கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 875 நாம் எதிர்பார்க்கும் முடிவைத் தரும் நம் தேவன்!

யோசுவா: 15:16 ” கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.”

நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து  நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம்.

முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம்.

இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம்.

மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக நாம் பார்த்தது என்றும் குறையாத பெலன்.

நான்காவதாக உலகத்தகப்பனான காலேபிடமிருந்து நாம் நம் பரலோகத்தகப்பனுடைய அடையாளமாகக் கண்டது என்றும் மாறாத உண்மையுள்ள தன்மை!

ஐந்தாவதாக நம் எதிரிகளை முறியடிக்க நம் தேவன் வல்லவர்  என்பதை உணர்ந்தோம்.

இன்று நாம் காலேபின் வாழ்க்கையைத் தொடருகிறோம்.

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்தவள். என்றுமே மிஞ்சிய வருமானம் என் பெற்றோருக்கு இருந்ததில்லை. என்னையும் அண்ணனையும் படிக்க வைக்க அம்மா அநேக தியாகங்களை செய்ய வேண்டியிருந்தது. எல்லா கஷ்டங்களுக்கும் இடையில் அம்மா நாங்கள் விரும்பிய அனைத்தையும் அமைத்துக் கொடுத்தார்கள். எதைப் படிக்க ஆசைப்பட்டோமோ அந்த படிப்பைத் தொடர எல்லாவிதத்திலும் முயற்சி செய்தார்கள். எனக்கு கர்த்தர் கொடுத்த அருமையான வாழ்க்கையை பார்க்க முடியாமல் போய்விட்டாலும்,  எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தவர்கள் என் அம்மா என்பதை மறக்கவே மாட்டேன்,

இதை எழுதும்போது தன் பிள்ளைகளுக்காக தங்களது வாழ்க்கையையே தியாகம் பண்ணும் பல இலட்சக்கணக்கான பெற்றோருக்கு என் மனமார்ந்த நன்றியுடன் எழுதுகிறேன். என்னுடைய கம்பெனியில் வேலை செய்த பல பெண்கள் தங்களுடைய பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்று உழைத்ததைப் பார்த்திருக்கிறேன். தன் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவர எந்த தியாகத்தையும் செய்யத் துணிந்த பெற்றோரையும் பார்த்திருக்கிறேன்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல தகப்பனைத்தான் இன்று நாம் காலேபின் வாழ்க்கையில் பார்க்கிறோம். தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடித்தர காலேப் விரும்பினான். கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் கூறுவதை இன்றைய வேதாகமப் பகுதியில் காண்கிறோம். தன் மகள் ஒரு நல்ல கணவனுக்கு, வீரமுள்ளவனுக்கு, கர்த்தருக்காக எதையும் செய்யத் துணிபவனுக்கு மனைவியாக இருக்க வேண்டுமென்று நினைத்தான்.

தன் செல்ல மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆவலாயிருக்கும் ஒரு நல்ல தகப்பனின் அடையாளத்தை தான் நாம் காலேபின் வாழ்க்கையிலிருந்து நம்முடைய பரம தகப்பனின் அடையாளமாகக் காண்கிறோம்.

எரேமியா 29: 11 ல் நம் பரம தகப்பனானவர் ,” நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” என்று தம்முடைய பிள்ளைகளைப் பார்த்துக் கூறுகிறார்.

பரலோகத் தகப்பனின் பிள்ளையான நான் இந்த வாக்குத்தத்தத்தை என் இதயப் பலகைகளில் எழுதி வைத்து ஒவ்வொரு நாளும் நினைவு படுத்தி கொள்ள வேண்டும்! காலேப் தன் மகள் அக்சாளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க விரும்பியது போல நம் பரம தகப்பனும் நமக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆவலாயிருக்கிறார். இன்று நீ அவருடைய பாதத்துக்கு வா!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment