1 இராஜாக்கள்3: 24-27 ஒரு பட்டயத்தை கொண்டுவாருங்கள் என்றான், அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதையை அவளுக்கும் கொடுங்கள் என்றான்.
அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி; ஐயோ என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம், அதை அவளுக்கே கொடுத்து விடும் என்றாள். மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம் என்றாள்.
அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள், அவளே அதின் தாய் என்றான்.
நாம் இரண்டு தாய்மார் ஒரு குழந்தைக்காக சண்டை போட்டுக் கொண்டு இளம் சாலமோனின் நியாசனத்தண்டை வந்ததைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய கதைப்படி இராத்திரி ஒருத்தி பிள்ளையின்மேல் புரண்டு படுத்ததால் ஒருத்தியின் பிள்ளை செத்துப் போயிற்று. உயிரோடிருக்கும் ஒரு பிள்ளைக்காக இருவரும் சண்டை போட்டனர். சாலொமோன் இதில் யார் உண்மை பேசுகிறார் என்று எப்படி கண்டு பிடிக்கப் போகிறான்??
இன்று டி என் ஏ சோதனை போன்றவை அந்தக் குழந்தை யாருடைய குழந்தை என்று காட்டி விடும். ஆனால் அன்று அப்படிஎதுவும் இல்லை, பொய்யை உண்மை என்று அடித்துப் பேசிக் கொண்டிருந்த பெண்களின் வாதத்தைத் தவிர!
திடீரென்று சாலொமோன் தீர்ப்பை சொல்லிவிட்டார். பட்டயத்தைக் கொண்டு வந்து பிள்ளையை இரண்டாய் பிளந்து இருவருக்கும் கொடுக்க சொல்லியாயிற்று!
அந்த வேளையில் சாலொமோனின் நியாசனத்தில் தயவுக்காக மன்றாடிய ஒரு தாயின் அழுகுரல் கேட்டது.
வேதம் கூறுகிறது, தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால் அவள் ராஜாவை நோக்கி மன்றாடுகிறாள். இந்தத்தாய் தன் குழந்தைக்காக துடித்த போது, மற்றவள் பட்டயம் குழந்தையைத் துண்டு போடட்டும் என்கிறாள். இப்பொழுது யார் அந்தக் குழந்தையின் உண்மையான தாய் என்பது தெளிவாகி விட்டது. ஒரு தாயின் சுயநலமற்ற அன்பு வெளிப்பட்டு விட்டது.
சுயநலமில்லாமல் உங்கள் பிள்ளைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தாய் மாருக்கும் இந்த அன்பு எப்படிப்பட்டது என்று புரியும்.
அநேக தாய்மாரின் ஜெபங்கள் தங்கள் பிள்ளைகளை பாவ சேற்றிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கின்றன்.
ஜான் வெஸ்லி அவர்கள், இங்கிலாந்தில் உள்ள எல்லா வேதாகம வல்லுநர்களையும் விட என் தாயிடமிருந்து வேதத்தைக் கற்றுக் கொண்டதே அதிகம் என்று கூறியிருக்கிறார்.
உன் பிள்ளைக்காக ராஜாதி ராஜாவின் சமுகத்தில் நின்று மன்றாடுகிற தாயாக இன்று நீ உள்ளாயா? பாவம் என்ற மரணத்தீர்ப்பிலிருந்து விடுவிக்க உன் மன்றாட்டு குரல் கேட்கிறதா? உன் பிள்ளைகளுக்கு வேதாகமத்தை போதிக்கிறாயா? பிள்ளைகளோடு சேர்ந்து ஜெபிக்கிறாயா?
இன்று நீ இதை செய்யாவிட்டால் நாளை உன் பிள்ளையைப் பார்த்து நீ கண்ணீர் விட வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
