1 சாமுவேல் 30:6 தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
தாவீது தன்னுடைய அவிசுவாசத்தினாலும், கீழ்ப்படியாமையாலும் பொய் சொல்லி ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருந்த போது கொடிய சூழலில் முடிவடைந்தான் என்று நாம் பார்த்தோம்.
தாவீது யாரை உண்மையான நண்பர்கள் என்று நினைத்தானோ அவர்களே அவனைக் கல்லெறியத் துணிந்த நேரத்தில், தன் அன்பின் குடும்பமே சிறைப்படுத்தப் பட்டு காணாமற்போன வேளையில், அவன் எப்படி இருந்திருப்பான்? மனம் தளர்ந்து, சோர்ந்து, வேதனையில் துடித்துக் கொண்டிருந்திருப்பான் அல்லவா? ஆம்! சிக்லாகில் தாவீதுக்கு இந்த வேதனைதான் காத்திருந்தது.
தாவீது அமலேக்கியரை கொள்ளையடித்தபோது அங்கு ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் கொன்றான். இன்று அவனுடைய குடும்பம் அமலேக்கியரால் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறது. அவன் மனதில் என்ன எண்ணம் ஓடியிருக்கும்? நான் அவர்களுக்கு செய்தது போலவே அமலேக்கியர் சிறைப்பிடித்த யாரையும் விட்டு வைத்திருக்க மாட்டார்கள், ஐயோ இந்நேரம் அவர்கள் என் குடும்பத்தைக் கொன்றிருக்கலாம் என்றுதானே நினைத்திருப்பான்!
தாவீது கர்த்தரிடம் கேட்காமல் சுயமாய் முடிவு எடுத்துதான் பெலிஸ்தரின் பட்டணத்தில் குடியேறினான், கர்த்தரைக் கேட்காமல்தான் அமலேக்கியரை கொள்ளையடித்தான், கர்த்தரைக் கேட்காமல் தான் பெலிஸ்த ராஜாவிடம் தாம் இஸ்ரவேலைக் கொள்ளையிடுவதாக பொய் சொன்னான். ஆனாலும் அவனுடைய வேதனையான இந்த வேளையில் கர்த்தர் அவனைக் கைவிடவில்லை! தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான் என்று வேதம் கொல்லுகிறது.
வேதாகம வல்லுநரின் கணிப்புப்படி, சங்கீதம் 56 தாவீது சிக்லாகில் வாழ்ந்த சமயத்தில் எழுதப்பட்டது.
தேவனை நம்பியிருக்கிறேன் நான் பயப்படேன். மனுஷன் எனக்கு என்ன செய்வான் (11) என்ற வார்த்தைகள் தாவீதின் மனதைப் பிரதிபலிக்கின்றன அல்லவா! சிக்லாகில்தான் தாவீது, கர்த்தர் தன்னை பயத்திலிருந்தும், மனவேதனையிலிருந்தும் விடுவிக்க வல்லவர் என்று புரிந்து கொண்டான்.
தாவீதைப் போல பயத்தோடும், மன வேதனையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? தாவீதைப் போல உன்னுடைய வாழ்வில் நீ கடந்து வரும் பிரச்சனைகளுக்கு நீயே காரணமாக இருக்கலாம்! ஆனாலும் கர்த்தரில் திடப்படு! அவர் உன்னோடிருப்பார்! ஒருகணம் கூட தாமதிக்காதே!
இந்த மனசோர்பு ஒருவேளை உன்னுடைய வேலையால் ஏற்பட்டிருக்கலாம், உன்னுடைய திருமண வாழ்வில் ஏற்பட்ட மன சோர்பாக இருக்கலாம், ஒருவேளை உன்னுடைய பிள்ளைகளால் ஏற்பட்டதாயிருக்கலாம்!
பயப்படாதே! தேவனை நம்பு!
தாவீதைப்போல கர்த்தருக்குள்ளே உன்னைத் திடப்படுத்திக்கொள்! மனுஷன் உன்னை ஒன்றும் செய்ய முடியாது!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
