கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1493 எங்கே கிடைக்கும் அந்த சந்தோஷமான வாழ்வு?

சங்: 34:11,12  பிள்ளைகளே வந்து எனக்குச் செவிகொடுங்கள், கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனிதன் யார்?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஆமைகளில் கலபகோஸ் என்ற ஒருவகையான ஆமை 100 – 170 வருடங்கள் வரை வாழும்  என்று படித்தேன். நான் ஒருவேளை 150 வருடங்கள் வாழ முடிந்தால் எப்படியிருக்கும்?என நினைத்தேன். ஆனால் இந்த பூமியில் அத்தனை வருஷம் வாழ்ந்தால் நான் என்ன செய்வேன் என்ற எண்ணமும் வந்தது! ஒரு தரமான, நன்மையான, சந்தோஷமான,  வாழ்க்கைக் கிடைக்குமானால் 150 வருடங்கள் வாழ நான் தயார்! அது எங்கே கிடைக்கிறது?

நன்மையான வாழ்வைப்பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்தவுடன் எப்படிப்பட்ட வாழ்க்கையை நாம் நன்மையான வாழ்வு என்று சிந்திக்கிறோம் என்ற கேள்வி எழுந்தது! ஒருவேளை அமெரிக்காவில் வாழ்பவர்களைப் பார்த்து அவர்கள் நன்மையான வாழ்வை வாழ்கிறார்கள் என்று நினைக்கலாம்! பல இலட்சம் சம்பாதிக்கும் நடிகர்களைப் பார்த்து?  நாம் உலகத்தில் சுற்றிப்பார்க்கும் நாடுகளின் எண்ணிக்கையைக் கொண்டு? நம்முடைய பெயருக்கு பின்னால் வரும் டிகிரிகளின் எண்ணிக்கையைக் கொண்டு? இன்னும் எதையெல்லாம் வைத்து நாம் நன்மையான வாழ்வு என்று கணக்கு போடுகிறோம்?

ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? போரில் அடிபட்ட வீரர்களுக்கு  இரவும் பகலும் சேவை செய்த ஒரு நர்ஸ்! அவர்களுடைய பின்னணி என்ன தெரியுமா? இங்கிலாந்தில் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்! சிலர் விரும்பும் நல்ல வாழ்க்கை அது! அவருடைய அம்மாவும், சகோதரனும் தடுத்தும் அவர் தான் நர்ஸ் ஆக பணி செய்வதே தேவன் தன்னை அழைத்த அழைப்பு என்று நிச்சயமாக நம்பி தன்னை அந்த சேவைக்காக அர்ப்பணித்தார். அவருடைய சேவையை போர்க்காலத்தில் பார்த்தவர்கள் அவரை ஒரு தேவதூதராகவே பார்த்தனர். அவர் எந்த ஆடம்பர வாழ்க்கைக்காகவும் தான் வாழ்ந்த கடினமான சூழலையும், தனக்கு பிடித்த நன்மையான வாழ்க்கையையும் விட்டுக் கொடுக்கவேவில்லை!

நன்மையான வாழ்க்கையைப் பற்றி நாம் சிந்திக்கும் இந்த வேளையில், தாவீதை நாம் வாலிபனாக சந்தித்தபோது எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தான் என்று யோசித்துப் பாருங்கள்! அவன் ராஜாவாகிய சவுலுக்கு பயந்து காடு மேடு குகைகளில் வாழ்ந்த நாட்களில் அவன் தேவனாகிய கர்த்தரிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தான். தினமும் அவரோடு பேசி அவருடைய சித்தத்தை அறிந்து செயல்பட்டான். கடினமான சூழ்நிலையில் நன்மையான வாழ்க்கையை வாழ்ந்தான்.

ஆனால் அவனுக்கு இஸ்ரவேலின் சிங்காசனம் கிடைத்தபோதோ அதோடு அவனுக்கு வசதி, புகழ், பதவி  மற்றும் அநேக மனைவிமாரும் கிடைத்தனர். நாமெல்லாரும் மிகவும் விரும்பும் ஒரு நன்மையான வாழ்க்கை அது! தாவீதுக்கு எல்லாமே இருந்தது அல்லவா? ஆனால் அவனுடைய அரண்மனையின் நான்கு சுவருக்குள் நாம் எட்டிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது நாம் எல்லோரும் நினைக்கும் எந்த நன்மையானதும் அங்கு இல்லை என்று! என்ன பரிதாபம்! அவனுடைய இச்சையினால் ஏற்பட்ட கொலை! பாவத்தின் பலனாய் இழந்த குழந்தை! அண்ணனே தங்கையை கற்பழித்த அபூர்வ கதை! பழிவாங்க காத்திருந்த சகோதரன்! விருந்துக்கு அழைத்து எதிர்பாராத வேளையில் சகோதரனுக்கு கொடுக்கப்பட்ட விபரீத தண்டனை!  அப்பப்பா! நாமொன்று நினைக்க மற்றொன்று அல்லவா நடக்கிறது! அங்கு யாருமே சந்தோஷமாக இருந்தவாறு தெரியவில்லை!

இன்று எதை நன்மையான வாழ்க்கை என்று நீ நினைக்கிறாய்? வசதியையும், ஆடம்பரத்தையுமா? வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, காரில் பயணம் செய்வது இவைகள் தானே ஆடம்பரம்? எதை விரும்புகிறாய்? தேவனுடைய பிரசன்னம் நிரம்பிய, தேவனுடைய கரத்தால் வழிநடத்தப்படும் வாழ்க்கையையா?

கர்த்தருக்கு பயப்படுதலே நீண்ட நன்மையான வாழ்க்கையை நமக்குக் கொடுக்கும்! அது கடினமான பாதையாயிருந்தாலும் அது நம்மை திருப்தியாக்கும்!

கர்த்தர்தாமே இந்த வசனங்கள் மூலமாக நம்மை ஆசீர்வதிப்பாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Leave a comment