Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 247 கடல் நீர் தாகம் தீர்க்காது!

ரூத்: 1: 2  அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய் அங்கே இருந்துவிட்டார்கள்.

எங்களுடைய திருமண வாழ்க்கையின் முதல் 20 வருடங்கள் நாங்கள் பல மாகாணங்களுக்கு செல்ல வேண்டியதிருந்தது. ஒவ்வொருமுறையும் ஒரு புது ஊருக்கு செல்லும்போது, சாமான்களை பார்சல் பண்ணுவது, வீடு தேடி அலைவது, பிள்ளைகளுக்கு ஸ்கூல் தேடி அலைவது, புது திருச்சபைக்கு செல்வது, புதிய டாக்டரைக் கண்டு பிடிப்பது போன்ற பலக் காரியங்களை செய்ய வேண்டியதிருக்கும். இதில் மொழிப் பிரச்சனை வேறு!  ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு மொழி பேசுவதால் நம் வேலைகள் சுலபமாக முடியவே முடியாது. ஒரு இடத்தில் நாம் அப்பாடா என்று இளைப்பாற குறைந்தது ஒருவருடமாவது ஆகிவிடும்!

இத்தனை கஷ்டங்கள் உள்ளதால் எந்தக் காரணமும் இல்லாமல் யாரும் ஒரு புது ஊருக்குத் தன் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு செல்ல மாட்டார்கள். நாங்கள் ஒவ்வொருமுறையும் புது ஊர்களுக்கு சென்றதன் காரணம், எங்களுக்கு வேலையில் மாற்றம் கொடுத்ததால்தான்.

நாம் ரூத் புத்தகத்தைத் தொடரும்போது, எலிமெலேக்கு தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு மோவாப் என்ற புது தேசத்துக்கு சென்றதன் காரணம் அவன் வாழ்ந்த  ‘ அப்பத்தின் வீடு’ என்று அழைக்கப்பட்ட பெத்லெகேமில் பஞ்சம் வந்ததால்தான் என்று பார்க்கிறோம்.

பெத்லெகேமுக்கும் மோவாப் தேசத்துக்கும் இடையில் பெரிய தூரமில்லை என்றாலும், மோவாப் தேசம் கானானை விட மிகக்குறைவான மழையைப் பெறும் தேசம் என்ற உண்மையை நான் அறிந்தபோது, எப்படி இந்தக் குடும்பம் கானானை விட்டு விட்டு பெத்லெகேமுக்கு சென்றார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்ல , வேதம் கூறுகிறது, மோவாபியன் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது, ஏனெனில், இஸ்ரவேல் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும் தண்ணீரோடும் எதிர்கொண்டு வரவில்லை என்று ( உபாகமம்: 23:3,4).

இங்கே ஒரு இஸ்ரவேலன் , பஞ்சம் வந்தவுடன், அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமை விட்டு, அப்பமும் தண்ணீரும் கொடுக்காத மோவாபுக்குத் தன் குடும்பத்தை அழைத்துச் செல்வதைப் பார்க்கிறோம்.

எலிமெலேக்கின் குடும்பத்தை எப்பிராத்தியர் என்று வேதம் சொல்கிறது. எப்பிராத்தியர் என்பவர்கள் மிகுந்த செல்வந்தர்கள் என்றும், பரம்பரையாக செல்வத்தில் உயர்ந்த  வம்சங்களை சேர்ந்தவர்கள் என்றும் வேதாகம வல்லுனர் கூறுகின்றனர். ஒருவேளை பெத்லெகேமில் பஞ்சம் வந்தவுடன், தன் செல்வத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மோவாபுக்கு சென்றிருக்கலாம். எது எப்படியோ தெரியவில்லை, ஆனால் மோவாபுக்கு சென்ற அந்தக் குடும்பம் மோவாபிலேயே தரித்து விட்டார்கள் என்றுமட்டும் தெரிகிறது.

இது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஒரு பாடத்தை கற்பிக்கிறது அல்லவா? பல நேரங்களில் தற்காலிகமான சூழ்நிலைகளைப் பார்த்து நம் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை நாம் எடுக்கிறோம். நான் இதை செய்தால் சுகமாக இருப்பேன், நான் இங்கு சென்றுவிட்டால் என் குடும்பம் நன்றாக இருக்கும், நான் இப்படியெல்லாம் செய்தால் தான் என் சொத்து சுகங்களைப் பாதுகாக்க முடியும் என்று செல்லும் நாம், அந்த சுகபோகத்தை விடமுடியாமல் அங்கேயே தங்கியும் விடுகிறோம்.

அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமை விட்டு விட்டு எங்கே அலைந்து கொண்டிருக்கிறாய்? கர்த்தரின் சித்தத்தை விட்டு விட்டு எங்கே சிதறிக்கொண்டு இருக்கிறாய்? பெத்லெகேமை விட்டு மோவாபுக்கு சென்றதற்கு சமமான என்ன விபரீதம் இன்று உன் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது?

 நீ தேடியலையும் இந்த உலகப்பிரகாரமான எல்லா சுகங்களும் கடல் நீர்ப் போன்றதுதான், அது ஒருக்காலும் உன் தாகத்தை தீர்க்காது.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

1 thought on “மலர் 3 இதழ் 247 கடல் நீர் தாகம் தீர்க்காது!”

  1. Obedience is better than sacrifice! When we obey to His ways and will, His reward is bountiful!! We must learn to live, wherever the Lord takes and must face the living condition in those places!!! Without the desert there is no Cannan!!! Without God there is no promise land!!!!

Leave a comment