கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1368 கொடிய வனாந்திரத்தில் கர்த்தரே நம் அரண்!

1 சாமுவேல் 27:1 பின்பு தாவீது நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்து போவேன்.இனி சவுல் இஸ்ரவேலின்  எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டு பிடிக்கலாம் என்கின்ற நம்பிக்கையற்றுப் போகும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்துக்குப் போய், தப்பித்துக் கொள்வதைப் பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.

நான் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள வால்பாறைக்கு அடிக்கடி வருவேன். அங்கு ஒரு இடத்தில் உள்ள மரங்கள் எப்பொழுதும் என் கண்களைக் கவரும். வானளாவிய அவைகள் இரும்பினால் செய்யப்பட்டவைகள் போல உறுதியாய் இருக்கும். நிச்சயமாக 200 வருடங்களுக்கு மேல் நிற்கும் மரங்கள் என்று அதைப் பார்த்தவுடனே சொல்லிவிடலாம். இத்தனை உறுதியாக நிற்கும் இவைகள் எவ்வவளவு காற்றையும், கன மழையையும் பார்த்திருக்கக்கூடும்! அவையெல்லாவற்றையும் தாங்கி, இந்த மரங்கள் இரும்புபோன்ற உடலோடு, நிமிர்ந்து வானளாவ  நிற்பது ஆச்சரியம் தானே!

நாம் தாவீதையும், அவனோடு இருந்த 600 பேரையும் கர்மேல் பர்வதத்திலிருந்து, சவால்கள் என்னும் கொடிய  காட்டுக்குள் தொடரும்போது, நாம் நம் வாழ்க்கையில் காற்று, கனமழை போன்ற சோர்ந்து போகும் வேளைகளை சந்திக்க நேர்ந்தாலும், எப்படி உறுதியாக நிமிர்ந்து நிற்கலாம் என்று பார்க்கலாம்.

இந்த அதிகாரத்தில் நாம் தாவீதை சந்திக்கும் போது, அவன் மிகுந்த சோர்போடு பேசுகிறதைப் பார்க்கிறோம். அவனுடைய சோர்புக்கு காரணம் தன்னுடைய முதல் மனைவி   மீகாளை இழந்த துக்கம் இல்லை. இந்த சமயத்தில் அவன் ஒருத்தியை அல்ல, இரண்டு பேரைத் திருமணம் பண்ணியிருந்தான்.

அவனோடு இருந்த 600 பேரையும், ஒருவேளை அவர்களது குடும்பமும் அங்கு இருந்திருந்தால், அவர்களையும் சேர்க்கும்போது, தாவீதுக்கு முன்னால் இருந்த பாதை மிகவும் கடினமான பெரும் பாதையாகத் தோன்றியது.

தாவீது இவ்வளவு சோர்பாக இன்றைய வேதப்பகுதியில் பேசுவதின் அர்த்தம் இப்பொழுது புரிகிறது அல்லவா!

அவனுடைய பாதுகாப்பு மட்டுமல்ல, அவன் விவாகம் செய்த இரு பெண்களின் வாழ்க்கையும், அவனை நம்பி சார்ந்தவர்களின் வாழ்க்கையும் அவனை  சவுலுக்கு பயந்தும், உயிருக்காக ஒளிந்தும் ஓடும் நிலைமையில் வைத்தது.

நாம் இப்படிப்பட்ட நிலையில் இருந்தால் எளிதாகத் தப்பிக்கத்தானே வழி தேடுவோம். வாழ்க்கை நமக்கு எளிதாக அமைய வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு அல்லவா?  இது தப்பான ஆசை இல்லவே இல்லை! யாருக்குத்தான் வேதனையை தலையில் சுமக்க ஆசை சொல்லுங்கள்! என்னால் முடியாது!  நீங்களும் என்னைப் போலத்தான் என்று எனக்குத் தெரியும்!

தாவீது தனக்கு இஸ்ரவேலில் பாதுகாப்பு இல்லை என்று அறிந்து, பெலிஸ்தரின் தேசத்துக்கு செல்ல முடிவு செய்தான்.

பெலிஸ்தரின் கோலியாத்தைக் கொன்ற அவன் அந்த நாட்டில் தனக்கு அடைக்கலம் கிடைக்கும் என்று எண்ணினானேத் தவிர, இஸ்ரவேலிலேயே  தங்கி கர்த்தரின் செட்டைகளில் அடைக்கலம் புகுவதை பாதுகாப்பு என்று நினைக்கவில்லை.

நாம் எத்தனைமுறை இந்தத் தவறை செய்கிறோம்?    நம் வாழ்க்கையில் எரிமலை நெருப்பைக் கக்கும்போது,  நாம் கர்த்தருடைய செட்டைகளைத் தேடாமல், மலைகளையும், குன்றுகளையும் நாடி ஓடுகிறோம் அல்லவா? நானும் கூட இப்படித்தான் ஓடியிருக்கிறேன். ஆனால் ஒவ்வொருமுறையும் கர்த்தரின் செட்டைகள் மாத்திரம் தான் எனக்குப் பாதுகாப்பு என்று உணர்ந்து  திரும்பி ஓடி வந்துமிருக்கிறேன்!

இன்று உங்கள் வாழ்க்கையில் தாவீதைப்போல எதிரிகளால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? எத்தனைக் காற்று, மழை அடித்தாலும் நிமிர்ந்து  நிற்கும் மரங்களைப்போல நீங்கள் சோர்ந்து போகாமலிருக்க வேண்டுமானால் தேவனாகிய கர்த்தரிடம் அடைக்கலம் பெறுங்கள்! அவரே நமக்கு அரணான கோட்டை! உங்களை எல்லாத் தீங்குக்கும் விலக்கி காக்க வல்லவர்.

கர்த்தர்தாமே உங்களுக்கு இன்றைக்கு வேண்டிய கிருபையை அளிப்பாராக!  அவருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் உண்டு!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment