1 இராஜாக்கள் 3: 5 – 10 ……..சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
இன்று நான் ஜெபித்து முடித்தவுடனே கர்த்தர் என்னைப் பார்த்து, உன் விண்ணப்பம் எனக்கு உகந்ததாயிருந்தது என்றால் நான் எப்படி துள்ளிக் குதிப்பேன் என்று சற்று யோசித்து பார்த்தேன். என் வார்த்தைகள் அவருக்கு பிரியமாயிருந்தன என்று நினைக்கும்போதே சந்தோஷம் பொங்கும்.
இன்றைய வேதாகமப் பகுதியின் உண்மை என்னவென்றால் சாலொமோனின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது. தேவனாகிய கர்த்தர் சாலொமோனுடைய விண்ணப்பத்தின் மேல் பிரியமாயிருந்தார்.
சாலொமோனின் ஜெபத்தின் மூலம் சில காரியங்களை நான் நிச்சயமாக கற்றுக் கொண்டேன்.
1. நாம் வேண்டுதல் செய்யும் நம்முடைய தேவாதி தேவன் எத்தனை பெரிய தேவன்!
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, (எபே 3:20)
அவர் முன்னால் நாம் ஏன் சிறிய, மிகச் சிறிய விண்ணப்பங்களோடு நெருங்க வேண்டும்? நம்முடைய பரம பிதாவை நாம் ஏன் நமக்கு எதுவும் பெரிய ஆசீர்வாதங்களை அருள முடியாதவர் போல நடத்த வேண்டும். நாம் நினைப்பதற்கு அதிகமாகவே அவர் நம்மை ஆசீர்வதிக்க வல்லவராயிருக்கிறார். அப்படித்தானே அவர் சாலொமோனை ஆசீர்வதித்தார்?
2. நாம் வேண்டுதல் செய்யும் நம்முடைய தேவாதி தேவன் மிகவும் உண்மையுள்ளவர்.
சங்:36:5 கர்த்தாவே உமது கிருபை வானங்களில் விளங்குகிறது, உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.
அவருடைய சுத்த கிருபையால்தான் இன்று நாம் இன்று நிலை நிற்கிறோம் அல்லவா? அவருடைய மாறாத கிருபையும், இரக்கங்களும் ஒருநாளும் நம்மைக் கைவிடாது. சாலொமோன் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கு காட்டிய கிருபையை நினைவூட்டியபோது அது தேவனுக்கு உகந்ததாயிருந்ததை பார்க்கிறோம் அல்லவா?
3. நாம் வேண்டுதல் செய்யும் நம்முடைய தேவாதி தேவன் நாம் யாருக்காக வேண்டுதல் செய்கிறோமோ அவர்கள் மேலும் மிகவும் அக்கறை உள்ளவர்.
யோபு 42:10 யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
சாலொமோன் தன்னுடைய வாழ்க்கையில் உள்ள திரளான மக்களை நியாயம் தீர்க்கும்படியான ஞானமுள்ள இருதயத்தைக் கொடுக்கும்படி ஜெபித்ததை அவர் கண்டார். அந்த விண்ணப்பம் அவருக்கு பிரியமாயிருந்தது. அப்படியானால் நான் பிறருக்காக ஜெபிப்பதும் அவரை பிரியப்படுத்தும் அல்லவா?
என் தேவனே நீ எத்தனை மகத்துவமுள்ளவர்! உம்முடைய கிருபாசனம் எத்தனை அழகானது! உம்முடைய நித்தியமான ஞானமும், கிருபையும், வல்லமையும் , பரிசுத்தமும் அளவிட முடியாதது! உம்மை ஒவ்வொரு நாளும் பிரியப்படுத்தும் கிருபையையும், வாஞ்சையையும் எனக்குத் தாரும்!
இதுவே இன்று என் ஜெபம்! நீங்களும் ஜெபியுங்களேன்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
