கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1148 நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்!

யோசுவா: 14: 12   கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விடுவேன் என்றான்.

நாம் காலேப் என்னும் உலகத் தகப்பன் மூலமாய் நம்முடைய பரலோகத் தகப்பனுடைய அடையாளங்களைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக நாம் பார்த்தது என்றும் குறையாத பெலன்.

இன்று மறுபடியும் உங்களை இரண்டு வயதுமிக்க நண்பர்களின் உரையாடுதலைக் கேட்க அழைக்கிறேன். இவர்கள் பெயர் யோசுவா, காலேப்.

இவர்கள் இருவரும் மோசேயால் தெரிந்துகொள்ளப்பட்டு கானான் தேசத்தை வேவு பார்க்கும்படியாக அனுப்பப்பட்டவர்கள். மற்ற பத்து பேரும் அழுது புலம்பி திரும்பிய போது, இவர்கள் இருவரும் கர்த்தரால் எல்லாம் கூடும் புறப்படுவோம் என்று கூறியவர்கள்.

ஏனாக்கின் புத்திரர் கானானில் அரணான பட்டணங்களில் வாழ்ந்தனர் என்று  எண்ணாகமம் 13 கூறுகிறது.  ஏனாக்கின் புத்திரர் இராட்சதர் என்று 33 ம் வசனம் கூறுகிறது.   அவர்களுக்கு முன்னர் இஸ்ரவேலர் தங்களை வெட்டுக்கிளிகளுக்கு சமானமாகக் கருதினதையும் காண்கிறோம். ஏனாக்கின் புத்திரர்  ஒருமிதி மிதித்தால் போதும் இஸ்ரவேலர் நசுங்கிப் போவார்கள்  அப்படிப்பட்ட உருவம் அவர்களுடையது!

அரணான பட்டணங்களும் இராட்சதரும் உள்ள மலைநாட்டைத் தரும்படி யோசுவாவிடம் காலேப் கேட்டதை நாம் நேற்று பார்த்தோம்.

மலை போன்ற பிரச்சனை தங்கள் முன்னிருக்க நண்பர்கள் இருவரும் என்ன உரையாடியிருப்பார்கள்! வாருங்கள் கேட்கலாம்!

யோசுவா!  அந்த ஏனாக்கின் குமாரர் உருவத்தில் மிகப்பெரியவர்கள் அவ்வளவுதான்  –    காலேப்.

அப்படியல்ல காலேப்! அவர்கள் உருவத்தில் மாத்திரம் பெரியவர்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விடாதே, சரி, அவர்களை விடு, அரணான பட்டணங்களை எப்படிக் கைப்பற்றுவாய்?    –  யோசுவா.

யோசுவா, எரிகோ பட்டணத்தின்  மதிலை மறந்து போய்விட்டாயா? அதை எப்படிக் கைப்பற்றினோம் என்று எண்ணிப்பார்! அந்த மதில் கர்த்தரால் அல்லவா தகர்க்கப்பட்டது!    –  காலேப்.

ஆம் நண்பனே! நினைவுபடுத்தியதற்கு நன்றி! கர்த்தரால் ஆகக் கூடாதது ஒன்றுமில்லை!  – யோசுவா.

யோசுவா! கர்த்தர் மதிலைத் தகர்க்கும் பணியையே பொறுப்பெடுத்துக் கொண்டவர், உள்ளிருக்கும் இராட்சதர்களை அழிக்கும் வேலையை செய்யமாட்டாரா? நான் எதையும் பற்றி கவலையேப் படவில்லை!  -காலேப்.

என்னுடைய மனக்கண்களில்  இவ்விதமாகத்தான் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்திருப்பார்கள் என்று தோன்றியது! ஏனெனில் நாற்பது வருடங்களுக்கு முன்னரே இவர்கள் இருவரும் தங்கள் முன்னால் இருந்த பிரச்சனைகளை விட, தங்களுடைய தேவனானவர் பெரியவர் என்று விசுவாசித்தவர்கள். அரணை விட, அரக்கரை விட கர்த்தர் பெரியவர் என்று நம்பியதால், மற்ற பத்துபேர் அழுது புலம்பித் திரும்பியபோதும், இவர்கள் உறுதியாக மோசேயிடம் வந்து  நம்மால் கூடும் என்றனர். அந்த விசுவாசத்துக்கு பரிசாக கர்த்தர் அவர்கள் ஜீவனைக் காத்தார், கானானை சுதந்தரிக்க உதவி செய்தார்.

ஒரு நிமிடம்!  அந்த கானானை சுதந்தரிக்க அவர்களுக்கு எத்தனை வருடங்கள் ஆயிற்று தெரியுமா? நாற்பது வருடங்கள்! அதுவும் வனாந்தரத்தில்!

இப்பொழுது நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு பின்பு, அவர்களது விசுவாசம் ஒரு துளி கூட குறையவில்லை!  கர்த்தர் எரிகோ மதிலைத் தகர்த்ததைக் கண்ணால் கண்ட அவர்கள் கர்த்தரால் செய்ய முடியாது ஒன்றுமில்லை என்று விசுவாசித்தனர்!

என்ன விசுவாசம்! மலை நாட்டை எனக்குத் தாரும்! அரணான பட்டணங்களைத்  தாரும்! இராட்சதரை தாரும்!  என் கர்த்தர் இவர்கள் எல்லாரையும் விட பெரியவர்! வல்லவர்! நாற்பது வயதிலும் அதே விசுவாசம்! எண்பத்தைந்து வயதிலும் அதே விசுவாசம்! அன்று அற்புதங்களை செய்தவர், இன்றைக்கும் செய்ய வல்லவர் என்ற விசுவாசம்.என்றும் மாறாத விசுவாசம்!

இன்று  காலேபிடம்  நாம் கண்ட இந்த மாறாத தன்மை  நம்முடை பரலோகத்தகப்பனுடைய அடையாளமாகக் காணப்படும்  என்றும் மாறாத உண்மையுள்ள தன்மையின் நிழலோட்டமே!

1 தெசலோனிக்கேயர்: 5:24  “உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர்” 

நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் என்பதில் சந்தேகம் உண்டா? ஒருவேளை அவர் நமக்கு கொடுத்த வாக்கின்படி செய்ய தாமதிக்கலாம்! நாற்பது வருடங்கள், வனாந்தர வாழ்க்கை, இவற்றின் மத்தியிலும் அவர் உண்மையுள்ளவர்! நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment