கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1492 மண் வயிறை நிரப்புவது போன்றது பழிவாங்குதல்!

2 சாமுவேல் 13:  23, 28, 29  இரண்டு வருஷம் சென்றபின்பு அப்சலோம் …ஆடுகளை மயிர்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்……அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள். அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன். உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்று போடுங்கள். நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்…… அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்.

அப்சலோம் நீண்ட நாட்கள் காத்திருந்தான். அவன் உள்ளத்தில் கோபம் உலையாகக் கொதித்துக்கொண்டிருந்தது. அவன் இரண்டு நாட்கள் காத்திருந்தானோ, இரண்டு வருடங்கள் காத்திருந்தானோ அது முக்கியம் இல்லை ஆனால் அவன் அம்னோன் தாமாருக்கு விளைத்த தீங்குக்கு பழி வாங்கியே தீர வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணத்தை மறைத்துக் கொண்டு காத்திருந்தான்.

அவன் எதிர்பார்த்த தருணம் வந்து விட்டது. ஆடுகளை மயிர் கத்தரிக்கும் நாட்களில் அம்னோனை அவனுடைய தகப்பனாகிய தாவீதிடமிருந்து பிரிக்கும் தருணம் கிடைத்தது!

அப்சலோம் தருணத்தைத் தவறவிடவில்லை.  அம்னோனை நன்கு குடிக்க வைத்து பின்னர் அவனை அடித்துக் கொல்லும்படி அப்சலோம்  தன் வேலைக்காருக்கு கட்டளைக் கொடுக்கிறான். இது சாதாரணமாக முடிந்துவிடும்! அப்சலோம் தன் கையை இரத்தமாக்க வேண்டிய அவசியமே இருக்காது. வேலைக்காரரே வேலையை முடித்து விடுவார்கள்! அம்னோன் தாமாருக்கு செய்த தீங்குக்கு விலை கொடுத்தே ஆகவேண்டும்!

அப்சலோம் திட்டமிட்டபடியே அம்னோனை முடித்து விட்டான். குடிபோதையிலிருந்த அம்னோனை அப்சலோமின் வேலைக்காரர் அடித்தே கொன்று விட்டனர். அப்சலோமின் இந்தக் கொடூர செயலைப்பார்த்த தாவீதின் மற்ற குமாரர் எல்லோரும் தங்கள் கோவேறு கழுதைகளில் ஏறி ஓட்டம்  பிடித்தனர். துரதிருஷ்டவசமாக இதுதான் அந்தக் குடும்பத்தின் இரத்தம் சிந்தும் படலத்தின்  முதல் ஆரம்பம்!

ஒருவன்  மண்ணை சாப்பிட்டுவிட்டு அப்பா என் வயிறு நிறைந்து விட்டது என்று சொல்வதைப்போலத்தான் இந்தப் பழிவாங்குதலும் இருக்கும். அந்த சமயத்தில் ஒரு நிறைவைக் கொடுப்பது போல இருந்தாலும் அது உண்மையான நிறைவு அல்ல!

புல் டாக்  (bull dog)  என்னப்படும் நாய் எப்படி இருக்கும் தெரியுமல்லவா?அதற்கு மூக்கை சுற்றி சதை தொங்கும். ஒரு சிறு பெண் அந்த நாயின் அருகில் உட்கார்ந்து தன் முகத்தை  பல கோணங்களில் சுளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவள் அம்மா, நீ ஏன் நாயைப் பார்த்து முகம் சுளிக்கிறாய் என்று கேட்டதற்கு, அதுதான் என்னைப்பார்த்து முதலில் சுளித்தது என்று சொன்னாள் அந்த சிறுமி!

நாம் இந்த உலகத்தில் பார்க்கும்  ஒவ்வொரு சுளிப்புக்கும் பதில் சுளிப்பு கொடுத்துக்கொண்டேயிருந்தால் நம் வாழ்வு எப்படியிருக்கும்? அதனால் பயன் தான் என்ன? நம் வாழ்க்கையே வீணாகிவிடும் அல்லவா?

பழிவாங்குதல் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்து ஒருவரைத் தாக்கும் முன் தயவுசெய்து  அன்பும், இரக்கமும், கிருபையும், தயவும், மன்னிப்புமே நம்முடைய தேவன் நமக்கு காட்டியுள்ள பாதை என்பதை  ஒருபோதும் மறந்து போகவேண்டாம்!

பிரியமானவர்களே பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். ( ரோமர் 12:19)

கர்த்தர் இந்த வார்த்தைகளின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

Leave a comment