1 இராஜாக்கள்: 2:1-4 தாவீது தன்னுடைய மரண காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டு சொன்னது: நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன், நீ திடன்கொண்டு புருஷனாயிரு……. மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக.
இன்று தொடர்ந்து தாவீது தன்னுடைய மரணப் படுக்கையில் சாலொமோனுக்கு விட்டு சென்ற அறிவுரையைப் படிக்கிறோம்.
முதலில் நான் இதைப் படித்த போது, இதிலென்ன புதிதாக உள்ளது? மோசே சொன்னதையே இவரும் திரும்ப சொல்கிறார் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் உண்மையில் தாவீது சாலொமோனிடம், அந்தக் காலத்தில் எழுத்தில் இருந்த வேதாகமப் புத்தகத்தை கவனமாக படிக்க சொல்கிறார். ஏனெனில் தேவனோடு முக முகமாய் பேசி, நாற்பது நாட்கள் சீனாய் மலையில் தேவனோடு சஞ்சரித்த மோசேயின் வார்த்தைகள் , ஒவ்வொருவரையும் வழிகாட்டும் தீபமாய் இருந்தது.
தாவீது சாலொமோனிடம் கர்த்தருடைய வழிகளைக் காப்பது அவனுடைய கடமை என்று கூறியது மட்டுமல்லாமல், அவன் அந்த வழிகள் விதிக்கும் எல்லையை தாண்டி விடக்கூடாது என்றும் எச்சரித்தான் என்று பார்த்தோம்.
இப்பொழுது அவன் சாலொமோனை நோக்கி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள வேண்டும் என்று சொல்வதையும் பார்க்கிறோம்.
தாவீது சாலொமோனிடம் மோசேயின் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளும்படி கூறியபோது அவன் அவற்றில் மோசேயுடைய சாட்சிகள் உள்ளதை சுட்டி காட்டுகிறான். தேவனை அறிந்த ஒரு மனிதனின் சாட்சிகள் அவை. தேவனாகிய கர்த்தர் என்றால் யார் என்று கண்ணாரக் கண்டு, நமக்கு விளக்கிய மனிதனின் சாட்சி அது. அப்படியானால் அது தவறாக இருக்கவே முடியாது அல்லவா?
தேவனைக் குறித்த சத்தியங்கள் நிறைந்த அந்த சாட்சி, தாவீதையும் , சாலொமோனையும் மட்டும் அல்ல, நம்மையும் சத்திய பாதையில் வழி நடத்த வல்லது.
இன்று கர்த்தருடைய கட்டளைகள், கற்பனைகள், நியாயங்கள் என்ற வார்த்தைகள் உனக்கு என்ன கற்பிக்கிறது? அவை உன் வாழ்க்கைக்கு தேவை என்று நினைக்கிறாயா? அல்லது இவையெல்லாம் இன்றைக்கு உதவாது என்று எண்ணுகிறாயா?
நம்முடைய வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் காணும் ….. இந்த எல்லையைத் தாண்டாதே, இது அபாயமான இடம், வேகத்தடை உள்ளது, விபத்து மிகுந்த பகுதி, …. என்று நம்மை எச்சரிக்கும் வழி காட்டி பலகை போன்றவைதான் அவை. நீ சரியான பாதையில் நடக்க இவை உதவுகின்றன. நாம் இந்த சங்கீதத்தில் வாசிப்பது போல,
சங்: 25:4 கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும். உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும்,
என்று ஒவ்வொருநாளும் நாம் தேவனுடைய பாதத்தில் அமர்ந்து மோசேயைப் போன்ற தேவனுடைய பிள்ளைகள், தங்கள் சாட்சியோடு நமக்குக் கற்பித்த வேத வசனங்களை நம்முடைய வாழ்வில் கைக்கொள்ள வேண்டும். அவை நிச்சயமாக நம்மை ஆபத்திலிருந்து விடுவிக்கும், வழிகாட்டும்.
இதைத் தான் தாவீது தம்முடைய குமாரனாகிய சாலொமோனுக்கும், நமக்கும் கற்றுக் கொடுக்கிறார். அதை ஏற்றுக் கொண்டு வேதத்தை வாசிக்கவும், கைக்கொள்ளவும் ஆரம்பிப்பீர்களா?
நித்திய தேவனே உம்முடைய வார்த்தையின் மூலம்
எங்கள் பாதைக்கு தீபமாயிரும்!
நித்திய தேவனே எங்களை தீமையின்ன்று
விலக்கிக் காரும்!
நித்திய தேவனே அறியாமை என்ற இருளை
எங்களை விட்டு அகற்றும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
