கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 882 தெபோராளின் 24 X 7 சமுதாயத் தொண்டு!

நியாதிபதிகள்: 4:5  ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தாள்.”

இஸ்ரவேல் மக்கள் மனம்போல் வாழ்ந்ததால் பாவம் செய்தனர், அதனால் கர்த்தரால் கைவிடப்பட்டு, கானானிய ராஜாவால் ஒடுக்கப்பட்டனர் என்று பார்த்தோம். இப்படிப் பட்ட வேளையில் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இஸ்ரவேலை நியாயம் தீர்க்கும்படியாக எழுப்பினார்.

இன்றைய வேதாகமப் பகுதியில் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய தெபோராள், இஸ்ரவேலை நியாயம்தீர்க்கும்படி கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவள், ஒரு பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்து  ஜனங்களை நியாயம் தீர்த்தாள் என்று பார்க்கிறோம்.  அவள் ‘தெபோராளின் பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்தாள் என்ற வாசகத்தை கவனித்துப் பாருங்கள்!  அந்த பேரீச்சமரத்துக்கு தெபோராளின் பேரீச்சமரம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல அவள் அங்கேயே குடியிருந்தாள் அல்லது தங்கியிருந்தாள் என்றும் பார்க்கிறோம்.

இன்றைய உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் ‘இன்று இங்கே, நாளை எங்கேயோ’ என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒருவரைப் போய் பார்க்கவேண்டுமானாலும் அவருக்கு முன்கூட்டியே போன் செய்து சொன்னால் தான் போய் பார்க்க அனுமதி கிடைக்கிறது. நான் தொழில் சம்பந்தமானவர்களைப் பற்றி பேசவில்லை, கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்களாகிய நாங்களும் அப்படித்தான்.

ஆனால் இந்த ஊழியக்காரியான தெபோராள் 24 மணிநேரமும் மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து, பேரீச்சமரத்துக்கடியிலேயே குடியிருந்தாள். தேவனாகிய கர்த்தர் அவளுக்கு கொடுத்த பணியை அவளால் தொடர்ந்து செய்ய முடிந்தது ஏனெனில் அவள் தொடர்ந்து அங்கேயே  தங்கியிருந்து மக்களுக்கு நியாயம் தீர்த்தாள்.

நான் 39 வருடங்களுக்கு  முன்னால் வடஇந்தியாவில், உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரை என்ற ஊரில் ஒரு மிஷன் பள்ளியில் ஆசிரியையாக  வேலை பார்த்தேன். அப்பொழுது  கிராமங்களில் வாழ்ந்து ஊழியம் செய்த மிஷனரிகள் ஒருசிலரின்  வீடுகளுக்கு சென்றிருக்கிறேன். சிலருடைய வாழ்க்கை எனக்கு சவாலாகவே இருந்தது. விசேஷமாக கால்ப்பி என்ற பகுதியில் வாழ்ந்த என்னுடைய ஊழியக்கார நண்பர்கள் முட்டை சாப்பிடுவதையே தியாகம் பண்ணிவிட்டார்கள். ஏனெனில் அந்த கிராமத்து மக்கள் முட்டை சாப்பிடுபவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்.

மதர் தெரேசா போன்றவர்களின் தியாகம் உலகளவில் தெரிந்தது, ஆனால் யாருக்குமே தெரியாத அளவுக்கு சிறு கிராமங்களில் தங்களையே மக்களுக்காக தியாகம் செய்து வாழ்ந்து சுவிசேஷத்தை அறிவித்து சபைகளை உருவாக்கிய தெபோராக்கள்  நம் மண்ணில் அனேகர் உண்டு.

நான் இன்று தெபோராளைப் பற்றி வாசிக்கும்போது ‘தெபோராளின் பேரீச்சமரம்’ என்ற வார்த்தையை பார்த்தவுடன் ஒன்றுதான் என் மனதில் வந்தது. இன்று நான் வாழும் தெருவில் உள்ள மக்களுக்கு நான் ஊழியம் செய்வதால் இந்த தெரு என் பெயரால் அழைக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அப்படியே நாம் ஒவ்வொரு கிறிஸ்தவரும் நம்மை சுற்றில் உள்ள மக்களுக்கு நம்முடைய நேரத்தை ஒதுக்கி ஊழியம் செய்வதால் , அவர்களுடைய வாழ்வு நலமடைவதால், நாம் இருக்கும் தெருவோ அல்லது ஊரோ நம்முடைய பெயரேந்தியிருக்குமானால் எப்படியிருக்கும்?

தெபோராளைப் போல் நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சமுதாயத்தின் நலத்துக்குக்காக நம்முடைய நேரத்தை அர்ப்பணிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்யுமாறு ஜெபிப்போம். விசேஷமான தாலந்துகள் இருந்தால் தான் என்னால் சாதிக்கமுடியும் என்று எண்ணாதே! உன்னிடம் உள்ள தாலந்துகளை மற்றவருக்காக  இன்று உபயோகப்படுத்து!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment