கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 7 இதழ்: 524 பொறுமையாயிரு! சோர்ந்து போகாதே!

ரூத்: 1: 6  “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,

நாம் ரூத் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். அயல் நாட்டில் விதவையாக வாழ்ந்த நகோமி, தன் மருமக்களோடு கூட அப்பத்தின் வீடாகிய பெத்லேகேமுக்கு திரும்பி செல்ல முடிவு செய்தாள் என்று பார்த்தோம்.

பெண்களுக்கு பொதுவாகவே மனத் தைரியமும், பொறுமையும் அதிகம் என்று நினைப்பவள் நான். சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய ஊழியத்தில் பணிபுரிந்த ஒரு சகோதரியின் கணவருக்கு மூளையில் கட்டியை ஆப்பரேஷன் பண்ணி எடுத்து வீட்டுக்கு வந்தவுடன் வலிப்பு வந்ததால், தையல் போட்ட இடத்தில் திறந்து விட்டது. மறுபடியும் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணினர். மறுபடியும் ஆப்பரேஷன், மறுபடியும் கட்டி என்று இரண்டு வருடம் பெரும்பாடு பட்டபின் அவர் மரித்து போனார். இவற்றை பொறுமையாக சகிக்கும் மன தைரியம் பெண்களுக்குக் கர்த்தர் கொடுக்கிற கிருபைதான்.

கொஞ்ச நாட்களாக நான் ரூத் புத்தகத்தை திரும்பத் திரும்பப் படித்தேன். இன்று நாம் வாசிக்கிற வசனத்தின் வரிகள் எனக்கு நகோமியின் பொறுமையைத் தான் விளக்கியது.  கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டாள்.  நகோமி மிகக் கடினமான சூழ்நிலையில் மோவாபில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவள்  தன் மனத்தைரியத்தை விடவேயில்லை. தன்னுடைய கர்த்தரின் வழிநடத்துதலுக்காக பொறுமையாகக் காத்திருந்தாள். ஒருநாள் தேவனின் மெல்லிய சத்தம் அவள் செவிகளில் பேசி அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமுக்கு திரும்பும்படி அழைத்ததை உணர்ந்தாள்.

நம் வாழ்வின் கடினமான சூழலை பொறுமையாக சகிப்பது மட்டுமல்ல, அதை மகிமையாக மாற்றிப்போடும் திறமையும் நமக்குத் தேவை! நாம் கடந்து வரும் பாதையில் உள்ள கற்களையும், முட்களையும் நாம் பொறுமையாக, மனத் தைரியத்தோடு கடந்து வரும்போது, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அப்பத்தின் வீட்டில் அவர் நமக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற விருந்தை நோக்கி அழைத்து செல்வார் என்பதில் சந்தேகமேயில்லை.

அவர் இன்று உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்! நீ கடந்து வரும் வருத்தங்களின் மத்தியில், வேதனைகளின் மத்தியில், வலிகளின் மத்தியில்,  மனம் சோர்ந்து விடாமல் தைரியமாயிரு! பொறுமையாய் இரு! சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கும் அப்பத்தின் வீடு உனக்காகக் காத்திருக்கிறது!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment