கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1536 எறும்புகள் பரபரப்பாக உள்ளன ஆனால் எதற்கு?

1 இராஜாக்கள்; 6:38  பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே , அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது. அவன் அதைக்கட்டி முடிக்க ஏழுவருஷம் சென்றது.

7:1  சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்கப் பதின்மூன்று வருஷம் சென்றது.

சாலொமோனின் வாழ்வில் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறியதைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போகும் இரண்டாவது  வார்த்தை முக்கியத்துவம் என்பது.

இன்றைய இரண்டு வேதாகமப்பகுதிகளை ஆழமாகப் படித்தபோது, சாலொமோனுக்கு தேவனுடைய ஆலயத்தை முடிக்க ஏழு வருஷங்கள் ஆயின, அவனுடைய அரமனையை முடிக்க பதின்மூன்று வருடங்கள் ஆயின.

இந்த சமயத்தில் ஆலயம் கட்டுவதே சாலொமோனுடைய முக்கியத்துவம் ஆக இருந்தது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. முக்கியத்துவம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் எதை முதலில் முக்கியமாக செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பது. சாலொமோன் தேவனுடைய ஆலயத்தைக் கட்டி முடிக்க முடிவெடுத்தான்.

பலவிதமான பணிகளில் இருக்கும் நமக்கு நம்முடைய பணிகளில் எதை முதலில் முக்கியமாக முடிக்க வேண்டும் என்று தெரியும். நாம் இதை நம்முடைய வாழ்வில் செய்கிற ஒரு சாதாரண செயல் தான். நான் இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூவிக் கூவி சொல்ல வேண்டியதில்லை. இதற்காக நாம் செலவிடும் நேரமே அதை உலகத்திற்கு பறை சாற்றும். இதற்காக நாம் செலவிடும் பணமும் இதை பறைசாற்றும் என்று நம்புகிறேன்.

இன்று உன்னுடைய வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்? நீ முக்கியத்துவம் கொடுக்கிறவைகளை வரிசைப்படுத்திக்  காட்டு என்றால் எது முதலில் இருக்கும்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாயா? அல்லது உலகப்பிரகாரமான உன்னுடைய பணிகளுக்கோ, குடும்பத்துக்கோ முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறாயா? ஐயோ நான் பணம் சம்பாதிப்பது முக்கியம், என் குழந்தைகளின் படிப்பு முக்கியம், வீடு கட்டுவது முக்கியம், நகைகள் வாங்குவது முக்கியம் என்று ஓடிக் கொண்டிருக்கிறாயா?

மத்தேயு 6:33 ல் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும் என்று கர்த்தராகிய இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

முதலாவது தேவனுக்கடுத்த காரியங்களுக்கு நம்முடைய நேரத்தையும், பணத்தையும் செலவிடும் போது மற்ற எல்லாமே நமக்கு போனஸ் போல கொடுக்கப்படும் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. இது என்னுடைய அனுபவத்திலிருந்து எழுதுகிறேன்.

நாம் எப்பொழுதும் பரபரப்பாக இருப்பதில் தவறேயில்லை, எறும்புகள் கூட பரபரப்பாக உள்ளன! ஆனால் எதற்காக அந்த பரபரப்பு என்பதே முக்கியம். சிந்தித்து முடிவெடு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

2 thoughts on “இதழ்:1536 எறும்புகள் பரபரப்பாக உள்ளன ஆனால் எதற்கு?”

Leave a comment