கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1488 உன்னை மனதளவில் கறைப்படுத்திய அந்த நாள்!

2 சாமுவேல் 13: 17 – 19  தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு  நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளி கதவைப்பூட்டு என்றன்….. அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக் கொண்டிருந்தாள். ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள். அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலைமேல் வைத்துக், சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள்.

இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு அம்னோன் தன்னுடைய சகோதரியான தாமாரைக் கற்பழித்தபின் அவளை வீட்டைவிட்டு துரத்தி கதவைப்பூட்டுகிறதைப் பார்க்கிறோம்.

அந்தக் காலத்தில் ராஜகுமாரத்திகளாகிய கன்னிப்பெண்கள் பலவர்ணமான வஸ்திரத்தை அணிந்து கொள்வார்கள்.  ராஜகுமாரத்திகளாயிற்றே! அவர்களுடைய தகுதிக்கு தக்க வஸ்திரம் அணிந்து கொள்வதுதானே வழக்கம்.

அம்னோன் அவளை பலவந்தப்படுத்திய பின்னர் அவள் இனி கன்னிபெண் என்ற கணக்கில் வரமாட்டாள் அல்லவா அதனால் தாமார் கன்னிப்பெண்கள் உடுத்தும் அந்த பலவர்ணமாகிய வஸ்திரத்தை கிழித்துக்கொண்டு, சாம்பலைத் தன் தலையில் வாரிப்போட்டுக்கொண்டு அழுதுகொண்டே சென்றாள். அவள் இவ்வாறு தன்னுடைய துக்கத்தையும் அவமானத்தையும் வெளிப்படுத்தினாள். அவள்,  தான் இந்த வெட்கம்கெட்ட காரியத்துக்கு உடந்தையாக இல்லை என்பதையும் வெளிப்படுத்தினாள்.

இந்தப் பெண்ணின் துன்பத்தையும், அவமானத்தையும் படிக்கும்போது உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒருநாள் நீங்களும் கந்தையை அணிந்து சாம்பலாலால் நிறைந்த சம்பவம் நினைவுக்கு வரலாம். ஒருவேளை ஏதோ ஒரு சம்பவம் உங்களை மனதளவில் கறைப்படுத்தியிருக்கலாம்!

சகோதர சகோதரியே நீ மட்டும் தனியாக இல்லை! வேதம் சொல்கிறது

நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம். எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது. நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டு போகிறது. (ஏசா:64:6)

என்ன பரிதாபம்! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்படும்முன்னர் நானும்கூட சுயநீதி என்ற கந்தையை அணிந்துதான் இருந்தேன். பாவக்கறையை நீக்க ஆலயத்துக்கு போவதும், காணிக்கை கொடுப்பதும் போதும் என்று எண்ணினேன்.  ஆனால் இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்ததே நம்முடைய பாவத்திலிருந்து, கந்தையிலிருந்து, சாம்பலிலிருந்து விடுவிக்கவே என்று உணர்ந்த நாள் எனக்கு விடுதலை கிடைத்தது!

…துயரப்பட்டவர்களை சீர்ப்படுத்தவும்,அவர்களுக்கு சாம்பலுக்கு பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்கு பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார் ( ஏசா:61:3)

ஐயோ! எனக்கு இது நடந்தது ஏன்? நான் யாருக்கும் எந்த தவறுமே செய்ததில்லையே பின்னர் ஏன் எனக்கு இப்படி நடந்தது? இந்தக் கறையும், அவமானமும், நிந்தையும் என்னைவிட்டு  அகலுமா? என்றெல்லாம் புலம்புகிறீர்களா?

உங்கள் துயரத்தையும், நிந்தையையும், சீர்ப்படுத்த இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே முடியும்!

உங்களுக்காக நான் இன்று ஜெபிக்கலாமா? என்னோடு சேர்ந்து ஜெபியுங்கள்!

ஜீவனுள்ள தேவனே! துயரத்தாலும், வேதனையாலும் தாமாரைப்போல கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் இந்த சகோதரியை, சகோதரனை சாம்பலுக்கு பதிலாகச் சிங்காரத்தைக் காணச் செய்யும்!  நான் இழந்த பெயர், இழந்த வாழ்க்கை இனி திரும்ப வருமா என்று புலம்புகின்றவர்களை உம்முடைய கிருபையினால் சீர்ப்படுத்தும்!  கந்தலுக்கு பதிலாக துதியின் ஆடையினால் அவர்களை அலங்கரியும். எங்களுக்காக அனுப்பப்ட்ட இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம். ஆமென்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment