1 சாமுவேல் 2: 19 “அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்”.
ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்னால் என்னுடைய அம்மாவின் கையால் செய்து எனக்குக் கொடுத்த ஒரு மணி பொம்மையை நான் இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அந்த பொம்மையை எனக்காக செய்த சில வருடங்களில் அவர்கள் மரித்துப் போனாலும் அது எனக்கு ஒரு அன்பின் அடையாள சின்னமாக இருக்கிறது.
நிச்சயமாக நம் ஒவ்வொருவக்கும் நம்முடைய சிறிய வயதின் ஞாபகமாக ஏதாவது ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை அது நம்முடைய பாட்டி தாத்தாவோ அல்லது அம்மா அப்பாவோ நமக்குக் கொடுத்த பொம்மையாக இருக்கலாம், அல்லது நகையாக இருக்கலாம், துணியாகக் கூட இருக்கலாம்!
தாய் தந்தையரை சிறிய வயதிலேயே இழந்த ஒரு பெண் என்னோடு பல வருடங்களுக்கு முன் வேலை செய்தாள். அவளிடம் கிழிந்த ஒரு ஸ்வெட்டர் இருந்தது. யாருமே தன்னிடம் அன்பு செலுத்த இல்லாத நிலையில் தான் இருந்தபோது தன்னை அன்பால் அரவணைத்த ஒரு ஏழைத் தாய் தனக்குக் கொடுத்தது என்று அதை பத்திரமாக வைத்திருந்தாள்.
இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது சாமுவேலின் தாய் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய அருமை மகன் வளர்ந்த இடத்துக்கு வரும்போது அவனுக்கு ஒரு சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள் என்று.
இன்றைய கால கட்டத்தைப் போல் போட்டோ அனுப்பி ஒருவரையொருவர் பார்க்க முடியாத காலத்தில் வாழ்ந்த அந்தத் தாய் எப்படி அவனுக்கு சரியான அளவில் சட்டை தைத்துக் கொண்டு வர முடிந்தது? தூரமாக இருந்தாலும் வருட முழுவதும் தன் குழந்தையின் மேலேயே கவனமாக இருந்திருப்பாள்! ஒருவேளை அவனுடைய வயதில் இருந்த யாராவது ஒரு பிள்ளையின் வளர்ச்சியை கவனித்து அளவு எடுத்து தான் நேசிப்பதை சாமுவேலுக்கு வெளிப்படுத்த தன் கரங்களால் அவனுக்கு சட்டை தைத்து வந்திருப்பாள்.
ஒவ்வொரு வருடமும் சின்ன சாமுவேல் தன் தாயின் கரங்களால் தைத்த சட்டைக்காக காத்திருந்திருக்கலாம். ஒருவேளை அதைப் பத்திரப்படுத்தி தன் தாயின் அன்பின் அடையாளமாக வைத்திருந்திருக்கலாம். அவன் தேவாலயத்தில் தனிமையாக வளர்ந்த நாட்களில், தனித்து உறங்கிய வேளைகளில் அவனுடைய தாயின் அரவணைப்பை அந்த வஸ்திரம் அவனுக்கு கொடுத்திருக்கக்கூடும்!
தன்னுடைய பிள்ளையை விட்டு பிரிந்து வாழும் சூழ்நிலையில் இருந்தாலும் , தன்னுடைய நேசத்தையும், அன்பின் அரவணைப்பையும் அன்னாள் என்றத் தாய் தன் மகனுக்குத் தன்னுடைய செயலின் மூலமாக வழங்கினாள் என்று பார்க்கிறோம்!
நாம் நம்முடைய பிள்ளைகளை நேசிப்பதை எப்படி வெளிப்படுத்துகிறோம்? நம்முடைய கரம் பிள்ளைகளை அரவணைக்கிறதா? நம்முடைய செயல் பிள்ளைகளுக்கு நம் நேசத்தை காட்டுகிறதா?
இன்று வேலைக்கு போவதிலும், பணம் சம்பாதிப்பதிலும் அநேக நேரத்தை செலவழிக்க வேண்டியிருக்கிற நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காக சற்று நேரம் ஒதுக்கி உங்கள் அன்பின் அரவணைப்பை அவர்கள் உணரும்படி செய்யுங்கள்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்

What worldly riches would worth for a MOTHER ! She is an indescribable person in the world!! Her actions and love for her children are adorable!! How the whole world should respect her in High esteem!!!! Next to God, none can replace a MothersHeart! She is awesome!!!!! Just mere words would not enough to express our love to Mothers!!! Thanks for reminding of God’s true Mothers!!!! God Bless!!!