1 இராஜாக்கள்: 5:1 சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான். ஈராம் தாவீதுக்குச் சகல நாளும் சிநேகிதனாயிருந்தான்.
இந்த வேதாகமப் பகுதியை நான் பலமுறை வாசித்து கடந்து சென்றிருக்கிறேன் ஆனால் இன்று இதை வாசித்தபோது இதில் ஒரு நல்ல நட்பை பார்த்தேன். இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த தாவீதுக்கும் , தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கும் நடுவில் இருந்த நட்பு.
இன்றைய நடைமுறைப்படி சொல்லப்போனால் இந்த செய்தி , இரண்டு குறிப்பிட்ட நாட்டுத் தலைவர்களுக்கிடையே உள்ள நட்பைப் பற்றி இன்று நாம் டிவியில் கேட்டால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது.
தீருவின் ராஜாவாகிய ஈராம், இளம் சாலொமோன் அவனுடைய அப்பாவின் ஸ்தானத்தில் ராஜாவானதைப் பற்றி கேள்விப்படுகிறான். உடனே தன்னுடைய ஊழியக்காரரை அவனிடம் அனுப்புகிறான். அவர்கள் ஒருவேளை அந்த காலத்து வழக்கப்படி பரிசுகளை ராஜாவுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த காலத்திலும் அப்படிப்பட்ட வழக்கங்கள் உள்ளன அல்லவா! ஒரு நாட்டுக்கு ஒருவர் புதிதாக தலைமையேற்றால் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் அவர்கள் நட்பை உறுதிப்படுத்த செல்வது வழக்கம் தானே.
இதை மேலாகப் பார்த்து விட்டுப் போவோமானால் இதிலுள்ள முக்கியமான சாரத்தை நாம் இழந்து விடுவோம். அது ஈராம் தாவீதுக்குச் சகல நாளும் சிநேகிதனாயிருந்தான் என்ற வார்த்தை. இதனுடைய எபிரேய மொழி பெயர்ப்பு இதற்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாய் ஒருவரையொருவர் நேசித்தனர் என்று கூறுகிறது.
தாவீது ராஜாவான பொழுது அவனை சுற்றிலும் அநேக எதிரிகள் இருந்து கொண்டேயிருந்தனர். தாவீது அநேக நாடுகளை யுத்தத்தில் வென்ற போதிலும், அவர்களோடு சமரசம் செய்து நட்பு நாடாக்கவும் முயற்சி செய்தான். அப்படிப்பட்ட நாடுகளில் ஒன்றுதான் தீருவும். பின்னால் நாம் யெசபெல்லைப் பற்றிப் படிக்கும்போது, இந்த நாட்டை யெசபெல்லின் தகப்பன் ஆளுவதைப் பார்க்கலாம். தாவீதின் நட்பு இளம் சாலொமோனுக்கு எவ்வளவு உதவியது என்று பாருங்கள்!
இதை வாசிக்கும்போது இன்று நான் தாவீதைப் போல வேறு மதத்தினரை நேசிக்கிறேனா என்று சற்று சிந்தித்து பார்த்தேன்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுவானவர் நாம் இந்த பூமிக்கு உப்பாக இருக்க வேண்டும் என்று போதித்தார். உப்பின் சுவையை நாம் உணரவேண்டுமென்றால் அது கரையாமல், கட்டியாக நிற்காமல், நன்றாக உணவில் கலந்து இருக்க வேண்டும். இதையே தான் நாமும் நம்முடைய நடைமுறையில் செய்ய வேண்டும். நான் கிறிஸ்தவன் என்று கரையாமல் கட்டிப்போன உப்பு போல் ஒதுங்கி இருக்கக்கூடாது.
நாம் புற மதத்தினரை காயப்படுத்தாமல், மனஸ்தாபங்கள் இல்லாமல், அவர்கள் மத்தியில் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் சாட்சியோடு , அனைவரோடும் நட்போடு வாழலாம்.
இந்த அரிய பாடத்தை நாம் தாவீது ராஜாவின் வாழ்வில் காண்கிறோம். அவன் புறஜாதியான தீருவின் ராஜாவாகிய ஈராமுடன் வைத்த நட்பு அவன் மரணத்துக்கு பின்னர் சாலொமோனுக்கு ஆசீர்வாதமாக அமைந்தது.
இன்று நம்முடைய வாழ்வு எதை விட்டு செல்லும் என்று யோசித்து பாருங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
