கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 858 இரட்சிப்பின் அடையாளமான ஒரு கயிறு!

யோசுவா: 2: 17 ” அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்த சிவப்பு நூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி….”

இஸ்ரவேலின் வேவுகாரர் இருவர் எரிகோவுக்குள் நுழைந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி யாராவது புதிய மனிதர் அவள் வீட்டில் தஞ்சம் புகுந்து விட்டார்களா என்று விசாரித்தான்.

உடனடியாக சிந்திக்கும் திறன் கொண்ட ராகாப், அந்த இருவரையும் தன் வீட்டில் ஒளித்து வைத்துவிட்டு, அவர்களிடம், ஆம் இருவர் வந்தார்கள், அவர்கள் யாரென்று தெரியாது! அவர்கள் புறப்பட்டு போய்விட்டார்கள், சீக்கிரம் தேடுங்கள், கண்டு பிடித்துவிடலாம் என்றாள்.

அவர்கள் போனபின்னர், ராகாப் வீட்டு வாசலை அடைத்துவிட்டு, அவர்களை ஜன்னல் வழியாய் இறக்கிவிடும் எண்ணத்துடன் அவர்களிடம் போய், எரிகோ அழிக்கப்படும்போது, தன் குடும்பத்தை இரட்சிக்குமாறு வேண்டுகிறாள். அதற்கு அவர்கள் ராகாபிடம், தங்களை இறக்கி விடுகிற சிவப்பு நூல் கயிற்றை, அவர்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, இஸ்ரவேல் மக்களுக்கு அடையாளமாய் வைக்கும்படி கூறுகிறார்கள்.

இந்த ‘சிவப்பு நூல் கயிறு’ கதையிலிருந்து நான் கற்றுக்கொண்ட மூன்று காரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

முதலாவது சிவப்பு நூல் கயிறு ஒரு கீழ்ப்படிதலின் அடையாளம்!

சார்லஸ் ஸ்பர்ஜன் அவர்கள் ராகாபை ஒரு விசுவாசியின் கீழ்ப்படிதலுக்கு உதாரணமாக சுட்டிக்காடுகிறார்! வேவுகாரர் ராகாபிடம் என்ன சொன்னார்களோ அதை அப்படியே செய்கிறாள்! சிறு மாறுதல் கூட இல்லை! சிவப்பு கயிறுக்கு பதிலாய் மஞ்சளையோ, பச்சையையோ கட்டவில்லை! அவர்களுடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்தாள்! மற்றவர்களுடைய கண்களுக்கு இது ஒரு சிறு காரியமாகத் தெரிந்திருக்கலாம், ஆனால் ராகாபுக்கு அப்படியல்ல! உண்மையான அன்பு சிறு காரியங்களைக் கூட கவனிக்கும்.

நாம் ராகபைப் போல தேவனாகிய கர்த்தரை நேசிப்போமானால், கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கும் அன்றாட வாழ்க்கையின் சிறு காரியங்களைக்கூட கவனித்து அவருக்கு கீழ்ப்படிவோம் அல்லவா!

இரண்டாவதாக சிவப்பு நூல் கயிறு எல்லோரையும் இரட்சித்தது!

நான் பலமுறை ராகாப் கதையை வாசித்திருந்தாலும், இந்த சத்தியம் என் கவனத்தில் படவேயில்லை. என்ன விந்தை! வேவுகாரரை ஜன்னல் வழியே இறக்கிவிட்டபோது இந்த சிவப்பு நூல் கயிறு அவர்களை எரிகோவின் பிடியிலிருந்து இரட்சித்தது! பின்னர் ராகாபையும் அவள் வீட்டுக்குள் அடைக்கலமாய் வந்த அவள் குடும்பத்தார் எல்லோரையும் இந்த கயிறு இரட்சித்தது!

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருடைய மகா பெரிய கிருபை என்னும் சிவப்பு நூல் கயிறு இன்றும் எல்லோரையும் இரட்சிக்கிறது! ஜாதி, மதம், நிறம் எந்த பேதமுமின்றி சிலுவையில் இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தை நோக்கிப் பார்க்கும் யாவருக்கும் அது இரட்சிப்பை அளிக்கிறது.

மூன்றாவதாக இந்த சிவப்பு நூல் கயிறு ராகாபின் உள்ளான விசுவாசத்தின் வெளிப்புற அடையாளம்!

அவள் சிவப்பு கயிறை ஜன்னல் வழியாகத் தொங்க விட்டதும் எத்தனைபேர் பார்த்திருப்பார்கள்! நிச்சயமாக ராகாப் வானத்தையும் பூமியையும் படைத்த தேவனாகிய கர்த்தர் மேல் தான் கொண்ட விசுவாசத்தைப் பற்றி கூற பயந்திருக்கமாட்டாள்! இவ்வளவு நாட்கள் உள்ளேயே மறைத்து வைத்திருந்த விசுவாசத்தை வெளிப்படுத்த சிவப்பு நூல் உதவியது!

அருமையான தேவனுடைய பிள்ளைகளே!  நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு அடையாளம் அறிவும்,திறமையும் அல்ல, நம்முடைய கீழ்ப்படிதல் தான்!

திராட்சரசம் குறைவு பட்ட கானாவூர் கயாணத்தில், கர்த்தராகிய இயேசு ஆறு கற்சாடிகளில் தண்ணீரை நிரப்பும்படி கட்டளையிட்டபோது, அதை நிறைவேற்றிய வேலைக்காரர்களின் மனதில் என்ன எண்ணம் ஓடியிருக்கும்! ஆனாலும் அவர் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்ததால் பெரிய அற்புதம் அல்லவா நடந்தது!

நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் கர்த்தருக்கு கீழ்ப்படிகிறோமா? கர்த்தருக்கு கீழ்ப்படிதலே நாம் அவர்மேல் வைத்திருக்கிற அன்பை வெளிப்படுத்தும்! சிறு காரியத்தைக்கூட அலட்சியம் பண்ணாதே! அப்படியே கீழ்ப்படி! அற்புதத்தைக் காண்பாய்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment