கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1498 திடன் கொள்ளுங்கள்! பயப்படாதிருங்கள்!

2 சாமுவேல் 17: 6-10  ஆகிலும் அப்சலோம் அற்கியனாகிய  ஊசாயைக் கூப்பிட்டு அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான். ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப்பார்த்து: இந்தப் பிரகாரமாக அகித்தோப்பேல் சொன்னான். அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால் நீ சொல் என்றான். அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அக்கிதோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான். … உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் … உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்… உம்முடைய தகப்பன்  சவுரியவான் என்றும் அவனோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும் இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.

நான் ஒரே ஒரு வருடம் உயர்நிலைப் பள்ளியை விடுதியில் இருந்து படித்தேன். அங்கு இரவு படிக்கும் வேளையை முடித்துவிட்டுத் நாங்கள் தங்கியிருந்த அறைகளுக்குத் திரும்பி கொண்டிருந்தோம். திடீரென்று முன்னால் சென்ற ஒருத்தி எதையோ பார்த்தமாதிரி கத்தினாள். அவ்வளவுதான் எங்கள் யாருக்கும் என்ன நடந்தது என்றே தெரியாமல் கத்தி கூச்சல் போட்டு ஒருவர்மேல் ஒருவர் விழுந்து பெரிய குழப்பமே ஆகிவிட்டது! இதுதான் பயம்  என்பது! பயம் நமக்கு ஒரு மரத்தைக்கூட மிருகமாகக் காட்டும்!

நான் கர்த்தரகிய இயேசுவைப் பற்றி பேசுவதைக் கேட்கும்போதெல்லாம் அவர் பாவத்திலிருந்து இரட்சிக்கிறார் என்ற வாசகத்தைதான் அதிகமாக கேட்டிருக்கிறேன். உண்மை!  ஆனால் அவர் நமக்கு இன்னும் ஒரு பெரிய விடுதலையைக் கொடுக்கிறார். அது பயம்! ஏனெனில் பயம்தான் நம்மைக் கொல்லும் முதல் எதிரி என்று நினைக்கிறேன் நாம் நன்மையான வாழ்வைப்பற்றிப் படித்து வரும் கடைசி பாகத்தில் இன்று  தேவன் நமக்கு அளிக்கும் நன்மையான வாழ்வில் பயத்துக்கு இடமேயில்லை என்று பார்க்கிறோம். ஏனெனில் நம்மை பயப்படுத்தும் எத்தனை காரியங்களைப்பற்றி நாம் ஒவ்வொருநாளும் கேட்கிறோம்!

இன்றைய வேதாகமப்பகுதி நமக்கு தேவன் வேதத்தில் மறைத்து வைத்திருக்கும் இன்னொரு பொக்கிஷத்தை வெளிப்படுத்துகிறது.

தாவீது தன்னுடைய குமாரன் அப்சலோமால், சிங்காசனத்தை அடையும் ஆசையில் முதுகில் குத்தப்படுகிறான் என்று நேற்று பார்த்தோம். அப்சலோம் இதற்காக அக்கிதோப்பேலின் அறிவுரையைக் கேட்கிறான். அக்கிதோப்பேலின் அறிவுரை உண்மையிலேயே சிறந்த ஒன்றாக இருந்தபோதும், அப்சலோமுக்கு அதில் முழுவதும் நம்பிக்கை இல்லை. அவன் ஊசாயிடம் இன்னொரு வாய்மொழி கேட்கலாமே என்று கூறி அவனையும் வரவழைக்கிறான். ஆனால் அப்சலோமுக்கு அறிவுரை கொடுக்கும்படி வரவழைக்கப்பட்ட ஊசாய், தாவீதுக்கு நல்ல நண்பன் என்பதை யாரும் அறியவில்லை. ஊசாய் இங்கு எல்லோரையும் திசை திருப்புகிறான். ஏனெனில் அவன் தாவீதை நன்கு அறிந்தவன்! அவன் தாவீது மிகுந்த பலசாலி மட்டுமல்ல பிகப்பெரிய யுத்த வீரனும் கூட  என்பதை ஞாபகப்படுத்துகிறான்.

தாவீது எதற்கும் பயப்படாத ஒரு வீரன் என்பதை இஸ்ரவேலர் எல்லோரும் அறிந்திருந்தார்கள் என்று ஊசாய் கூறுகிறான். ஆனால் இந்த தைரியம் அவனுக்கு எப்படி வந்தது? தானாகவே வந்ததா? அவன் சிறுவனாயிருந்த போது வனாந்தரத்தில் ஆடுகளை மேய்க்கும் நாட்களில் தேவனாகிய கர்த்தரை அறிந்து அவருடன் தொடர்பு கொண்டிருந்ததால் தன்னுடைய ஆடுகளைத் தாக்க வந்த சிங்கத்தையும், ஓநாயையும் அழிக்க முடிந்தது. பின்னர் மகா கோலியாத்தை போரில் எதிர்கொண்டபோது அவன் யாருடைய நாமத்தில் பயமில்லாமல் நின்றான்? இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தினால் அல்லவா? அவன் இஸ்ரவேலின் ராஜாவாக சாமுவேலால் அபிஷேகம்பண்ணப் பட்ட பின்னர் சவுலால் வேட்டையாடப்பட்டபோது அவனுடைய  எல்லாப் பயத்தினின்றும் விடுதலையாக்கினது கர்த்தர் அல்லவா? அதுமட்டுமல்ல அவன் இஸ்ரவேலின் ராஜாவான பின்னர் அவனை சுற்றியிருந்த அத்தனை ராஜ்யங்களையும் முறியடித்தானே அந்த வெற்றியைக் கொடுத்தது யார்? தாவீதின் வார்த்தைகளால் பார்த்தால் சங்கீதம்: 108:10,13 ல்

அரணான பட்டணத்துக்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? எதோம்மட்டும் என்னை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?….. தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம், அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுவார்.

என்றல்லவா கூறுகிறான்!

மத்தேயு 14:27 ல் கர்த்தராகிய இயேசு கடலின்மேல் நடந்து வருவதைப் பற்றிப் படிக்கிறோம். அதைப்பார்த்து கலங்கி பயத்தினால் அலறிய  சீஷரை நோக்கி,

திடன்கொள்ளுங்கள் நான் தான்! பயப்படாதிருங்கள் என்றார்

என்று பார்க்கிறோம். கர்த்தராகிய தேவன் அளிக்கும் நன்மையான வாழ்வில் பயத்துக்கு இடமேயில்லை. கர்த்தர் தாவீதோடு இருந்து அவனுக்கு எல்லா சத்துவத்தையும் பெலனையும் அழித்து வெற்றியுள்ள வாழ்க்கையை அளித்தது போல உன்னுடனும் இருந்து எல்லா பயத்தையும் நீக்கி உனக்கு வேண்டிய பெலனளிப்பார்!

தாவீதைப் போல கர்த்தரோடு பேசவும், உறவாடவும், கர்த்தருடைய நாமத்தினால் வெற்றி பெறவும் கற்றுக்கொள்!

நம்முடைய கர்த்தராகிய இயேசுதாமே இந்த வார்த்தைகளின் மூலம் நம்மை எல்லா பயத்துக்கும் விடுதலையாக்கி வெற்றியுள்ள வாழ்வைத் தருவாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment