Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர் 5 இதழ் 309 எபெனேசர்! இம்மட்டும் உதவி செய்தார்!

1 சாமுவேல் 7:12 அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும், சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.

இருபது வருடங்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் வாழ்ந்ததால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய கோபாக்கினையை அனுபவித்துதான் ஆக வேண்டும், அவர்களுக்கு கர்த்தர் எப்படி தயை செய்வார்? கர்த்தர் ஒன்றும் அவர்களை சும்மா விடப் போவதில்லை என்றுதானே நாம் எண்ணுகிறோம்?

அவர்கள் சாமுவேலிடம் ஜெபிக்கும் படி வேண்டியபோது கர்த்தருடைய தாசனாகிய சாமுவேல் அவர்களுக்காக வேண்டுதல் செய்தார் என்று பார்த்தோம். பின்னர் என்ன நடந்தது?

சாமுவேல் அவர்களுக்காக வேண்டுதல் செய்த அதே வேளையில், இஸ்ரவேல் புத்திரரை இன்னும் பெலனற்றவர்கள் என்று கேளனமாக எண்ணிய பெலிஸ்தியர், அவர்களோடு யுத்தம் பண்ண வந்தனர் ( 7:10). இது நம்முடைய வாழ்க்கையிலும் நடப்பது தானே! நாம் தேவனோடு நெருங்கும் வேளையில், சாத்தான் நம்மோடு யுத்தம் பண்ண வருகிறான் அல்லவா?

சாமுவேல் அவர்களுக்காக வேண்டுதல் செய்து சர்வாங்க தகனபலிகளை செலுத்தியபோது, கர்த்தர் பெலிஸ்தரின்மேல் மகா பெரிய இடி முழக்கங்களை முழங்கப்பண்ணி அவர்களைக் கலங்கப் பண்ணினார் என்றுப் பார்க்கிறோம். அதனால் அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப்பட்டு விழுந்தார்கள். இஸ்ரவேலர் அவர்களைத் துரத்தி முறியடித்தனர்.

இந்த வெற்றி எதனால் கிடைத்தது? இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வார்த்தையைக் காப்பாற்றி, மனந்திருந்தியதால் கிடைத்த வெற்றியா அது? அல்லது அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்ததால் கிடைத்த வெற்றியா? இல்லவே இல்லை! தேவன் உண்மையுள்ளவரானபடியால், தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுபவரானபடியால் கிடைத்த வெற்றி அது! தங்களுடைய சுய பெலத்தால் கிடைத்த வெற்றி இல்லை என்றும், தாங்கள் இதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் இஸ்ரவேலருக்கும் நன்கு தெரியும். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டர் என்பது எவ்வளவு உண்மை!

அது மட்டுமல்ல, பின்னர் பெலிஸ்தர் இஸ்ரவேலரின் எல்லைக்குள் வராதபடி தாழ்த்தப்பட்டார்கள், சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தரின் கை பெலிஸ்தருக்கு விரோதமாக இருந்தது என்று 7: 13 ல் வாசிக்கிறோம்.

சாமுவேலின் வாழ்க்கையிலிருந்து நாம் படிக்க வேண்டிய இரண்டு பெரிய காரியங்களை இங்கு பார்க்கிறோம்.

சாமுவேல் என்ற ஒரு தேவ மனிதன் இஸ்ரவேலில் உள்ளவரை நாம் அவர்கள் எல்லைக்குள் கூட நுழைய முடியாது என்று பெலிஸ்தியர் உணர்ந்தனர். ஒரே ஒரு கர்த்தருடைய மனிதனான சாமுவேல் பெலிஸ்தரின் சேனையை விட வல்லமையுள்ளவன்! நம்முடைய வாழ்வில் நாம் மறக்கக்கூடாத ஒரு பாடம் அல்லவா இது! கர்த்தர் நம் பக்கம் இருப்பாரானால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டாம்!

சாமுவேல் இந்த வெற்றிக்கான மகிமையை தனக்கு எடுத்துக் கொள்ளாமல், தன்னுடைய ஜெபத்துக்கு எடுத்துக் கொள்ளாமல், கர்த்தருக்கு நன்றி செலுத்தினான். கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று ஒரு கல்லை எடுத்து மிஸ்பாவுக்கும், சேணுக்கும் நடுவே நிறுத்தி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். ஒவ்வொரு நாளும் பல காரியங்களுக்காக ஜெபிக்கும் நாம், கர்த்தர் நமக்கு பதில் கொடுக்கும்போது நன்றி செலுத்துகிறோமா?

நம்முடைய கீழ்ப்படியாத வாழ்க்கையால் கர்த்தருடைய பிரசன்னத்தை பெற நாம் தகுதியற்றவர்களாய் இருக்கும்போது, தேவன் உண்மையும், நீதியும் நிறைந்தவரானபடியால் தம்முடைய பிரசன்னத்தை நமக்கு அருளி, அவர் நம்மை நேசிக்கும் பரம தகப்பன் என்று நம்மை உணர செய்கிறார்! அவர் உன் பக்கம் இருக்கும் போது வெற்றி உனதே! பெலிஸ்தர் உன் எல்லைக்குள் நெருங்க முடியாது! அவர்களை இடி முழக்கத்தால் கலங்கப் பண்ணூவார்! நீ கலங்காதே!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment