Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர் 5 இதழ் 311 பணம் பேசிய காலம்!

1 சாமுவேல் 8: 1-3, சாமுவேல் முதிர்வயதானபோது தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாதிபதிகளாக வைத்தான்
அவனுடைய மூத்த குமாரனுக்குப் பெயர் யோவேல். இளையவனுக்கு பெயர் அபியா. அவர்கள் பெயெர்செபாவிலே நியாதிபதிகளாயிருந்தார்கள்.
ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல்,பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள்.

இந்த வேதாகமப் பகுதியில் சாமுவேல் முதிர் வயதாகிப் பார்க்கிறோம். தன் வாழ்நாள் முழுவதும் அசைக்க முடியாத கற்பாறை போன்று கர்த்தருக்காக வாழ்ந்த ஒரு மனிதன் அவர். இஸ்ரவேல் மக்கள் தேவையில் இருந்த போதெல்லாம் நம்பிக்கையோடு இந்த தேவ மனிதனை நாடி சென்றனர், ஏனெனில் இவர் தம் நம்பிக்கையை பரமத் தகப்பனாகிய கர்த்தர் மேல் கட்டியிருந்தார். மக்களுடைய முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார்.

ஆனால் அவருடைய பிள்ளைகள் அவருடைய வழியைப் பின் பற்றவில்லை என்று மிகவும் வருந்தத்தக்க ஒரு காரியத்தை நாம் இங்கு பார்க்கிறோம். ஒரு காரியத்தை இங்கு நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். சாமுவேலின் குமாரர் இருவரும் கொலை பாதகர் என்றோ அல்லது அக்கிரமக்காரர் என்றோ வேதாகமம் கூறவில்லை. அவர்களைப் பொருளாசைக்காரர் என்று கூறுகிறது. அவர்கள் நியாதிபதிகளாக இருந்த இடத்தில், ஒரு காரியத்தை செய்வதற்காக யாராவது அவர்களுக்கு பரிதானம் அல்லது அன்பளிப்புத் தொகை கொடுத்தால் அவர்கள் அந்தப் பக்கம் சாய்ந்து நியாயம் கொடுத்து விடுவார்கள்!

இந்த காலத்தில் நடப்பது போல அவர்கள் காலத்தில் பணத்தினால் நியாயத்தை விலைக்கு வாங்க முடிந்தது. இஸ்ரவேல் புத்திரர் நடுவே பணம் பேசியது. பணக்காரர்கள் தங்கள் செயலுக்கு நியாயத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு ஏழைகளை அடக்கி விட்டனர். நாம் வாழும் இன்றைய சமுதாயம் போலவே அன்றைய இஸ்ரவேல் சமுதாயமும் இருந்தது!

நாம் படித்துக் கொண்டிருப்பது நியாயத்தை விலை கொடுத்து வாங்கிய பணக்காரர்களைப் பற்றியா? இல்லவே இல்லை! பணத்தை வாங்கிக் கொண்டு நியாயத்தை மாற்றிக் கொடுத்த தேவனுடைய ஊழியர்களைக் குறித்துதான்! கர்த்தருடைய ஊழியக்காரர்களின் மனதில் பொருளாசை என்ற பிசாசு புகுந்து கொண்டதால் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை.

இந்தப் பகுதியை நான் படிக்கும்போது, சுய இச்சைகளுக்கும் பொருளாசைகளுக்கும் விசுவாசிகளாகிய நாம் எவ்வளவு தூரம் இடம் கொடுக்கிறோம் என்று சிந்தித்துப் பார்த்தேன். நம்மை சுற்றி அநேகர் அடிப்படை தேவைகளைக் கூட சந்திக்க முடியாமல் கஷ்டப்படும் போது, நாம் கண்ணில் கண்ட யாவையும் அடைய ஆசைப் படுகிறோம் அல்லவா!

உங்களையும் என்னையும் மட்டுமல்ல இன்றைய அநேக ஊழியக்காரரையும் பிடித்து ஆட்டும் பொருளாசை என்ற பிசாசுக்கு,சாமுவேலின் குமாரராகிய யோவேலும், அபியாவும் அடிமையாகி விட்டனர். தங்களுடைய ஊழியத்தை, கர்த்தர் தங்களுக்கு அளித்த நியாதிபதி என்ற அந்தஸ்தை தவறாக உபயோகப்படுத்தி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

பொருளாசையால் நாம் கூடக் கர்த்தர் நமக்கு இலவசமாக கொடுத்திருக்கும் அவருடைய கிருபையை இழந்து விடக் கூடும்! ஜாக்கிரதை!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment