சங்கீதம் 19: 14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
இன்று நாம் 1 இராஜாக்கள் 3: 17-22 ல் நடந்த சம்பவத்தை நாம் இன்று படிக்கிறோம். வேதாகமத்தை திறந்து ஒருமுறை வாசித்து விடுங்கள்.
என்னுடைய கற்பனையின்படி அன்றைய எருசலேம் செய்தித் தாள் இருந்திருக்குமானால், இந்தத் தலைப்போடு தான் வந்திருக்கும்;
இரண்டு வேசிகள் ஒரு பிள்ளையின் உரிமைக்காக சண்டை: மன்னர் சாலொமோனின் தீர்ப்பு இன்று.
அன்று எருசலேம் முழுவதுமே இதைப்பற்றிய கிசுகிசுப்பு தான். எருசலேமின் வேசிகள் இருவர், உயிரோடிருக்கும் ஒரு பிள்ளையை வைத்துக்கொண்டு, நான் தான் இந்தக் குழந்தையை பெற்றத் தாய் என்று இருவருமே சண்டை போட்டுக் கொண்டதைப் பற்றி பேசாத ஜனம் இல்லை. பார்க்கில் குழந்தைகள் பந்து விளையாடுவது போல, அவள்தான் சொன்னாள், இவள்தான் சொன்னாள் என்று ஒருவர் மேல் ஒருவர் பழியை தூக்கி எறிந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் பொய் சொல்வது மட்டும் திட்டமாக எல்லோருக்கும் புரிந்தது. ஆனால் அது யார் என்று யாருக்கும் தெரியவில்லை.
பொய்! பொய்! சிறிய பொய்! பச்சை பொய்! நெய்யப்பட்ட பொய்! எதற்கெடுத்தாலும் சிலர் வாயில் பொய் தான்!
பழைய ஏற்பாட்டில் சங்கீத புத்தகத்தில் உண்மை என்ற வார்த்தை 40 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவுக்கு அன்பான சீஷனாகிய யோவான் எழுதிய நிருபத்தில் இந்த வார்த்தை 27 முறை உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.
பழைய ஏற்பாட்டில் யாக்கோபு ஒரு ஏமாற்றுக்காரனாக , பொய்யனாக இருந்தான். ஆனால்
சங்: 146: 5-6 கூறுகிறது, ” யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
அவர் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் அவைகளிலுள்ளயாவையும் உண்டாக்கினவர். அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்”.
இதை தாவீது நன்கு தெரிந்து கொண்டிருந்தான். யாக்கோபின் தேவன் என்றென்றைக்கும் உண்மை உள்ளவர். ஆனால் உண்மை தவறி, மனந்திருந்திய யாக்கோபையும், தாவீதையும் மன்னித்து தம்மண்டை அரவணைத்த தேவன்.
ஒவ்வொருநாளும் உண்மையோடு வாழவேண்டும் என்று முயன்று கொண்டிருக்கும் நம்முடைய இந்த வாழ்க்கையை ,யாக்கோபும், தாவீதும், நமக்கு நினைப்பூட்டுவது மட்டுமல்லாமல் , அவர்கள் நம் தேவாதி தேவன் நமக்கு அருளும் மன்னிப்பு என்ற பெரிய தயவையும் நினைப்பூட்டுகிறார்கள்.
சாலொமோனுடைய நியாசனமோ, நம்முடைய ஆபீஸோ, நம்முடைய வியாபாரஸ்தலமோ, நம்முடைய குடும்பமோ, எங்கு நாம் உண்மையோடு நடந்து கொள்ளமல் பொய்யை உண்மையாக்க அடித்து பேசி மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோமோ, அதற்கு இந்த இரண்டு வேசிகளும் ஒரு சிறிய உதாரணம் தான்.
இன்று நம் வாழ்க்கையில் உண்மை உண்டா? அல்லது பொய், ஏமாற்றுதல் இவை சர்வ சாதாரணமான ஒன்றா?
ஒவ்வொரு நாள் காலையிலும் என் தேவனே என் வாயின் வார்த்தைகளையும், என் இருதயத்தின் தியானத்தையும் காத்துக் கொள்ளும். உண்மையைத் தவிர வேறு எந்த பொய்சாட்சியும் என் நாவில் வராத படி காவல் வையும் என்று ஜெபிப்பது எவ்வளவு அவசியம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
