கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1529 என்னை கொழுந்துவிட்டு எரியப்பண்ணும்!

1 இராஜாக்கள்: 3:27 அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக்கொல்லாமல் அவளுக்குக் கொடுத்து விடுங்கள், அவளே அதின் தாய் என்றான்.

இந்த வேதாகமப் பகுதியை இன்று நான் வாசித்த போது, சாலொமோனின் அரங்கத்தில் கூடியிருந்த மக்களின் முகத்தில் காணப்பட்ட ஆச்சரியத்தை என்னால் காண முடிந்தது.

அங்கிருந்த மக்கள் அப்படியே வாயடைத்து நிற்கும்படியாக சாலொமோன்  கொடுத்த நியாயத்தீர்ப்பு இருந்தது மட்டும் அல்லாமல், இது மனிதனுடைய ஞானத்தினால் அல்ல, தேவனுடைய ஞானத்தினால் மட்டுமே ஆகும் என்று இஸ்ரவேல் முழுவதும் உள்ள மக்கள் கண்டறிந்தனர்.

இந்த சம்பவம் எனக்கு இன்னொரு சம்பவத்தை ஞாபகப்படுத்தியது. தேவனாகிய கர்த்தருடைய  நண்பனும், இஸ்ரவேலின் தலைவனுமாகிய மோசே, சீனாய் மலையின் மேல் ஏறி , தேவனை சந்தித்து, பத்து கட்டளைகள் எழுதப்பட்ட பலகைகளை பெற்று திரும்பி வந்தான். அவன் தேவனோடு தனிமையில் நேரத்தை செலவிட்டு வரும்போது, அவனுடைய முகம் பிரகாசித்ததை அவனே அறியாமல் இருந்தான் ஆனால் அதை இஸ்ரவேல் மக்கள் கண்கூடாக பார்த்தனர். மோசேயின் முகம் தேவனுடைய மகிமையை பிரதிபலித்தது!

இங்கு சாலொமோனின் வாழ்க்கையில் அவன் வழங்கிய நியாயத்தீர்ப்பு தேவனுடைய ஞானத்தை பிரதிபலித்தது. அதை இஸ்ரவேல் மக்கள் கண்கூடாக கண்டனர்! அவனுக்கு தேவனால் அளிக்கப்பட்ட ஞானம் ஒரு காந்தம் போலமக்களை அவன் பக்கம் ஈர்த்தது.

நம்முடைய வாழ்வில் கூட தேவனாகிய கர்த்தருடைய பிரசன்னம் நம்மை நிரப்பும்போது,அந்த பிரசன்னத்தின் அழகை நம்மை சுற்றியுள்ளவர்கள் நிச்சயமாக அறிய முடியும். நாமே கூட அதை உணருமுன்னர், நமக்கு அருகாமையில் உள்ளவர்கள் அதை உணருவார்கள்.

நான் இந்த தியானங்களை எழுதுவதைக் குறித்து யாராவது ஆசீர்வாதமாக இருக்கிறது என்று பதில் எழுதும்போதோ, அல்லது என்னுடைய போதனையை கேட்டு யாராவது அதனால் ஆசீர்வதிக்கப்பட்டோம் என்று சொல்லும்போதோ என்னையே நான் உற்றுப் பார்ப்பதுண்டு. அந்த வேளையில் நான் செய்வது எல்லாவற்றின் மூலமாகும் என் பிதாவின் நாமம் மகிமைப்பட வேண்டும் என்பதையும் தாண்டி, என் உள்ளம் சற்று குளிர்ந்து போவதை உணர்ந்திருக்கிறேன். என்னுடைய எழுத்துகள், வார்த்தைகள், சிந்தனை அத்தனையுமே அவர் கொடுத்த ஈவுதானே! எல்லா மகிமையும், கனமும்  அவருக்குத்தானே சென்றடைய வேண்டும்!

அந்தக்காலத்தில் எங்களுடைய வீட்டில் கரி அடுப்பு உண்டு. சில நேரங்களில் விறகு ஈரமாக இருந்தால் நெருப்பு பிடிக்கவே செய்யாது. அந்த வேளையில் சற்று ஊதுகுழல் கொண்டு ஊதவேண்டும். அவ்வாறு ஊதும்பொழுது அந்த விறகுகள் சிவந்து, கொழுந்து விட்டு எரிவதை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம், எட்வர்ட் டெய்லர் அவர்கள், கர்த்தாவே கரியை ஊதி விடும். உம்முடைய அன்பு என்னில் கொழுந்து விட்டு எரியட்டும் (Lord blow the coal. Thy love inflame in me)  என்று கூறியது நினைவுக்கு வரும்.

ஆண்டவரே என்னுடைய வாழ்வின் மூலம் உம்முடைய பிரசன்னமும், உம்முடைய ஞானமும் வெளிப்படும்படியாய் என்னைக் கொழுந்து விட்டு எரியச் செய்யும் என்பது இன்று என்னுடைய ஜெபம். நீங்களும் ஜெபிப்பீர்களா?

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment