1 இராஜாக்கள் 2:4 … நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக.
இந்த வருடத்தின் 10 வது மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம். இந்த மாதமும் அவர் நம்மோடிருந்து , காத்து, பராமரித்து, வழிநடத்துமாறு தலை கவிழ்ந்து ஒரு நொடி ஜெபிப்போம்.
இஸ்ரவேலை ஆண்ட ராஜாவும், ஆளப்போகிற ராஜாவும் பேசிக் கொண்டிருப்பதை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு அனுபவம் மிக்க தகப்பன் தன்னுடைய குமாரனுக்கு கொடுத்த அறிவுரை இது.
தாவீது சாலொமோனை நோக்கி,அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக என்பதைப் பார்க்கிறோம்.
சாலொமோனை ராஜாவாகும்படி தெரிந்து கொண்ட தேவனாகிய கர்த்தர், அவன் அவருடைய வழிகளில் நடந்து அவருடைய காவலைக் காக்க வேண்டும் என்ற பொறுப்பையும் கூடவே அருளியிருப்பதைத் தான் இங்கு தாவீது நினைவு படுத்துகிறான்.
தேவன் நம்மை சுற்றி போட்டிருக்கும்,அவர் வழிகள் என்ற வேலியைத் தாண்டும்போது என்ன நடக்கும் என்று அனுபவத்தின் மூலம் அறிந்திருந்த தாவீதின் அறிவுரையை சாலொமோன் பின்பற்றியிருந்தால் அவனுடைய வாழ்வில் எத்தனையோ பேரிடர்களைத் தவிர்த்திருக்க முடியும்.
நானும் கூட அவர் வழிகளில் நடப்பதை விட்டு விட்டு என்னுடைய வழிகளில் செல்ல முயன்றபோது பலவிதமான கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். அதனால் தான் எனக்கு மீகா தீர்க்கதரிசி திட்டமாக கூறிய இந்த வார்தைகள் மிகவும் பிடிக்கும்.
மீகா 4:5 … கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
நம்மை சுற்றியுள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமான வாழ்வை வாழும்போது, கர்த்தருடைய ஜனமாகிய நாமோ அவருடைய நாமத்தை பற்றினவர்களாக , அவரோடு கூட, அவருடைய வழிகளில் நடக்க வேண்டும். அவர் நமக்கு விதித்திருக்கும் எல்லையை ஒருபோதும் தாண்டி விடக்கூடாது. அவருடைய நாமம் தூஷிக்கப்படக் கூடாது.
தாவீதின் வார்த்தைகளில் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக என்பது நமக்கும் பொருந்தும்.
தேவரீர் உம்முடைய வழிகளில் ,
நீர் எனக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற ஜீவியப் பாதையில்,
அசைக்க முடியாத விசுவாசத்தோடும்,
நொறுங்கிய இருதயத்தோடும் ,
தூய்மையான அன்போடும்,
நடப்பதே என்னுடைய ஆவல் இந்த பூமியில் என்பதே இன்று என்னுடைய ஜெபம்.
தேவன் தாமே இந்த வார்த்தைகள் மூலம் நம்மோடு தொடர்ந்து பேசுவாராக!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
