கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1140 உன் கண்கள் இன்று எதைக் காண்கின்றன?

யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய  சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு……”

ஆதி:3:6 அப்பொழுது ஸ்திரியானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு….

கர்த்தரால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தில் புத்தியை தெளிவிக்கும் என்று ஒரு கனியைக் காட்டி வஞ்சகம் பேசி சாத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கண்ணி வைத்து தன் வலையில் விழ வைத்தான்.

நாம்கூட யாரையாவது ஏமாற்றி நம் கண்ணியில் விழ வைக்க வேண்டுமென்றால் பார்வையை பளிச்சென்று கவரக் கூடியவைகளைத் தானே காண்பிப்போம்! கண்ணால் கண்டவைகளுக்கு மயங்குவது நம் மனிதகுணம் அல்லவா!

அதனால் தான் சாத்தான் ஏவாளை மயக்க பார்வைக்கு இன்பமான கனியை உபயோகப்படுத்தினான். இந்த ‘பார்வைக்கு இன்பமான’ என்ற பாவத்தில் மனிதன் அடிசருக்கி விழுவது அன்றைக்கு ஆரம்பித்தது தான் இன்றுவரைத் தொடர்ந்து வருகிறது.

பின்னால் வரக்கூடிய விளவுகளைப்பற்றி ஒரு கணம் கூட சிந்தியாமல் ஆகான் தன் கண்களால் கண்ட அந்தப் பொருட்களத் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான். தேவனாகிய கர்த்தர் எரிகோவிலுள்ள எதையும் நீங்கள் தொடக்கூடாது, அவை சாபத்தீடானவைகள் என்று கட்டளை கொடுத்திருந்ததை அறிந்தும், அவன் தனக்கு சொந்தமல்லாதவைகளை சொந்தமாக்கிக்கொண்டான்.

அன்று ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்தால் காட்டப்பட்ட கனியை கண்டவுடன், அது தனக்கு சொந்தமல்ல என்று அறிந்திருந்தும், ஏவாள் அதை தான் அடையவேண்டும் என்று இச்சித்தது போல,  எரிந்து குப்பையாகிக் கொண்டிருக்கும் எரிகோ நகரில் நின்று கொண்டிருந்த ஆகான் தன் கண்களில் பட்ட அழகிய பாபிலோனிய சால்வையையும், வெள்ளியையும், பொன்னையும் கண்டவுடன்  இவற்றை நான் அடைந்துவிட வேண்டும் என்று எண்ணினான். 

ஏவாள் பார்வைக்கு இன்பமான கனியைக் கண்டாள்!

தேவர்களைப்போல உயர்ந்து விடுவாய் என்று சொன்னதும், ஏவாளுக்கு பதவி ஆசை!

தாவீது பார்வைக்கு இன்பமான பெண்ணைக் கண்டான்! 

இன்னொருவனின் மனைவி என்று தெரிந்தும் பெண் ஆசை!

ஆகான் பார்வைக்கு இன்பமான பொன்னையும், பொருளையும் கண்டான்!

தனக்கு சொந்தமல்லாதவைகளை அடைய வேண்டும் என்ற பொருளாசை!

என்ன பரிதாபம்! தன்னை மயக்கும் கனியைக் கண்டவுடன் கர்த்தருடைய கட்டளையை அறிந்த ஏவாள், எனக்கு வேண்டாம் என்று சொல்லி எதிர் திசையில் ஓட்டம் பிடிக்கவும் இல்லை!

தன்னை மயக்கும் ஒரு பெண்ணைக் கண்டவுடன், கர்த்தருடைய பிள்ளையாகிய தாவீது அங்கு நிற்காமல் ஓடிப்போகவுமில்லை!

தன்னை கண்ணிக்குள் இழுக்கும் பொருட்களைக் கண்டவுடன், கர்த்தருடைய வார்த்தையை அறிந்த ஆகான், திரும்பிப் பார்க்காமல் ஓடவுமில்லை!

இதைத்தான் இன்று நாமும் செய்கிறோம்! ஆம்! நாம் பார்வைக்கு இன்பமானவை என்று எண்ணுகிற அநேக காரியங்கள், கர்த்தருடைய கட்டளைகளை அறிந்த நம்மை கர்த்தரை விட்டு  விலகச் செய்கின்றன! பதவியாசை, பெண்ணாசை, பொருளாசை போன்ற பலவிதமான பாவங்களுக்கு தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் விழுந்து போகிறோம். 

 ஜாக்கிரதை! நம்முடைய சரீரத்தின் பாவங்களுக்கு நம் கண்களே நுழைவாயில்!

உன் கண்கள் இன்று எதைக் காண்கின்றன!

பார்வைக்கு இன்பமான கனியா?

பார்வைக்கு இன்பமான பெண்ணா? 

அல்லது பார்வைக்கு இன்பமான பொருட்களா?

உன் கண்களை சற்றுத் திருப்பு! கிறிஸ்துவின் அழகை நோக்கிப் பார்!

உன் கண்களுக்கு அழகாய் ஜொலிக்கும் இவை யாவும் 

கிறிஸ்துவின் அழகின் ஒளிப்பிரகாசத்தில் மங்கிப்போகும்!                            

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment