏவாள் நினைத்தாள், இன்று நாமும் நினைக்கிறோம்.

இங்கு யாக்கோபு என்ன செய்கிறான் பாருங்கள்! கர்த்தர் அவனை ஆதி:31:13 ல். பெத்தேலுக்கு போகும்படியாகவும், பின்னர் ஈசாக்கு வாழ்ந்து கொண்டிருந்த (எபிரோன்) இடத்துக்கு போகும்படியாகவும்  கட்டளையிடுகிறார். ஆனால் நாம் இன்றைய வசனத்தில் பார்க்கிறோம்,  அவன் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே கூடாரம் போட்டது மட்டுமல்லாமல், அங்கே ஒரு நிலத்தை விலைக்கும் வாங்குகிறான்.  அவனும் அவன் குடும்பமும் அந்த ஊரிலே வசதியாக வாழ ஆரம்பிக்கிறார்கள்.

கர்த்தர் யாக்கோபின் ஜெபத்தை கேட்டு , அவன் வாழ்வையும், அவன்  பெயரையும் மாற்றி, அவன் சகோதரன் ஏசாவோடு ஒப்புரவாக்கி , இம்மட்டும் வழிநடத்தி வந்தாரே, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து முப்பது மைல் தூரமே உள்ள பெத்தேலுக்கு போவதில் என்ன தாமதம்?

சீகேமில் ஒரு பலிபீடத்தைக் கட்டி தேவனுக்கு சாட்சியாக இருந்தானே என்று நாம் நினைக்கலாம். ஆனால்  வேதம் கூறுகிறது ( I சாமு 15:22)  பலிகளால் நாம் கர்த்தரைப்  பிரியப்படுத்த முடியாது, கீழ்ப்படிதலையே அவர் விரும்புகிறார் என்று.

கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுக்காமல், கீழ்ப்படியாமல் போனதால், இந்த குடும்பம் மறுபடியும் பல இன்னல்களுக்குள்ளாயின. ஆபிரகாமும் சாராளும் கானானுக்கு செல்லாமல் எகிப்துக்கு சென்றதால் பட்ட கஷ்டங்கள் போல, லோத்து, சோதோமுக்கு முன்னால் கூடாரம் போட்டதால் வந்த கஷ்டங்களைப் போல, யாக்கோபின் குடும்பம் சீகேமுக்கு அருகில் கூடாரம் போட்டதால் அனுபவித்தனர்.

யாக்கோபு அங்கே தரித்திருந்ததால் தான் , அவன் மகள் தீனாள், அந்த தேசத்து வாலிபனால் கற்பழிக்கப்படுகிறாள், மற்றும் யாக்கோபின் இரு குமாரர் கொலையாளிகளாகிறார்கள் என்று வேதம் சொல்கிறது. என்ன கொடுமை?

தேவனுக்கு கீழ்ப்படியாத இந்த குடும்பத்தில், பிள்ளைகள் தேவ பயமின்றி வளர்ந்தனர். இந்நேரம் யாக்கோபு பெத்தேலுக்கு போய் சேர்ந்து தன் பிள்ளைகளை தேவனுக்குள் வழி நடத்தியிருக்க வேண்டும், அப்படி செய்யாமல் இந்த புறஜாதியினரிடம் ஏன் தங்கியிருக்க வேண்டும்?

நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறோம்?  எங்கே கூடாரமிட்டுக் கொண்டிருக்கிறோம்? யாக்கோபின் வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல பாடம் அல்லவா? தேவனுடைய சத்தத்துக்கு செவி கொடு! கீழ்ப்படி!  கீழ்ப்படிதல் உனக்கு என்றும் நன்மையையும், தேவனுக்கு என்றும் மகிமையையும் கொடுக்கும்!

ஜெபம்:

நல்ல ஆண்டவரே! உம்முடைய சத்தத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, கீழ்ப்படிகிறவர்களாய் எங்களை மாற்றும். ஆமென்!

 

 

கலங்காதே! நீ கலங்கத் தேவையில்லை!

யோசுவா: 8:1 “அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி;  நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு;”

பல வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள கல்யாணி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் (Nurses Training School) பயிற்சி பெறும் பெண்களுக்கு இரண்டு வருடங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தேன். அப்பொழுது அவர்களுடைய பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. அவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அயராத சேவைக்கு அர்ப்பணிக்கும் காட்சி என்றும் மனதில் தங்கிய ஒன்று.

தன் வாழ்வை மருத்துவ சேவையில் ஒப்புக்கொடுத்த  பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் அவர்கள், யுத்தத்தில் அடிபட்ட போர்வீரர்களுக்கு அயராது, கையில் ஒரு விளக்கை ஏந்திக்கொண்டு இரவென்றும் பாராமல் செய்த சேவையை நினைவுகூறவே, மருத்துவ துறையில் செவிலியர் பயிற்சி பட்டமளிப்பு அன்று கையில் விளக்கேந்தி தங்களை அர்ப்பணம் செய்கின்றனர் என்பது ஒருவேளை பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த அம்மையார் தன்னை இந்த பணியில் ஈடுபடுத்தும் முன்னர் பட்ட கஷ்டங்களும் வேதனைகளும் பலருக்கும் தெரியாத ஒன்று.

தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி எழுதும்போது அவர்கள் தன்னுடைய முப்பத்தி ஓராவது வயதில் மரணத்தைத் தவிர வேறொன்றையும் தன் மனம் நாடவில்லை என்று கூறுகிறார். வாழ்க்கையின் அடிமட்டத்தில், எதிர்காலமே தனக்கு இல்லை என்று தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்த நாட்களில் கர்த்தர் அவர்களுக்காக மகிமையுள்ள எதிர்காலத்தை வைத்திருந்தார்.

ஆயியின் தோல்விக்கு பின்னர் இவ்வாறுதான் யோசுவாவின் மனநிலையும் இருந்தது. இனி தனக்கு எதிர்காலமே இல்லை என்று எண்ணியவனாய் கர்த்தரின் சமுகத்தில் தன் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டு முகங்குப்புற கிடந்தான். எபிரேய அகராதியில் கலங்குதல் என்ற வார்த்தைக்கு ’நொறுங்கிய மனநிலையில் தரையில் விழுதல்’  என்ற அர்த்தத்தைப் பார்த்தேன்.

கர்த்தர் மனம்நொறுங்கிக் கிடந்த தன் பிள்ளையைப் பார்த்து அப்படியே முகங்குப்புற கிட என்று கடிந்து கொள்ளவில்லை. அதற்குமாறாக கர்த்தர், ஏன் முகங்குப்புற விழுந்து கிடக்கிறாய்? எழுந்திரு! பயப்படாமலும், கலங்காமலும் இரு என்கிறார்.

ஏசாயா 41:10 ல் தேவனாகிய கர்த்தர் “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே நான் உன் தேவன்” என்ற வார்த்தைகளை படிக்கும்போது வனத்தையும் பூமியையும் படைத்த தேவன் நம்மோடிருக்கும் போது நாம் ஏன் கலங்க வேண்டும் என்று தோன்றவில்லையா? நான் உன் தேவன்! உன் வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் எனக்குத் தெரியும்! என்று தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார்!

இன்று தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், பணக்காரர்களும், உலகத்தலைவர்களும், உலகம் தங்கள் கையில் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், முகங்குப்புற கிடக்கும் தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்து கர்த்தர் நான் உன் தேவன், உன் வாழ்க்கை எனது கரத்தில் உள்ளது நீ கலங்காதே என்கிறார்.

கர்த்தர் மனம் நொறுங்கிய யோசுவாவையும், இஸ்ரவேல் மக்களையும் ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து, நம்பிக்கையின் வாசலுக்கு அழைத்துவந்தார்.

யோசுவாவைப் போல என்றாவது சூழ்நிலைகளாலும், பிரச்சனைகளாலும் சுமையைத் தாங்க முடியாமல் நொறுங்கிப்போன அனுபவம் உண்டா? நான் சுமைகள் என்று சொல்லுவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். ஒருவேளை கடன் சுமைகளால் நீ நொறுங்கிக் கொண்டிருக்கலாம்! ஓவ்வொருதடவை தொலைபேசி மணி அடிக்கும்போதும் பணம் வசூல் செய்பவரின் அழைப்போ என்று பயந்து கலங்குகிறாயா? அல்லது திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளால் கலங்கிப்போயிருக்கிறாயா? யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாத தனிமையின் கொடுமை உன்னை கலங்க செய்கிறதா? ஒருவேளை தற்போது பார்த்த உன்னுடைய மருத்துவ பரிசோதனை உன்னை கலங்க செய்கிறதா?

கர்த்தர் நம்மிடம் கலங்காதே என்று சொல்கிறார். பள்ளத்தாக்கிலும் கர்த்தர் நம்மோடிருக்கிறார். பயப்பட ஒன்றுமில்லை! கலங்கத் தேவையில்லை!

கசக்கி பிழியப்படுகிற திராட்சை தானே அதிக கனிரசத்தைக் கொடுக்கிறது!

உனக்கு மகிமையுள்ள எதிர்காலம் உண்டு! கலங்காதே!

உங்கள்சகோதரி,

பிரேமாசுந்தர்ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

பயப்படாதே! நீ பயப்பட ஒன்றுமிலை!

யோசுவா: 8:1 “அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி;  நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு;”

நேற்று நான் வால்ப்பாறைக்கு பயணம் செய்தேன். மழைக்காலத்தில் காரில் பிரயாணம் பண்ணுவது நாங்கள் விரும்பாத ஒரு காரியம். பொள்ளாச்சி அருகில் சென்றபோது பயங்கர மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் மலைப்பகுதியை நெருங்க நெருங்க மலைகளிருந்து நீர் ஊற்றிக்கொண்டிருந்ததால், மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்துகொண்டிருப்பது தெரிந்தது. மலைகளில் கார் ஏறிய போது இருள் சூழ்ந்த மேகத்தோடு மழை கொட்டிக்கொண்டிருந்ததால் ’பனிப்படரும் பகுதி’ ’கற்கள் விழும் பகுதி’ என்ற எச்சரிக்கைகள் என்றுமில்லாத அளவு பயத்தைக் கொடுத்தது.

ஆங்காங்கே மழையினால் மலை சரிவு ஏற்பட்டதற்கான அடையாளங்களும் தெரிந்தன. கொட்டுகிற மழையில் கார் நாற்பத்தொரு கொண்டை ஊசி வளைவுகளில் ஏறியபோதும், வேரோடு சாய்ந்து கிடக்கும் மரங்களை கடந்தபோதும், சாலையில் விழுந்து கிடந்த கற்களை பார்த்தபோதும், பயத்தால் என் மனம் சற்று சலசலத்து போனது.

மேகத்தின் இருள் மத்தியில், மலையின் உச்சியில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சற்று பிரகாசமாய் வெளியே வருவதைக் கண்டேன்!. வானத்தையும் பூமியையும் படைத்தவர் நம்மோடிருக்கிறார் என்ற உறுதியுடன் பிரயாணத்தைத் தொடர்ந்து வால்பாறையை வந்து அடைந்தோம்.

பயம் என்பது நம்முடைய வாழ்க்கைப் பிரயாணத்திலும் உண்டு! பனிப்படரும், கற்கள் விழும் பகுதிகள் உண்டு! இருள்சூழும் பகுதிகள் உண்டு! மலைகளும் பள்ளத்தாக்குகளும் உண்டு!

இஸ்ரவேல் மக்களும், அவர்கள் தலைவனாகிய யோசுவாவும், எரிகோவில் வெற்றி தந்த தேவனை மறந்து, தங்கள் சொந்த முடிவின்படி ஆயிக்கு போருக்கு போய் தோல்வியுற்று மனமடிந்த வேளையில், அவர்களுக்குள்ளே ஒருவன் தனக்கு சொந்தமல்லாதவைகளை திருடி, மறைத்து வைத்ததால் ஆகோர் பள்ளத்தாக்கை கடக்க வேண்டியிருந்தது. ஆயியின் தோல்வியால் எதிர்காலத்தைக் குறித்த பயம் அவர்களைப் பிடித்தது. இனி என்ன செய்யப்போகிறோம், இப்படி நடந்து விட்டதே, இனி யார் முகத்தில் விழிப்பது என்ற பயம். இப்படிப்பட்ட வேளையில் கர்த்தர் கர்த்தர் யோசுவாவை நோக்கி,  நீ ஒன்றுக்கும் பயப்படாதே என்கிறதைப் பார்க்கிறோம்.

பயப்படாதே, ஆகோர் பள்ளத்தாக்கு உனக்கு இளைப்பாறுதலின் ஸ்தலமாகவும், நம்பிக்கையின் வாசலாகவும் மாறும் என்கிறார்.

இந்த அனுபவத்தை சங்கீதக்காரனாகிய தாவீதுராஜாவும் பெற்றிருந்தார். சங் 23 ல், நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும், பொல்லாப்புக்கு பயப்படேன் தேவரீர் என்னோடே இருக்கிறீர் என்கிறார். தாவீது ஏன் பொல்லாப்புக்கு பயப்படவில்லை?  ஏனெனில் தேவரீராகிய கர்த்தர் அவரோடே கூட இருந்தார். இந்த வாக்குத்தத்தத்தையே கர்த்தர் யோசுவாவுக்கு கொடுத்தார். நான் மோசேயோடே இருந்ததுபோல உன்னோடு இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்றார். (யோசு1:5)

கர்த்தர் இந்த வாக்குத்தத்தத்தை யோசுவாவுக்கு கொடுத்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும். நேற்றும், இன்றும் என்றும் மாறாத தேவன் நமக்கும் இதே வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறார். கர்த்தர் நம்மோடிருக்கும்போது நாம் பயப்படத் தேவையில்லை.

பொருளாதாரம் சீர்கெட்டு போய்க்கொண்டிருக்கிற வேளையில் கர்த்தர் உன்னைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன் என்கிறார்!

திருமண வாழ்க்கை சீர்கெட்டு போய்க்கொண்டிருக்கிற வேளையில் கர்த்தர் உன்னைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன் என்கிறார்!

பயங்கரமான நோய் உன்னை பாதித்திருக்கும் இந்த வேளையில் கர்த்தர் உன்னைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன் என்கிறார்!

கர்த்தரை அறியாத குடும்பத்தில் நீ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாயா? கர்த்தர் உன்னைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன் என்கிறார்!

எதிர்காலத்தைக் குறித்த பயமா? வயதான காலத்தைக்குறித்து பயமா? கர்த்தர் உன்னைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன் என்கிறார்!

யோசுவாவோடு இருப்பேன் என்று வாக்களித்த தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதியே என் உள்ளத்தில் இன்று நம்பிக்கையும், உற்சாகத்தையும், அன்பையும் கொடுத்து, எல்லா பயங்களிலிருந்தும் என்னை விடுதலையாக்குகிறது!

உன்னுடைய எல்லா பயங்களையும் கர்த்தரிடம் கூறி விட்டாயா?

உன்னுடைய பயம் என்னும் இருளை, கர்த்தருடைய அன்பு, கிருபை என்ற வெளிச்சத்தின் மூலம் பார்!

கடலின் மேல் நடந்து வந்தவர், காற்றையும் கடலையும் அதட்டினவர், உன்னப்பார்த்து பயப்படாதே என்கிறார். பயப்படாதே!

 

உங்கள்சகோதரி,

பிரேமாசுந்தர்ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!