கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1372 658 இழந்த ஆசீர்வாதங்களை மீட்டுக்கொள்!

1 சாமுவேல்: 30 : 8,18  தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர். அதை நீ பிடித்து சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார்.

அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.

போன வாரம் நான் ஒரு வெப்சைட்பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நம் வீட்டில் நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற நிலையில் இருக்கும் மேஜை, நாற்காலி  போன்ற மரச்சாமான்களை அவர்கள் எடுத்து அதற்கு புது ஜீவனைக்கொடுத்து, புதுப்பொலிவுடன், நாம் விரும்பி நம்முடைய வீட்டில் அழகாக வைக்கக்கூடிய அளவுக்கு மாற்றி விடுகிறார்கள். அப்படித் திறமையாக உருவாக்கப்பட்ட சிலவற்றைப் பார்த்தபோது, எதற்கும் பிரயோஜனப்படாத நம்முடைய வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்புவித்தால், அவர் நம்மை  எப்படி உருவாக்க வல்லவர் என்று நினைத்தேன்.

தாவீது கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் தன் சுய திட்டத்தினால், எதிரியின் நகரமான சிக்லாகில் வாழ்ந்து கொண்டிருந்தான். அதுமட்டுமல்ல சிக்லாகின் ராஜாவாகிய ஆகீஸை பொய் சொல்லி ஏமாற்றியும் வந்தான். அதன் விளைவாக அமலேக்கியர் அவன் வாழ்ந்த நகரத்தை சுட்டெரித்து அவனுடைய எல்லாவற்றையும் சிறையாக்கி சென்றனர் என்று பார்த்தோம்.

அந்த வேளையில் அவன் தன்னுடைய வாழ்க்கையை திறமையாக வழிநடத்த வல்லராகிய தேவனாகிய கர்த்தரிடம் ஒப்புவிக்காததே இந்த நிலைக்குக் காரணம் என்று உணர்ந்து, கர்த்தரை நோக்கிப் பார்க்கிறான். அவன் கர்த்தரிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, கர்த்தர் அவனிடம் மூன்று காரியங்களை சொல்வதை இன்றைய வேதாகமப்பகுதியில் பார்க்கிறோம்.

அதைப்  (1) பின் தொடர். (2)அதை நீ பிடித்து (3)சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார்.

பின் தொடர் என்பதற்கு, துரத்து, சாதனை புரிய முயற்சி செய் என்ற அர்த்தம்.

அதை நீ பிடித்து என்பதற்கு நீ அதை முந்தி செல் என்று அர்த்தம்.

திருப்பிக்கொள் என்பதற்கு திரும்பப் பெறு, மீட்டுக்கொள் என்றும் அர்த்தம்.

தேவனுடைய சித்தம் என்னும் பாதையைவிட்டு தவறிப் போகும் நம் ஒவ்வொருவருக்கும் இந்த அறிவுரை பொருந்தும் அல்லவா?

நம்முடைய ஓட்டத்தில் நாம் விடாமல் ஓடி சாதனை செய்ய முயலவேண்டும், அதுமட்டுமல்ல நாம் நம்முடைய எதிரியை முறியடித்து முந்தி சென்று நாம் இழந்த ஆசீர்வாதங்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றுதானே அர்த்தம்.

நாம் பாதை தவறியதால் இழந்த ஆசீர்வாதங்கள் எத்தனை!!!!  சிந்தித்து பார்!!!!

இன்று நீ விழுந்திருந்தாலும் எழுந்து ஓடு!  ஆம்!  நம்முடைய வாழ்க்கையை மறுபடியும் சீர் செய்து நம்முடைய ஒட்டத்தை கர்த்தரை நோக்கி ஓட நாம் ஆரம்பிக்கும்போது, அவர் நமக்குள் புதைந்திருக்கும் வைரங்களை மீட்டெடுப்பார்.

தாவீது  இஸ்ரவேலின் ராஜாங்கத்தை சம்பாதிக்க தன்னால் முடியும் என்று நினைத்தான். கர்த்தரை விட்டுவிட்டு தன் வழியில் செல்ல ஆரம்பித்தான். ஆனால் எந்த குறுக்கு வழியும் கர்த்தருடைய வழி அல்ல என்று புரிந்து கொண்டான்.

தாவீதைப்போல கர்த்தரின் வழியை விட்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறாயா? திரும்ப வா! உன்னுடைய வாழ்வை உனக்கு மீட்டுத்தருவார்! அவர் அழிந்து கொண்டிருக்கும் உன்னை புதுப்பிப்பார்! உருவாக்குவார்!

வெட்டுக்கிளிகள் அழித்த நாட்களை உனக்கு மீட்டுத் தருவார்!  இன்றே வா!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment